Saturday, August 25, 2012

இசைஞானி ரசிகர்களின் சங்கமம்... ஒரு வித்தியாசமான இசை அனுபவம்!

-எஸ் ஷங்கர்
சென்னை: இசைஞானி இளையராஜாவுக்கு அறிவுஜீவி முதல் மோழி பிடித்து நிலத்தை உழும் உழைப்பாளி வரை அனைவரும் ரசிகர்கள்தான். நல்லிசையின் காதலர் யாராக இருந்தாலும் அவர்கள் ராஜாவின் இசைக் காதலர்களாக இருப்பார்கள்!
 
ஒரு முறை வேலூர் தாண்டி நாட்றம்பள்ளி என்ற ஊர் வழியாக செல்லும்போது, இன்னிசைச் சக்கரவர்த்தி இளையராஜா நற்பணி மன்றம் என்ற பெயர்ப் பலகையைக் காண நேர்ந்தது. நாட்றம்பள்ளியில் மிகப் புகழ்பெற்ற சாமுண்டீஸ்வரி கோயில் உள்ளது. அப்படியே பெங்களூர் சென்று சேர்வதற்குள், கந்திலி, பர்கூர், கிருஷ்ணகிரி என முக்கிய இடங்களில் ராஜாவின் ரசிகர் மன்ற பலகையைக் காண முடிந்தது.

உலகிலேயே ஒரு இசையமைப்பாளருக்கு ரசிகர் மன்றம் வைத்து தீவிரமாக இயங்குவது அநேகமாக இளையராஜாவுக்குத்தான் இருக்கும்.
வட மாவட்டங்களில் இப்படி என்றால்... மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இன்னும் எத்தனையோ வடிவங்களில் ராஜாவுக்கு ரசிகர்கள் இருப்பது ஆச்சர்யமில்லையே.
மன்றம் வைத்துதான் ராஜா இசையை அனுபவிக்க வேண்டியதில்லை. முகம் தெரியாமல், ரசனையின் அடிப்படையில் மட்டுமே இணையதளம் மூலம் ஒரு குழுவாக இயங்குபவர்களும் உண்டு.
அப்படி உருவானதுதான் இசைஞானியின் தீவிர ரசிகர்களைக் கொண்ட யாஹூ குழு.  இந்தக் குழு பற்றி ஏற்கெனவே ஒன்இந்தியா விரிவாக செய்தி வெளியிட்டிருந்தது நினைவிருக்கலாம். கிட்டத்தட்ட 5000 உறுப்பினர்களுடன் இயங்கும் குழு இது. சூப்பர் ஸ்டார் ரஜினியின் ரசிகர்களுக்குப் பிறகு, ஆன்லைனில் இளையராஜாவுக்கு மட்டும்தான் இப்படி ஒரு தீவிர ரசிகர்கள் குழு உள்ளது.
கோவையைச் சேர்ந்த டாக்டர் ஜே. விஜய் வெங்கட்ராமன் 1999ம் ஆண்டு இந்தக் குழுவை உருவாக்கினார். சும்மா அவர் இசை அப்படி, இப்படி, ஆஹா, ஓஹோ என்று பாராட்டித் தள்ளிக் கொண்டிருக்கும் குழுவல்ல இது.
அவரது இசையின் உன்னதங்களை, அவர் சொல்ல முயன்ற விஷயத்தை சரியாக உள்வாங்கிக் கொண்டு ஆராதிக்கிற ரசனையான ரசிகர்கள் நிறைந்த குழு இது!
ராஜா பெரியவரா... அவருக்கு யார் போட்டி... அவருக்கு இந்த விருதெல்லாம் கிடைக்கவில்லையே என்ற ரசிக மனோபாவத்தை வென்ற ரசிகர்கள் இவர்கள் என்றால் நம்ப முடிகிறதா... ஆனால் அதுவே உண்மை.
இந்தக் குழுவில் உள்ளவர்கள் நாட்டின் வெவ்வேறு பகுதிகளில், ஏன் கடல் தாண்டியும் இருக்கிறார்கள். எப்போதாவது ஒரு தருணத்தில் இவர்களில் வர முடிந்தவர்கள் மட்டும் பங்கேற்று ஒரு சந்திப்பை நிகழ்த்துவது வழக்கம்.
