Tuesday, September 18, 2012

இத்தாலியர் தேடிய இளையராஜா

இத்தாலியில் இருக்கும் Bologna என்ற ஊரில் உள்ள கடைவீதி ஒன்றில் நடந்துபோய்க்கொண்டிருந்த ஒருவன், கடையில் இருந்து ஒலித்த ஒரு பாடலைக் கேட்கிறான். கேட்டதும் அவனுக்கு மிகவும் பிடித்துவிடுகிறது. ஆனால் எந்தக் கடையிலிருந்து பாடல் வந்தது என்று அவனுக
்குத் தெரியவில்லை. ஒவ்வொரு கடையாக விசாரிக்கிறான். ஒரு வழியாகக் கடையைக் கண்டுபிடித்து, ”ஐந்து நிமிடங்களுக்கு முன்னால் ஒரு பாடலைப் போட்டீர்களே? அந்தப் பாடலை மறுபடியும் கேட்கவேண்டும்” என்று சொல்லி தேடித் தேடி ஒருவழியாகப் பாடலையும் கண்டுபிடிக்கிறான். ‘இது எந்த ஊர் பாடல்? எங்கிருந்து வந்தது இந்த இசை?’ என்று கடைக்காரரிடம் விசாரிக்கிறான். ‘இது சென்னையில் இருந்து வந்தது’ என்கிறார் கடைக்காரர். 

விமானம் ஏறுகிறான். வந்திறங்குகிறான் சென்னையில். அந்தப் பாடலை உருவாக்கியவரைச் சந்தித்தே தீருவது’ என்று எண்ணி அவர் வீட்டு வாசலில் தவம் கிடந்து, ஒரு வழியாய் சந்திக்கிறான். Bologna’வில் வருடா வருடம் தான் நடத்தும் Angelica Music Festival’க்கு அவரை அழைக்கிறான். அவரும் அவன் வேண்டுகோளை ஏற்று, Italyல் Concert நடத்தித் தந்தார்.

ஏதோ ஒரு தேசத்தில் எதற்காகவோ சுற்றிக்கொண்டிருந்த ஒருவனை அப்படிச் சுண்டி இழுத்து இங்குக் கூட்டி வந்த அந்தப் பாடல் ‘புத்தம் புது காலை பொன்னிற வேளை”.

- ”யூகியுடன் யூகியுங்கள்” நிகழ்ச்சியில் திரு. யூகிசேது கூறியது.


Saturday, August 25, 2012

இசைஞானி ரசிகர்களின் சங்கமம்... ஒரு வித்தியாசமான இசை அனுபவம்!

-எஸ் ஷங்கர்
சென்னை: இசைஞானி இளையராஜாவுக்கு அறிவுஜீவி முதல் மோழி பிடித்து நிலத்தை உழும் உழைப்பாளி வரை அனைவரும் ரசிகர்கள்தான். நல்லிசையின் காதலர் யாராக இருந்தாலும் அவர்கள் ராஜாவின் இசைக் காதலர்களாக இருப்பார்கள்!
 
ஒரு முறை வேலூர் தாண்டி நாட்றம்பள்ளி என்ற ஊர் வழியாக செல்லும்போது, இன்னிசைச் சக்கரவர்த்தி இளையராஜா நற்பணி மன்றம் என்ற பெயர்ப் பலகையைக் காண நேர்ந்தது. நாட்றம்பள்ளியில் மிகப் புகழ்பெற்ற சாமுண்டீஸ்வரி கோயில் உள்ளது. அப்படியே பெங்களூர் சென்று சேர்வதற்குள், கந்திலி, பர்கூர், கிருஷ்ணகிரி என முக்கிய இடங்களில் ராஜாவின் ரசிகர் மன்ற பலகையைக் காண முடிந்தது.

உலகிலேயே ஒரு இசையமைப்பாளருக்கு ரசிகர் மன்றம் வைத்து தீவிரமாக இயங்குவது அநேகமாக இளையராஜாவுக்குத்தான் இருக்கும்.
வட மாவட்டங்களில் இப்படி என்றால்... மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இன்னும் எத்தனையோ வடிவங்களில் ராஜாவுக்கு ரசிகர்கள் இருப்பது ஆச்சர்யமில்லையே.
மன்றம் வைத்துதான் ராஜா இசையை அனுபவிக்க வேண்டியதில்லை. முகம் தெரியாமல், ரசனையின் அடிப்படையில் மட்டுமே இணையதளம் மூலம் ஒரு குழுவாக இயங்குபவர்களும் உண்டு.
அப்படி உருவானதுதான் இசைஞானியின் தீவிர ரசிகர்களைக் கொண்ட யாஹூ குழு.  இந்தக் குழு பற்றி ஏற்கெனவே ஒன்இந்தியா விரிவாக செய்தி வெளியிட்டிருந்தது நினைவிருக்கலாம். கிட்டத்தட்ட 5000 உறுப்பினர்களுடன் இயங்கும் குழு இது. சூப்பர் ஸ்டார் ரஜினியின் ரசிகர்களுக்குப் பிறகு, ஆன்லைனில் இளையராஜாவுக்கு மட்டும்தான் இப்படி ஒரு தீவிர ரசிகர்கள் குழு உள்ளது.
கோவையைச் சேர்ந்த டாக்டர் ஜே. விஜய் வெங்கட்ராமன் 1999ம் ஆண்டு இந்தக் குழுவை உருவாக்கினார். சும்மா அவர் இசை அப்படி, இப்படி, ஆஹா, ஓஹோ என்று பாராட்டித் தள்ளிக் கொண்டிருக்கும் குழுவல்ல இது.
அவரது இசையின் உன்னதங்களை, அவர் சொல்ல முயன்ற விஷயத்தை சரியாக உள்வாங்கிக் கொண்டு ஆராதிக்கிற ரசனையான ரசிகர்கள் நிறைந்த குழு இது!
ராஜா பெரியவரா... அவருக்கு யார் போட்டி... அவருக்கு இந்த விருதெல்லாம் கிடைக்கவில்லையே என்ற ரசிக மனோபாவத்தை வென்ற ரசிகர்கள் இவர்கள் என்றால் நம்ப முடிகிறதா... ஆனால் அதுவே உண்மை.
இந்தக் குழுவில் உள்ளவர்கள் நாட்டின் வெவ்வேறு பகுதிகளில், ஏன் கடல் தாண்டியும் இருக்கிறார்கள். எப்போதாவது ஒரு தருணத்தில் இவர்களில் வர முடிந்தவர்கள் மட்டும் பங்கேற்று ஒரு சந்திப்பை நிகழ்த்துவது வழக்கம்.
இதுவரை 24 முறை சந்தித்த இந்தக் குழுவின் வெள்ளி விழா சந்திப்பு... 25வது சந்திப்பு கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று சென்னை கெல்லீஸில் நடந்தது.
அதில் நாமும் பங்கேற்றோம்... ஒரு செய்தியாளராக மட்டுமல்ல... ராஜாவின் ரசிகராகவும்!
ஒரு இசையமைப்பாளர் என்பதைத் தாண்டி ராஜா தன் ரசிகர்களை ஆட்கொண்டிருக்கும் விதம் சிலிர்க்க வைக்கிறது. இந்த சந்திப்பில் ராஜாவின் சினிமா இசை அல்லாத, பக்தி ஆல்பங்கள் குறித்து விவாதித்தனர்.
ராஜாவின் புகழ்பெற்ற கீதாஞ்சலி மற்றும் ரமணமாலைதான் ரசிகர்களின் முதல் விவாதத்துக்கான ஆல்பங்களாக அமைந்தன. ராஜாவின் மிக சமீபத்திய ரமணர் ஆல்பமான 'ரமணா சரணம் சரணம்' குறித்தும் விவாதித்தனர்.
திருவண்ணாமலையிலிருந்து வந்திருந்த டாக்டர் ஸ்ரீதர் இளையராஜாவின் அபாரமான ரசிகர். ரமணமாலையின் பாடல்கள் ஒவ்வொன்றையும் அவர் புரிந்து கொண்ட விதத்தை, கண்களை மூடி, மனமுருக அவர் பாடிய விதத்தை... கண்டிப்பாக இசைஞானி பார்த்திருக்க வேண்டும். அந்தப் படைப்பின் அர்த்தத்தை அங்கே உணர முடிந்தது!
ராஜாவின் இன்னொரு ஆல்பமான மணிகண்டன் கீதமாலையை அணுஅணுவாக ரசித்துப் பாடி மகிழ்ந்தனர். பெங்களூரிலிருந்து வந்திருந்தார் 10-ம் வகுப்பு மாணவி ஒருவர். பெயர் ராகா... குரலில் இளம் மணிகண்டனை தரிசித்த அனுபவம். உடம்பெல்லாம் ஒரு ரோமாஞ்சனம் என்ற பாடலை அந்தப் பெண் பாடி முடித்த போது, கேட்டவர் அத்தனைபேர் உடம்பின் மயிர்க்கால்களும் சிலிர்த்திருந்ததைப் பார்க்க முடிந்தது.
இருமுடி கட்டி சபரிமலைக்குப் போகும் ஒவ்வொருவரும் கேட்டுப் பரவசமடைய இளையராஜா அந்த ஆல்பத்தில் ஒரு பாடல் போட்டிருப்பார். இருமுடிகட்டி.. என ஆரம்பிக்கும் அந்தப் பாடலை இந்த கூட்டத்தில் பரவசத்தோடு பாடியவர்... அன்வர் என்ற இளைஞர்!
"மதங்களைக் கடந்த இசை இது. எல்லா மதமும் சொல்வது ஒரே தத்துவத்தைத்தான் என்பதை இசைஞானி இந்தப் பாடலில் மிக அழகாகச் சொல்லியிருப்பார்," என்றார் பாடி முடித்ததும்.
சாய் பாபாவுக்காக ராஜா உருவாக்கிய பாபா புகழ்மாலையில் இடம்பெற்ற உன்னைக் கேட்டுப்பார்... என்ற பாடலைக் கேட்கும்போதெல்லாம்... இது ரசிகர்களை அதிகமாகப் போய்ச் சேரவில்லையோ என்ற சின்ன வருத்தம் மேலோங்கும். ஆனால் இந்தக் கூட்டத்தில், அந்தப் பாடலை ஸ்ரீதரும் அன்வரும் பாடிப் பாடி விவாதித்த விதம் அந்த வருத்தத்தைப் போக்கிவிட்டது. யாருக்குச் சேர வேண்டுமோ அவர்களை சரியாகவே சென்று சேர்ந்திருக்கிறது ராஜாவின் இசையமுதம்!





