Wednesday, March 24, 2010

ஷாஜியின் கட்டுரையும் விவாதமும்

இளையராஜா: நேற்றும் இன்றும் - ஷாஜி
மிகப்பெரிய புத்திசாலித்தனமோ உயர்ந்த கற்பனை வளமோ
மேதைகளை உருவாக்குவதில்லை.
மாறாத அன்பு, அன்பு, அன்பு மட்டுமே
ஓர் உண்மையான மேதையின் ஆன்மாவாக இருக்கிறது
- மொஸார்ட்

சென்னை திரை இசைக்கலைஞர்கள் சங்கம் ஆஸ்கர் விருது பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானைப் பாராட்டி நடத்திய விழாவில் இளையராஜா உரை நிகழ்த்தினார். அதில் அவர் பழம்பெரும் இந்தி இசையமைப்பாளர்களான ரோஷன் மற்றும் மதன் மோகனைப் பற்றி ஒரு கதை சொன்னார். "ரோஷனும் மதன் மோகனும் தம் வாழ்நாளில் சந்தித்துக் கொண்டதே இல்லை, ரோஷன் மறைந்தபோது அவருடைய உடலைப்பார்த்து கண்ணீர்விட்டபடி மதன் மோகன் சொன்னது 'இனி யாரோடு நான் போட்டியிடுவேன்?' என்று. அவர்கள் இருவரும் நேரில் சந்தித்ததே இல்லை. ஆனால் தங்களது இசையால் ஒருவக்கொருவர் உரையாடிக்கொண்டிருந்தார்கள்". எதை குறிப்பிடுவதற்க்காக இளையராஜா அம்மேடையில் இதை சொன்னார் என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் ஒன்று உறுதியாகத் தெரியும், இந்தச் சம்பவம் உண்மையல்ல!

ரோஷனும் மதன் மோகனும் மிகச்சிறந்த நண்பர்கள். தன்னிடம் மதன் மோகனை அறிமுகப்படுத்தி வைத்தவரே ரோஷன் தான் என்று ஜெயதேவ் குறிப்பிட்டிருக்கிறார். ஜெய்தேவ் அந்த காலகட்டத்தின் இன்னொரு அசாதரணமான இசையமைப்பாளர். இம்மூவரின் நட்பின் ஆழத்தைப்பற்றி அக்டோபர் 2009 உயிர்மையில் வெளியான 'ஜெய்தேவ், தனித்த இசைப்பயணி' என்ற எனது கட்டுரையில் நீங்கள் வாசித்தறியலாம். இளையராஜாவை போன்ற ஒரு மேதை தனக்கு நன்கு அறியாத ஒரு விஷயத்தை ஒரு மாபெரும் மேடையில் எப்படி சொன்னார் என்ற குழப்பத்தில் நான் மூழ்கி இருக்கும்போது இன்னுமொரு சம்பவம் நிகழ்ந்தது. சமீபத்தில் வெளியான அவரது 'பழசிராஜா' சினிமாப் பாடல்களின் தோல்விக்கு காரணம் பாடலாசிரியர் ஓ என் வி குரூப்பின் பாடல்வரிகள் சரியில்லாததே என்று தெரிவித்தார் இளையராஜா!

ஓ என் வி குரூப் மிகவும் பிரபலமான மலையாளக் கவிஞர். மக்களால் பெரிதும் விரும்பப்பட்ட பல மலையாள சினிமாப்பாடல்களையும் எழுதியவர். மரபான விருத்தங்களில் பல சிறந்த கவிதைகளை எழுதியிருந்தவர் ஆயினும், முன்னால் போடப்பட்ட மெட்டுக்கு ஏற்ப சிறந்த பாடல்களை அவர் எழுதியவர் அல்ல. இதற்கு முன்னும் பல படங்களில் குருப்புடன் இணைந்து பணியாற்றிய இளையராஜாவுக்கு இது நன்றாகத் தெரிந்திருக்கவேண்டும். இருப்பினும் வரிகளால் எப்படி இசையின் தரத்தை குறைக்க முடியும்? குருப்பின் வரிகளை வைத்துக் கொண்டு தானே என்றென்றும் நிலைத்திருக்கும் இனிய பல மலையாளப் பாடல்களை மறைந்த சலில் சௌதுரி உருவாக்கியிருக்கிறார்? சலில்தா ஏன்? இளையராஜாவின் புகழ்பெற்ற பல மலையாளப்பாடல்கள் அவரால் எழுதப்பட்டது தானே?

இதைப் படித்தாலேயே பல இளையராஜா ரசிகர்களுக்கு எரிச்சலும் கோபமும் வரும். ஏன் என்றால் அவர்களைப் பொறுத்தவரை இளையராஜா ஒரு கடவுள். அந்த கடவுள் ஒருபோதும் எந்த விஷயத்திலும் தவறுசெய்ய மாட்டார். அத்தகைய பல இளையராஜா ரசிகர்கள் பழசிராஜா படத்தின் இசை மிக சிறப்பானதென்றும், இளையராஜா சமீபத்தில் இசையமைத்த மற்ற சில மலையாள சினிமாக்களின் இசை அதைவிட சிறப்பானதென்றும் எல்லாம் எனக்கு மின்னஞ்சல் அனுப்புகிறார்கள். அவருக்கு என்னுடைய பதில் என்னவென்றால், இப்பாடல்களைப் புகழ்வதன் மூலம் நீங்கள் ஒன்றை தெளிவாக்குகிறீர்கள். இந்தியாவில் தோன்றிய மிகச்சிறந்த திரை இசையமைப்பாளர்களில் ஒருவரான இளையராஜாவின் இசையின் சாரத்தையும் அதன் மந்திரஜாலத்தையும் நீங்கள் ஒருபோதும் புரிந்துகொண்டவர்களில்லை.

மைக்கேல் ஜாக்ஸனை 'பாப் இசையின் அரசன்' (King of pop) என்று சொல்வதைப்போல் இளையராஜாவை 'நாட்டுப்புற இசையின் அரசன்' (King of folk) என்று சொல்வேன். நாட்டுப்புற இசைதான் இசையின் மிக தூய்மையானதும் உணர்ச்சிகரமானதுமான வடிவம். அதுவே ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட ஏழை மக்களின் இசை. அது கிராம வாழ்க்கையின் உணர்ச்சிகளும், ஆசைகளும் பிரதிபலிக்கும் இசை. வெவ்வேறு கிராமங்களின் சிறப்பியல்புகளையும் இனிமைகளையும் வெளிப்படுத்துகிறது அது. இயல்பும், ஆற்றலும், ஊக்கமும் நிறைந்த மனித உணர்வெழுச்சிகள் இந்த கிராமிய இசையின் தனித்துவமான வெளிப்பாட்டில் தான் நாம் கேட்க முடியும்.

பிறப்பு, இறப்பு, பூப்படைதல், நிச்சயதார்த்தம், திருமணம் என கிராம வாழ்வின் ஒவ்வொரு பருவத்திற்குமான நாட்டுப்புற இசை வெளிப்பாடுகள் இருக்கின்றன. விவசாயம் சார்ந்த உழுதல், விதைத்தல், நாற்று நடுதல் மற்றும் அறுவடைக்காலங்கள், கோயில் விழாக்கள், மதம் சார்ந்த மற்ற பண்டிகைகள் போன்றவற்றில் எல்லாம் இந்த இசைதான் ஓங்கி ஒலிக்கிறது. தங்களின் நம்பிக்கைகளை, அச்சங்களை, எதிர்பார்ப்புகளை, கொண்டாட்டங்களை உடைந்ந குரல்களில் கிராமிய இசைக்கலைஞர்கள் பாடுகிறார்கள். கிராமங்களிலும் வனங்களிலும் கிடைக்கும் விலங்குகளின் தோல், மரம், மூங்கில், கொட்டாங்கச்சி, சுரைக்குடுவை, மண்பானை போன்றவற்றில் எல்லாமிருந்து தங்களின் இசைக்கருவிகளை அவர்கள் உருவாக்கிக்கொள்கிறார்கள். கிராமங்களில் சுற்றித்திரிந்த காலங்களில் சொந்தமாக மூங்கிலில் புல்லாங்குழல்களைச் செய்து அதை வாசிப்பவராக தான் இருந்ததை இளையராஜா பதிவு செய்திருக்கிறார்.

நாட்டுப்புற இசை கிராமங்களில் யாராலும் பயிற்றுவிக்கப்படுவதல்ல. இவ்விசையக் கற்றுக்கொள்ள தங்கள் வாழ்வையே அர்ப்பணிக்கும் மாணவர்களோ கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களோ அங்கில்லை. அவர்களின் ஏழ்மை இத்தகைய வசதிகளை அவர்களுக்கு வழங்குவதில்லை. செல்வந்தவர்களின் விவசாய நிலங்களில் அன்றாடம் உழைத்தோ, தங்கள் சிறிய நிலத்தில் கஷ்டப்பட்டு விவசாயம் செய்தோ அல்லது இதர சில்லரை வேலைகள் செய்தோ தமக்கான இரண்டுவேளை உணவைப்பெறும் ஏழை மக்கள்தான் அங்கு நாட்டுப்புற இசைக்கலைஞர்களாகவும் இருக்கிறார்கள்.

இவர்களில் ஒருவரே ராசையா என்ற இயற்பெயர் கொண்ட இளையராஜா. தேனி மாவட்டத்தின் ஒரு கிராமத்தில் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இளையராஜா விவசாய தினக்கூலியாக வேலை பார்த்தவர். எட்டாவது வரையே பள்ளிக்கல்வி பெற்றவர். எவ்வித நோக்கமுமில்லாமல் நாட்டுப்புற இசையை தொடர்ந்து கவனித்துக் கேட்டுக் கற்றுக்கொண்டு, அதன் நுட்பங்களைக் கிரகித்துக் கொண்டவர். அவரின் தாயார் எண்ணற்ற நாட்டுப்புறப்பாடல்களின் சேமிப்புக் கிடங்காக இருந்தவர். சிறுவயதிலிருந்து கேட்டறிந்த அப்பாடல்கள் தான் அவருடைய நுட்பமான இசையுணர்வை வடிவமைத்தது, பின்னற் அவரது இசை ஆளுமையை தீர்மானித்தது. பல்வகைப்பட்ட நாட்டுப்புற இசை வடிவங்களையும் கிராமிய இசையின் உயிரோட்டமான உணர்ச்சிகளையும், இங்கு இசை கேட்கும் அத்தனைபேரின் அறைகளுக்குள்ளும் கொண்டுவந்து சேர்த்த முதல் இந்திய திரையிசையமைப்பாளர் இளையராஜா தான்.

இந்திய நாட்டுப்புற இசை¨யோடு மேற்கத்திய செவ்வியல் இசையை கலந்து என்றும் அழியாத பல பாடல்களை முதலில் உருவாக்கியவர் சலில் சௌதுரி.1940களிலேயே அவர் அதைச் செய்தார். ஆனால் அவரது அரிதான இசை பெரும் வணிக வெற்றிகளை அடையாமல் போயிற்று. கிராமிய இசையுடன் மேற்கத்திய செவ்வியல் இசையை கலந்து இளையராஜா உருவாக்கிய திரைப் பாடல்களோ அவரை தமிழ் சினிமா இசையின் பேரரசனாக எழுபதுகளின் இறுதியிலிருந்து தொண்ணூறுகளின் தொடக்கம் வரை கோலோச்ச வைத்தது.

நாட்டுப்புற இசையைப்போலவே மேற்கத்திய இசையை நோக்கிய தேடுதலும் சிறுவயதிலிருந்தே இளையராஜவிடம் முளைவிட்டிருந்தது. அவரின் குடும்பத்தினர் அப்போது கிறிஸ்துவ மதத்தின் உறுப்பினர்களாக இருந்தார்கள். மேற்கத்திய செவ்வியல் இசை அடிப்படையில் அமைந்த பல கிறிஸ்துவப் பாடல்களை கேட்டு வளர்ந்த அவருக்கு அவ்வடிவத்தை புரிந்துகொள்ள ஒரு வாய்ப்பாக இருந்தது தேவாலய நிகழ்சிகள். பிறகு, சென்னையில் இசையாசிரியர் தன்ராஜ் மாஸ்டர் மேற்கத்திய இசையின் நுட்பமான வேறுபாடுகளையும், சிக்கல்களையும் அவருக்கு பயிற்றுவித்த்தார். செவ்வியல் கிதார் இசையிலும் பியானோ இசையிலும் சிறப்பான தேர்ச்சி பெற்றவராக இளையராஜா விளங்கினார். அவரது பாடல்களில் பியானோ, கிதார் மற்றும் வயலின் குழுவை அவர் பயன்படுத்திய விதம் மேற்கத்திய செவ்வியல் இசையிலும் அவருக்கிருக்கிற ஆழ்ந்த புரிதலுக்கும் புலமைக்கும் சான்றாக இருக்கிறது.

சலில் சௌதுரி உள்ளிட்ட பல்வேறு இசையமைப்பாளர்களிடம் கிதார் மற்றும் காம்போ ஆர்கன் வாசிப்பாளராக பலவருடம் பணியாற்றியது இளையராஜாவுக்கு இசையமைப்பாளர் ஆவதற்குறிய மிகுந்த நம்பிக்கையை அளித்தது. இருநூறுக்கும் மேற்பட்ட கன்னடப் படங்களில் இசையமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷிடம் உதவியாளராக பணியாற்றியபோது கிடைத்த படைப்புச் சுதந்திரமும் அவரை முக்கியமான இசையமைப்பாளராக உருவாக்கியதில் பெரும்பங்கு வகித்தது.

நாட்டுப்புற மேற்கத்திய இசைக் கலவையுடன் கர்நாடக செவ்வியல் ராகங்களையும் அதிகளவில் அவர் பாடல்களில் பயன்படுத்தினார். சாதாரண இசை ரசிகர்களும் விரும்பும் வண்ணம் கடினமான ராகங்களை கூட காதுக்கினிய வடிவங்களில் கொடுத்தார் இளையராஜா. சினிமாவுக்கு இசையமைக்கத்தொடங்கிய முதல் ஆண்டிலேயே (1976) நாங்கு படங்களுக்கு இசையமைத்த இளையராஜாவின் படங்களின் எண்ணிக்கை ஒவ்வொரு வருடமும் பல மடங்காகி வளர்ந்து 1992ல் 56 படங்களென்று ஆகாயத்தை தொட்டது. இந்த காலகட்டத்தில் தென்னிந்தியாவின், குறிப்பாக தமிழ்நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்குகளிலும் அவரது பாடல்கள் மட்டும் தான் ஒலித்தது.

மலையாளம், தெலுங்கு, கன்னட சினிமாவில் பல படங்களிலும் அவ்வப்போது ஹிந்தியிலுமாக பல வருடங்களாக சினிமா இசையை ஆட்சி செய்தவர் இளையராஜா. சிக்கலான ஆனால் இனிமையான மேற்கத்திய இசை ஒழுங்குகளாலும், நுட்பமானதும் நவீனமானதுமான பேஸ் கிதார் உபயோகத்தாலும் திரைப் பாடல்களின் பின்னணி இசையை ஒரு மறுமலர்ச்சிக்கு உட்படுத்தியவர். அத்தகைய இசையின் வாயிலாக கருவியிசையை விரும்பும் இசை ரசிகர்களுக்கு பல விருந்துகளை படைத்தவர் அவர்.

திரை இசையில் தனது முதல் பத்தாண்டுகளில் இளையராஜா உருவாக்கியது ஒரு மந்திரஜாலம். அபாரமான படைப்பூக்கத்தால் புதிய சோதனை முயற்சிகளை துணிச்சலோடு உருவாக்கினார். தனது தரமான பல பாடல்களை பொது மக்களால் பெரிதும் விரும்பவைத்தார். முதல்முதலாக அவர் இசை அமைத்த திரைப் பாடல்களைப்பாருங்கள்! 'அன்னக்கிளியே உன்னைத் தேடுதே', 'மச்சானைப்பார்த்தீங்களா', 'சொந்தம் இல்லை பந்தம் இல்லை' (அன்னக்கிளி), 'கண்ணன் ஒரு கைக்குழந்தை', 'ஒத்த ரூபா உனக்கு தாரேன்' (பத்ரகாளி), 'நான் பேச வந்தேன் (பாலூட்டி வளர்த்த கிளி), 'ஒரு நாள் உன்னோடு ஒருநாள்' (உறவாடும் நெஞ்சம்)... நாட்டுப்புற துள்ளிசை, மனதை வருடும் மெல்லிசை, தரத்திலும் வணிகத்திலும் மாபெரும் வெற்றிகள்!

தொடர்ந்த பதினைந்து ஆண்டுகளில் சராசரியாக ஒரு நாளைக்கு மூன்று புதிய பாடல்கள் என்ற கணக்கில் பாடல்களை உருவாக்கிக் கொண்டேயிருந்தார் இளையராஜா. கருவிகளை வாசித்தோ, பாடலைப் பாடியோ பார்க்காமல் பாடலகளுக்கான முழுமையான இசைக்குறிப்புகளையும் எழுதி முடித்துவிடும் ஆற்றலை அவர் பெற்றிருந்தார். அதிகாலையில் ஸ்டூடியோவுக்கு வந்ததும் சிலமணிநேரங்களில் அன்றைய நாளின் பதிவுக்குத் தேவையான இசையை அவர் எழுதி முடித்திடுவார். எழுதிமுடிக்கப்பட்ட குறிப்புகள் கருவி இசைக்கலைஞர்கள் மற்றும் பாடகர்களுக்கு வழங்கப்பட்டு பாடல் பதிவு சட்டென முடிந்துவிடும். ஒருங்கிணைப்பு, ஒலிக்கலவை போன்ற பணிகள் மீதி நேரத்தில் முடிந்துவிடுவார். இவ்வாறாக இளையராஜாவின் பணியிடமான சென்னை பிரசாத் ஸ்டூடியோ ஒருவகையான பாடல் உற்பத்தித் தொழிற்சாலையைப்போல் மாறியது.

அவர் பணிபுரிந்த ஏறத்தாழ எல்லாப் படங்களுக்கும் பிண்ணனி இசையையும் அவரே அமைத்தார். எண்ணிகையில் அதிகப்படியான பாடல்களுடன் விரைவாக படங்களின் பின்னணி இசையையும் முடித்து விடும் அவரின் பணிசெய்யும் வேகத்தையும் ஒழுங்குமுறையையும் பார்த்து அனைவரும் வியந்து போனார்கள். நூற்றுக்கணக்கான அற்புதமான பாடல்களை தந்தார். அவற்றில் ஏறத்தாழ எல்லாப்பாடல்களையும் அவை இடம்பெற்ற படங்களையும் எல்லோரும் அறிந்திருக்கும் என்பதால் அதை இங்கு பட்டியலிடுவது பயனற்ற செயலாகும். மேலும் இக்கட்டுரையின் நோக்கமும் அதுவல்ல.

விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட எந்தக்கலைஞனும் இல்லை. ஏனெனில் எந்தவொரு கலையையும் அதை ரசிப்பவர்களின் ஒப்புதலுக்காகவும், பாராட்டுதலுக்காகவும், மதிப்பீட்டுக்காகவுமே உருவாக்கப்படுகிறது. எண்பதுகளில் வெற்றியின் சிகரத்தைத் தொட்டபிறகு இளையராஜாவும் விமர்சனத்தை கொஞ்சம்கூட சகித்துக்கொள்ளவில்லை என்றுதான் சொல்லப்படுகிறது.