இதுவரை 24 முறை சந்தித்த இந்தக் குழுவின் வெள்ளி விழா சந்திப்பு... 25வது சந்திப்பு கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று சென்னை கெல்லீஸில் நடந்தது.
அதில் நாமும் பங்கேற்றோம்... ஒரு செய்தியாளராக மட்டுமல்ல... ராஜாவின் ரசிகராகவும்!
ஒரு இசையமைப்பாளர் என்பதைத் தாண்டி ராஜா தன் ரசிகர்களை ஆட்கொண்டிருக்கும் விதம் சிலிர்க்க வைக்கிறது. இந்த சந்திப்பில் ராஜாவின் சினிமா இசை அல்லாத, பக்தி ஆல்பங்கள் குறித்து விவாதித்தனர்.
ராஜாவின் புகழ்பெற்ற கீதாஞ்சலி மற்றும் ரமணமாலைதான் ரசிகர்களின் முதல் விவாதத்துக்கான ஆல்பங்களாக அமைந்தன. ராஜாவின் மிக சமீபத்திய ரமணர் ஆல்பமான 'ரமணா சரணம் சரணம்' குறித்தும் விவாதித்தனர்.
திருவண்ணாமலையிலிருந்து வந்திருந்த டாக்டர் ஸ்ரீதர் இளையராஜாவின் அபாரமான ரசிகர். ரமணமாலையின் பாடல்கள் ஒவ்வொன்றையும் அவர் புரிந்து கொண்ட விதத்தை, கண்களை மூடி, மனமுருக அவர் பாடிய விதத்தை... கண்டிப்பாக இசைஞானி பார்த்திருக்க வேண்டும். அந்தப் படைப்பின் அர்த்தத்தை அங்கே உணர முடிந்தது!
ராஜாவின் இன்னொரு ஆல்பமான மணிகண்டன் கீதமாலையை அணுஅணுவாக ரசித்துப் பாடி மகிழ்ந்தனர். பெங்களூரிலிருந்து வந்திருந்தார் 10-ம் வகுப்பு மாணவி ஒருவர். பெயர் ராகா... குரலில் இளம் மணிகண்டனை தரிசித்த அனுபவம். உடம்பெல்லாம் ஒரு ரோமாஞ்சனம் என்ற பாடலை அந்தப் பெண் பாடி முடித்த போது, கேட்டவர் அத்தனைபேர் உடம்பின் மயிர்க்கால்களும் சிலிர்த்திருந்ததைப் பார்க்க முடிந்தது.
இருமுடி கட்டி சபரிமலைக்குப் போகும் ஒவ்வொருவரும் கேட்டுப் பரவசமடைய இளையராஜா அந்த ஆல்பத்தில் ஒரு பாடல் போட்டிருப்பார். இருமுடிகட்டி.. என ஆரம்பிக்கும் அந்தப் பாடலை இந்த கூட்டத்தில் பரவசத்தோடு பாடியவர்... அன்வர் என்ற இளைஞர்!
"மதங்களைக் கடந்த இசை இது. எல்லா மதமும் சொல்வது ஒரே தத்துவத்தைத்தான் என்பதை இசைஞானி இந்தப் பாடலில் மிக அழகாகச் சொல்லியிருப்பார்," என்றார் பாடி முடித்ததும்.
சாய் பாபாவுக்காக ராஜா உருவாக்கிய பாபா புகழ்மாலையில் இடம்பெற்ற உன்னைக் கேட்டுப்பார்... என்ற பாடலைக் கேட்கும்போதெல்லாம்... இது ரசிகர்களை அதிகமாகப் போய்ச் சேரவில்லையோ என்ற சின்ன வருத்தம் மேலோங்கும். ஆனால் இந்தக் கூட்டத்தில், அந்தப் பாடலை ஸ்ரீதரும் அன்வரும் பாடிப் பாடி விவாதித்த விதம் அந்த வருத்தத்தைப் போக்கிவிட்டது. யாருக்குச் சேர வேண்டுமோ அவர்களை சரியாகவே சென்று சேர்ந்திருக்கிறது ராஜாவின் இசையமுதம்!