'விண்ணார் அமுதே வீசும் சுடரே ஓதும் மறையே ஓதாப் பொருளே...' என்று ஒரு பாடல்... எந்த கணத்தில் கேட்டாலும் சிலிர்க்க வைக்கும் மெட்டு. இறைவனை எப்படி ஒவ்வொரு கணமும் புதிதாய் உணர்கிறோமோ... அப்படி எப்போது கேட்டாலும் புத்தம் புதிதாகத் தெரியும் மெட்டு. இந்தப் பாடலையும் ராகாதான் பாடினார். அசாதாரண நிசப்தத்துக்கிடையே ஒலித்த அந்தச் சிறுமியின் குரல் இறைவனின் இருப்பையே அந்தப் பாடல் வழி உணர்த்துவதாக இருந்தது!
இன்னும் கீதாஞ்சலி, திருவாசகம் பற்றியெல்லாம் விவாதித்தாலும், இவற்றை விரிவாக அனுபவித்துப் பேச இன்னொரு கூட்டம் போடணும் என்ற தீர்மானத்தோடு கூட்டம் நிறைவுற்றது.
இந்தக் கூட்டத்துக்கு வந்திருந்த ஒவ்வொருவருமே ராஜாவின் இசையை முழுமையாக லயித்து உணர்ந்தவர்கள்தான். சென்னையைச் சேர்ந்த பாலசுப்ரமணியன் தன் மனைவி ஜெயலலிதா மற்றும் மகனோடு கூட்டத்துக்கு வந்திருந்தார். ஓசூரிலிருந்து வந்திருந்தார் உஷா சங்கர். டாக்டர் நந்தா, திருச்சி செந்தில் குமார் (ராஜாவின் முரட்டு பக்தர்- ஆனால் ஏகப்பட்ட விஷயம் உள்ளவர்), ஆடிட்டர் கிரிதரன், வேல்ரமணன் உள்பட அனைவரும் திருவாசகம் தொடங்கி ராஜாவின் ஆன்மீக இசையை அழகாக அலசினர்.
டாக்டர் விஜய்யுடன் இணைந்து இந்த கூட்டத்தை அழகாக ஒருங்கிணைத்தார் நரசிம்மன்.
டாக்டர் விஜய்...
நாம் டாக்டர் விஜய்யைச் சந்தித்தோம்... வெறும் பட்டம் பெற்ற டாக்டரல்ல இவர். கோவை சாய்பாபா காலனியில் பிரபலமான மருத்துவர். தன் பணிநேரம் போக, மற்ற நேரத்தை ராஜாவின் பாடல்களில், அவரது நல்ல ரசிகர்களை ஒருங்கிணைப்பதில் செலவிடுபவர்.
இந்த குழு குறித்து நம்மிடம் கூறுகையில், "இணையதளம் என்ற கான்செப்ட் அறிமுகமான காலகட்டத்தில், பல விவாதங்கள் போய்க் கொண்டிருக்கும். அதிலெல்லாம் நானும் ஒரு பார்வையாளனாகப் பங்கேற்பேன். ஆனால் என் வருத்தமெல்லாம் தனிப்பட்ட முறையில் ஒருவரை புகழ்ந்து, அடுத்தவரை மட்டம் தட்டும் போக்குதான்... இப்படி வரும் விவாதங்களில் யார் நடுநிலையோடு இருக்கிறார்களோ...அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் மின்னஞ்சல் அனுப்பி, ஒருங்கிணைக்க முயன்றேன். அப்படி ஒவ்வொருத்தராகப் பார்த்துப் பார்த்து சேர்த்து உருவான குழுதான் இந்த இளையராஜா யாஹூ குரூப்ஸ்!
இளையராஜா என்ற மகத்தான கலைஞரின் படைப்புகளை முழுமையாக உள்வாங்கி ரசிக்க வேண்டும். அது பற்றிய விவாதங்கள் ஆரோக்கியமாக நடக்க வேண்டும் என்பதுதான் இந்த குழுவின் பிரதான நோக்கம்.
இந்தக் குழுவிலும் தனிப்பட்ட தாக்குதல் நடத்துவதுபோல, யார் பெரியவர் என்பது போன்ற, ராஜாவுக்கு உரிய விருதுகள் வரவில்லையே என்பது போன்ற கருத்துகள் வராமலில்லை. ஆனால் அவற்றை நானோ இந்தக் குழுவின் மற்ற மாடரேட்டர்களோ வளரவிட்டதேயில்லை. ஆரம்பத்திலேயே நீக்கிவிடுவோம்..." என்றார்.
இதற்கு முன் 2009-ல் இந்தக் குழு கூடியபோது, இளையராஜா இசையில் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியான 20 திரைப்பட ஆல்பங்கள் மற்றும் பக்திப் பாடல்கள் குறித்து மட்டும் விவாதித்துள்ளனர்.
ஒவ்வொரு கூட்டத்தின்போதும், இதுதான் டாபிக் என முடிவு செய்துவிடுவீர்களா?
"ஆமாம்... ராஜா சார் இசை ஒரு சமுத்திரம் மாதிரி. எல்லையில்லாமல் விரியும் ராஜ்யம் அது. ஒரு நாளில் பேசி முடிக்கிற விஷயமா அவரது இசை? எனவே குறிப்பிட்ட ஒரு தலைப்பை எடுத்துக் கொண்டு விவாதிப்பதுதான் சரியாக இருக்கும் என்பதால் இப்படி..!", என்றார் டாக்டர் விஜய்.
இத்தகைய கூட்டங்கள் விவாதங்கள் தாண்டி, இந்த குழு செய்திருக்கும் ஒரு விஷயம், இசைஞானியின் திருவாசகம் ஆரட்டோரியா உருவாக்கத்துக்காக, தங்களால் முடிந்த பல பணிகளை, தாமாகவே முன் வந்து செய்துள்ளனர். 30 பேர் கொண்ட குழுவே வேலை பார்த்திருக்கிறது. திருவாசகம் வெளியான அன்று நிகழ்ச்சி நடக்க உறுதுணையாக இருந்துள்ளனர். ஒரு குறிப்பிட்ட தொகையைத் திரட்டி ராஜாவிடமும் கொடுத்துள்ளனர்.
ராக்கம்மா கையத்தட்டு பாடல் பிபிசியின் ஆல்டைம் டாப்டென்னில் இடம் பிடித்ததல்லவா... அந்தப் பாடலுக்கு பிபிசி அங்கீகாரம் கிடைக்கச் செய்ததில் இந்தக் குழுவின் பங்களிப்பும் உண்டு!
நன்றி: தட்ஸ்தமிழ்