கொஞ்சகாலம் முன் டைம்ஸ் ஆஃப் இந்தியா இதழில் நான் 'இளையராஜா ஒரு வரலாற்று நிகழ்வு' என்ற ஒர் கட்டுரை எழுதினேன். ஆனால் இளையராஜா சமீபத்தில் இசையமைத்த பழசிராஜா (மலையாளம்), நன்னவனு (கன்னடா), பா (இந்தி) போன்ற படங்களின் இசையை மதிப்பிட்டுப் பார்க்கும்போது இளையராஜாவின் இசையின் தரமும் அதன் பொற்காலமும் வரலாறாகிவிட்டதா என்கிற சந்தேகம் எனக்கு எழுகிறது. கடந்த பல வருடங்களாக வந்துகொண்டிருக்கும் அவரது பல பாடல்கள் இளையராஜா தன்னுடைய படைப்பாற்றலின் உச்சத்தை இழந்து பலகாலம் ஆகிவிட்டது என்பதை உறுதி செய்கிறது. ஆனால் முன்சொன்ன மாதிரியான அவரது ரசிகர்கள் இதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்!

அடிப்படையில் நன்றாக அமையும் சில பாடல்களில் கூட இன்றைக்கு அவரது இசை அழகியல் தவறவிடப்படுகிறது. உதாரணமாக பழசிராஜாவில் 'அம்பும் கொம்பும்' எனத் தொடங்கும் பழங்குடிப் பாடல் ஒன்றுள்ளது. இந்திய திரையிசையில் நான் கேட்ட மிகச்சிறந்த பழங்குடிப் பாடல்களில் ஒன்று இது. பழங்குடியினருக்கேயுரிய பின்னணிக் குரல்கள், ஒலிகள், தனித்துவமான வாத்தியங்கள் என மிகவும் நுட்பமாய் செதுக்கப்பட்டிருக்கும் இப்பாடல் இளையராஜாவின் சமீபத்திய சிறந்த பாடல்களில் ஒன்றாகும்.

இளையராஜாவும், குட்டப்பன் என்கிற நாட்டுப்புறப் பாடகர் ஒருவரும் மஞ்சரி என்ற பாடகியும் இணைந்து பாடியிருக்கிறார்கள். சமீபகாலமாக இளையராஜாவின் பல பாடல்கள் பாடிவரும் மஞ்சரி சராசரிக்கும் குறைவான ஒரு பாடகியே. ஏறத்தாழ எல்லாமே சரியாக இணைந்திருந்தும் இப்பாடலில் மஞ்சரி பாடியிருக்கும் விதம்தான் ஒரு பெரும் குறை. எந்தவொரு உணர்ச்சி வெளிப்பாடுமில்லாமல் பாடும் மஞ்சரியின் குரல், எந்தவகையிலும் அப்பாடலின் பழங்குடி உணர்ச்சிக்கு ஒத்துவரவில்லை. அனால் இந்த பாடலையே யாரும் கவனிக்கவில்லை என்பது துரதிருஷ்டவசமானது.

பா படத்தின் பாடல்களும் ஒன்றும் சிறப்பானதல்ல. சில்பா ராவ் என்ற சராசரி பாடகி எந்த ஒரு உனர்ச்சிவெளிப்பாடும் இல்லாமல் பாடிய 'முடி முடி கஹா கஹா மே முடி முடி' என்ற பாடல் 'முடி முடி உடி உடி லடி லடி கடி கடி' போன்ற சத்தங்களால் கவனத்தைக் கவரும் ஒரு வீண் முயர்ச்சியே. இப்படத்தில் உள்ள 'கும் கும் ஸும்' என்ற பாடல் 'தும்பீ வா தும்பக்குடத்தின்' (படம் - ஓளங்ஙள் -1982) என்ற மலையாளப்பாடலின் புதிய வடிவம். இது என்னுடைய எப்போதைக்குமான விருப்பத்துக்குறிய ஓர் இளையராஜாப் பாடல். இது பின்னர் தமிழில் 'சங்கத்தில் பாடாத கவிதை' என்றும் வெளியானது. அப்பாடலை இக்காலத்திற்கேற்ப மாற்றியமைக்கும் முயர்ச்சி அப்பாடலின் உண்மையான சாரத்தைச் சிதைத்துவிட்டது. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதைப்போல, இதே பாடல் கேனடாவின் பாப் இசைக்குழுவான The Four Lads 1953ல் வெளியிட்ட Istanbul, Not Constantinople எனும் பாடலின் நகல் என்றதொரு விமர்சனம் இப்போது இணையப்பக்கங்களில் வலம்வருகிறது.

இளையராஜா தனது வெளிவராத பழைய பாடல்களை புதிய கன்னட படங்களில் பயன்படுத்துவதாக சமீபத்தில் கன்னட வார இதழொன்று எழுதியிருந்தது. ஆனால் 'நன்னவனு' படத்தின் பாடல்களைக் கேட்டால் இது தவறென்று தெரியவரும். இப்படத்தில் வரும் பாடல்களோடு ஒப்பிட்டால் அவரது எந்த ஒரு பழைய பாடலுமே அரிதானது என்று தெரியவரும். இப்படத்தின் சில இசைத் தருணங்கள் இளையராஜாவின் பழம்பெருமையை நினைவுபடுத்துவதைப்போல் இருந்தாலும் அவற்றின் தரம் சராசரிக்கும் கீழேதான் என்று உணர்வதைத் தடுக்கமுடியவில்லை. எந்த ஒரு கலைஞனுமே முடிவற்ற படைப்பாற்றலைக் கொண்டிருக்க முடியாது என்ற உண்மையையும் இங்கு நாம் ஒத்துக்க வேண்டும்.

மொஸார்ட், பாக், பீத்தோவான் மூவருமே தனது குருமார்கள் என்று இளையராஜா கூறியதாக அறியநேர்ந்தது. ஐரோப்பாவில் அவர்கள் வாழ்ந்த இடங்களை எல்லாம் ஒரு புனிதப்பயணம் மேற்கொள்வதுபோல சென்று வந்திருக்கிறார். ஆனால் அவர்களின் மனித இயல்பை இளையராஜா உணர்ந்துகொண்டாரா என்று தெரியவில்லை? மொஸார்ட் தன்னை எப்போதாவது "நேற்று இல்லை நாளை இல்லை, எப்பவும் நான் ராஜா” என்று கருதிக் கொண்டிருந்தாரா என்றும் தெரியவில்லை.

உதாரணமாக, இளையராஜா பாப் மார்லி, பாப் டிலான் இருவரையும் முற்றிலுமாக நிராகரித்துவிட்டவர். அவர்களை 'குப்பை' என்று குறிப்பிட்டவர். எந்த ஒரு கலைஞனும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவன் அல்ல என்ற முறையில் அவருக்கு விமர்சிக்கும், நிராகரிக்கும் உரிமை இருக்கிறது. ஆனால் தங்களது இசையால் மிகப்பெரும் சமூக மாற்றத்தையும் அத்துடன் முழுமையான இசையின்பத்தையும் வழங்கிய இவ்விருவரின் தகுதியும் இளையராஜாவின் இந்த விமர்சனத்தால் குறைந்துவிடாது. இருவரும் உலகெங்கும் லட்சக்கணக்கான ரசிகர்களையும் விதந்தோதுபவர்களையும் கொண்டிருந்தனர். இந்த நிமிடம் வரை அதிகளவில் விற்பனையாகும் பல இசைத்தொகைகளை கொடுத்த கலைஞர்கள்.

பாப் டிலான் இளையராஜாவை விட இரண்டு வயது மூத்தவர். இன்னும் தனது பாடல்களாலும் இசையாலும் வாழ்ந்துகொண்டிருப்பவர். சமீபமாக டிலானின் பிறந்தநாள் இந்தியாவின் மிஜோராம் மாநிலத்தில் கூட ஒரு மாதம் முழுதும் எவ்வாறு கொண்டாடப்படுகிறது என்று வாசித்தது ஞாபகம் வருகிறது.

தனது முப்பத்தி எட்டாவது வயதில் மறைந்துவிட்ட ரேகே இசை அதிசயம் பாப் மார்லி இளையராஜாவை விட இரண்டு வயது இளையவர். மிகவும் ஏழ்மையான, ஒடுக்கப்பட்ட குடும்பச்சூழலில் பிறந்தவர். இளையராஜாவை விட துயரம் நிறைந்த ஒற் பால்யகாலத்தைக் கழிக்க நேர்ந்தவர். மோட்டார் பழுதுபார்க்குமிடத்தில் உதவியாளராகவும், தெருக்கூட்டுபவராகவும் பணிபுரிந்தவர். ஆனால் இவ்வுலகை விட்டுப் பிரியும் முன் தனது மக்களின் துயரமிக்க வாழ்வினை உயர்த்தும் ஏராளமான பணிகளைச் செய்துவிட்டுச் சென்றவர். உலகநட்சத்திரமாக மாறிய பின்னரும் தன் வேர்களில் இருந்து பிரியாதவர். ஏழைகளுக்கு தடையிலாது உதவிய மனிதர். அவர் இறந்தபோது கிட்டத்தட்ட நாலாயிரம் ஜமைக்க குடும்பங்கள் அவரை நம்பி இருந்தன!

பொதுவான கலை விமரிசன மரபில் இரண்டு தரப்புகள் உள்ளன. ஒருவரின் கலைப்படைப்பை விமர்சிக்கும்போது கலைக்கு அப்பாற்பட்ட அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையை பொருட்படுத்தத் தேவையில்லை என்பதுதான் ஒன்று. ஒரு கலைஞனின் வாழ்க்கை வழியாக அவனது கலையை, இசையை சென்றடைய முயல்வது தான் இன்னொன்று. Art without heart is futile அதாவது நல்லதோர் இதயம் வெளிப்படாத கலை வீண்போகும் என்பது தான் இந்த விமரிசன மரபின் சாரம். நல்ல உள்ளத்திலிருந்தே நல்ல கலையும் வருகிறது என்ற அந்த தரப்பைத்தான் என் இசைவிமரிசன எழுத்து வழியாக நானும் முன்வைக்க முயல்கிறேன். தாஸ்தாயெவ்ஸ்கி சொன்னதைப் போல, "சிறந்த கலை இவ்வுலகத்தை பாதுகாக் கூடுகும்".

லட்சக்கணக்கான நசுக்கப்பட்ட ஏழை மக்கள் ஒருவேளை உணவுக்காக போராடிக்கொண்டிருக்கையில், ஐம்பது லட்சம் மதிப்புள்ள தங்கப் பாதத்தை கோவில் பிரதிஷ்டைகளுக்கு அணிவிப்பதால் நீங்கள் சிறந்த மனிதர் ஆகிவிடுவீர்களா? லட்சக்கணக்கான பணத்தைக் கொண்டு 12 கோபுரங்கள் இருக்கும் ஒரு கோவிலுக்கு 13ஆவது கோபுரம் ஒன்றை கட்டுவதன் மூலம் நம் சமூகத்தைப் பீடித்திருக்கும் பிரச்சினைகள் தீர்ந்துவிடுமா? அல்லது திருவாசகம், ரமணமாலை போன்ற பக்திப்பாடல்களை கேட்டுக்கொண்டிருப்பது பசியும், வறுமையும் தீர உதவுமா?

அதிகாரமும், வசதியும் படைத்த பலரும் தன்னுடைய கட்டளைக்கு செவிசாய்க்கும் நிலையில் இருக்கும்போது ஏழை, அடித்தட்டு மக்களுக்குத் தேவையான சிலதை எந்த ஓர் ஆன்மீகவாதியாலையும் செய்ய முடியும் அல்லவா? ஆன்மீகம் என்றால் என்ன? மக்கள் சேவையே மகேசன் சேவை என இந்திய ஆன்மீகம் சொல்லவில்லையா?

இசைக்கு வருவோம். தனது திரையிசைப் பயணத்தின் முதல் பத்தாண்டுகளில் தொடர்ந்து உணர்வு பூர்வ்மான இசையை உருவாக்கி வந்த இளையராஜா சமூகத்திடம் இருந்து தன்னை துண்டித்துக் கொண்டு ஆன்மீகவாதியாக ஆகும் முயற்சியில் ஓர் சாமியார் போல் ஆகிவிட்டார். மழித்த தலையும், பட்டை விபூதியும், வெண்ணிற ஆடைகளும் அவரது அடையாளமாக மாறிப்போனது. காலையில் ஒலிப்பதிவுக்கூடத்துக்குச் செல்வதும் இரவுவரை முக்கியமற்ற பல படங்களுக்கு எண்ணற்ற பாடல்களும் பிண்ணனி இசையும் அமைப்பதாக ஆகிவிட்டது அவரது வாழ்வு. அப்படித்தான் அவர் 1992 ஆம் வருடத்தில் அதிகபட்சமாக 56 படங்களுக்கு இசையமைத்தார். அதிகளவில் உருவாக்கிக் கொடுக்க வேண்டியிருந்தால் அது பீத்தோவனாகவே இருந்தாலும் தரமானதாக இருக்க இயலாது என்பதைக் கூறத்தேவையில்லை.

ஆத்மபூர்வமான இசை என்பது தொழில்நுட்ப அறிவோ இசையின் கணித சூத்திரங்களோ அல்ல என்பதர்க்கு இளையராஜாவின் ஆரம்பக்கால பாடல்கள் சிறந்த உதாரணங்களாகும். அவர் ஓருமுறை சொன்னதுபோல குறிப்பிட்ட அலைநீளத்தில் ஒலிக்கும் எந்த ஒரு ஒலியின் சேர்க்கையும் சிறந்த இசையாகிவிடவும் முடியாது. இசையென்பது உள்ளத்தால் உணர்ந்துகொள்ளப்படும் ஒரு உணர்வு. அந்த மகத்தான கலையை ஒருவன் பணிவோடும், நேசத்தோடும், திறந்த மனதோடுமே அணுகவேண்டும். 'எப்பவும் நான் ராஜா' என்பது போன்ற மதிமயக்கங்களால் சிறந்த இசையை உருவாக்கிவிட இயலாது. இளையரஜா இசையமைத்து லோகித தாஸ் தமிழில் இயக்கிய 'கஸ்தூரிமான்' படத்தில் கூட ஒரு பாடலில் சம்பந்தமில்லாமல் "ராஜா உந்தன் ராஜாங்கத்தில் நாளும் நாளும் இசைதான்" என்ற ஒரு வரி வருகிறது!

என் அறிவுக்கெட்டியவரையில், இளையராஜா தன் சமகால இசையமைப்பாளர்கள் எவருடைய படைப்புகளையும் இசையாக கருதியது கிடையாது. பிற இசையமைப்பாளர்களின் பாடல்களின் மீதான இளையராஜாவின் சகிப்புத்தன்மையற்ற போக்கை நேரடியாகக் கண்டிருக்கிறேன். கஸ்தூரிமான் படத்தில் பாடுவதற்காக இளம்பாடகர்கள் இருவரை லோகித தாஸ் பரிந்துரை செய்தார். குரல் சோதனைக்காக இருவரும் சென்றனர். இளையராஜாவைச் சந்தித்த இருவரும் காலில் விழுந்து மரியாதை செய்தனர். வித்யாசாகர் இசையில் தான் பாடிய பாடலை ஒருவரும், மோகன் சித்தாரா எனும் மலையாள இசையமைப்பாளரிடம் பாடிய பாட்டை மற்றவரும் போட்டுக்காட்டினர். இரண்டையும் கேட்ட இளையராஜா கோபம் கொண்டார். இரண்டு பாடல்களும் தனது பாடல்களின் நகல் என்று அவர் கருதினார். "தென்னிந்தியாவில் உங்களது ஆதிக்கம் இல்லாமல் எந்த இசையமைப்பாளரும் இசையமைத்துவிட முடியாது” என லோகித தாஸ் சமாதானப்படுத்த முயன்றார். உடனே இளையராஜா கோபமாக, "எனது இசையைக் காப்பியடிக்கும் நச்சுச் சூழலை ஆதரிக்கிறீர்களா"? என்றார். மட்டுமல்லாமல் அந்த இரு பாடகிகளுமே தனது பாடல்களைப் பாட தகுதியற்றவர்கள் என நிராகரிக்கப்பட்டனர்!

இதில் கேள்வி என்னவென்றால், இளையராஜா இசையமைத்த 4500க்கும் மேற்பட்ட பாடல்கள் யாவுமே தனித்துவமானவையா? அவரது அனைத்துப் பாடல்களுமே முழுமையாகவே அசலானதா? எனில், உப்கார் (Upkaar) எனும் இந்திப் படத்தில் வந்த கல்யாண்ஜி ஆனந்த்ஜி இசையமைத்த 'கஸ்மே வாதே பியார் வஃபா' எனும் பாடலின் நேரடியான நகலாக 'கனவு காணும் வாழ்க்கை யாவும்' (நீங்கள் கேட்டவை) என்ற பாடல் வந்தது எப்படி? சின்னவீடு படத்தில் இடம்பெற்ற 'சிட்டுக்குருவி' என்ற பாடல் செக்கோஸ்லாவாகியாவைச் சேர்ந்த செவ்வியல் இசையமைப்பாளர் Antonin Dvorak இன் சிம்பனி 9 போலவே ஒலிப்பது எப்படி? 'எந்தப் பூவிலும் வாசம் உண்டு' (முரட்டுக்காளை) எனும் பாடலின் பல்லவி சமகால மேற்கத்திய செவ்வியல் இசையமைப்பாளர் Antonio Ruiz Pipo வின் Cancione et Danza என்ற பாடலைப் போலவே எப்படி அமைந்தது? Abba, Boney M போன்ற டிஸ்கோ பாப் குழுவினரின் பாடல்களைப் போன்ற சில பாடல்களையும் இளையராஜா அமைத்ததில்லையா?

ஒப்புமைகள் தெளிவாக இருந்தாலும், இப்பாடல்களை இளையராஜா காப்பியடித்தார் என உணர்வுபூர்வமான இசை ரசிகர்கள் யாரும் கூறமாட்டார்கள். ஏனெனில் இன்னொரு மேலான படைப்பை விரும்புவதும், அதனால் கவரப்படுவதும், வியப்படைவதும், உந்தப்படுவதும் ஒரு கலைஞனின் உரிமையாகும். அதைப்போலவே இளையராஜாவின் இசையால் கவரப்பட்டு புதியவர்கள் இசையமைத்தால் அதில் தவறொன்றுமில்லை. ஏனெனில் அவரது பாடல்கள் தென்னிந்தியாவின் பெரும்பாலான இசையமைப்பாளர்களிடம் தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. எவ்வித படைப்பூக்கமும் இல்லாமல் அப்படியே உருவிக் கொடுப்பதுதான் கண்டிக்கப்பட வேண்டிய கலைத்திருட்டு என்பது.

எனது இசையுணர்வுக்கு பட்டதை சொல்கிறேன். இளையராஜா தொடர்ந்து வாய்ப்பளித்த பாடகர்கள் பலரும் மிகச்சிறந்த பாடகர்களாக தங்களை வெளிப்படுத்தியவர்கள் அல்ல. கொடுக்கும் மெட்டை அப்படியே திருப்பிச்சொல்லுவதையே இளையராஜா தனது பாடகர்களிடம் எதிர்பார்த்தார். பாடகன் அளிக்கும் நுணுக்கங்கள் அங்கே ஒரு பொருட்டே அல்ல. கொடுக்கப்பட்ட குறிப்பிலிருந்து இம்மியளவும் விலகிச்செல்வதற்கு பாடகர்களோ இசைக்கலைஞர்களோ அங்கு அனுமதிக்கப்படுவதில்லை. ஒரு மேற்கத்திய செவ்வியல் இசையமைப்பாளர் பணிபுரிவதைப்போலவே இளையராஜா இந்திய திரைப்படங்களில் பணிபுரிந்தார் என்று தான் சொல்லவேண்டும். திரைப்படம் ஒரு கூட்டுக்கலை என்பதை அவர் பொருட்படுத்தியதே இல்லை. ஆனால் சினிமாவைப்போலவே அதன் இசையும் கூட்டுமுயற்சியில் உருவாகும் ஒரு கலை என்பதில் சந்தேகமேயில்லை.