'விண்ணார் அமுதே வீசும் சுடரே ஓதும் மறையே ஓதாப் பொருளே...' என்று ஒரு பாடல்... எந்த கணத்தில் கேட்டாலும் சிலிர்க்க வைக்கும் மெட்டு. இறைவனை எப்படி ஒவ்வொரு கணமும் புதிதாய் உணர்கிறோமோ... அப்படி எப்போது கேட்டாலும் புத்தம் புதிதாகத் தெரியும் மெட்டு. இந்தப் பாடலையும் ராகாதான் பாடினார். அசாதாரண நிசப்தத்துக்கிடையே ஒலித்த அந்தச் சிறுமியின் குரல் இறைவனின் இருப்பையே அந்தப் பாடல் வழி உணர்த்துவதாக இருந்தது!
இன்னும் கீதாஞ்சலி, திருவாசகம் பற்றியெல்லாம் விவாதித்தாலும், இவற்றை விரிவாக அனுபவித்துப் பேச இன்னொரு கூட்டம் போடணும் என்ற தீர்மானத்தோடு கூட்டம் நிறைவுற்றது.
இந்தக் கூட்டத்துக்கு வந்திருந்த ஒவ்வொருவருமே ராஜாவின் இசையை முழுமையாக லயித்து உணர்ந்தவர்கள்தான். சென்னையைச் சேர்ந்த பாலசுப்ரமணியன் தன் மனைவி ஜெயலலிதா மற்றும் மகனோடு கூட்டத்துக்கு வந்திருந்தார். ஓசூரிலிருந்து வந்திருந்தார் உஷா சங்கர். டாக்டர் நந்தா, திருச்சி செந்தில் குமார் (ராஜாவின் முரட்டு பக்தர்- ஆனால் ஏகப்பட்ட விஷயம் உள்ளவர்), ஆடிட்டர் கிரிதரன், வேல்ரமணன் உள்பட அனைவரும் திருவாசகம் தொடங்கி ராஜாவின் ஆன்மீக இசையை அழகாக அலசினர்.
டாக்டர் விஜய்யுடன் இணைந்து இந்த கூட்டத்தை அழகாக ஒருங்கிணைத்தார் நரசிம்மன்.
டாக்டர் விஜய்...
நாம் டாக்டர் விஜய்யைச் சந்தித்தோம்... வெறும் பட்டம் பெற்ற டாக்டரல்ல இவர். கோவை சாய்பாபா காலனியில் பிரபலமான மருத்துவர். தன் பணிநேரம் போக, மற்ற நேரத்தை ராஜாவின் பாடல்களில், அவரது நல்ல ரசிகர்களை ஒருங்கிணைப்பதில் செலவிடுபவர்.
இந்த குழு குறித்து நம்மிடம் கூறுகையில், "இணையதளம் என்ற கான்செப்ட் அறிமுகமான காலகட்டத்தில், பல விவாதங்கள் போய்க் கொண்டிருக்கும். அதிலெல்லாம் நானும் ஒரு பார்வையாளனாகப் பங்கேற்பேன். ஆனால் என் வருத்தமெல்லாம் தனிப்பட்ட முறையில் ஒருவரை புகழ்ந்து, அடுத்தவரை மட்டம் தட்டும் போக்குதான்... இப்படி வரும் விவாதங்களில் யார் நடுநிலையோடு இருக்கிறார்களோ...அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் மின்னஞ்சல் அனுப்பி, ஒருங்கிணைக்க முயன்றேன். அப்படி ஒவ்வொருத்தராகப் பார்த்துப் பார்த்து சேர்த்து உருவான குழுதான் இந்த இளையராஜா யாஹூ குரூப்ஸ்!
இளையராஜா என்ற மகத்தான கலைஞரின் படைப்புகளை முழுமையாக உள்வாங்கி ரசிக்க வேண்டும். அது பற்றிய விவாதங்கள் ஆரோக்கியமாக நடக்க வேண்டும் என்பதுதான் இந்த குழுவின் பிரதான நோக்கம்.
இந்தக் குழுவிலும் தனிப்பட்ட தாக்குதல் நடத்துவதுபோல, யார் பெரியவர் என்பது போன்ற, ராஜாவுக்கு உரிய விருதுகள் வரவில்லையே என்பது போன்ற கருத்துகள் வராமலில்லை. ஆனால் அவற்றை நானோ இந்தக் குழுவின் மற்ற மாடரேட்டர்களோ வளரவிட்டதேயில்லை. ஆரம்பத்திலேயே நீக்கிவிடுவோம்..." என்றார்.
இதற்கு முன் 2009-ல் இந்தக் குழு கூடியபோது, இளையராஜா இசையில் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியான 20 திரைப்பட ஆல்பங்கள் மற்றும் பக்திப் பாடல்கள் குறித்து மட்டும் விவாதித்துள்ளனர்.
ஒவ்வொரு கூட்டத்தின்போதும், இதுதான் டாபிக் என முடிவு செய்துவிடுவீர்களா?
"ஆமாம்... ராஜா சார் இசை ஒரு சமுத்திரம் மாதிரி. எல்லையில்லாமல் விரியும் ராஜ்யம் அது. ஒரு நாளில் பேசி முடிக்கிற விஷயமா அவரது இசை? எனவே குறிப்பிட்ட ஒரு தலைப்பை எடுத்துக் கொண்டு விவாதிப்பதுதான் சரியாக இருக்கும் என்பதால் இப்படி..!", என்றார் டாக்டர் விஜய்.
இத்தகைய கூட்டங்கள் விவாதங்கள் தாண்டி, இந்த குழு செய்திருக்கும் ஒரு விஷயம், இசைஞானியின் திருவாசகம் ஆரட்டோரியா உருவாக்கத்துக்காக, தங்களால் முடிந்த பல பணிகளை, தாமாகவே முன் வந்து செய்துள்ளனர். 30 பேர் கொண்ட குழுவே வேலை பார்த்திருக்கிறது. திருவாசகம் வெளியான அன்று நிகழ்ச்சி நடக்க உறுதுணையாக இருந்துள்ளனர். ஒரு குறிப்பிட்ட தொகையைத் திரட்டி ராஜாவிடமும் கொடுத்துள்ளனர்.
ராக்கம்மா கையத்தட்டு பாடல் பிபிசியின் ஆல்டைம் டாப்டென்னில் இடம் பிடித்ததல்லவா... அந்தப் பாடலுக்கு பிபிசி அங்கீகாரம் கிடைக்கச் செய்ததில் இந்தக் குழுவின் பங்களிப்பும் உண்டு!
நன்றி: தட்ஸ்தமிழ்

No comments:

Post a Comment