Thursday, August 16, 2012

இளைஞர்களை சந்திப்பேன்... என் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வேன்! - இசைஞானி இளையராஜா


இளம் தலைமுறையை சந்திப்பேன்... என் அனுபவங்களை அவர்களுடன் பகிர்ந்து கொள்வேன், என்றார் இசைஞானி இளையராஜா.
தமிழ் சினிமாவின் இன்றைய ஸ்பெஷல் இளையராஜாவின் நீதானே என் பொன்வசந்தம் இசைதான்.
இதுவரை இந்தப் படத்தின் இசைக்கான மூன்று முன்னோட்ட வீடியோக்கள் வந்துவிட்டன. மூன்றும் ரசிகர்களைப் பரவசப்பட வைத்துள்ளன.
இந்த நிலையில், இந்தப் படத்தின் இசை உருவாக்கம் குறித்து ஆகஸ்ட் 15-ம் தேதி ஜெயா டிவியில் இளையராஜாவும் இயக்குநர் கவுதம் மேனனும் கலந்துரையாடினர்.
அப்போது ஒரு பரம ரசிகனாக மாறி கவுதம் மேனன் கேள்விகளை எழுப்ப, இசைஞானி தனக்கே உரிய பாணியில் பதில்களைச் சொன்னார். பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே அமைந்திருந்தது இந்த உரையாடல். இளையராஜாவும் ஆங்கிலத்திலேயே பேசினார்.
அப்போது, 'உங்களிடம் பேச வேண்டும், உங்கள் அனுபவங்களை நீங்கள் சொல்லக் கேட்க வேண்டும் என இன்றைய தலைமுறை மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர். ஆனால் நீங்கள் அதற்குத் தயாரா என்று அவர்களுக்குத் தெரியவில்லை. அவர்களைச் சந்திப்பீர்களா..?'
"நிச்சயமாக கவுதம், இன்றைய இளம் தலைமுறையினருக்கு என் அனுபவங்களைச் சொல்ல, அவர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அவர்களுடன் பேச விரும்புகிறேன். நிச்சயம் அவர்களை நான் சந்திப்பேன்," என்றார்.
உங்களுடன் பணியாற்ற வேண்டும் என்பது என்னைப் போன்ற பலருக்கும் ஆசை என்றாலும், ஒரு அச்சம் காரணமாக வரத் தயக்கமாக இருக்கிறது, என்று கவுதம் மேனன் கூறியபோது, "என்னைப் பார்த்து ஏன் நீங்கள் பயப்பட வேண்டும்... அதற்கு அவசியமில்லையே.." என்றார் இளையராஜா.
நீதானே என் பொன்வசந்தம் படத்தில் உங்களுக்குப் பிடித்த பாட்டு எது என்று கேட்டபோது, "படத்தின் ஆல்பத்தில் உள்ள 8 பாடல்களுமே எனக்குப் பிடித்தவைதான். மாற்றம் வேண்டுமானால் சொல்லுங்கள்... இப்போதும் மாற்றித் தருகிறேன், என்றார் ராஜா.
உடனே கவுதம் மேனன், ஆத்மார்த்தமாக சொல்கிறேன்... எனக்கு அனைத்துப் பாடல்களுமே மிகத் திருப்தியாக இருந்தன, என்றார்.
இந்த நேர்காணலின் முடிவில் கவுதம் மேனன் ராஜாவைப் பார்த்து இப்படிச் சொன்னார்:
"சார்... நீங்க எனக்கு ஒரு பாட்டு எழுதினீங்க... என்னோடு வாவா என்று சொல்ல மாட்டேன்.. உன்னை விட்டு தூரம் எங்கும் போக மாட்டேன் என்று. நானும் அதையே உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். 'என்னோடு வாவா என்று சொல்லமாட்டேன், உங்களைவிட்டு நானும் போகமாட்டேன்' என்ற போது ராஜாவின் முகத்தில் அந்த அக்மார்க் சிரிப்பு.
இந்த நிகழ்ச்சியில் ரசிகர்களுக்காக, சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும்போது... பாடலைப் பாடி பியானோ இசைத்தார் இசைஞானி!!

Monday, July 23, 2012

நீயா நானா இல்லை இல்லை நீயும் நானும்

22 ஜூலை 2012 அன்று விஜய் டிவியில் ஒளிபரப்பான நீயா நானா 80களின் இசையும் வாழ்வும்......