ஒரு தொலைக்காட்சி ஒலிபரப்பில் மேடைநிகழ்ச்சி ஒன்றை பார்க்க நேரிட்டது. இளையராஜாவின் மகனும் இசையமைப்பாளருமாகிய யுவன் சங்கர் ராஜா பாடுவதை பிண்ணனியில் ஆர்மோனியத்துடன் நின்று பார்த்துக் கொண்டிருந்தார் இளையராஜா. பாடினாரா அல்லது பேசினாரா என்று புரிந்துகொள்ள முடியாத அளவிற்க்கு இருந்தது யுவன் சங்கர் ராஜாவின் பாடும்முறை! ஆனால் அப்போது இளையராஜாவின் முகத்தில் இருந்த பார்வை இருக்கிறதே, அதுவே நான் சமீபத்தில் பார்த்து மிகவும் சங்கடமடைந்த காட்சி.

எழுத்தாளர் சுஜாதா ஒருமுறை குறிப்பிட்டதைப்போல இளையராஜா அவருடைய உண்மையான தகுதியைக் காட்டிலும் குறைவாகவே மதிப்பிடப்பட்டிருக்கிறார். முரண் என்னவென்றால் இளையராஜா தன்னைத்தானே குறைத்து மதிப்பிட்டார் என்பது தான். அவர் தன்னை ஒருபோதும் கண்டடைந்ததில்லை.

கொஞ்ச காலத்திற்கு முன்பு நேர்காணல் ஒன்றில், தனது திறமையெல்லாம் சினிமா இசையிலே வீணடித்துவிட்டதாக அவர் தெரிவித்திருந்தார். உண்மை தான்! உலகத்தின் தலைசிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவராக வருவதற்குண்டான மேதமை கொண்டிருந்தவர் அவர். இந்தியாவில் வேறு யாரைக்காட்டிலும் அவருக்கே அதற்குண்டான அனைத்துத் தகுதியும் இருந்தது.

இசைக்கு மொழியோ நாடோ தடையில்லாத நிலையில் பாப் மார்லியைவிட பெரும் உலகப் புகழை இளையராஜா அடைந்திருக்கலாம். ஆனால் யாருடனும் சேர்ந்தியங்காமல் தன்னை மூடிவைத்தவராக, ஓர் பாதுகாப்பற்ற சூழலில் வாழ்வதைப்போல செயல்பட்டார் இளையராஜா. மேதமையும் வாய்ப்புகளும் ஒருசேர வாய்க்கப்பெற்ற இளையராஜா தனது இசை உலகளாவிய அளவில் பயணப்படுவதற்கான பரந்து விரிந்திருந்த சாத்தியங்களை கண்டுணராமல் இருந்தார் என்றே சொல்ல வேண்டும்.

35ஆவது வயதில் மரணமடைந்த மொஸார்ட் தன் குறுகிய வாழ்வில் நூற்றாண்டுகளை கடந்து நிற்க்கும் மகத்தான பல இசை ஆக்க்ங்களை உருவாக்கினார். தன் இருப்பும் இசையும் வழியாக இந்த உலகில் பல மாற்றங்களை உருவாக்க முடியும் என நம்பினார். அத்தகைய மாற்றங்களை உருவாக்குவதென்பது புரிந்துகொள்ளுதலில் ஆரம்பிக்கிறது. பிறருக்கு வழங்குவதில், பிறரை மதிப்பதில், மன்னிப்பதில், வாழ்வே அன்பாக ஆகிவிடுவதில் தொடர்கிறது. சிறந்ததொரு உலகத்தை உருவாக்குவதும், சிறந்த மனிதனாக வாழ்வதும் நிச்சயமாக சிறந்த இசை உருவாக்கத்தின் பகுதியே.

தமிழில் : முபாரக்


ஷாஜிக்கு ஒரு பதில் ... - சந்திரமோகன்
வன்மத்தோடு சிலரை குறிவைத்து எறியப்படும் விஷ அம்புகளின் வீர்யத்தை பார்க்கும்போது எய்தவனின் மன விகாரம் எப்படிப்பட்டது என்று தெரியும். அவ்வாறு குறி வைத்து தாக்கப்படும் மனிதர்களில் இளையராஜா முக்கியமானவர். என் வாழ் நாளில் நான் கண்டு பிரமித்த , பல ஆயிரம் பாடல்களாலும், திரைப்படத்திற்கான பின்னணி இசையாலும் என்னை போன்ற கோடிக்கணக்கான ரசிகர்களை மனம் உருக வைத்த, மிக சிறந்த ஒரு படைப்பாளியின் படைப்புகளை இன்று வரை யாரும் சரியான பார்வையோடு பார்க்கவில்லை என்பது என் வருத்தம். தங்களை தாங்களே அறிவு ஜீவிகள் என்று கருதிக்கொண்டு அவரின் இசையை இலத்தீன் அமெரிக்க இசை ஞானத்தோடு அணுகி எல்லோரையும் சிரிக்க வைத்துக்கொண்டிருக்கும் சில ஜீவன்களுக்கு மத்தியில் (இந்த அறிவு ஜீவிகள் சென்னை புத்தக கண்காட்சியில் அல்பேனிய புத்தகங்கள் கிடைப்பதில்லை என்று அங்கலாய்க்கும் புத்திசாலிகள் ! அல்பேனிய புத்தக கண்காட்சியில் தமிழ் புத்தகங்கள் கிடைக்குமா என்றெல்லாம் கூட யோசிக்க தெரியாத அல்லது அதற்கு நேரம் இல்லாத அறிவு ஜீவிகள்..!) ஷாஜி எனும் மனிதர் வேறு பட்டவராக இருக்கிறார். அவரும் இசை பற்றிய கட்டுரைகளை எழுதுவதில்லை இசை அமைப்பாளர்கள் , பாடகர்கள் பற்றிய குறிப்புகளில் மட்டுமே அவர் சிறந்தவர் என்பது அவரை படிக்கும் அனைவருக்கும் தெரியும்.

இந்நிலையில் இளையராஜா பற்றிய கட்டுரை ஒன்றை உயிர்மை இதழில் எழுதியிருக்கிறார் ஷாஜி. உண்மையில் அது கட்டுரை அல்ல.. ஒரு படைப்பாளியை அவரது பிறப்பையும் பின்னணியையும் சுட்டிக்காட்டி 'உன் அளவோடு இரு' என்று எடுத்தியம்பும் மிக வன்மையான கருத்து கொண்ட எரிச்சல் தெறிக்கும் ஒரு அறிக்கை.

ஷாஜி பற்றி இங்கு சொல்ல வேண்டும்..மிக மென்மையான மனம் கொண்ட , இளம் பிராயத்தில் தன சொந்த தந்தையாலே பல முறை தாக்கப்பட்டு ..வாழ்வை மிக துயரத்துடன் கழித்தவர். இப்போதும் கூட அவர் வாழ்வின் துயரம் நீங்கிவிடவில்லை. பல்வேறு துயரங்களை தாங்கிக்கொண்டு வாழும் அவர்க்கு இசை மீது தீராத காதல். ஷாஜி எனக்கும் இணையத்தால் நண்பரானவர்.

ஆனாலும் ஷாஜியின் சமீபத்திய கட்டுரையின் உள்ளடக்கத்தை படித்த பின்பு அதை எழுதியது ஷாஜி தானா அல்லது அவர் டீ குடிக்க வெளியில் சென்றிருந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு அறிவுஜீவி சாரு தான் இடையில் தன கருத்தக்களை அள்ளி விட்டிருக்கிறாரா என்று தான் நினைக்கதோன்றுகிறது.
கட்டுரையின் சில பாகங்களை அவர் என்ன மன நிலையோடு எழுதினார் என்று என்னால் கணிக்கவே முடியவில்லை.. ஷாஜி தன வாழ்நாளில் இவ்வளவு துவேஷம் கொண்ட கட்டுரை ஒன்றை எழுதியதில்லை.

முதலில் அவர் வைக்கும் விமர்சனங்களின் மீதான ஒரு சாதாரண ரசிகனின் கேள்விகள்:
முதலில் பழசிராஜா பற்றிய அவரது 'எண்ணங்கள்'. ஷாஜி முதற்கொண்டு ராஜாவிடம் முன்பு வேலை பார்த்த அவுசப்பச்சன் போன்ற அனைவரும் அப்படத்தின் இசை தோல்வியடைந்தாக சொல்கிறார்கள். ஆதி உஷ, குன்னத்தே, அம்பும் கொம்பும் போன்ற சிறந்த பாடல்கள் கொண்ட ஒரு படத்தின் இசையை தோல்வி என்று இவர்கள் என்ன அளவீட்டில் சொல்கிறார்கள்? பழசிராஜாவை பார்த்த பலர் சொன்ன கருத்து ஆஸ்கார் 'புகழ்' பூக்குட்டி தனது மேதைமையை பயன்படுத்தி ராஜாவின் இசையை தன 'சத்தத்தால்' பல இடங்களில் அமுக்கியிருக்கிறார் என்று . சமீபத்தில் தான் நானும் அப்படத்தை பார்த்தேன்.. தனக்கு கிடைத்த ஆஸ்காருக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று பூக்குட்டி ரொம்பவே சிரமப்பட்டிருக்கிறார். அந்த அவதியில் படத்தின் பின்னணி இசையை பல இடங்களில் தன சத்தம் கொண்டு அடக்கியிருக்கிறார். இது ராஜாவின் தோல்வியா? மிக முக்கியமாக , ஷாஜி போகிறபோக்கில் படத்தின் இசையின் தோல்விக்கு காரணமாக O.N.V குருப் பின் பாடல் வரிகள் அமைந்ததாக ராஜாவே சொன்னதாக குறிப்பிடுகிறார். இது அக்கிரமம். படத்தின் பாடல்கள் தோல்வி என்று ராஜாவே முடிவுகட்டியதாக நினைக்கிறாரா ஷாஜி? அவர் பேசிய பேச்சின் வீடியோ Youtube இல் கிடைக்கும்.கேட்டுப்பாருங்கள். வெள்ளையரை எதிர்த்ததால் இன்னல்களுக்கு ஆளாகி காட்டில் மறைந்து அங்கிருந்து போர் வியூகம் அமைக்கும் ஒரு மன்னரின் சோகத்தையும் அந்த பாடலில் கொடுக்க தெரிந்த ராஜாவையா நீங்கள் குற்றம் சொல்லுகிறீர்கள்? அந்த பாடலின் composing இல் நடந்த நிகழ்ச்சிகளை சொல்லும் நேரத்தில் O.N.V. குருப் தன tune க்கு எழுத முடியாமல் சிரமப்பட்டார் என்றார். இத்தனைக்கும் தன இசையில் புகழ் பெற்ற 'தும்பி வா' பாடலை எழுதியவர் அவர் என்று அந்த நேரத்திலும் குறிப்பிட்ட ராஜாவின் வார்த்தைகளை இப்படியா ஷாஜி திரிப்பீர்கள்? அதை தொடர்ந்து அங்கு வந்திருந்த அனைவரையும் 'நீளம்' கருதாமல் மலையாள 'பழசிராஜாவை' பார்க்குமாறும் வேண்டிக்கொண்ட ராஜாவை நீங்கள் அந்த வீடியோவில் பார்க்கலாம். இதற்கு அவருக்கு கிடைத்த சன்மானம் என்ன தெரியுமா ? படத்தின் இயக்குனரான ஹரிஹரன் . O.N.V. விவகாரத்தில் ராஜா கருத்து சொல்ல வேண்டிய அவசியமில்லை ..அது தனக்கும் M.T.V. நாயருக்குமான பொறுப்பு என்று திருவாய் மலர்ந்தார். என்ன ஒற்றுமை பார்த்தீர்களா? அதை தொடர்ந்து ஒரு சினிமா விழாவில் நடைபெற்ற நிகழ்ச்சி குறித்தும் இளையராஜா குறித்தும் , கேரளா அமைச்சர்கள் முதற்கொண்டு விமர்சனம் செய்ததை இங்கு உள்ளவர்கள் அறியவில்லை என்று நினைக்கிறாரா ஷாஜி? தொடர்ந்து மலையாள மனோரமா இளையராஜாவின் 'பா' இசையை ' recycle' செய்யப்பட்டவை என்ற 'உண்மையை' கண்டு பிடித்து எழுதுகிறது? எதற்காக? தன மண்ணின் கவிஞரான O.N.V பற்றி ராஜா விமர்சித்து விட்டாராம்? என்ன ஒரு ஒற்றுமை?
'பா' படத்தின் பாடல்கள் பால்கியின் விருப்பத்திற்காக ராஜாவால் திரும்ப உபயோகிக்கப்பட்டன என்று படத்தின் இசை வெளியிடுவதற்கு முன்பிருந்தே பால்கியாலேயே அறிவிக்கப்பட்டு வந்த செய்தி. இதை ஒரு விமர்சனமாக இவர்கள் எழுதுகிறார்கள் என்றால் இவர்களின் அறியாமையை என்னவென்று சொல்வது?
அடுத்து ஷாஜி குறி வைக்கும் ராஜாவின் மறுக்க முடியாத மென் பகுதி அவரது பின்னணி. ராஜாவை 'King of folk' (மட்டும் தான்) என்று தன நல்ல முகத்தின் பின் மறைந்திருக்கும் துவேஷதைக்கொண்டு குத்தி காட்டுகிறார். ராஜாவின் பின்னணி அறியாதவர்களா இசை ரசிகர்கள் ? அவரை பற்றி நீங்கள் ஆப்ரிக்க நாட்டிற்கா அறிமுகம் செய்கிறீர்கள்? ராஜா ஒரு தலித் என்று சொல்லி காட்டி அவரை பெருமைப்படுத்துவது போல் , 'பாருங்கள் ஒரு தலித் கூட இசை அமைக்கிறார்' என்று மறைமுகமாக அவரை தாழ்த்தும் சில 'பெருந்தன்மையாளர்களின்' பட்டியலில் நீங்களும் சேர்ந்து விட்டீர்களா ஷாஜி?

தவிர்க்க முடியாமல் ரஹ்மானை இங்கு இழுக்க வேண்டியிருக்கிறது. ரஹ்மான் முஸ்லிம் மதத்திற்கு மாறிய ஹிந்து என்பதை தாண்டி .. இந்துவில் அவர் என்ன ஜாதியில் பிறந்தார் என்ற தகவல் யாருக்காவது தெரியுமா ? அதை பற்றி யாரேனும் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? இளையராஜா ஒரு தலித் என்று மட்டும் தகவல் எழுதும் 'மனிதர்கள்' எல்லா கலைஞர்களின் பின்னணியையும் தானே எழுத வேண்டும்? ஆனால் இக்கட்டுரையில் ஷாஜி 'தலித்' என்னும் வார்த்தையை மட்டும் கவனமாக தவிர்த்து , அவர் தினக்கூலியாக இருந்தார் என்கிற வரைக்கும் எழுதுகிறார்? இப்போது தான் முதல் படத்திற்கு இசை அமைத்த ஒரு புது இசை அமைப்பாளரையா நீங்கள் எங்களுக்கு அறிமுகம் செய்கிறீர்கள்? ராஜாவை பற்றிய கட்டுரையில் அவரது பின்னணி பற்றி சொல்ல வேண்டிய அவசியம் என்னவந்தது?

மேலும் அவரது மேற்கத்திய இசைக்கு மூலம் அவர் 'ஒரு காலத்தில்' தலித் கிறித்துவராக இருந்ததாம். இதை நேரடியாக சொல்லாமல் பல வார்த்தைகளை போட்டு எழுதிகிறார் ஷாஜி. இது வன்மம் அல்லாமல் வேறென்ன?

இதை தவிர தன வன்மத்தை சமன் செய்ய ராஜா பற்றி அனைவரும் அறிந்த (அவர் ஒரே வருடத்தில் பல படங்களுக்கு இசை அமைத்தவர். 'நூற்றுக்கணக்கான' (!) அற்புதமான பாடல்களை தந்தவர்) போன்ற 'புத்தம் புதிய' தகவல்களை நமக்கு 'அளிக்கிறார்' ஷாஜி. ராஜாவின் பாடல்களையும் அவற்றின் தரத்தையும் அனைவரும் அறிந்திருப்பதால் அவற்றை பற்றி எழுத வேண்டியதில்லை என்றும் அதுவல்ல தனது கட்டுரையின் நோக்கம் என்று ' தன எண்ணத்தையும் நோக்கத்தையும்' தன்னை அறியாமேலேயே வெளிப்படுத்திவிட்டார் ஷாஜி. அவரது நோக்கம் ராஜாவின் 'அடாவடி தனங்களை' அம்பல படுத்துவது. அவரை ஒரு கொடுங்கோலராக சித்தரிப்பது.
வெளிநாட்டு இசை கலைஞன் ஒருவன் கொலை செய்து விட்டு வந்து ஆல்பம் போட்டாலும், "அந்த மாதிரியான ஒரு மன நிலைமையிலும் அவருக்கு எங்கிருந்து இசை வந்ததோ!" என்று சிலாகிக்கும் பாணி ஷாஜியுடையது. அவருக்கு பிடிக்க வேண்டுமென்றால் ஒரு இசை கலைஞன் , அகாலத்தில் இறந்திருக்க வேண்டும் அல்லது.. வாழ் நாள் முழுதும் துயரத்தை அனுபவித்து பின்பு மாண்டிருக்க் வேண்டும். அவரது இசை (கலைஞர்கள்!) பற்றிய கட்டுரைகளை தொடர்ந்து வாசிப்பவர்களுக்கு இது எளிதில் புரியும். வெற்றிகரமாக வாழும் இசை கலைஞர்கள் அவரை பொறுத்தவரை 'வணிக ரீதியில் வெற்றி பெற்றவர்கள்' .
(அதிலும் அவருக்கென பிரத்தியேக விதிவிலக்கு ரஹ்மான்! )

இங்கே ராஜா ரசிகர்களை எல்லாம் ஒரு சேர கேவலப்படுத்துகிறார் ஷாஜி. அவரது ரசிகர்கள் அவரை 'கடவுளாக' நினைக்கிறார்களாம். அவரது பொற்காலமான எண்பதுகளில் இசை அமைத்ததை போன்று அல்லாமல் அவ்வளவு தரமில்லாமல் தற்போது இசை அமைக்கும் பாடல்களையும் கண்மூடித்தனமாக ரசிக்கிறார்களாம். என்னை போன்ற பலரும் அவற்றின் அவர் தகுதிக்கு தரமில்லாத பாடல்களை ரசிப்பதில்லை என்றும் , அவருக்கு சரியான படங்கள் அமைந்தால் அக்குறைகளையும் அவ்வப்போது அவர் நிவர்த்தி செய்யும் போது சந்தோசம் அடைவதையும் இவர் அறிவாரா? இளையராஜா ரசிகர்கள் எவ்வளவு திறந்த மனதுடன் அவரை விமர்சனம் செய்த படி இசை பற்றி பேசிக்கொள்ளுகிறார்கள் என்று இணைய தளங்களில் சாதாரணமாக பார்க்கலாமே? வலைப்பூ எழுதும் ஷாஜி இவற்றை எல்லாம் படிக்கிறாரா இல்லையா?
தனது வன்ம வெளிப்பாட்டுக்கு சிகரம் வைத்தாற்போல் பழசிராஜாவின் 'அம்பும் கொம்பும்' பாடல் பாடகி தேர்வு காரணமாக தோல்வியடைந்ததாக குறிப்பிடும் ஷாஜி, அப்பாடல் யார் கவனத்துக்கும் வரவில்லை என்பதிலும் உள்ளூர சந்தோசம் கொள்கிறார்.
பா படத்தின் 'முடி முடி' பாடல் சத்தத்தால் கவனம் கவரும் வீண் முயற்சி என்று சொல்ல அவருக்கு உண்மையிலேயே மனசாட்சி உறுத்தவில்லையா? வெற்றி பெற்று (நினைவுகளில் இருந்து மறைந்த !) ரஹ்மானின் பல பாடல்கள் கவித்துவமான பாடல் வரிகளாலா வெற்றி பெற்றன ? கவனம் கவரும் சத்தங்கள் ஆபிரிக்க , அரேபிய குரல் சத்தங்களை வைத்து 'வித்தியாசமாக' இசை அமைத்த ரஹ்மானின் பாடல்கள் மட்டும் இவருக்கு இனிக்கின்றன. 'பா' பாடலில் அவர் கவித்துவ தரம் பார்க்கிறார். 'Slumdog Millionaire' படத்தில் போலிஸ் துரத்த ஓடும் சேரி சிறுவர்களின் மன ஓட்டத்தை புறக்கணித்து 'லபோ திபோ' என்று ஆபிரிக்க தாளம் தெறிக்க ரஹ்மான் கத்தி ஆஸ்கார் வாங்கினால் சந்தோஷப்பட்டு ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து கட்டுரை எழுதுகிறார். 'அழகுக்கும் மலருக்கும் ஜாதி இல்லை ' என்ற தமிழ் பழைய பாடலை நினைவுபடுத்தும் ' ஜெய் ஹோ' இவருக்கு அரிய புதிய (!) பொக்கிஷம். ஆனால் தும்பி வா ஒரு வெளி நாட்டு பாடலின் 'நகல்' என்று இணைய தளங்கள் சொல்வதாக அள்ளி விடுகிறார். இப்பாடலும் youtube இல் கிடைக்கிறது. கேட்டுப்பார்த்தேன். ராஜா இந்த பாட்டை தன வாழ்நாளிலே ஒரு முறை கூட கேட்டிருக்க மாட்டார். அவ்வளவு பொருத்தம் கொண்ட அசல் (!) பாடல் இது.
'ராஜா ' என்று தன்னை தானே 'ராஜா' புகழ்ந்து கொள்வதற்காக விசனம் அடைகிறார் ஷாஜி. (அவர் பேர் ராஜா தானே. பின்னே என்ன மந்திரியா? )பாருங்கள் மொசார்ட் தன்னை 'ராஜா' என்று சொல்லி கொள்வாரா என்று கேட்கிறார். மொசார்டும் விதிவ்சத்தில் 'ராசையா' வாக பிறந்திருந்தால் தனது தலித் அடையாளத்தையும் மீறி , இசை துறையில் தவம் போல் உழைத்து , பல வெற்றிகளை கண்ட பின்பும், ராமராஜனுக்கும் மணிரத்னத்துக்கும் ஒரே நாளில் இசை அமைத்தாலும் அதிலும் variety காட்ட தெரிந்து ' பின்பு 'புகழ் ' கொடுத்த மமதையில் தன்னை 'ராஜா ' என்று சொல்லிக்கொண்டு 'திரிந்திருப்பாரோ' என்னவோ? இதெல்லாம் ஒரு இசை விமர்சகன் செய்யும் வேலையா?

முக்கியமான கட்டம் இது தான். இளையராஜா பாப மார்லி , பாப் டிலான் இருவரையும் 'குப்பை' என்று சொன்னதாக கொதிக்கிறார். இதே 'கருத்தை' நம் அறிவு ஜீவி சாரு தூக்கி 'சொமந்தார்.'. நான் கேட்கிறேன். ராஜா அவர்கள் இருவரையும் 'குப்பை' என்று எந்த பேட்டியில் சொன்னார். அல்லது எந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ..மேடையில்.. தனது புத்தகங்களில் .. எந்த இடத்தில இந்த மாதிரி சொல்லியிருக்கிறார். அவர் சொன்னதற்கான ஆதாரம் என்ன? இது கண்டிப்பாக தெளிவாக்கப்படவேண்டும். ஏனென்றால் இந்த குற்ற சாட்டை சொல்லி பல 'குப்பைகள்' குதித்துக்கொண்டிருக்கின்றன.

மேலும் அவர் விரும்பினால் மக்களுக்கு சேவை செய்வார் ஷாஜி. கோவிலுக்கு கொடுப்பதும் கொடுக்காமல் இருப்பதும் அவரவர் இஷ்டம். இதை மனதில் வைத்து அவரை 'மனிதம்' இல்லாதவர் என்று கதை கட்டாதீர்கள். ஒரு படத்துக்கு கோடி கணக்கில் வாங்கும் ஹாலிவுட் புகழ் இசை அமைப்பாளர்கள் மட்டும் ஏழை பங்காளர்களா? என்ன மாதிரியான பார்வை இது. இதுவும் உங்கள் இசை புலமையின் வழி வரும் சமூக அக்கறையா?

அவரது ஆன்மீக வாழ்க்கையை குறை சொல்ல உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை. தனது இசை வெளியீட்டு விழாவுக்கு இருபது பெண்களை நிர்வாணமாக சைக்கிள் ஓட்ட வைத்து 'புரட்சி' செய்யும் வெளிநாட்டு இசை கலைஞனை வானளாவ புகழ தெரிந்த உங்களுக்கு இசை மீதும் இறை மீதும் பக்தி கொண்டு கட்டுக்கோப்பான முறையில் வாழ பழகிக்கொண்ட ராஜா உங்களுக்கு ஜீரணம் ஆக மாட்டார் தான் .

என்னவோ 1992 இல் தான் ராஜா 56 படங்களுக்கு இசை அமைத்ததாக புது கதை விடுகிறார். அவரது 80 களில் பல மொழிகளில் 50 க்கும் மேற்ப்பட்ட படங்களுக்கு ஆண்டு தோறும் இசை அமைத்தார் என்பது.. இசை (கலைஞர்கள் !) கட்டுரையாளரான ஷாஜிக்கு யாராவது எடுத்து சொல்லுங்கள்.

தவிர கஸ்தூரிமான் படத்திற்கான இசை அமைப்பு சமயத்தில் வந்த இரு பெண்களிடம் , அவர்கள் வேறு இசை அமைப்பாளர்கள் இசை பாடியிருந்ததன் காரணமாகவே கடுமையாக நடந்து கொண்டார் என்று எழுதுகிறார். காரணம் தான் அல்லாத மற்ற இசை அமைப்பாளர்களின் இசையை அவர் ஒத்துக்கொள்ள மறுப்பவர் என்கிறார் ஷாஜி.
இங்கும் எனக்கு தவிர்க்க முடியாமல் ரஹ்மானை இழுக்க வேண்டியிருக்கிறது.. தன முதல் படத்தின் இமாலய வெற்றிக்கு பிறகு 'குமுதம்' நேர்காணலில் தான் சிலரின் (வேறு யார்?) இசையை கேட்பதில்லை என்று சொல்லிவிட்டு தனக்கு பிடித்த இசை அமைப்பாளர்களின் பெயர்களை பட்டியலிடும்போது தமிழ் திரை உலகின் இசை சிகரமான (!) விஜய .T. ராஜேந்தரையும் அதில் சேர்க்கிறார், விடுபட்ட ஒரே பெயர் 'இளையராஜா' .யாரிடம் இசை வாசித்து வந்தாரோ அவர் பெயரை தன ஒரே வெற்றி கொண்டு
புறம் தள்ளிய ரஹ்மானை புகழும் ஷாஜி .. இவ்வளவு வெற்றிக்கு பிறகு ராஜா யாரை மதிக்க வேண்டும் ..ரசிக்க வேண்டும் என்று நீங்கள் சொல்லி தர தேவை இல்லை. தனது முன்னோர்கள் மீது அவர் எவ்வளவு மதிப்பு வைத்திருக்கிறார் என்று எல்லோருக்கும் தெரியும்.

சினிமா போன்ற தொழில் இடங்களில் ஆயிரம் நடக்கும். உங்கள் ஆதர்சம் மறைந்த லோகிதாஸ் , நடிகை ஒருவரை தன கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் என்று யாரவது எழுதினால் நீங்கள் கொதிக்க மாட்டீர்களா? இவற்றை எல்லாம் எழுத உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது?

இன்னொரு முரணாக தன்னை 'ராஜா' என்று தற்பெருமை பேசினார் என்று பிதற்றும் ஷாஜி, கட்டுரையின் இறுதியில் அவர் தன்னை குறைவாக மதிப்பிட்டுக்கொண்டார் என்கிறார். ராஜா என்று சொல்லிகொள்வது மரியாதை குறைவான விஷயமா? எதோ ஒரு ஆத்திரத்தில் ராஜாவை பற்றி எதிர்மறையான விஷயங்களை சொல்ல வேண்டும் என்று முனைந்திருக்கிறார் என்று அப்பட்டமாக தெரிகிறது.

கடைசியாக ...
அன்புள்ள ஷாஜி

சாருவை பற்றி நான் எழுதிய கட்டுரையை கண்ணில் கண்ணீர் வருமளவுக்கு சிரித்துகொண்டே படித்ததாக சொன்னீர்கள் நான்கு நாட்களுக்கு முன்பு. இன்றோ உங்களை பற்றியே ஒருகட்டுரை எழுத வேண்டி எனை தூண்டியது உங்களது வழக்கத்துக்கு மாறான , வன்மம் மட்டுமே நிறைந்த ..இளையர்ஜாவை பற்றிய சமீபத்திய கட்டுரை தான்..வேறெந்த உள்நோக்கமும் அல்ல..

ஏனெனில் நீங்களே என்னிடம் சொன்னது போல் நீங்கள் ஒன்றும் சாரு நிவேதிதா அல்ல..!


ROSAVASANTH said...
பிரமாதம்! நான் எழுத நினைத்த பலதை நீங்கள் எழுதிவிட்டிர்கள். ராஜா பாப் மார்லேயை குப்பை என்று சொன்னதாக சொல்வதற்கு இவர்கள் காட்டும் ஆதாரம் அவுட்லுக்கில் சிறியவன் ஆனந்த் எழுதிய ஒரு சிறு குறிப்பு. அநத் கட்டுரையே ஒரு திரித்தல் கட்டுரை. அதில் ராஜாவிடம் என்ன கேள்வி கேட்கப்பட்டது என்பதே தெளிவில்லை. `I am beyond all these garbage' என்று ராஜா சொன்னதாக ஆனந்த் கட்டுரையை முடிக்கிறார். இதுதான் இவர்களின் ஆதாரம். இதில் இருக்கும் முக்கிய விஷயம் ராஜா பாப் மார்லேயை சொல்வதாக நாம் எடுத்துக் கொண்டால், பாவலர் வரதராஜனையும் குப்பை என்று சொன்னார் என்றுதான் அதிலிருந்து நாம் எடுக்க வேண்டும். ஆனால் பாவலர் மீதான ராஜாவின் அபிமானம் எல்லோருக்கும் தெரியும். ஆக ராஜா பாப்மார்லேயை குப்பை என்றார் என்பது திரித்தல், சாரு திரித்தல் செய்து கோயபல்ஸ்தனமாக பரப்பிய திரித்தல். பாப் டைலானை குப்பை என்றார் என்பது இப்போது ஷாஜி முன்வைக்கும் அப்பட்டமான பொய். அதற்கு இந்த முந்தயதை போன்ற அற்பமான அபத்தமான ஆதாரம் கூட கிடையாது. மற்ற திரித்தல்களை நீங்கள் விளக்கியுள்ளீர்கள்.

இதற்கெல்லாம் மௌனத்தையும், கருத்தை திரித்து வேறு கேள்விக்கு பதில் அளிப்பதையும், கருத்து சொன்னவனை கேவலப்படுத்தும் வேலையையுமே சாரு செய்வார். ஷாஜிக்கு எந்த அளவு நேர்மை உண்டு என்பதை இன்னும் கொஞ்ச நாட்களில் இந்த எதிர்வினைகளை அவர் எதிர்கொள்வதை வைத்து தெரிந்து கொள்ளலாம்.

புலிகேசி
said
ஆணந்தின் அந்த காழ்ப்பு நிறைந்த கட்டுரை பற்றி. எந்த வித தரவுகளும் இல்லாமல், மனம் போன போக்கில் ஒரு கட்டுரையை எழுதி விட்டு, பின் அந்த கட்டுரையையே இந்த எச்சில் குடிக்கு அலையும் மனிதரகள் ஆதாரமாக காட்டி, ராஜா பாப் மார்லே, டைலன், கத்தர் (வரதராஜன் பெயரை மிக தெளிவாக தவிர்த்து விட்டு) போன்றோரை குப்பை என்று சொன்னார் என மீண்டும் மீண்டும் கூறி வருகிறார்கள். ஒரு பொய்யை இப்படி சொல்வதன் மூலம் மெய் ஆக்கி விடலாம் என்பது இவர்களின் கனிப்பு. மெய் அப்படி ஒன்னும் அழிந்து விடாது, ஏதேனும் ரூபத்தில் அது தன்னை புலப்படுத்தும். ஆணந்தின் அந்த கட்டுரை இதோ http://www.outlookindia.com/article.aspx?228024

‘அன்புள்ளம்’ கொண்ட ஷாஜி இந்த கட்டுரையை படித்து தெளிவு பெறட்டும். அன்பற்ற ராஜா தனது வரலாற்று கடமையை செய்து கொண்டிருக்கட்டும். 1999′இல் வெளியான பிரேம்‍‍:ரமேஷின் ‘இளையராஜா: இசைமொழியும் தத்துவமும் என்ற புத்தகத்துக்கு செவ்வி அளித்த ராஜா இதே போன்றதொரு கேள்வியாய் புரட்சிகர மற்றும் மக்க்ளுக்கான் இசை படைப்பத்தை பற்றி கேட்க்கபட்ட பொழுது, மிக தெளிவாக மக்களை உறக்கத்தில் இருந்து எழுப்பும் அவ்வகை இசை சமூகத்துக்கு மிகவும் அவசியம் என்றும், ஆணால் அந்த இசை அனிச்சையாகவோ, இச்சையாகவோ செய்யாத பட்சட்த்தில் சும்மா இருப்பதே மேல் என்கிறார்.

ஆர்த்தம் புரியாத கபோதிகளுக்கு எனது மொழிபெயர்ப்பு “புரட்ச்சிகர இசை என்பது ஆத்மார்த்தமான அர்பணிப்பு உனர்வோடு செய்ய வேண்டும், சும்மா நானும் புர்ச்சி பன்றேன் சமூகதிற்க்கு சேவை செய்கிறேன் என்னும் இந்த முதலாளித்துவ சமூக சட்ட திட்டகளுக்கு உட்பட்டே ‘பிரே ஃபார் மீ பிரதர்’ என்று சோனி கம்பெனியின் வழிக்காட்டுதலில் புரட்சி செய்யாதே” (த‌விர்க்க‌ முடியாம‌ல் அவ‌ரை ப‌ற்றி இழுத்து விட்டேன், ம‌ன்னிக்க‌வும்).

இப்பொழுது ஷாஜி எழுதி இருக்கும் இந்த கட்டுரையே நாளை சாரு போன்றோருக்கு ஓ.என்.வி.யை பழசிராஜா பாடல்களின் தோல்விக்கு காரணம் என்று கூறினார் ராஜா என எழுதுவதற்க்கு ஆதாரமாகி விடும். தனக்கு நன்றாக தெரியாத ஒரு விஷயத்தை, ஒரு பொது மேடையில் ராஜா எத‌ற்க்கு கூறினார் என‌ விய‌க்கும் ஷாஜி போன்றோருக்கு இல‌வ‌ச‌மாய் sivajitv.com ம‌ற்றும் youtube’இல் கிடைக்கும் ராஜாவின் பேச்சை கேட்க‌ நேர‌ம்தான் இருக்காது.
வாசகர்களுக்கு இங்கு இருக்கு லிங்கு:
Part I www.youtube.com

Part II www.youtube.com

பட‌ங்க‌ளின் பாட‌ல்க‌ளின் தோல்விக்கு கார‌ணம் ஓ.என்.வி என‌ எங்காவ‌து அவ‌ர் சொல்லி இருப்ப‌தை இந்த‌ விடியோக்க‌ளில் க‌ண்டுபிடித்து எவ‌ரேனும் சொல்லி விட்டால், ராஜா ரசிக‌ர்க‌ள் நாங்க‌ள் கூட்டமாக‌ த‌ற்கொலை செய்து கொள்கிறோம். சாருவை போல் இது வெத்து ஜ‌ம்ப‌ம் இல்லை ‘பா’ ப‌ட‌ பாட‌ல்க‌ள் வ‌ட‌ இந்தியாவில் ந‌ல்ல‌ ஹிட் ஆகி விட்ட‌ பின்பும் தொட‌ர்ந்து வெட்கமில்லாமல் எழுதி கொண்டிருக்க‌. அவ‌ருக்கு வெட்கம் எல்லாம் இல்லை என்ப‌து தான் ந‌ம‌க்கு தெரியுமே என‌ கேட்காதீர்கள். பாவ‌ம் அவ‌ர் த‌னது பெட்ரூமில் ‘தென்ற‌ல் வந்து தீன்டும் போது’ பாட‌ முடியாம‌ல் க‌ஷ்ட‌ப‌டுகிறார். ப‌திலாக‌ எமினெமின் ‘BLEED YOU BITCH BLEED’ என பாடுவார், அதனால்தான் அவருக்கு வெடகமில்லாமல் போய் விட்டது. குறைந்த‌ப‌ட்ச‌ நேர்மையையாவ‌து நாம் அவ‌ரிட‌ம் எதிர்பார்க்க‌ முடியுமா? அவ‌தார‌த்தின் அந்த பாடல் ஒரு பார்வைய‌ற்ற‌ பென்ணுக்கு வன்ணங்க‌ளை ப‌ற்றி விள‌க்கும் ஒரு முய‌ற்சி, காதல் பாடல் அல்ல, என்பதை அவ‌ர் நேர்மையாய் அல‌சி பார்க்க‌ தயாரா?