Monday, June 4, 2012

இளையராஜா இசையில் ஹலோ ஜெய்ஹிந்த் பாடல்கள்

 நன்றி: மின்மலர்


இசைஞானி இளையராஜா இசையில் ஏகப்பட்ட எதிர்பார்ப்புடன் ஆரம்பிக்கப்பட்ட மராட்டி மொழி படமான ஹலோ ஜெய்ஹிந்த் படத்தின் பாடல்கள் ஏனோ வெளிவந்த மாதிரியே தெரியவில்லை. 3 பாடல்கள் நன்றாக உள்ளன. மற்ற பாடல்களும் வழக்கமான இளையராஜா ரகம். இனிமேல் இளையராஜா படம் புக்காகும் போதே பாடல்கள் வெளியாக வேண்டும் என்று கண்டிசனோடு தான் கையெழுத்திட வேண்டும் என நினைக்கிறேன். மும்பை குண்டு வெடிப்பால் பாதிக்கப்பட்ட ஒரு போலிஸ்காரரின் கதை. மிகப்பெரிய பலமாக இளையராஜாவின் பிண்ணனி இசை உள்ளது. 
பாடல்கள் பார்க்க :

பாடல் 1

பாடல் 2

பாடல் 3

பாடல் 4

பாடல் 5

பாடல் 6

தீம் மியூசிக்

Wednesday, February 8, 2012

"தென்றல் வந்து தீண்டும்போது" பாடல் பிறந்த கதை.. !


'தோணி' திரைப்படத்தின் ஒலிப்பேழை வெளியீட்டு விழாவில் நடிகர் நாசர் உரையில் இருந்து...


”1994ல் நான் இசைஞானியிடம் சென்று..

‘சார்..! ஒரு படம் பண்ணலாம் என்று இருக்கிறேன்..!’

‘எதுக்குய்யா.. ?? பிஸியா நடிச்சிகிட்டு இருக்க..! எதுக்கு இப்போ Produce பண்ணிகிட்டு?

‘இல்ல சார்..! நான் டைரக்ட் பண்ணலாம்னு இருக்கேன்’

‘இப்போதான் பிஸியா இருக்கியே..! இப்போ எதுக்குய்யா?’

‘இல்ல சார்..! சில விஷயங்கள் தோணும்போது பண்ணனும்’..!

‘ஓ! தெளிவா பேசுறதா நெனப்போ ஒனக்கு? சரி என்ன படம்..?’

“சார்..! ஒரு சின்ன கிராமத்துக்கதை.. தெருக்கூத்தை வைத்து… …”

“தெருக்கூத்தா..? என்னய்யா? நான் வேற Journey-ல இருக்கேன்..! ம்ம்ம்..?? சரி..! பார்க்கலாம்’ என்றார். நான் ஏமாற்றம் அடையவில்லை. படப்பிடிப்பிற்குச் சென்றேன். படம் எடுத்தேன். தொகுத்தேன். பின்னணிக்குரல் சேர்த்தேன். பின்னணி ஒலிகள் சேர்த்தேன். ஒரு நாள்..

“சார் நான் படத்தை முடிச்சுட்டேன்..”

“என்ன அதுக்குள்ளேயா?”

‘ஆமா சார்..! நீங்க படம் பார்க்கணும்”

“சரி” என்றவர் படம் பார்த்தார். அந்தப் படம் ‘அவதாரம்’..! படம் முடித்துக் காரில் ஏறி, ‘வீட்டுக்கு வா’ என்றார். எனக்கு ஒரே பயம். பல நூறு படங்களைக் கண்ட ஒரு மாபெரும் கலைஞன் என் படத்தைப் பார்க்கிறான். ஒரு விமர்சனம், ஒரு பாராட்டுதல் இல்லாமல் ‘வீட்டுக்கு வா’ என்றால் என்ன அர்த்தம்? ஒரு வேளைத் திட்டப் போகிறாரோ? என்று பயந்துகொண்டே சென்றேன். அவருடைய வீடு சாத்வீகமாக, ஒரு கோயில் போல இருந்தது.

‘எப்படிய்யா இப்படி ஒரு படம் பண்ணியிருக்க..? நல்லாயிருக்கே..! சரி நாளைக்கு ரெக்கார்டிங் வச்சுக்கலாம்’

‘சார்…! நாளைக்கு…. … வச்சா … … .. ப்ரொடியூசர் ஊரில் இல்ல சார்..’

‘ப்ரொடியூசர் எதுக்குய்யா? டைரக்டர் நீ இருக்க..! மியூசிக் டைரக்டர் நான் இருக்கேன்..! வா.. பாத்துக்கலாம்..!’

‘சார்..! அதில்ல சார்..!’

‘புரியுதுய்யா..! போய்யா அதெல்லாம் ஒண்ணும் வேணாம்..! ப்ரொடியூசர் எங்க இருக்காரு?’

‘சார்… வந்து... அமெரிக்காவில்’

‘சரி..! வரட்டும் ..! அப்பறம் பாத்துக்கலாம்..! ரெக்கார்டிங் நாளைக்கு…”

உங்கள் எல்லோருக்கும் தெரியும். சினிமாவில் அட்வான்ஸ் என்ற ஒன்று இல்லாமல் ஒரு காரியமும் நடக்காது. பலவிதமான Excitement-க்கு நடுவே இதனால் எனக்குத் தலைகால் புரியவில்லை. அடுத்த நாள் ஆறு மணிக்கு வரச்சொன்னார். பதைபதைப்புடன் போனேன்.

வெள்ளை வெளேர் என்ற ஒரு அறை. கருப்பு வெள்ளையில் ரமண மகரிஷியின் ஒரு புகைப்படம். அதனருகில் அம்மா என்கிற ஒரு ஆத்மாவின் புகைப்படம். அதே கருப்பு வெள்ளை 3D Animation போல அருகில் இளையராஜா, அவர் பக்கத்தில் ஒரு கோப்பையில் இறக்குமதி செய்யப்பட்ட சாக்லேட்டுகள்..! இவைகளைத் தவிர அந்த அறையில் இருந்த மற்றொரு முக்கியமான விஷயம் ”அமைதி”. நான் சென்றபோது ஏதோ எழுதிக்கொண்டிருந்தார். நான் உட்காரவா வேண்டாமா என்று தயங்கி நின்றுகொண்டிருந்தேன். உட்காரச் சொன்னார். உட்கார்ந்தேன். ஒரு சாக்லேட்டை எடுத்து என்னிடம் போட்டார். நான் அதைப் பிடித்தேன். அந்த சாக்லேட் பேப்பரின் ஒலிதான் அந்த அறையில் நான் நுழைந்து ஐந்து நிமிடங்களில் நான் கேட்ட முதல் ஒலி. ”இதைப்பிரித்தால் சாக்லேட் பேப்பரின் ஒலி இவரை Disturb செய்துவிடுமே..? இதைப் பிரிக்கலாமா வேண்டாமா? சாப்பிடுவதா இல்லையா?” என்று எனக்கு யோசனை.

அவர் எழுதிக்கொண்டே இருக்கிறார். எழுதிக்கொண்டே இருக்கிறார். வேகமாக எழுதுகிறார். கோபத்துடன் எழுதுகிறாரா, பாசத்துடன் எழுதுகிறாரா, யாருக்கு எழுதுகிறார், என்ன எழுதுகிறார், எதுவும் தெரியவில்லை. நான் உட்கார்ந்துகொண்டே இருக்கிறேன். மெதுவாக எனக்குக் கோபம் வரத்துவங்குகிறது. ”என்ன இது? நான் ஒரு டைரக்டர்..! என்னை வரச்சொல்லிவிட்டு இவர் எழுதிக்கொண்டிருக்கிறார்..! அவர் சொந்த விஷயத்தை எழுதுவதற்கு என்னை எதற்கு வரச்சொன்னார்? ஒரு பத்து நிமிடங்கள் கழித்து வரச்சொல்லியிருக்கலாமே?”