யுவ‌னின் ப‌ருத்திவீர‌ன் பாட‌ல்க‌ளை சிலாகித்து ம‌ன்னின் இசை இது, இப்ப‌டி ராஜாவிட‌ம் எதிர்பார்க்க‌ முடியாது என‌ எழுதிய‌ அவ‌ர் யுவ‌னின் ‘ஊரோர‌ம் புளிய‌ ம‌ர‌ம்’ என்ற‌ பாட‌ல் ராஜாவின் புதிய‌ வார்ப்புக‌ள் ப‌ட‌த்தில் வ‌ந்த‌ ‘திருவிழா கூத்து’ எனும் பாட‌லின் அப்பட்ட‌மான‌ பிர‌தி என்பதை ப‌ரிசிலிக்க‌ த‌யாரா? ‘திருவிழா கூத்து’ பாட‌லின் க‌டைசி வ‌ரி எந்த‌ ந‌க‌ர‌த்து/நாகரிக‌ ம‌னித‌னினும் கலாச்சார‌ பொய்மைகளை த‌க‌ர்த்து விடும் ஆற்ற‌ல் கொண்ட‌து என்ப‌தை அவ‌ர் ம‌றுப்பாரா? தெரிந்தே அதை த‌ன‌து இசையில் ப‌டைக்கும் ராஜா, இவர் போன்றோரின் அற்ப புத்திசாலித்த‌னங்க‌ளுக்கும், wikipedia எழுத்துக்க‌ளுக்கும் பிடிப‌ட‌மாட்டார். மெய்யான பின் ந‌வீன‌த்துவ‌ இசை ப‌டைத்து இந்த ச‌மூக‌த்தை முடுக்கி விட்டு கொண்டே இருக்கிறார். அவ‌ர‌து இசை க‌லடைஸ்கோப் போல் ப‌ல்வேறு கோல‌ங்க‌ளை உள்ள‌ட‌க்கிய‌து, இது புரியாத‌ ‘க‌ற்பூர‌’ வாச‌ம் அறியாததுக‌ள்…த‌ங்க‌ள் நிலையில் இருந்து ப‌ரினாம‌ வ‌ள‌ர்ச்சி பெற‌ எத்த‌னிக்காத‌ வ‌ரை ஒன்றும் செய்ய‌ முடியாது.

புலிகேசி said...

சாரு மூஞ்சில சேறு! ராஜா, ரஹ்மான், இருவருக்கும் பத்மபூஷன் விருது கிடைத்து இருப்பதால் வடக்கின் அங்கிகாரம் ராஜாவுக்கும் உண்டு என நிருபிக்கபட்டுவிட்டது.
http://pib.nic.in/release/release.asp?relid=57307
இனியாவது எழுதுவதை அந்த அசிங்கம் (உபயம்:ராஜப்ரியன்) நிறுத்துமா என பார்ப்போம். ஆணால் இந்த சந்தில் ஒரு புது காமடி பிட்டை போட்டு விட்டார் சேறு சே... சாரு.
http://charuonline.com/Jan2010/Elayarajacharu.html

///அதில் கொண்டு போய் நாட்டுப்புற இசையைக் கலந்தால் காப்பியில் சாராயத்தைக் கலந்தது போலத்தான் இருக்கும்.///

ஒசியில் குடிக்கும் இவருக்கு எப்படி தெரியும் coffee liqueur என்னும் ஒரு வகையினம் இருப்பது? அல்லது இவர் சுற்றி திரியும் யுரோப்பில் இதை யாரும் அவருக்கு அறிமுகப்படுத்த வில்லை போலும்.
http://coffeetea.about.com/cs/alcoholic/a/liqueurs.htm
பாவம் பொழச்சு போகட்டும் பழச்'சாறு'.

///பாப் மார்லியைச் சொன்னது போல் ஆந்திரப் பிரதேசத்தின் புரட்சிப் பாடகன் கத்தாரையும் மாத்ருபூமி என்ற மலையாள இதழுக்கு அளித்த பேட்டியில் இளையராஜா குப்பை என்று சொல்லியிருக்கிறார். ///

இவ்வளவு நாள் அவுட்லுக் என சொல்லி வந்தார், இப்பொழுது அந்த பேட்டி வெளியானது 'மாத்ருபூமி' என கூறி, அவர் மிகவும் பிரபலமான மலையாள கரையோரம் ஒதுங்கி விட்டார் போலும். சும்மா விட மாட்டோம்டி, வக்காளி அந்த பத்திரிக்கை செய்தி உள்ள லிங்க அல்லது ஸ்கேன் இமேஜ் இனையத்துல பதிவேற்றம் பன்னு, இல்லை மூடிட்டு இரு. கத்தார் கிட்ட போய் சொல்லுமாம் அவரும் இந்த முஞ்ச பார்த்து நம்பிட்டு, துப்பாக்கியோட வந்துடுவாராம். உன்னையத்தான் ரொம்ப நாள பார்க்கனும்ன்னு காத்துகிட்டு இருகாங்க 'நக்ஸல்பாரிகள்' போ போய் பார்த்து சொல்லிட்டு... அப்படியே போய் சேரு.



நன்றி ஷாஜி, சந்திரமோகன், ரோசாவசந்த், புலிகேசி

இளையராஜா: ஒரு வரலாற்று நிகழ்வு - ஷாஜி


இரண்டாயிரத்து நான்கு செப்டெம்பரின் ஓர் பிற்பகலில் நான் பாடகரும் ஒலிப்பொறியியலாளருமான நண்பர் தினேஷுடன், சென்னையிலுள்ள பிரசாத் ஒலிப்பதிவுக் கூடத்தின் விருந்தினர் அறையில் இசையமைப்பாளர் இளையராஜாவை சந்திப்பதற்காக காத்திருந்தேன். எண்பதுகளில் தினேஷ் இளையராஜாவுடன் பல படங்களில் ஒலித்தடப் பாடகராகவும் இசைக்கோப்பு உதவியாளராகவும் பணியாற்றியிருந்தார். தன் வழிபாட்டுக்குரிய இசையமைப்பாளரை அவர் பதினைந்துவருடம் கழித்துச் சந்திக்கவிருக்கிறார். நினைவுகளில் மூழ்கியவரைப்போல காணப்பட்டார். இளையராஜா இசை அமைத்த பலநூறு பாடல்களின் பேரலை எனக்குள்ளும் அடித்துக் கொண்டிருந்தது.

அவர் வந்தபின்னர்தான் தமிழ் திரைப் பாடல்கள் கேரளத்தில் எப்போதுமே இல்லாத அளவுக்குப் புகழ்பெற்றன.
அந்த பாடல்களை நெஞ்சில் ஏற்றிக் கொண்டு அலைந்த இளமைக்கால நாட்களில் என் நினைவுகள் திரிந்தன......

இளையராஜா பிறந்த பண்ணைபுரம், என்னுடைய சொந்த ஊரான நெடும்கண்டத்தில் இருந்து வெகுதூரத்தில் இல்லை. இடுக்கி தேனி மலைகளுக்கு இப்பால் இருக்கிறது பண்ணைப்புரம். ஒரு பள்ளிகூடம் கூட இல்லாத அந்த ஊரில் ஏழைக் குடும்பத்தில் பிறந்த ராசையா வறுமை காரணமாக எட்டாவது வகுப்புடன் கல்வியை நிறுத்திக்கொள்ள நேர்ந்ததும், அவர் பிறந்து வளர்ந்த சூழல் நாட்டுப்புற இசையால் நிரம்பியிருந்ததால் அதுவே அவரது உண்மையான கல்வியாக மாறியதும் நான் கேட்டு அறிந்திருந்தேன். பதிநான்காவது வயதில் கம்யூனிஸ்டுக் கட்சியின் பிரச்சாரப் பாடகராக இருந்த தன் அண்ணன் பாவலர் வரதராஜனுடன் சேர்ந்து இளையராஜா கேரளத்திலும் பல சிற்றூர்களுக்குச் சென்று இசைநிகழ்ச்சிகள் நடத்தியிருக்கிறார். இளையராஜா சகோதரர்கள் பல்வேறு இசைநிகழ்ச்சிகளுக்காக எங்கள் பகுதிகளுக்கு வருவதுண்டு என்பதையும், அப்போதைய அவர்கள் வாழ்க்கையின் போராட்டங்களையும், பிறகு அவர்கள் சென்னைக்குச் சென்று திரையிசையில் பெரும் சாதனைகளை நிகழ்த்தியதையும் பற்றியெல்லாம் நிறைய கதைகளை நான் சிறுவயது முதலே கேள்விப்பட்டிருக்கிறேன்.

இருபத்தைந்து வயதில் அவர் சென்னைக்கு வந்ததையும் தன் இசைப்பயிற்சி போதுமானதல்ல என்று உணர்ந்தபின் தன்ராஜ் மாஸ்டரிடம் சேர்ந்து மேலை இசையும் இசையமைப்பு நுட்பங்களும் பயின்றதையும் மேலைநாட்டுச் செவ்வியல் இசையமைப்பாளர்களான பாக், பீத்தோவன், மொசார்த் ஆகியோரின் வலிமையனா பாதிப்பு அவரிடம் ஏற்பட்டதையும் லண்டன் டிரினிட்டி இசைக்கல்லூரியிலிருந்து மேலைநாட்டுச் செவ்வியல் கித்தார் இசையில் தங்கப்பதக்கத்துடன் பயிற்சியை நிறைவு செய்ததையும் பற்றியெல்லாம், இருபது வருடங்களுக்கு முன் நான் மலையாளத்தில்
விரிவாக எழுதியுமிருக்கிறேன்*.

ஆனால் சென்னையில் பல வருடங்களாகவே வாழ்ந்து இசைத்துறையில் பணியாற்றியபோதிலும்கூட என்னால் இளையராஜாவை பார்த்துப்பழக முடிந்ததில்லை. விளம்பர இசை தொடர்பாக அவரது மகனும் இசையமைப்பாளருமான கார்த்திக் ராஜாவை சந்திப்பதற்காக அவரது வீட்டுக்குக் கூட சென்றிருக்கிறேன். அங்கு இளையராஜா வெள்ளை உடை அணிந்து கம்பீரமாக அமர்ந்து எதையாவது படித்துக் கொண்டோ இசைக்குறிப்புகளைச் சரிபார்த்துக் கொண்டோ இருப்பதை பார்த்திருக்கிறேன்........

கதவு திறந்தது, நாங்கள் உள்ளே அழைக்கப்பட்டோம். வெண்ணிற நுரைமெத்தை இருக்கையில் இளையராஜா அமர்ந்திருந்தார். எங்களை அமரச்சொன்னார். தினேஷ் அமர மறுத்தார். இளையராஜா தினேஷை அடையாளம் கண்டுகொள்ளவில்லை என்று தோன்றியது. தினேஷையும் அமரும்படிச் சொல்லிக் கட்டாயப்படுத்தினார். தினேஷ் மெல்ல ''சார், உங்களுக்கு என்னை அடையாளம் தெரியவில்லை போல'' என்றார். கூர்ந்து கவனித்தபின் இளையராஜா புன்னகைசெய்து மலையாளத்தில் ''ஆ தினேஷ்! என்ன ஆளே மாறிவிட்டாய், தாடியும் அதுவுமாக? அடையாளமே தெரியவில்லை! நீண்டகாலம் ஆகிறதே!" என்றார். தினேஷுக்கு அதுபோதும், அவரது கண்கள் ஈரமாயின.

சலில் சௌதுரி நினைவு அமைப்பின் செயலாளராகத்தான் நான் அப்போது இளையராஜாவைப்பார்க்க சென்றிருந்தேன். சலில் சௌதுரியின் எண்பதாவது பிறந்தநாளில் நடத்தவிருந்த இசைநிகழ்ச்சியை தொடங்கிவைப்பதற்கு இளையராஜாவை முறைப்படி அழைத்தோம். ''நான் சலில்தாவின் மிகப்பெரிய ரசிகன். அவரை என் குருநாதர்களில் ஒருவராகவே எண்ணுகிறேன்'' என்றுதான் அழைத்ததுமே இளையராஜா சொன்னார். சலில்தாவுக்கும் இளையராஜாவின் இசைமேல் மதிப்பு இருந்ததாக சலில்தாவின் குடும்பத்தினர் என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். சலில்தாவின் குழந்தைகள் இளையராஜாவை 'இளை அங்கிள்' என்றே அழைத்துவந்தார்கள். இளையராஜா நிகழ்ச்சியில் பங்கெடுக்க சம்மதித்தார்.

நவம்பர் பத்தொன்பதாம்தேதி நடந்த நிகழ்ச்சியில் சரியான நேரத்துக்கு இளையராஜா வந்தபோது அதிக கூட்டம் இல்லை. சலில்தா போன்ற ஒரு மேதையின் நினைவுக்கு இத்தனை குறைவானபேர் வந்திருக்கிறார்களே என ஆதங்கப்பட்ட இளையராஜா அன்று சலில்தாவைப்பற்றிய தன் நினைவுகளைப்பகிர்ந்துகொண்டார். 'சுஹானா சஃபர்' போன்ற சலில்தாவின் பாடல்களை பாடி அவற்றின் இசைநுட்பங்களை விவரித்தார். எம் எஸ் விஸ்வனாதன், ஜி கெ வெங்கடேஷ் போன்றவரின் பாடல்களைப்பற்றியும் அவர் அந்த மேடையில் பேசினார்.


சென்னையில், தன் போராட்ட நாட்களில் பல்வேறு இசைக்குழுக்களில் கித்தார் கலைஞனாக பணியாற்றிய இளையராஜா பின்னர்
திரையிசையில் கித்தார் கலைஞனாகவும் காம்போ ஆர்கன் வாசிப்பவராகவும் நுழைந்தபோது சலில் சௌதுரியிடம் பணியார்றியிருக்கிறார். எழுபதுகளின் தொடக்கத்தில் இசையமைப்பாளர் ஜி.கெ.வெங்கடேஷின் இசை உதவியாளராக மாறிய இளையராஜா அவரது நூற்றுக்கணக்கான கன்னடப்பாடல்களின் இசையமைப்பில் பங்கெடுத்திருக்கிறார். இக்காலகட்டத்தில் தான் இளையராஜா திரை இசைமைப்பின் நுட்பங்களையும் நடைமுறைச்சிக்கல்களையும் விரிவாகவே கற்றுக் கொண்டார்.

எம்.எஸ்.விஸ்வநாதனின் பொற்காலம் முடிந்து தமிழ் திரையிசையில் நிலவிய சோர்வை விலக்கி தமிழ் நாட்டார் இசையின் ஜீவனை திரையிசைக்குள் கொண்டுவந்து இளையராஜாவின் 'அன்னக்கிளி' 1976ல் வெளியாயிற்று. அதில் அத்தனை பாடலும் பெருவெற்றிபெற்று இளையராஜாவின் பெயர் தமிழகமெங்கும் அறியப்படலாயிற்று. தமிழ் திரை இசையில் ஒரு புதியபாதை திறக்கப்பட்டது. தொடர்ந்து பதினைந்து வருடத்துக்கு மேல் இளையராஜா தமிழ் திரையிசையின் ஒரே முகமாக விளங்கினார். தமிழர்களின் இரு தலைமுறையினர் அவரது பாடல்களை மட்டுமே கேட்டு வளர்ந்து வந்திருக்கிறார்கள்.

இளையராஜாவின் இசையின் சிறப்பம்சமென்ன என்று கேட்டால் சாதாரண ரசிகர்கள் அவற்றின் எளிமையையும் நாட்டார் இசை சார்ந்த தன்மையையும் சுட்டிக்காட்டுவார்கள். இசைநுட்பம் அறிந்தவர்கள் அவற்றின் இசைப்பின்னணியின் அமைப்பில் உள்ள அபாரமான நுட்பங்களையும் அவற்றில் தெளிந்தும் தெளியாமலும் ஒலிக்கும் இசைமெட்டுகளின் நம்ப முடியாத கற்பனைத்தாவல்களையும் சுட்டிக்காட்டுவார்கள். இவ்விரண்டு அம்சங்களும் முரண்பாடே இல்லாமல் ஒன்றுசேரக்கூடிய ஒரு புள்ளி இளையராஜாவின் பாடல்களில் உள்ளது. அதுதான் அவரது தனி இடம். எளிமையான நாட்டுப்புற மெட்டுகளுக்கு பின்னணியாக பலவகையிலும் சுழன்றும் துள்ளியும் ஓடும் சிக்கலான ஆனால் காதுக்கு இனிமையான இசை இடையீடுகள் உருவாக்கும் ஒரு அதிசய உலகம் அது.

இளையராஜா தன் இசையின் வலிமையினால் மற்றுமே காலூன்றிய ஒரு இசையமைபபளர். அவரது ஆரம்பகாலத்தில் பல வருடங்கள் அவருக்கு பெரிய நிறுவனக்கள் எடுக்கும் படங்களோ பெரிய நட்சத்திரங்கள் நடிக்கும் படங்களோ அமையவில்லை. அதிசயம் அழைக்கிறது [1976], பாலூட்டி வளர்த்த கிளி [1976], உறவாடும் நெஞ்சம் [1976], கவிக்குயில் [1977], ஓடிவிளையாடு தாத்தா [1977], சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு [1977], துணையிருப்பாள் மீனாட்சி [1977] முதல் மலையாளப்படமான வியாமோகம் [1977] போன்றவை, இன்று அவற்றின் பாடல்களினால் மட்டும் நினைவு கூறப்படும் சாதாரணமான படங்கள்.

இளையராஜாவைப்பொறுத்தவரை தன் முதல் படத்திலிருந்தே படங்களை நம்பி அவர் இல்லை, அவரை நம்பியே படங்கள் இருந்தன. 2004 வரைக்கும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்பட்ட மொழிகளில் ஏறத்தாழ எண்ணூறுக்கும் மேற்ப்பட்ட படங்களுக்கு இளையராஜா இசையமைத்துவிட்டிருந்தார். அவற்றில் பல படங்களின் வெற்றிக்கு முழுக்க முழுக்க அவரது இசை மட்டுமே காரணம் என்பதையும் மறுக்க முடியாது.

பாடல்களின் பின்னணி இசையொழுங்கின் நுட்பங்களில் அவரது பிரமிக்க வைக்கும் படைப்பூக்கம் காணப்படுகிறது. தெம்மாங்கு மெட்டில் அமைந்த திரைப்பாடல்களுக்கு ஜாஸ் இசையின் பின்னணியை சற்றும் முரண்படாமல் அமைக்க அவரால் முடிந்தது. முழுக்க முழுக்க நாட்டுப்புறப்பாடலாகவே ஒலிக்கும் பாடலை அபூர்வமான கர்நாடக இசை ராகத்தில் அமைக்கவும் அவரால் முடிந்தது. ஒரு பிரபல கர்நாடக இசை ராகத்தை எடுத்துக்கொண்டு அந்த ராகத்தின் விரிவையும் அதற்க்குள் தன் கற்பனை வீச்சையும் வெளிப்படுத்தும் நூற்றுக்கணக்கான பாடல்களை அதில் அமைத்தது, தீவிர கர்நாடக இசைமேடைகளில் கூட வழக்கமாக பாடப்படாத அபூர்வமான, சிக்கலான ராகங்களை எடுத்துக் கொண்டு அவற்றை சாதாரணர்கள் கூட ரசிக்கும்படியாக எளிய பாடல்களை அமைத்தது போன்ற எத்தனையோ சாதனைகள்!

நாட்டாரிசையை அடிப்படையாகக் கொண்ட பாடல்களில் இளையராஜா அளித்த வகைமைகளும் வண்ணங்களும் எண்ணற்றவை. நகர்மயமாதலின் விளைவாக தமிழ்பண்பாடு மறந்துவிட்ட நாட்டாரிசையை மீட்டு மீண்டும் மையத்துக் கொண்டுவந்தவரே இளையராஜாதான். தொழில்களுடனும் தொழிலாளர்களுடனும் இணைந்துள்ள நாட்டுப்புற இசையின் வலிமை அதன் உணர்ச்சிகரமே. இளையராஜா நாட்டார் மெட்டுக்களை கர்நாடக இசைராகங்களுடன் இணைத்து விரிவாக்குவது, மேலைநாட்டு இசைப்பின்னணியைச் சேர்ப்பது ஆகியவற்றின் மூலம் அதை நவீனப்படுத்தினார். தூல்லியமான உச்சரிப்பும் கம்பீரமான பாடுமுறையும் கொண்ட பழையவகைப் பாடல்களுக்குப் பதிலாக இளையராஜா கதையின் உணர்ச்சியோடு இணைந்து கதைச்சூழலுடன் பிரிக்கமுடியாதபடி கலந்து ஒலிக்கும் பாடல்களை உருவாக்கினார். திரைப்பாடல் என்பது காதுக்கினிய ஒரு நுகர்பொருள் மட்டுமல்ல அது ஒரு பண்பாட்டின் இயல்பான வெளிப்பாடு என்று காட்டியவர் அவர்.