பக்கம் பக்கமாக வேகமாக எழுதியவர், நிமிர்ந்து ‘புரு...’ என்றார். அவர் கூறியது ஒரு நான்கு அடி தள்ளி அமர்ந்திருந்த என் வரைக்கும்தான் கேட்டிருக்கும். ஆனால் வெளியில் இருந்து ‘புரு’ என்கிற ஆறடி உயர ‘புருஷோத்தமன்’ வந்தார். அவர்கள் இருவருக்குள்ளும் அப்படி ஒரு Intimate communication..! Sheets எல்லாம் அவரிடம் கொடுத்துவிடுகிறார். ‘இதை Distribute பண்ணிடு’ என்கிறார்.

”சரி..! அவர் வேலை முடிந்தது..! இனி நம் வேலைக்கு வருவார்” என்று நினைத்தேன்.

‘என்ன சார்..?”

‘அது போய்டுச்சுய்யா’

'சார்.. ..'

‘அதுதான்.. அந்த first பாட்டு..! போய்டுச்சுய்யா..’

‘சார் .. எந்த Scene?’

‘யோவ்..! அதான் உன் படம் சொல்லிடுச்சேய்யா..! எந்தெந்தப் பாட்டு எங்கெங்க வரணும்னு’

‘அப்டியா சார்?’

‘ரொம்ப நல்லா வந்திருக்குதுய்யா.. கேளு..’ என்றவர், பாடத் துவங்குகிறார்.. ‘தன்னனன தான தான தான நான நா…. (தென்றல் வந்து தீண்டும்போது)’. அவர் போட்டிருந்த டியூன் எனக்குப் பிடிக்கவில்லை.

‘என்னய்யா? என்னய்யா யோசிக்கிற? கேளு..!’ என்றவர் மறுபடி ‘தன்னனன’ பாடத் துவங்கினார்.

அப்போதான் தெரிகிறது. நான் எவ்வளவு பெரிய ஞானசூன்யம் என்பது. ’நல்லாயிருக்குது என்று சொன்னால் எது நல்லாயிருக்குது என்று கேட்பார். நல்லாயில்லை என்று சொன்னால் என்னய்யா நல்லாயில்ல என்பாரே’ என்ற யோசனையுடன்..

‘இல்ல சார்..! இதற்கு முன்னால் வரும் பாடலில் காட்சிகள் கொஞ்சம் வேகம் குறைந்ததாக இருக்கும். இது கொஞ்சம் வேகமான பாட்டா இருந்தா நல்லா இருக்கும்.’

‘அதுதான்யா இது..! நல்லா வரும்யா..!’

’சார்..! கொஞ்சம் Tempo-வாவது ஏத்த முடியுமா?’

............ என் மேல் உள்ள அன்பா அல்லது ரீரெக்கார்டிங்கின்போது என்னுடைய நடிப்பைப் பார்த்துவிட்டு என் மேல் ஏற்பட்ட நல்ல ஒரு உணர்வா எதுவென்று தெரியவில்லை. வேறு எந்த மியூசிக் டைரக்டரிடம் நான் இதைச் சொல்லியிருந்தாலும் என்னை அடித்து ‘போடா வெளியே’ என்று துரத்தியிருப்பார்கள். ஒரு ஞானியிடம் சென்று ஒரு ஞானசூன்யம் சொல்கிறது ‘கொஞ்சம் Tempo ஏத்துங்க’..!

அவர் சிரித்தார். எனக்கு வேலை இருக்கிறதா என்று கேட்டு பின்னர் நாலு மணிக்கு வரச்சொன்னார்.

நான் சென்றவுடன் என்னுடைய Assistant Directors எல்லாம் டியூன் எப்படி இருந்தது என்று கேட்டார்கள். 'ஏதோ இருந்தது' என்று சொன்னேன். அதற்கு அவர்கள் ‘அவர் அப்படித்தான் சார் போடுவார். நாமதான் சார் நாலஞ்சு டியூன் போடச் சொல்லிக் கேட்டு வாங்கணும்’ என்றார்கள். நான் அதற்கு, ‘விடுங்கய்யா.. நாலு மணிக்கு வரச்சொல்லியிருக்கிறார். நான் Tempoவை கூட்டச்சொல்லியிருக்கிறேன்” என்றேன்.

நாலு மணிக்குச் சென்றேன். ரெக்கார்டிங் ஸ்டுடியோ ஒரு கல்யாண மண்டபம் போன்று இருந்தது. பலவிதமான வாத்தியக்கருவிகளின் பலவிதமான சப்தங்கள்..! பரவாயில்லை. நம் பாட்டுக்கு இவ்வளவு பேர் வேலை செய்கிறார்கள் என்று ஒரு சந்தோஷம். சரியாய் நாலரை மணிக்கு சொல்கிறார்…

’…புரு….!’ (இம்முறை கொஞ்சம் சத்தமாக). சரி ஒரு மானிட்டர் பார்க்கலாம்’

எங்கும் அமைதி…!

1…..! 1..2..3..4..

‘தானத் தம்தம் தானத் தம்தம் தானத் தம்தம் தானத் தன்னானா..’ பாடலின் கோரஸ் துவங்குகிறது.

'....... ...... ....'

'....... ...... ....'

I cried..... நான் அழுதேன். பக்கத்தில் அவர் முழங்கால்கள் இருந்தன. அவற்றைப் பற்றிக்கொண்டு.. ‘சார்..! தயவுசெய்து என்னை மன்னிச்சுடுங்க சார். நான் தெரியாம எதோ சொல்லிட்டேன்’ என்றேன்.
‘இருய்யா..! முழுசாக் கேளுய்யா’ என்றார்.



அப்படி உருவானதுதான் ‘தென்றல் வந்து தீண்டும்போது’ பாடல். எனக்கு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் எப்படி ஒரு மனிதன் சரளமாக, ஒரு கவிஞன் கோபத்தில், காதலில் அல்லது வீரத்தில் எழுதுவது போல இவ்வளவு வேகத்தில் இசையை எழுதமுடியும் என்பதுதான் (கைகளால் காற்றில் வேகவேகமாக எழுதிக்காட்டுகிறார்).




இளையராஜாவின் வெற்றிக்கு மற்றொரு காரணம் ‘கற்றல்’. எப்போதும் கற்றுக்கொண்டே இருக்கிறார். அவதாரம் திரைப்படத்தின் ஒரு மூன்று காட்சிகளை..

‘யோவ்..! இந்த மூணு சீன் ரொம்ப திராபையா இருக்கேய்யா’ என்றார்.

‘இல்ல சார்..! அவன் திரும்பத் திரும்ப எப்படியாவது என்னைக் கூத்துக்குழுவில் சேர்த்துக்கொள்ளுங்கள் என்று கெஞ்சுகின்றான். அதை விளக்குவதற்காகத்தான் அந்த மூணு சீனையும் வைத்திருக்கிறேன். அது எனக்கு ரொம்ப தேவை சார்’ என்றேன்.