இளையராஜாவின் இன்னொரு சாதனையானது திரைப்படத்தின் பின்னணி இசைக்கோர்பை மிகமிகப் படைப்பூக்கம் கொண்ட ஒரு
கலைவெளிப்பாடாக நிறுவியதாகும். பின்னணி இசையை காட்சியை சத்தமயமாக ஆக்குவதற்காகவும் காட்சியின் இடைவெளிகளை
நிரப்புவதற்காகவும் மட்டுமே பயன்படுத்திவந்த சூழலில் இருந்து இளையராஜா மாறுபட்டார். படத்தின் மையத்தை இசையின் வழியாக பலவகையில் தீவிரமாக வெளிப்படுத்த பின்னணி இசையை அவர் பயன்படுத்தினார். ஒரு காட்சியின் இடைவெளிகளை நிரப்பி காட்சிக்கு தொடர்ச்சியை உருவாக்குவதுடன் இயக்குநர் கூறவருவதற்குமேலாகச் சென்று மேலும் ஒரு தளத்தை பின்னணி இசை மூலம் கூறினார். காட்சிகளின் உணர்ச்சிகரத்தையும் அழுத்தத்தையும் பின்னணி இசை மூலம் பலமடங்கு மேம்படுத்தினார்.

பின்னணி இசைச்சேர்ப்பின்போது இளையராஜா காட்சியை ஒருமுறை பார்த்ததுமே தாளில் இசைக்குறிப்புகளை எழுதிக் கொடுத்து உடனடியாகவே ஒலிப்பதிவுக்குச் சென்றுவிடுவார் என்பதை ஒரு ஐதீகக்கதைபோல சொல்லிக் கொள்கிறார்கள். வாத்தியத்தில் வாசித்துப்பார்ப்பதோ இசைவரிசையை காதால்கேட்டு சரிசெய்வதோ இல்லை. இசைக்குழு அந்த இசைக்குறிப்புகளை வாசிக்கும்போது அவை மிகக் கச்சிதமாக இணைந்து ஒரே இசையோட்டமாக சிறப்பாக வெளிப்படும். ஒத்திசைவிலும் காலக்கணக்கிலும் அவை கச்சிதமாக இருக்கும். பின்னணி இசை எங்கே தொடங்க வேண்டுமோ அங்கே தொடங்கி அக்காட்சிக்கு இசை எங்கே முடியவேண்டுமோ அங்கே கச்சிதமாக முடிந்துவிடும். சரிபார்த்துக் கொள்வதற்காக ஒருமுறைகூட அவர் வாத்தியங்களை தொட்டுப்பார்க்கவேண்டியதில்லை. அனைத்துமே அவரது மனதில் மிகச்சரியாக உருக்கொண்டிருக்கும்.

இசையமைப்பின் அனைத்து தளங்களையும் முழுமையாக தன் கட்டுக்குள் வைத்திருந்த முழுமையான மையமாக இசையமைப்பாளர் மாறினார். இசை உருவாக்கம், இசைக்கோப்பு, இசை நிகழ்த்துதல், ஒலிப்பதிவு ஆகிய அனைத்திலும் இசையமைப்பாளரின் முழுமையான கட்டுப்பாடு இளையராஜாவால் கொண்டுவரப்பட்டது. அவர் காலையில் பிரசாத் ஸ்டுடியோவுக்கு வந்துவிடுவார் என்றும் வந்ததுமே ஒரு படத்தின் பாடல்களுக்குரிய இசையை அப்போதே அமைத்து விரிவான இசைக்குறிப்புகளாக எழுதிவிடுவார் என்றும் சொல்லப்படுகிறது. பின்னர் நாள்முழுக்க அதை ஒருங்கிணைப்பதும் நடத்துவதும் பதிவுசெய்வதும்தான் நடக்கும். ஒரே மாதத்தில் ஆறு படங்களுக்கு அவர் இசையமைத்திருக்கிறார். அவற்றில் எல்லா பாடல்களும் பெரும் வெற்றிகளாகியிருக்கின்றன. ஒரு வருடம் 56 படங்கள் வரை!

நாட்டாரிசையிலேயே வளர்ந்த இளையராஜா தன் இருபத்தைந்து வயதுவரை இசைப்பயிர்ச்சிக்கு வேறுவகையான வாய்ப்புகள் இல்லாமல் இருந்தவர். அதர்க்கு பின் தன்ராஜ் மாஸடரிடம் சிறிது காலம் மேலையிசை பயின்றார். லண்டன் டிரினிடி கல்லூரியின் தங்க பதக்கத்தை ஆறுமாதத்தில் அவர் பெற்றார் எனப்படுகிறது. சிலகாலம் டி.வி.கோபாலகிருஷ்ணனிடம் அவர் தென்னிந்திய மரபிசையையும் பயின்றார். ஆனால் கேள்வி இதுதான், சிலவருடங்களின் பயிற்சியிலேயே அவர் எப்படி இவ்விரு இசைமரபுகளையும் துல்லியமாக உள்வாங்கிக் கொண்டு அவற்றில் உச்சகட்ட புதுமைகளைப் படைப்பவராக ஆனார்? அவரது திரையிசைப்பாடல்களில் உள்ள அழகும் நேர்த்தியும் வெகுஜன கலை என்ற எல்லைக்குள் நிற்பவை அல்ல என விமரிசகர்கள் நன்றாகவே அறிவார்கள்.

திரையிசைக்கு அப்பால் அவர் இசையமைத்த மேலையிசைத்தொகைகளும் அவருக்கு பெரும்புகழ் பெற்றுத்தந்தன. 1993ல் அவர் ஒரு மேலையிசை சிம்பனியை அமைத்தார். அதில் புகழ்பெற்ற ஜான் ஸ்காட் நடத்துகையில் லண்டனின் ராயல் ஃபில்ஹார்மானிக் ஆர்கெஸ்டிரா வாசித்தது. அந்த சிம்பனி ஒரு மாதகாலத்துக்குள் அமைக்கப்பட்டது. ஜான் ஸ்காட் சொன்னார் "இளையராஜாவின் இந்த புதிய சிம்பனியை நடத்தும் நல்வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. ஐந்து சலனங்களில் சிம்பனிக்கான ஒத்திசைவுகள் ஓடும் ஒரு படைப்பு இது. ஒருமணிநேரம் இசைக்கப்படுவது. இது அவருடைய முதல் முயற்சி என்று தெரியவருகிறது. இது அவர் ஒரு இசையமைப்பு நிபுணர் என்றும் இன்னிசை மற்றும் உணர்ச்சிகளின் பெரும் செல்வத்தை நமக்கு அளிக்கும் வல்லமை கொண்டவர் என்றும் காட்டுகிறது''. அவரது இரு கருவியிசைத் தொகுப்புகள் How to name it? மற்றும் Nothing but wind இசையுலகில் நிலைத்து நிற்கும் தகுதி கொண்டவை.

லண்டனைச்சேர்ந்த இசையமைப்பாளரான மைக்கேல் டவுன்செண்ட் சொன்னார் "இந்த மனிதர் மேல் கணிசமான மரியாதையுடன்தான் நான் சென்னைக்குச் சென்றேன். ஆனால் உள்ளூர ஒருவகையான அவநம்பிக்கையும் இருந்தது. அவரது பேரளவிலான படைப்புகளின் எண்ணிகை காரணமாக உருவாக்கப்பட்ட மிகைப்படுத்தப்பட்ட சித்திரமே எனக்கு அளிக்கப்பட்டது என்ற எண்ணம் எனக்கு இருந்தது. ஆனால் இசைக்கான தொடக்க சமிக்ஞை வரிசைகள் இல்லாமல், இசைத்தொகுப்பாளாரின் சேவை இல்லாமல், ஏன் ஒரு நிறுத்தக்கடிகாரம் கூட இல்லாமல் ஒரு படத்துக்கான இசைக்குறிப்பை ஒர் இசையமைபாளர் வெறும் மனக்கணக்காகவே எழுதி அமைக்க; அது அந்தக்காட்சியுடன் மிக கச்சிதமாக இணைவதைக் கண்டபோது என் பிரமிப்பும் வியப்பும் உச்சத்துக்குச் சென்றது. அது சண்டைக்காட்சி என்றால் அதன் பதற்றத்தை அதிகரிக்கவும் அது காதல்காட்சி என்றால் அதன் பரவசத்தை இன்னிசை மெட்டுகள் மூலம் விரிவாக்கவும் நடனக்காட்சிக்கு இயல்பான தாளக்கட்டுகள் மூலம் உற்சாகத்தை உருவாக்கவும் அவரால் முடிந்தது".

இன்றும் இளையராஜா தொடர்ந்து இசையமைத்துவருகிறார். மலையாளத்தில் அவரது இசையமைப்பில் படங்கள் வெளிவந்து வெற்றிபெற்று வருகின்றன. அமிதாப் பச்சன் நடித்து வெளிவந்த 'சீனி கம்' இந்திப்படத்தில் அவர் தனது சில பழைய பாடல்களை மறு ஆக்கம் செய்து பயன்படுத்தியிருக்கிராற். 'ஸூனி ஸூனி' [மன்றம் வந்த தென்றலுக்கு], 'பாத்தேன் ஹவா' [குழலூதும் கண்ணனுக்கு], ஜானே தோ னா' [விழியிலே மணிவிழியிலே] போன்ற 'சீனி கம்' பாடல்கள் வெற்றி பெற்றது.

2005ல் சலில்தாவின் மகள் அந்தரா சௌதுரியுடன் சேர்ந்து இளையராஜாவை மீண்டும் நேரில் சந்தித்து உரையாட முடிந்தது. சலில் சௌதுரி நினைவு அமைப்பு கல்கத்தாவிலும் கேரளத்திலும் நடத்தவிருந்த நினைவுநிகழ்ச்சிகளுக்காக அவர் ஒரு வாழ்த்துச்செய்தியை ஒளிப்பதிவுசெய்தளிக்க சம்மதித்தார். அவர் இசையமைத்து வரவிருந்த திருவாசகம் பற்றி பேசிக்கொண்டிருந்தார். ச,ரி,க என்னும் மூன்று ஸ்வரங்களை மட்டுமே பயன்படுத்தி அவர் அமைத்திருக்கும் ஒரு பாடலைப்பற்றியும் சொன்னார்.

வரலாறு எப்போதும் நம் கண்ணெதிரே தான் நிகழ்கிறது. ஆனால் அது காலத்தில் பின்னகர்ந்து பழையதாக ஆனபின்னரே நம்மால் அதைக் காணமுடிகிறது. தமிழகத்தின் சிறிய ஒரு கிராமத்தில் பிறந்து சொல்லும்படியான படிப்பறிவு எதுவும் இல்லாமல் வளர்ந்து வந்து, இசைரசிகர்களைக் கவர்ந்து, இசைவிமரிசகர்களையும் பாமரர்களையும் ரசிக்கச்செய்த இளையராஜா நம் கண்முன் நிகழ்ந்துகொண்டிருக்கும் ஒரு வரலாறு.

தமிழில் ஜெயமோகன்

நன்றி: ஷாஜி musicshaji.blogspot.com

Tuesday, March 23, 2010

கலைஞனை மதிக்காத சமூகமே...! - சரவணன்

ஒரு குறிப்பிட்ட நபரின் கேள்விக்காக இந்த கட்டுரை எழுதப்பட்டிருந்தாலும் நீண்ட நாட்களாகவே மனதை உறுத்திக்கொண்டிருந்த ஒரு விஷயத்தையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள இது உதவும் என்று நம்பிக்கையோடு. .
சமீபத்தில் நாம் எழுதியிருந்த "ராஜாவின் புகழுக்கு மற்றுமொரு சான்று" என்ற கட்டுரையில் வந்த விஷயத்தை ஒரு நண்பர் "ஏண்டா அதையே திரும்ப திரும்ப சொல்லிகிட்டே இருக்க ..?" என்று கேட்டிருந்தார். அதாவது சும்மா ராஜாவின் புகழை திரும்ப திரும்ப பேசிகிட்டே இருக்க என்று.
சமீபத்தில் விகடன் பொக்கிஷம் என்ற தலைப்பில் ஆனந்த விகடன் பழைய விகடனில் வந்த பேட்டிகள்,விமர்சனங்கள் என்று பல விஷயங்களையும் மீண்டும் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறது. அந்த வரிசையில் "சிகப்பு ரோஜாக்கள்", "முதல் மரியாதை" போன்ற படங்களின் விமர்சனங்களும் வந்திருந்தது. அதில் ஒரு வரி கூட ஒரு வார்த்தை கூட ராஜாவின் இசையை பற்றி குறிப்பிடவில்லை. அது ஏன் ..? தயவு செய்து யாரும் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம், காரணம், திட்டமிட்டு அவரது இசை திறமையை ஒடுக்க நினைத்த மேல்தட்டு கனவான்களே. விகடன் விமர்சனம் நம்மிடையே எந்த அளவிற்கு பிரபலம் என்பதை யாருக்கும் சொல்லி தெரிய வேண்டியதில்லை, அந்த விமர்சனத்திலேயே இப்படி என்றால்..? சரி அவர்கள் சொல்லி என்ன ஆக வேண்டியது அப்படின்னு சொல்லிட்டு போக என்னால் முடியாது. விகடனை படிக்கும் லட்சக்கணக்கான வாசகர்களில் சில ஆயிரம் பேர்களாவது இப்படி எடுத்து சொன்னால்தான் உண்டு.
அவர்களுக்கு எடுத்து சொல்லி புரிய வைக்க வேண்டியது ஒரு நல்ல இசை ரசிகனின் கடமை என்று நினைக்கிறேன். அதை விகடன் இணையதளத்திலேயே பதிவு செய்து இருக்கிறேன். அதை பலபேர் ஆதரித்தும் இருக்கிறார்கள். அதுவுமில்லாமல் இப்படி பேசாமல் போய் போய் தான் இன்று ராஜாவை சாருநிவேதிதா போன்றவர்கள் விமர்சித்து கொண்டுள்ளார்கள். அதுவும் கண்மூடித்தனமாக. எல்லா படைப்பும் விமர்சனத்துக்குரியவை தான் அதில் சந்தேகம் இல்லை. ஆனால் கண்மூடித்தனமாக செய்யப்படுபவை தான் கண்டிக்கத்தக்கவை. சாருநிவேதிதா போன்றவர்கள் ஆரம்ப காலம் தொட்டே இளையராஜா நல்ல இசையை வழங்கவில்லை என்று சொல்வதுடன் இளையராஜாவின் ஒரு பாடல் கூட நல்ல பாடல் இல்லை என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம்..? விமர்சனத்திலும் ஒரு தர்மம் வேண்டாமா ..? ஒரு சின்ன உதாரணம் சாருநிவேதிதா சொல்கிறார் "நான் கடவுள் படம் ஒரு உலக தரமான படம் என்பதில் சந்தேகமே இல்லை ஆனால் அதை அப்படி பார்க்க முடியாமல் செய்வது இளையராஜாவின் இசையே..." -இதற்கு மேல் அவரிடம் இருந்து எதிர்பார்க்கமுடியும். ஒரு கூடுதல் செய்தி "உலகிலேயே மிகவும் கடினமான காரியம் என்பது என்னைப் பொறுத்தவரை ஜேசுதாசின் பாடல்களை கேட்பது தான் என்ன ஒரு கொடுமையான (!!!!???) குரல் ..." இது சாருநேவேதிதா சொன்ன மற்றொரு விமர்சனம். இப்படியெல்லாம் பேசுபவர்கள் இருக்கிற பட்சத்தில், இப்படியெல்லாம் ராஜாவின் இசையை இருட்டடிப்பு செய்பவர்கள் இருக்கிற பட்சத்தில் என்னைப் போன்றவர்கள் தொடர்ந்து குரல் எழுப்பி கொண்டிருப்போம். இதில் தவறு இருப்பதாக தெரியவில்லை. ஒரு கலைஞனுக்கு அவன் ஊதியத்தை விட உயர்வானது ரசிகர்களின் ஆதரவு தான். இங்கு எந்த சாதி என்று பார்த்துதான் கலைஞர்களும் மதிக்கப்படுவது வேதனையிலும் வேதனை. பாரதியார் பாடல்கள் சாஸ்தீரிய சங்கீதத்தில் இடம் பெற்றால் அது தர்மம் ஆனால் அதுவே கண்ணதாசன் பாடல்கள் வந்தால் வரம்பு மீறல். பாரதியார், கப்பலோட்டிய தமிழர் சிதம்பரனார், வீர பாண்டிய கட்டபொம்மன் , காமராஜர் போன்றோர் சாதியை ஒழிக்க பாடு பட்டார்கள் ஆனால் அவர்களுக்கு சாதி முத்திரை குத்திக்காடிய மக்களை என்னவென்று சொல்வது..? இங்கே நான் இளையராஜாவின் புகழ் பாடியதாக சுட்டிக்காட்டிய நண்பருக்கு ஒன்று சொல்லி கொள்கிறேன், நல்ல கலைஞனை மதிக்க வேண்டியது ஒரு சமுதாயத்தின் கடமை, இளையராஜாவை யாரும் மதிக்கலைன்னு சொல்ல வரலை ஆனால் அந்த கலைஞனின் திறமைக்கேற்ற சன்மானம் (அங்கீகாரம்) வழங்கப் படவில்லை என்பதே என் போன்றோரின் வாதம். அந்த அங்கீகாரம் கிடைக்கும் வரை நான் சொல்லிக் கொண்டேதான் இருப்பேன்.
அந்த நண்பருக்கு இன்னொரு செய்தி இசை அமைப்பாளர் ரஹ்மானுக்கு பாராட்டு விழா நடந்த பொழுது ஏற்புரை வழங்கிய அவர் சொன்னார் ... "...ஆஸ்கார் அவார்டு வாங்குவதற்கு சில சேனல்கள் இருக்கின்றன அதன் மூலமாக நாம் அப்ரோச் செய்ய வேண்டும். அப்படி செய்யாவிட்டால் அவர்களுக்கு நம்மை பற்றி தெரியாது..." அது போலத்தான் இதுவும் ராஜாவின் இசை நல்ல இசை என்று மனசுக்குள் வைத்துக்கொண்டிருந்தால் மட்டும் போதாது அது எப்பேர்பட்ட நல்லிசை என்பதை புரிய வைக்க வேண்டும். அதில் ஒரு சிறு முயற்சி தான் இது.

நன்றி சரவணன் - apsaravanan.blogspot.com

Monday, March 22, 2010

இளையராஜா பற்றி வைரமுத்துவின் கவிதையும் சில சந்தேகங்கள்


இளையராஜா பற்றி வைரமுத்து

இசை ஞானியே!

என்னோடு சேர்ந்துதான் வெற்றிபெற முடியும் என்ற நிலையில் நீயும் இல்லை.
உன்னோடு சேர்ந்துதான் வெற்றிபெற முடியும் என்ற நிலையில் நானும் இல்லை.

என் இலக்கிய வாழ்க்கையின் இரண்டாம் பாகத்தைத் தொடங்கி வைத்தவனே! தூக்கி நிறுத்தியவனே!

உன்னை நினைக்கும் போதெல்லாம் என் மனசின் ஈரமான பக்கங்களே படபடக்கின்றன.