‘உனக்குத் தேவைய்யா..! ஆனால் பார்க்கிறவனுக்கு Interesting-ஆக இருக்கணும் இல்லையா?’ நீ அரை நாளில் ஷூட் பண்ணுவது போல இந்த இடத்தில் ஒரு பாட்டு போட்டுக்கொடுத்துவிடுகிறேன்’ என்றார். அந்தப் பாடல்தான் ‘அரிதாரத்தப் பூசிக்கொள்ள ஆசை’. அதாவது ஒரு ஏழரை நிமிஷத்து வறட்சியான மூன்று காட்சிகளை மிக அழகாகக் கொண்டுவந்து விட்டார். அவதாரம் படத்தின் ஒவ்வொரு பாட்டும் முத்தான பாடல்கள். அந்த ஐந்து பாடல்களும் இரண்டரை நாட்களில் பதிவு செய்யப்பட்டவை. இன்றைக்கு மாதங்கள் ஆகின்றன. சிலருக்கு வருடங்கள் ஆகின்றன.

போன வருடம் ஒரு படப்பிடிப்பிற்காக சென்னையில் இருந்து சிதம்பரத்திற்கு ரோடு வழியாகச் செல்லவேண்டியிருந்தது. அது ஒரு விழாக்காலம் என்று நினைக்கிறேன். ஒவ்வொரு ஊரைக் கடக்கும்போதும் டீ கடைகளிலும், கோவில் விழாக்களிலும் பாடல்கள் ஒலித்துக்கொண்டு இருந்தன. சரி.. மக்கள் யாருடைய பாடல்களை கேட்கிறார்கள் என்று ஒரு கணக்கெடுக்கலாம் என்று நினைத்தேன். மேடைக்காக மிகைப்படுத்திச் சொல்லவில்லை. நான் கேட்டதில் ஏழு எம்.எஸ்.வி. பாடல்கள், மூன்று ஏ. ஆர். ரகுமான் பாடல்கள், இருபத்தெட்டு இளையராஜா பாடல்கள். தமிழ் சமூகம் இளையராஜாவின் பாடல்களுடன் வாழ்ந்துகொண்டிருக்கிறது."

இசை என்பது வியாபாரம் மட்டுமே அல்ல. இந்தியா கிராமங்களில் வாழ்கிறது என்று காந்திஜி கூறினார். கிராமங்களில் வாழும் மனிதர்களின் மனதில் இன்னும் இளையராஜா பாடல்கள்தான் கேட்டுக்கொண்டிருக்கின்றன. இப்படி ஒரு விழா இளையராஜாவுக்கு மிகச் சிறியது. ஆனால் எங்கள் மனது பெரியது” என்றார்

நன்றி: vivasaayi.blogspot.com

Sunday, February 5, 2012

இசை ஆசிரியன்



தமிழ் சுணங்கிப் படுக்கும்பொழுதெல்லாம், மீட்டெடுக்க ஒவ்வொரு தலைமுறையிலும் ஏதேனும் ஒன்று தமிழைத் தட்டி எழுப்பி ஃபீனிக்ஸாக மாற்றும். இந்தத் தலைமுறையில் யுனிகோடும், சென்ற தலைமுறையில் செயற்கைக் கோள் தொலைக்காட்சிகளும் அதைச் செய்ய, கிட்டத்தட்ட 36 ஆண்டுகளுக்கு முன்னர் அன்னக்கிளி உன்னைத் தேடுதே என மண்ணின் இசையுடன், தமிழை மட்டுமல்ல,ஒட்டு மொத்த தென்னகத்தின் அடையாளங்களையே மீட்டவர் இளையராஜா.

அது ஒரு சிறிய வார இறுதி விருந்துக் கொண்டாட்டம், அமெரிக்க, ஸ்விடீஷ் பாடல்கள் இசைக்கப்படுகின்றன. ஒருப் பாடல் ஒலிக்கிறது, திடீரென ஒருவர் ஆனந்தத்தில் கத்துகிறார், இது ஐஸ்லாந்து இசை, என் ஊர் இசை ... அப்பொழுதுதான் இத்தனை நாள் வரை ஸ்விடீஷ் ஆள் என நினைத்துக் கொண்டிருந்தவர் ஐஸ்லாந்து நாட்டைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்தது. மொழிக்கு அடுத்தபடியாக இசையே தான் இன்னார் எனக் பெருமையுடன் காட்டிக்கொள்ள ஏதுவாக இருக்கிறது என்பதை வேறு ஒருவர் மூலம் நான் உணர்ந்த தருணம் அது.

மேட்டிமைக் கனவான்களின் இசையையும் ரசிக்க முடியாமல், எங்கே தன் நிலம் சார்ந்த இசையை ரசித்தோமானால் தாழ்ச்சியாகிவிடுமோ என்று அல்லாடிக்கொண்டிருந்த சாமானிய தமிழ் இசை விரும்பிகளை, இதோப்பார் எனக்கான இசை, என் மக்களில் மத்தியில் இருந்து ஒருவனால் இசைக்கப்படுகிறது என இசையின் எந்த இலக்கணங்களும் தெரியாத என்னைப்போன்ற சராசரிகளைப் பெருமை கொள்ள செய்தவர். நல்ல ஆசிரியருக்கான அளவுகோல் , எத்தனைப் பெரிய சூத்திரமாக இருந்தாலும் அதை எத்தனை எளிமையாக சொல்லுகிறார் என்பதில்தான் இருக்கின்றது. இளையராஜா, இசைக்கு அரசனோ, சக்கரவர்த்தியோ எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். என்னைப்போன்றவர்களுக்கு இசை ஆசிரியன். மன்றம் வந்தத் தென்றலுக்கு பாடல் ஒலிக்கும்பொழுதெல்லாம் உடன் பாடும் லட்சக்கணக்கானவர்களில் நானும் ஒருவன். இசைக்கும் எனக்குமான தூரத்தைக் குறைத்தவர் இளையராஜா என்ற ஆசிரியர் தான்.

நண்பர் ஒருவருடன் உரையாடிக்கொண்டிருக்கும் பொழுது அவர் சொன்னது “இளையரஜா இல்லை எனில் 80 களில் ஒரு இளையத் தலைமுறையே பைத்தியமாகி இருக்கும் அல்லது தீவிரவாதியாகி இருக்கும்”. 80 களின் தலைமுறையென்ன, இன்றும் கூட, பலரின் சோகங்களுக்கு ஆறுதல் சொல்லப்படுவது இளையராஜாவின் இசையினால் தான். கொண்டாட்ட மனோபாவத்தில் இருக்கும்பொழுது நவீன புதுமையான இசை வடிவங்கள் வேண்டுமானால் ரசிக்கப்படலாம். ஆனால் ஆறுதலாக உடைந்திருக்கும் மனதை வருடிக் கொடுக்க பெரும்பான்மையான தமிழ் பேசும் மக்கள் நாடுவது இளையராஜாவின் இசையைத்தான். மகிழ்ச்சியை யாருடன் வேண்டுமானாலும் பகிர்ந்து கொள்ளலாம், வருத்தங்கள் மனதுக்கு நெருக்கமானவர்களுடன் மட்டுமே பகிரப்படும், இளையராஜாவின் இசை அத்தகையது. இரவு பத்து மணிக்கு மேல் இளையராஜாவுடன் தூங்காதவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.



அம்மா பிடிக்குமா அல்லது அப்பா பிடிக்குமா என இது அல்லது அது என அரசியலைக் குழந்தைப் பருவத்தில் இருந்தேத் தொடங்கிவிடும் நாம், இளையராஜாவையும் விட்டு வைக்கவில்லை. இளையராஜாவைப் பிடித்தால் ஏ.ஆர்.ரகுமானையோ அல்லது வேறு யாரையுமேப் பிடிக்கக் கூடாது என்பதில்லை. மேலே சொன்னபடி ஏ.ஆர்.ரகுமானையும் ரசிக்க தேவையான அடிப்படைப் பாடங்களைச் சொல்லிக்கொடுத்தவர் பேராசிரியர் கிராமத்து ராசா. ஒரு வேளை இசை கடவுள் என்றால், இளையராஜா கடவுளின் அவதாரம் அல்லது கடவுளின் தூதர். ஒன்றிற்கு மேற்பட்ட அவதாரங்களையோ கடவுளின் தூதர்களையோ மனிதன் வேண்டாம் என்று சொல்லுவதில்லை. இவர் ராமன் என்றால் அவர் கிருஷ்ணன், இவர் நபி என்றால் அவர் யேசு...

தமிழ் அல்லாத சூழல், இந்தியா என்றாலே பாலிவுட் என்று மட்டுமே அறிந்திருக்கும் சராசரியான ஐரோப்பியச் சூழல், எனது கைபேசி ஒலிக்கிறது. குறைந்தது 5 பேராவது, திரும்பிப்பார்க்கிறார்கள், மூன்று பேராவது இது என்ன இசை, யார் இசைத்தது, எனக் கேட்கின்றார்கள்... ஒருவராவது இதனின் எம்பி3 வடிவத்தை எனக்கு அனுப்புகின்றாய எனக் கேட்பதுண்டு.... ஸ்வீடன், போலாந்து, பின்லாந்து தற்பொழுது இத்தாலி எனத் தொடருகின்றது... அது, பல்லவி அனுப்ல்லவி என்ற கன்னடப் படத்தில் இளையராஜாவால் போடப்பட்ட சின்ன இசைத்துணுக்கு...

சிலமாதங்களுக்கு முன்னர் ஓர் இந்திப் பேசும் மாணவன்,”வடக்குத் தெற்கு இடைவெளியால் நாங்கள் இழந்தது இளையராஜாவின் இசையை” சீனிகம் , பா படப்பாடல்களைக் கேட்டப்பின்னர் சொன்னான்.

“அடேய் நண்பா, இந்தப் பாடல்களை எல்லாம் நாங்கள் 25 வருடங்களுக்கு முன்னரேக் கேட்டுவிட்டோம்” என்றபடி எனது மடிக்கணினியில் வைத்திருந்த அத்தனை இளையராஜாவின் குழந்தைகளையும் கொடுத்தேன்.

சில வகை இசை, வோட்கா என்றால், இளையராஜாவின் இசை வைன், வைனைப்போல எத்தனைக் காலம் கடக்கிறதோ, அத்தனை மகத்துவமும் இனிமையும் ராஜாவின் இசைக்கு. நீருற்றுகள் கோடையில் வறண்டதுப்போலக் காணப்படலாம், அதற்காக அவை கானல் நீராகிவிடாது. இன்று ஆடு தாண்டும் அளவில் ஓடினாலும், இளையராஜாவின் இசையாறு , இன்றும் ஓடிக்கொண்டிருக்கிறது, இன்னமும் ஓடும். எனது உற்சாகத்தை மீட்டு எடுக்க ஒவ்வொரு படித்துறையிலும் தினமும் கொஞ்சம் நீரை எடுத்துப் பருகுகின்றேன்.

கடவுள் என்று ஒன்று இருந்தால் நான் கேட்கும் ஒரே வரம், அனுதினமும் குறையா உற்சாகம். அந்த உற்சாகத்தை தவமின்றிக் கொடுத்துக் கொண்டிருக்கிறது இளையராஜாவின் இசை. இந்த நூற்றாண்டில் சிலரைக் கடவுளாக்க எனக்கு அதிகாரம் கிடைத்தால், காந்தி, பெரியார், பிரபாகரனுடன் இளையராஜாவின் இசையையும் வைப்பேன். நிச்சயம் தமிழும் தமிழ்ச் சமுதாயமும் இளையராஜாவின் இசைக்குக் கடமைப்பட்டிருக்கின்றது. எனது ஒவ்வொரு வெற்றியிலும் இளையராஜாவின் இசையின் பங்கும் இருக்கின்றது என்ற வகையில் இந்தப் பதிவு இளையராஜாவின் இசைப் பயணத்திற்கு சமர்ப்பிக்கபடுகிறது.

நன்றி: வினையூக்கி http://vinaiooki.blogspot.com

தாயை இழந்த எனக்குத் துணையாக நின்றது இசைஞானியின் இசைக்கரங்கள்! - உருக வைத்த முத்துக்குமார்

சென்னை அண்ணா பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் பிரகாஷ் ராஜின் தோணி பட இசைவெளியீட்டு விழா கடந்த சனிக்கிழமை மாலை நடந்தது.



இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ள படம் அது. படத்தின் இசைவெளியீட்டை, இளையராஜாவுக்கு சிறப்பு செய்யும் விதத்தில் அமைத்திருந்தார் பிரகாஷ் ராஜ்.

இதுவரை தன் வாழ்க்கையிலேயே முதல் முறையாக தான் இசையமைத்த பட இசை விழாவில் அந்தப் படப் பாடல்களை லைவாக இசைக்க வைத்து, வந்திருந்தவர்களுக்கு ஆனந்த அதிர்ச்சி தந்தார் இளையராஜா.

நான்கு பாடல்கள் இசைக்கப்பட்டன. நான்கும் முத்தான பாடல்கள் என்று சொல்லும் அளவுக்கு மிக இனிமையாக, அர்த்தமுள்ளதாக அமைந்திருந்தது சிறப்பு.

இந்த இசை வெளியீட்டு விழாவுக்கு தமிழ் சினிமாவின் ஜாம்பவான்கள், சாதனையாளர்கள், இளையராஜாவின் அபிமானிகள் அத்தனை பேரும் குவிந்திருந்தனர். மாலை 7 மணிக்கு தொடங்கிய நிகழ்ச்சி, இரவு 9.30ஐ தாண்டிய பிறகும் நீடித்தது. ஆனால் ஒருவரும் வெளியில் எழுந்து செல்லவில்லை. அப்படியொரு ஈர்ப்புடன் அமர்ந்து நிகழ்ச்சியை ரசித்தனர்.

இளையராஜாவுடனான தங்கள் அனுபவங்கள், அவரது இசையின் சிறப்பு, இளையராஜா எனும் அற்புதமான கலைஞனின் தொழில்முறை நேர்த்தி என பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டனர் பிரபலங்கள்.

இயக்குநர்களின் ஆதர்ச நாயகனாகக் கருதப்படும் மகேந்திரன், இயக்குநர் சிகரம் எனப் புகழப்படும் பாலச்சந்தர், எஸ்பி முத்துராமன், இயக்குநர்கள் பார்த்திபன், கேஎஸ் ரவிக்குமார், ஆர் வி உதயகுமார், ஜெயம் ராஜா, ராதா மோகன் என ஒவ்வொருவர் பேசியதையும் தனித்தனி கட்டுரைகளாகவே வெளியிடலாம். அத்தனை சிறப்பாக அமைந்தது பேச்சு.

குறிப்பாக நாசரின் பேச்சு, சுவாரஸ்யமிக்கதாக அமைந்தது.