கொட்டையை எறிந்துவிட்டு, பேரீச்சம்பழத்தை மட்டுமே சுவைக்கும் குழந்தையைப்போல என் இதயத்தில் உன்னைப் பற்றிய இனிப்பான நினைவுகளுக்கு மட்டுமே இடம் தந்திருக்கிறேன்.

மனைவியின் பிரிவுக்குப் பிறகு அவள் புடவையைத் தலைக்கு வைத்துப் படுத்திருக்கும் காதலுள்ள கணவனைப் போல அவ்வப்போது உன் நினைவுகளோடு நான் நித்திரை கொள்கிறேன்.

---

திரை உலகில் நான் அதிக நேரம் செலவிட்டது உன்னிடம்தான்.

மனசில் மிச்சமில்லாமல் பேசிச் சிரித்தது உன்னோடுதான்.

பெண்களைத் தவிர என் கனவில் வரும் ஒரே ஆண் நீதான்.

நமக்குள் விளைந்த பேதம் ஏதோ நகம் கிழித்த கோடுதான்.

ஆனால் நான் கண்ணினும் மெல்லியவன்; நகத்தின் கிழிப்பை என் விழிப்பை தாங்காது.

பரணில் கிடக்கும் ஆர்மோனியம் எடுத்து, தூசு தட்டி, வாசிப்பது போல் உன் தூசுகளைத் துடைத்துவிட்டு உன்னை நான் ஆர்மோனியமாகவே நேசிக்கிறேன்.

---

நீளமான வருடங்களின் நீண்ட இடைவெளியைப் பிறகு ராஜாஜி ஹாலில் எம்.ஜி.ஆர். இரங்கல் கூட்டத்தில் இருவரும் சந்தித்துக் கொள்கிறோம்.

என்னை நீ குறுகுறுவென்று பார்க்கிறாய்.

உன்னை நானும் பார்க்கிறேன்.

தூண்டிலில் சிக்கிய மீனாய்த் தொண்டையில் ஏதோ தவிக்கிறது.

வார்த்தை துடிக்கிறது;

வைராக்கியம் தடுக்கிறது;

வந்துவிட்டேன்.

---

அன்று... இரவெல்லாம் உன் ஞாபகக்கொசுக்கள் என்னைத் தூங்கவிடவில்லை.

உன்னோடு சேர்ந்த பின்தான் எத்தனை எத்தனை மாற்றங்கள் என்னில்.

ஒரே வருஷத்தில் சூரியனை என் பக்கம் திருப்பிச் சுள்ளென்று அடிக்க வைத்தாய்.

இந்த விதைக்குள் இருந்த விருட்சத்தை வெளியே கொண்டு வந்தாய்.

என் பெயரைக் காற்றுக்குச் சொல்லிக் கொடுத்தாய்.

நீதான்... அந்த நீதான் ஒரு நாள் எனக்கு வக்கீல் நோட்டீசும் அனுப்பினாய்.

ஒரு கணம் திகைத்தேன்.

வெள்ளைத் தாமரையாய் இருந்த மனசு கார்பன் தாளாய்க் கறுத்தது.

பிறகு நிதானமாய் சிந்தித்தேன்.

நீ எனக்குச் செய்த நன்மைகள் மட்டுமே என் நினைவுக்கு வந்தன.

சினிமாக் கம்பெனிகளின் முகவரிகளே தெரியாத அந்த வெள்ளை நாட்களில் என்னை வீட்டுக்கு வந்து அழைத்துப் போவாயே! அதை நினைத்தேன்.

நான் கார் வாங்குகிற காலம் வரை உன் காரில் என்னை என் வீட்டில் இறக்கி விட்டுப் போவாயே! அதை நினைத்தேன்.

உன் வீட்டிலிருந்து உனக்காகக் காய்ச்சி அனுப்பப்படும் ஒரு கோப்பைப் பாலில் எனக்குப் பாதி கொடுக்காமல் எப்போதும் நீ அருந்தியதில்லையே! அதை நினைத்தேன்.

‘ஆயிரம் தாமரை மொட்டுக்களே’ பாடல் பதிவாகி முடிந்ததும் என்னைப் பரவசத்தோடு தழுவிக்கொண்டு என் கன்னங்களை வருடிக்கொண்டு, அப்படியே புகைப்படக்காரரைப் படமெடுக்கச் சொன்னாயே! அதை நினைத்தேன்.

அந்த நினைவுகளின் இதமான உஷ்ணத்தில் உன் வக்கீல் நோட்டீஸ் எரிந்து போனது.

---

எனக்கு எதிராக உன் பெயரில் ஓர் அறிக்கை வருகிறது.

இருக்காதே என்று நினைக்கிறேன்.

பிறகு நண்பர்களுக்குச் சொல்லி நகலைக் கைப்பற்றுகிறேன்.

உன் அறிக்கைதான்.

ஒரு பெண் வெட்கப்படுவது மாதிரி இருக்கும் உனது கையெழுத்தேதான்.

படித்தேன். சிரித்தேன். கிழித்தேன். வேறோரு கோணத்தில் நினைத்தேன்.

உன் எழுத்தில் இந்த உஷ்ணம் இருந்தால் உன் இருதய அடுப்பில் எத்தனை விறகு எரிந்திருக்கும்!

உன் உள்ள உலை எத்தனை முறை கொதித்திருக்கும்!

காரணமே இல்லையே.

இது இருதயத்திற்கு ஆகாதே.

---

நண்பர் கமல்ஹாசன் என்னை அழைத்து அவரது புதிய சரித்திரப் படத்துக்கு வசனம் எழுதச் சொல்கிறார். சந்தோஷத்தோடு ‘சரி’ என்கிறேன்.

ஆனால் லோக்சபையின் தீர்மானத்தை ராஜ்யசபா அடித்துவிடுவது மாதிரி நீ தடுத்து விடுகிறாய்.

இப்படியெல்லாம் அடிக்கடி நான் சிரித்துக்கொள்ள சந்தர்ப்பம் தருகிறாய்.

---

நான் எப்போதும் நேசிக்கும் இனியவனே!

இப்போது சொல்கிறேன்.

உனது பட்டறையில் எனக்கெதிராய் அம்புகள் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன.

ஆனால் எனது யுத்தத் தொழிற்சாலையில் கவசங்கள் மட்டுமே தயாரிக்க வேண்டும் என்று கட்டளையிட்டிருக்கிறேன்.

ஏனென்றால், என்னை எதிரியாக நீ நினைக்கிறாயே தவிர உன்னை எதிரியாக நான் நினைக்கவில்லை.

---

உன்னை நான் பிரிந்தோ என்னை நீ பிரிந்தோ அல்லது பிரிக்கப்பட்டோ நாம் தனித்து நின்ற சமயம் உனக்கு வேண்டாதவர்கள் சிலர் என் வீட்டுக்கு வந்தார்கள்.

உனக்கெதிரான அவர்களின் கூட்டணிக்கு என்னைத் தலைமையேற்க சொன்னார்கள்.

நான் கொதித்தேன்.

"அவன் சிங்கம். நானும் சிங்கம். சிங்கத்துக்கும் சிங்கத்திற்குமே யுத்தம். நரிகளின் கூட்டணியோடு சிங்கங்கள் போர்க்களம் புகுவதில்லை" என்று சீறிச் சினந்து "போய் வாருங்கள்" என்றேன்.

மறுகணம் யோசித்து, வார்த்தைகளில் பாதியை வாபஸ் வாங்கிக்கொண்டு, "போங்கள்" என்றேன்.

நீ வீழ்ந்தாலும் - வீழ்த்தப்பட்டாலும் எனக்கு சம்மதமில்லை.

இவ்வளவு உயரத்தில் ஏறியிருக்கும் ஒரு தமிழன் உருண்டு விடக்கூடாது.

---

நீயும் நானும் சேர வேண்டுமாம்.

சில தூய இதயங்கள் சொல்லுகின்றன.

உனக்கு ஞாபகமிருக்கிறதா?

‘ஈரமான ரோஜாவே’ எழுதி முடித்துவிட்டு ஆழியாறு அணையின் மீது நடந்து கொண்டிருந்தோம். திடீரென்று என்னை நீ துரத்தினாய்; நான் ஓடினேன். நீ துரத்திக்கொண்டேயிருந்தாய்; நான் ஓடிக்கொண்டேயிருந்தேன்.

மழை வந்தது.

நின்று விட்டேன்.

என்னை நீ பிடித்து விட்டாய்.

அப்போது சேர்ந்து விட்டோம்.

ஏனென்றால் இருவரும் ஒரே திசையில் ஓடிக் கொண்டிருந்தோம்.

இப்போது முடியுமா?

இருவரும் வேறு வேறு திசையில் அல்லவா ஓடிக்கொண்டிருக்கிறோம்?

---

வைரமுத்து தனிப்பட்ட வாழ்க்கையிலும் திரையுலக வாழ்க்கையிலும் சந்தித்த மனிதர்களில் தன்னை ஏதெனும் ஒரு விதத்தில் பாதித்தவர்களை பற்றி தனக்கே உரிய நடையில் எழுதியிருக்கும் புத்தகம் ‘இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்’. சிவாஜி, எம்.ஜி.ஆர்., கலைஞர், பாரதிராஜா, கே.பாக்யராஜ், ஏ.வி.எம். சரவணன், சாலமன் பாப்பையா என நமக்கு தெரிந்தவர்கள் பற்றிய...

இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்
வைரமுத்து.
219 பக்கங்கள்.
ரூ. 70.
சூர்யா லிட்ரேச்சர் லிமிடெட்.
திருமகள் நிலையம்.
தெரியாத விஷயங்களை, அவர்களின் உயர்ந்த பண்புகளை சிலாகித்து, சிலாகிக்க வைக்கிறது வைரமுத்து எழுத்துக்கள்

நன்றி: குமரன் குடில்

வைரமுத்துவிடம் சில சந்தேகங்கள் எப்பூடிவலைப்பூவிலிருந்து

கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் இசைஞானிக்கு எழுதிய கவிதை ஒன்று சரவனகுமரனின் 'குமரன் குடில் ' வலைப்பூவில் வெளியாகியது. அந்த கவிதை வைரமுத்துவின் 'கவிதை தொகுப்பில்' இடம் பிடிக்காததால் இதற்கு முன்னர் நான் அந்த கவிதையை பார்க்கவில்லை. ஆனால் அதை பார்த்த கணத்திலிருந்து சில சந்தேகங்களை வைரமுத்து அவர்களிடம் வசன நடையில் கேட்கவேண்டும் போல் தோன்றியது. அந்த சந்தேகங்களை இந்த பதிவில்ன் மூலமாக வைரமுத்து அவர்களிடம் அல்லது அவரின் தீவிர வெறியர்களிடம் .....

வைரமுத்து அய்யா....

உங்கள் தமிழ்மீது வைத்திருக்கும் மரியாதை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு சென்றாலும் உங்கள் மீதுள்ள மரியாதை வரவர குறைவடைந்து கொண்டே செல்கிறது. கவிஞருக்குரிய மிடுக்கு உங்கள் தோற்றத்தில் இருந்தாலும் உங்கள் நடத்தையில் இல்லைபோல் தெரிகிறது. இதற்கு பல உதாரணங்களை சொல்லலாம்,

1 ) உங்களை கலைஞர் அவைப்புலவர் ஸ்தானத்தில் வைத்திருந்தபோது நீங்கள் ஜெயலிதாவை பாராட்டியதற்காக உங்கள் இடத்திற்கு புதிதாக பா. விஜயை நியமிக்க அவருக்கு 'வித்தாக கலைஞர் ' பட்டத்தை கலைஞர் கருணாநிதி வழங்கிய நாளிலிருந்து நீங்கள் விட்ட இடத்தை பிடிக்க கலைஞர் துதிபாடாத இடமில்லை, ஏனென்றால் உங்களுக்கு ஆட்சிபலம்தேவை.

2 ) இளைய கவிஞர்களில் யாராவது ஒருவருடன் நல்லுறவு வைத்துள்ளீர்களா? அல்லது நீங்கள்தான் யாரையாவது புகழ்ந்திருக்கிரிகளா? அதற்கு பதிலாக "இருக்கும் கவிஞர்கள் இம்சைகள் போதும் என்னையும் கவிஞன் ஆக்காதே" என்ற பாடல் வரிகளை எழுதி அல்லவா உள்ரிர்

3 ) கண்ணதாசனின் 'கவியரசர்' பட்டத்திற்குமேல் ஒரு பட்டம் வேண்டும் என்பதற்காக 'கவிப்பேரரசு' என அடைமொழி வைத்து உங்கள் தரத்தை குறைத்து கொண்டவர்தானே நீங்கள்?

4 ) சரணின் அனைத்து படங்களுக்கும் பாட்டு எழுதுவது நீங்கள்தான் என்பதால் சரண் கேட்டால் எதையும் எழுதிக்கொடுத்து விடுவீர்களா? உங்களுக்கு பணம் தந்தாள் யாரை பற்றியும் கேவலமாக விமர்சிப்பீர்களா? இல்லாவிட்டால் விஜயை பார்த்து அஜித் "எனக்கொரு நண்பன் என்று இருப்பதற்கு தனிப்பட்ட தகுதிகள் எதுவுமில்லை" என பாடும் கீழ்த்தரமான வரிகளை எழுதியிருப்பீர்களா? இன்று அதே சரணின் 'அசல்' திரைப்படத்தில் 'எம் தந்தை' பாடலில் சிவாஜியை புகழ்ந்து பாட்டெழுதுவதாக கூறி சரணுக்கு பிடிக்காத உங்களின் நண்பன் கமலை காயப்படுத்தும் வகையில் "உன்போல சிலர் இன்று உருவாகலாம் , உன்னுடல் கொண்ட அசைவுக்கு நிகராகுமா? " என சிவாஜியை புகழ்வதுபோல கமலை தாக்கியது எதற்காக பணத்துக்கும் சரணின் அடுத்த படவாய்ப்புக்கும்தானே?

இப்படி உங்களிடம் கேட்க பல சந்தேகங்கள் இருந்தாலும் 'இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்' புத்தகத்தில் நீங்கள் ராஜாவிற்கு எழுதிய கவிதையில் இருந்து சில சந்தேகங்களை உங்களிடம் கேட்க விரும்புகிறேன்.


//இசை ஞானியே! , என்னோடு சேர்ந்துதான் வெற்றிபெற முடியும் என்ற நிலையில் நீயும் இல்லை,உன்னோடு சேர்ந்துதான் வெற்றிபெற முடியும் என்ற நிலையில் நானும் இல்லை.//


உண்மைதான் யாரையும் நம்பி யாரும் இல்லைதான், ஆனால் இளைய ராஜா இல்லாவிட்டால் நீங்கள் எப்படி இருந்திருப்பீர்கள் என்று நினைக்கும்போது எனக்கு எல்லாமே சூனியமாகத்தான் தெரிகிறது. உங்களுக்கு 1981 இல் இளையராஜா நிழல்கள் திரைப்படத்தில் சந்தர்ப்பம் வழங்கவில்லை என்றால் எப்படி உங்களை வெளிக்கொண்டு வந்திருப்பீர்கள்? சந்திரபோஸ், சங்கர் கணேஷ், 1980 களின் பின்னர் எம்.எஸ்.வி என எப்போதாவது ஒரு படத்தின் பாடல்கள் பிரபல்யமாகும் இசையமைப்பாளர்களின் மூலம் உங்களை நிரூபித்திருக்க முடியுமா?

ரகுமானின் வருகையின் பின்னர் வைரமுத்து அவர்கள் தன்னை நிரூபித்திருப்பார் என்று கூறும் உங்கள் ஆதரவாளர்களுக்கு ரகுமான் ஆரம்பகாலங்களில் பிரபல்யமான பாடலாசிரியர்களைதான் பயன்படுத்தினார் என்பது தெரியாதென்று நினைக்கிறேன், அதனால்தான் தனது ஆரம்பகால படங்களுக்கு உங்களையும் 'வாலி அய்யா' அவர்களையும் பயன் படுத்தினார். இளையராஜாவால் நீங்கள் பிரபல்யம் அடையவில்லை என்றால் அன்று ரகுமான் உங்களுக்கு சந்தர்ப்பம் வழங்கியிருப்பாரா? இன்று நீங்கள் இருக்கும் நிலைக்கு உயர்ந்திருக்க முடியுமா? நீங்கள் கேட்கலாம் ராஜாவிற்கு எனது பாடல்கள் பலமில்லையா என்று , உண்மைதான் உங்கள் இருவரது கூட்டணியில் உருவான பாடல்கள் போல் ஒருபோதும் பாடல்கள் வராதென்பது எனது கருத்து. ஆனால் நீங்கள் இல்லாவிடாலும் பாட்டெழுத வாலி, புலமைபித்தன், முத்துலிங்கம் என நிறைய கவிஞர்கள் இருந்தார்கள் ஆனால் உங்களுக்கு ராஜாவை விட்டால்?
//சினிமாக் கம்பெனிகளின் முகவரிகளே தெரியாத அந்த வெள்ளை நாட்களில் என்னை வீட்டுக்கு வந்து அழைத்துப் போவாயே! அதை நினைத்தேன்,நான் கார் வாங்குகிற காலம் வரை உன் காரில் என்னை என் வீட்டில் இறக்கி விட்டுப் போவாயே! அதை நினைத்தேன்,உன் வீட்டிலிருந்து உனக்காகக் காய்ச்சி அனுப்பப்படும் ஒரு கோப்பைப் பாலில் எனக்குப் பாதி கொடுக்காமல் எப்போதும் நீ அருந்தியதில்லையே! அதை நினைத்தேன்,ஆயிரம் தாமரை மொட்டுக்களே’ பாடல் பதிவாகி முடிந்ததும் என்னைப் பரவசத்தோடு தழுவிக்கொண்டு என் கன்னங்களை வருடிக்கொண்டு, அப்படியே புகைப்படக்காரரைப் படமெடுக்கச் சொன்னாயே! அதை நினைத்தேன்.//

//திரை உலகில் நான் அதிக நேரம் செலவிட்டது உன்னிடம்தான்,மனசில் மிச்சமில்லாமல் பேசிச் சிரித்தது உன்னோடுதான்//

//உன்னோடு சேர்ந்த பின்தான் எத்தனை எத்தனை மாற்றங்கள் என்னில்,ஒரே வருஷத்தில் சூரியனை என் பக்கம் திருப்பிச் சுள்ளென்று அடிக்க வைத்தாய்,இந்த விதைக்குள் இருந்த விருட்சத்தை வெளியே கொண்டு வந்தாய்,என் பெயரைக் காற்றுக்குச் சொல்லிக் கொடுத்தாய்.//

//நீதான்... அந்த நீதான் ஒரு நாள் எனக்கு வக்கீல் நோட்டீசும் அனுப்பினாய்.//

எதற்காக அந்த வக்கீல் நோட்டீசை அனுப்பினாரென்று நீங்கள் கடைசிவரை கூறவே இல்லை, அதுதவிர உங்களுக்கு இத்தனை நன்மை செய்த இளையராஜா ஒரு காரணமும் இல்லாமலா உங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியிருப்பார்? இளையராஜாவின் குணம் உங்களுக்கு அதுவரை தெரியாதா? அவர் நோட்டிஸ் அனுப்பினாலும் அந்த பிரர்ச்சினையை பேசித்தீர்க்கவேண்டியது நீங்களா அல்லது இளையராஜாவா? பின்னர் அந்த வழக்கு என்னவாயிற்று என்பது யாருக்கும் தெரியாதுள்ளதே, இறுதியாக அந்த வக்கீல் நோட்டிஸ் என்னவானது என்பதை தயவு செய்து கூறமுடியுமா?