இந்த விழாவின் ஹைலைட் என்றால் அது கவிஞர் நா முத்துக்குமாரி்ன் பேச்சு. அந்தப் பேச்சை கண்கலங்காமல் கேட்டவர்கள் அநேகமாக வெகு சிலராகத்தான் இருந்திருப்பார்கள்.

அவரது பேச்சு முழுவதுமாக:

இசைஞானி அவர்களுக்காக முதல்முறையாக நான் தோணி திரைப்படத்திற்காக அனைத்து பாடல்களையும் எழுதியிருக்கிறேன். ஜூலி கணபதி படத்துக்காகத்தான் அவரை நான் முதல் முறையாக என் குருநாதர் பாலுமகேந்திராவுடன் சந்தித்தேன். அந்த சந்திப்பு மறக்க முடியாதது. ஒரு பரீட்சை எழுதப்போகும் மாணவனின் பதைப்புடன் அவர் அறைக்குச் சென்றேன்.

எனக்குத் தந்த மெட்டுக்கு...

‘எனக்குப் பிடித்தப் பாட்டு அது உனக்குப் பிடிக்குமே
என் மனது போகும் வழியை உன் மனது அறியுமே
எனக்குப் பிடித்த நிலவு அது உனக்குப் பிடிக்குமே’

என்ற பல்லவியை அவருக்குக் கொடுத்தேன். படித்துப் பார்த்துவிட்டு ‘நன்றாயிருக்கிறது பல்லவி..! ஒரு சின்ன திருத்தம் செய்யலாமா?’ என்று கேட்டார். ‘தாராளமாக ஐயா’ என்று சொன்னேன்.

‘எனக்குப் பிடித்த நிலவு அது உனக்குப் பிடிக்குமே’ என்ற வரியை ‘என்னைப் பிடித்த நிலவு அது உன்னைப் பிடிக்குமே’ என்று மாற்றினால் அர்த்தம் இன்னும் சிறப்பாக இருக்குமென்றார். நான் எழுதிய வரிகளை விட பத்துமடங்கு சிறப்பாக இருக்கிறது என்று பரவசப்பட்டுப் போனேன்.

அன்று எனக்கு ஒன்று புரிந்தது. பாடலில் திருத்தம் என்பது சிதைப்பது அல்ல; செதுக்குவது என்று. அதன் பின்னர் நிறைய பாடல்கள் எழுதினேன். ஒவ்வொரு முறை அவர் அறைக்குள் நுழையும்போதும் என் கைகால்கள் நடுங்கத் துவங்கும்.

அவர் எப்போதும் என்னை அமரவைத்து, நகைச்சுவையாகப் பேசி என்னை இயல்புக்குக் கொண்டுவருவார். ஒவ்வொரு முறை பாடல் எழுதும்போதும் அவரிடம் ஒரு புதிய விஷயத்தை நான் கற்றுக்கொள்வேன். எப்படி எளிமையாக எழுத வேண்டும்… எப்படி மக்களுக்குப் புரியும் வகையில் எழுத வேண்டும்… போன்ற பல விஷயங்களை அவரிடம்தான் கற்றுக்கொண்டேன்.

‘தோணி’ திரைப்படத்தின் கம்போஸிங்கிற்கு "முத்துக்குமாரையும் கூட்டி வாருங்களேன்," என்று சொல்லியனுப்பியிருந்தார். போயிருந்தேன். அது ஒரு பரவச அனுபவம். முதல் முறை அவருடன் கம்போசிங்கில். ஒரு முக்கால் மணி நேரத்தில் வரிசையாக 5 டியூன்களைப் போடுகிறார். நான் கண்களை மூடி அமர்ந்து கேட்டுக்கொண்டிருக்கிறேன். கடவுளிடம் நேரடியாகப் பேசுபவர்கள் குழந்தைகளும் இசைக் கலைஞர்களும் என்று சொல்வார்கள். அந்த தருணத்தில் அதை நான் கண்டுகொண்டேன்.

என் மகனுக்கு தினமும் கண்ணே கலைமானே...


இன்றைக்கும் நான் இசைஞானியின் பாடல்களைக் கேட்காமல் தூங்குவதில்லை. என் மகனுக்கு நான் தினமும் பாடும் தாலாட்டு ‘கண்ணே கலைமானே’ பாடல்தான். ஒரு பாடலாசிரியராக என்னுடைய குருவாக அவரை நினைக்கிறேன். ஒரு சில பாடல்களே அவர் திரைப்படத்திற்கு எழுதியிருந்தாலும் அவர் எழுதிய பாடல்களுக்கு இன்றைக்கும் நான் ரசிகன். அழகி திரைப்படத்தில் எழுதியிருப்பார்…

"கோயில் மணிய யாரு ஏத்துறா?
தூண்டா வெளக்க யாரு ஏத்துறா ?
ஒரு போதும் அணையாம நின்று எரியணும்..”

அதே படத்தின் வேறொரு பாடலில்...
“இருள் தொடங்கிடும் மேற்கு - அங்கு
இன்னும் இருப்பது எதற்கு?
ஒளி தொடங்கிடும் கிழக்கு
உண்டு பொதுவினில் ஒரு விளக்கு”

இதை எந்தக் கவிஞனும் எழுதி விடலாம். ஆனால் அதன்பின்னர் வரும் 'ஒளி இருக்குமிடம் கிழக்குமில்லை மேற்குமில்லை' என்ற வரிகள் அத்தனை சிறப்பானவை. அதே போல நாடோடித் தென்றல் படத்தில்,

'யாரும் விளையாடும் தோட்டம்
தினந்தோறும் ஆட்டம் பாட்டம்
போட்டாலும் பொறுத்துக் கொண்டு
பொன்னு தரும் பூமி இந்த மண்ணு நம்ம சாமி
கோபங்கள் வேண்டாம் கொஞ்சம் ஆறப்போடு
ஆறோடும் ஊரைப் பாத்து டேரா போடு'

என்ற வரிகள். இந்த பூமியை, மண்ணை அவர் நேசிக்கும் அழகை அத்தனை அற்புதமாக்ச சொல்லியிருப்பார்.

நான் சிறுவயதில் தாயை இழந்தவன். அந்தத் தனிமை எப்போதும் என்னுடன் இருந்துகொண்டே இருக்கும். அப்போது ‘ஆவாரம்பூ’ படத்தில் ஒரு பாடல் கேட்டேன்.

ஆலோலம் பாடி அசைந்தாடும் காற்றே..!
அதைக்கேட்டு தூங்கும் ஆவராம்பூவே..!
தனியானால் என்ன துணை இங்கே நான் பாடும் பாட்டுண்டு

இந்த வரிகளைக் கேட்டவுடன் அவரின் இசைக் கரங்களை நான் பிடித்துக்கொண்டேன். அதன் பின்னர் வரும்,

தாய் இழந்த துன்பம் போலே
துன்பம் அது ஒன்றுமில்லை
பூமி என்ற தாயும் உண்டு
வானம் என்ற தந்தை உண்டு
நீங்கிடாத சொந்தம் என்று
நீரும் காற்றும் எங்கும் உண்டு

என்ற வரிகள் எனக்கு தன்னம்பிக்கை அளித்தன. அன்று பிடித்த அவரின் இசைக் கரங்களை இன்றுவரை நான் விடவில்லை," என்றார்.

அதுவரை நிசப்தத்தில் இருந்த அரங்கம் ஒரு நிமிடம் ஸ்தம்பித்து அதிர்ந்தது!
நன்றி: thatstamil.com