//உன் எழுத்தில் இந்த உஷ்ணம் இருந்தால் உன் இருதய அடுப்பில் எத்தனை விறகு எரிந்திருக்கும்,உன் உள்ள உலை எத்தனை முறை கொதித்திருக்கும்,காரணமே இல்லையே.//

காரணமில்லாமல் கோவப்பட இளையராஜா என்ன மனநலம் பாதிக்கபட்டவாரா? அல்லது சிறு குழந்தையா ? அப்படிஎன்றால்கூட நீங்கள் அவரைவிட்டு விலகியிருக்ககூடாதே? இளையராஜா மீது முழுவதும் குற்றம் சுமத்தும் நீங்கள் இளையராஜாவுக்கு ஒருதீங்கும் செய்யவில்லையா? நீங்கள் அம்புட்டு நல்லவரா?

//நண்பர் கமல்ஹாசன் என்னை அழைத்து அவரது புதிய சரித்திரப் படத்துக்கு வசனம் எழுதச் சொல்கிறார். சந்தோஷத்தோடு ‘சரி’ என்கிறேன்,ஆனால் லோக்சபையின் தீர்மானத்தை ராஜ்யசபா அடித்துவிடுவது மாதிரி நீ தடுத்து விடுகிறாய்.//

இங்குதான் எனக்கு சில சந்தேகங்கள், இளையராஜா அப்படி சொன்னதாகவே இருக்கட்டும் அது உங்களுக்கு எப்படி தெரியும்? கமல் வந்து சொன்னாரா? அப்படியென்றால்றால் கமல் 'புறம்' பேசுபவரா ? ராஜா பேச்சை கேட்டு உங்களுக்கு வரவிருந்த வாய்ப்பை நிறுத்துகிறார் என்றால் கமல் சொந்தமாக சிந்திக்க மாட்டாதவரா? அல்லது ராஜாவை நம்பித்தான் கமல் இருக்கிறாரா? கமல் ராஜாவின் நண்பன் என்றால் நண்பன் சொன்னதை வேறொருவரிடம் பொய் கொள்மூட்டுபவரா? அல்லது கமல் உங்கள் நண்பன் என்றால் உங்களுக்கு பிடிக்காதவர் உங்களை பற்றி சொன்னதை உங்களிடம் சொல்லுமளவிற்கு நாகரிகம் தெரியாதவரா ? பின்னர் நீங்கள் எத்தனை படங்களுக்கு திரைக்கதை எழுதினீர்கள்? தொடர்ந்தும் உங்களுக்கு கிடைத்த சந்தர்ப்பங்களை இளையராஜா தடுத்துவிட்டாரா? அல்லது உங்களை நல்லவராக காட்டிக்கொள்ள ராஜாவை வில்லனாக்குகிரீர்களா?
// நான் எப்போதும் நேசிக்கும் இனியவனே!,இப்போது சொல்கிறேன்,உனது பட்டறையில் எனக்கெதிராய் அம்புகள் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன,ஆனால் எனது யுத்தத் தொழிற்சாலையில் கவசங்கள் மட்டுமே தயாரிக்க வேண்டும் என்று கட்டளையிட்டிருக்கிறேன்,ஏனென்றால், என்னை எதிரியாக நீ நினைக்கிறாயே தவிர உன்னை எதிரியாக நான் நினைக்கவில்லை.//

இளையராஜாவின் பாசறையில் அம்புகள் மட்டுமே தயாரிகட்டும் ,ஆனால் உங்களின் இந்த கவிதையை பார்த்தால் நீங்கள் பேனாவால் 'விஷ அம்பை' ராஜாமீது எய்துள்ளது போலல்லவா தெரிகிறது. விஷ அம்பு எப்படி கேடயமாகும்?


//உன்னை நான் பிரிந்தோ என்னை நீ பிரிந்தோ அல்லது பிரிக்கப்பட்டோ நாம் தனித்து நின்ற சமயம் உனக்கு வேண்டாதவர்கள் சிலர் என் வீட்டுக்கு வந்தார்கள்,உனக்கெதிரான அவர்களின் கூட்டணிக்கு என்னைத் தலைமையேற்க சொன்னார்கள்,நான் கொதித்தேன், "அவன் சிங்கம். நானும் சிங்கம். சிங்கத்துக்கும் சிங்கத்திற்குமே யுத்தம். நரிகளின் கூட்டணியோடு சிங்கங்கள் போர்க்களம் புகுவதில்லை" என்று சீறிச் சினந்து "போய் வாருங்கள்" என்றேன்.//

வைரமுத்து அவர்களே உங்கள் வாயால் ராஜாவை சிங்கம் என்றதற்கு நன்றி , ஆனால் குள்ளநரியான உங்களையும் சிங்கம் என்று கூறுவது சிங்க இனத்துக்கே அவமானமில்லையா? சிங்கம் ஒருபோதும் முதுகில் குத்துவதில்லையாமே? இது உண்மையா?


//நீ வீழ்ந்தாலும் - வீழ்த்தப்பட்டாலும் எனக்கு சம்மதமில்லை,இவ்வளவு உயரத்தில் ஏறியிருக்கும் ஒரு தமிழன் உருண்டு விடக்கூடாது.//

நீங்கள் நினைத்தாலும் அவரை வீழ்த்த முடியாது, தமிழ் இருக்கும் வரை அவர் இருப்பார். உங்கள் இயற்தமிழிலும் பார்க்க அவரது இசைத்தமிழுக்கு ஆயுள் அதிகம்.
//நீயும் நானும் சேர வேண்டுமாம்,சில தூய இதயங்கள் சொல்லுகின்றன,உனக்கு ஞாபகமிருக்கிறதா?,‘ஈரமான ரோஜாவே’ எழுதி முடித்துவிட்டு ஆழியாறு அணையின் மீது நடந்து கொண்டிருந்தோம், திடீரென்று என்னை நீ துரத்தினாய்; நான் ஓடினேன்.,நீ துரத்திக்கொண்டேயிருந்தாய்; நான் ஓடிக்கொண்டேயிருந்தேன்,மழை வந்தது,நின்று விட்டேன்,என்னை நீ பிடித்து விட்டாய்,அப்போது சேர்ந்து விட்டோம்,ஏனென்றால் இருவரும் ஒரே திசையில் ஓடிக் கொண்டிருந்தோம்,இப்போது முடியுமா? இருவரும் வேறு வேறு திசையில் அல்லவா ஓடிக்கொண்டிருக்கிறோம்?//

நீங்கள் வேறுவேறு திசையில் ஓடினாலும் வட்டப்பாதையில் ஓடுவதாக அல்லவா நாம் நினைத்தோம் , ஆனால் நீங்கள் நேர்கோட்டில் ஓடுவது எனக்கு இத்தனை ஆண்டுகளுக்கு பின்னர் இந்த கவிதையை படித்த பின்னர்தான் தெரிந்தது , உங்களுக்கு தேவையென்றால் வளைந்து நெளிந்த பாதையிலும் போகும் நீங்கள் இன்று உங்களுக்கு தேவைப்படாத ராஜாவிற்கு எதிர்த்திசையில் நேர்கோட்டில் ஓடுவதில் ஆச்சரியமில்லை. ஓடுங்கள், நன்றாக ஓடுங்கள், பணத்துக்காகவும் புகழுக்காகவும் ஜால்றாக்காகவும் கூட இருப்பவர்களையும் ,நண்பர்களையும் தூக்கிஎறிந்துவிட்டு இப்படியே ஓடினால் நீங்கள் மட்டும்தான் கடைசியில் மிஞ்சுவீர்கள்.


ஔவையார், திருவள்ளுவர், கம்பர், இளங்கோ, பாரதியார்,பாரதிதாசன், அண்ணா, கலைஞர், பட்டுக்கோட்டை கண்ணதாசன் என ஒரு பெரும்பட்டியலே உங்கள் தமிழுக்கு முன்னால் இருக்கிறது, ஆனால் இளையராஜாவின் தமிழிசைக்கு முன்னாலும் சரி பின்னாலும் சரி கண்ணுக்கெட்டியதூரம்வரை யாருமில்லை என்பதை மறவாதீர்கள்.

வைரமுத்துவை விமர்சிக்க உனக்கென்ன தகுதி இருக்கிறது என்பவர்களுக்கான விடை "இளையராஜாவின் ரசிகன் என்கிற தகுதியும், வைரமுத்துவின் தமிழுக்கு [மட்டும் ] ரசிகன் என்கிற தகுதியும் போதுமானது என்பது எனது தாழ்மையான கருத்து

நன்றி: எப்பூடி இனையதளம்

Sunday, March 21, 2010

நாயகன் படத்துல இளையராஜா தெரியலையாம் விகடனுக்கு


ஒரு விருதும் சில வினாக்களும்

என்ன ஒரு ராஜா ரசிகர் நீங்கள் இவ்வளவு நாட்களாக எதிர்பார்த்த விருது கிடைச்சிருக்கு ஆனா ஒரு பதிவும் போடலையே..? அப்படின்னு ஒருத்தர் கேட்டார். ஒரு வேளை இந்த விருது பத்து வருடங்களுக்கு முன்னால் ராஜாவுக்கு கொடுக்கப்பட்டிருந்தால் வரிந்து வரிந்து எழுத தோன்றியிருக்கும். ஆனால் இப்ப அப்படி தோணலை அதாவது விருது வாங்கினதை பத்தி. இப்பவும் நான் நம்புறேன் ராஜா விருதுகளுக்கு அப்பாற்பட்ட ஒரு கலைஞன். ஆனால் அது சம்மந்தமாக ராஜாவை நோகடிக்கும் நோக்கோடு எழுதப்பட்ட ஒரு விமர்சனத்திற்கு பதில் சொல்லலாம்ன்னு நினைக்கிறேன். ராஜா விருது வாங்கியவுடன் அவரை சந்தித்த ஊடக நண்பர்கள் கேட்ட கேள்வியில் எழுந்ததுதான் இந்த விமர்சனம். ஒரு நிருபர் கேட்டார் "உங்களுடன் ஏ.ஆர்.ரஹ்மானும் விருது வாங்கி இருக்கிறார் அது பத்தி என்ன சொல்றீங்க..?" அப்படின்னு கேட்டார் அதற்கு ராஜா "அவர் வாங்கியது அவருக்கு." அப்படின்னு சொன்னார். உடனே மிகவும் பணிவான எண்ணம் (!?) கொண்டவர்களால் அதை தாங்கி கொள்ள முடியவில்லை. என்ன மனுஷன் இவர் சக இசை அமைப்பாளர் வாங்கும் போது ஒரு மூத்தவர் என்ற முறையில் பாராட்ட வேண்டாமா..? என்ற கூக்குரல்கள். பணிவான இதயம் கொண்டவர்களே உங்களுக்கு சில கேள்விகள்...
1. இந்த கேள்விக்கு பதிலை ராஜா "ரஹ்மான் இரண்டு ஆஸ்கார் அவார்டை வாங்கிவிட்டார் என்னை விட பெரியவர். என்னை விட சிறந்த இசை அமைப்பாளர். ஏன் இந்தியாவிலேயே அவர்தான் சிறந்த இசை அமைப்பாளர்." அப்படின்னு சொல்லி இருந்தா "பணிவானவர்கள்" பாராட்டி இருக்கலாம். அதை தான் எதிர் பார்க்கிறார்களா..? என்னை பொறுத்தவரை அப்படி தான் ராஜா "பணிவு" ன்னு நிரூபிக்கனும்ன்னு இருந்தா அது தேவையே இல்லை. அதுவும் இவ்வளவு தூரம் தன்னை இசை துறையில் நிரூபித்த பிறகும். பணிவானர்களே நீங்கள் ராஜாவை அவரது இசைக்காக ரசியுங்கள் அவருக்கு பணிவா இருக்க தெரியலை அப்படிங்கிறதுக்காக நோகடிக்காதீங்க.

2. இந்த பணிவு எல்லாம் பார்க்கும் பார்வையில் தான் இருக்கு. அதுவுமில்லாம ராஜாவுக்கானா அங்கீகாரம் அவரது இசைக்கானதே அன்றி அவரது பணிவுக்காகவோ அல்லது அவர் போட்டிருக்கிற வெள்ளை நிற காலணிக்காகவோ அல்ல. ஒவ்வொரு முறையும் உங்களுக்கானா அங்கீகாரம் மறுக்கப்படும் போது நீங்க ஒரு முறையாவது எனக்கு ஏன் இப்படி நடக்குதுன்னு நினச்சிருக்கீங்களா இல்லையா..? அதையேதானே ராஜா பிரதிபலித்திருக்கிறார். ஒரு சக மனிதனா யோசிச்சு பாருங்க அவரோட வலி என்னன்னு தெரியும்.

3. பணிவானர்களே உங்களால் பணிவுதிலகம் என்று போற்ற படுகிற ஏ.ஆர்.ரஹ்மான் ரோஜா படம் வெற்றியடைந்த பிறகு குமுதம் இதழில் வந்த பேட்டியில் "என்னை கவர்ந்த இசை அமைப்பாளர்கள் எம்.எஸ்.வி, கே.வி.மகாதேவன், டி.ராஜேந்தர்..." அப்படின்னு எல்லாம் சொல்லிவிட்டு அன்று தொட முடியாத உயரத்தில் இருந்தாரே ராஜா அவரை மட்டும் சொல்லாமல் விட்டாரே (அதுவும் அவரிடம் பணிபுரிந்த பிறகும்) அதுதான் பணிவின் எடுத்துக்காட்டா..? நான் இதை சரி என்றோ தவறு என்றோ சொல்லவில்லை. ஆனால் இது சரி ராஜா சொன்னதுதான் தவறு அப்படின்னு சொல்றவங்களைதான் நான் கேட்குறேன்.

இது மாதிரி இன்னும் நிறைய கேள்விகள் இருக்கு. ஆனா என்னை போன்றவர்களின் ஆதங்கம் எல்லாம் ஏன் இளையராஜா மட்டும் அதற்கு இலக்காகிறார் என்பது தான் புரியவில்லை. இன்னைக்குதான் படித்தேன் இந்த வார விகடனில் பொக்கிஷம் பகுதியில் வந்த "நாயகன்" விமர்சனத்தை அதன் கடைசி வரிகள் உங்களுக்காக "இளையராஜாவின் 400-வது படமாம்! படத்தின் செட், டேக்கிங், கலர், ரிச்னெஸ் - இவற்றுக்கு நடுவே இளையராஜாவே இருக்கும் இடம் தெரியாமல் அமுங்கிப் போய்விடுகிறார்... பாவம்!" இதை என்னன்னு சொல்றது..? நாயகன் படத்துல இளையராஜா தெரியலையாம் விகடனுக்கு, (சொல்ல கஷ்டமாத்தான் இருக்கு இருந்தாலும் ..) எப்படி தெரியும் ...மணிரத்தினம், கமல்,ஸ்ரீராம்.. இவாளெல்லாம் இணைந்து பணிபுரிந்திருக்கும் பொழுது..?!

நன்றி apsaravanan.blogspot.com

விகடன் விமர்சனத்தின் லட்சணம் இது தான்-2


இளையராஜா புறக்கணிப்பு முடிவதில்லை

புதுசா அறிமுகமாகும் ஒரு டைரக்டரோட (ஆர்.சுந்தர்ராஜன்) படமாச்சே, எப்படி இருக்குமோ ஏதா இருக்குமோனு பயந்துகிட்டே தியேட்டருக்குள் போனேன். இரண் டாவது ரீல்லேயே எனக்கு சரியான நோஸ் கட்!

துணிக்குப் போடற கஞ்சியைக் குடிச்சே வயித்தை நிரப்பிக்கிற ஏழ்மை; இருந்தாலும் பாடகனா ஆகணுங்கற லட்சியம் - இது கதாநாயகன் ரவி (மோகன்).
ரவியின் திறமையை வெளி உலகுக்குக் கொண்டுவர எல்லா முயற்சிகளையும் எடுத்து, அவ னைக் காதலிக்கவும் செய்யும் கதாநாயகி ராதா (பூர்ணிமா ஜெயராம்).
- இவங்க ரெண்டு பேரையும் சுற்றி, டைரக்டர் திரைக்கதையைப் பின்னியிருக்கும் அழகு அப்படியே அசத்திடுது.
'முதன்முதல் ராக தீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோ' பாடலும், டி.வி-க்காக ரவி பாடும் இன்னொரு பாடலும் படமாக்கப்பட்டுள்ள விதம் டைரக்டரோட எதிர்காலத்துக்கு உத்தரவாதம் அளிக்குது! (இளையராஜாவும் எஸ்.பி.பி- யும் இவருக்கு அசைக்க முடி யாத இரு தூண்கள்!)
தனக்கு பிளட் கான்சர்ங்கறதை ராதாகிட்டே சொல்ல முடியாம ரவி திண்டாடறது, தன் மீதுள்ள காதலை அவ மறக்கணும்கறதுக்காக அவளை டீஸ் பண்றது, மூன்றாவது ஒரு மதுரை டாக்டர் (ராஜேஷ்) அறி முகமாறது - பின்பகுதி விவ காரங்கள்லே துளிக்கூட அமெச்சூர்த்தனமே தெரியலே!
படத்துலே என்னதான் குறை?
ஹீரோவோட பிளட் கான் சர், 'வாழ்வே மாய'த்தின் பாதிப்பு! டாக்டர் குமார் விஷயத்தில் 'அந்த 7 நாட்கள்' பாதிப்பு!
இருந்தாலும், ஒரு ஊக்க போனஸ் மாதிரி 48 மார்க் தரலாம்!

-பயணங்கள் முடிவதில்லை படத்தின் "ஆனந்த விகடன்" விமர்சனம் தான் நீங்கள் மேலே பார்த்தது. ஹும்.. என்னத்த சொல்றது....?
முடிஞ்சா அப்படியே "கலைஞனை மதிக்காத சமூகமே" படியுங்கள்,
முன்னாடியே படிச்சிருந்தா அதை ஞாபக படுத்திக்கொள்ளுங்கள். விகடனின் இளையராஜா புறக்கணிப்பு முடிவதில்லை போல.

நன்றி apsaravanan.blogspot

விகடன் விமர்சனத்தின் லட்சணம் இது தான்

23 ஆகஸ்ட் 2008ல் ஒன்லிரஜினி.காம் வெளியிட்டகட்டுரை


இந்த வார விகடனில் வந்த கூடுதல் இணைப்பில் கண்ட விஷயம் இது. விகடன் வாங்குவதை நான் நிறுத்திவிட்டபடியால் நண்பரிடம் இரவல் வாங்கி இப்பதிவிற்க்காக பயன்படுத்தினேன்.
இதை படிப்பவர்கள் நிச்சயம் இத்தனை நாள் இவனுங்க விமர்சனத்தையா விழுந்து விழுந்து படிச்சிட்டு இருந்தோம்முன்னு உங்களையே நொந்துக்கபோறீங்க…

கீழ்கண்ட அன்னக்கிளி விமர்சனம் 30.05.1976 ஆனந்த விகடனில் வெளியானது.
விமர்சனத்தை முழுதுமாக படியுங்கள். அதிர்ச்சியடைவீர்கள்.

தமிழ் திரை வரலாற்றில் ஒரு புது அத்தியாயத்தையே துவக்கிய இசைஞானி இளையராஜா அறிமுகமான படம் இது. ஹிந்தி திரை இசை ஆதிக்கத்திலிருந்த தமிழ் ரசிகர்களுக்கு கேட்க கேட்க தெவிட்டாத பாடல்களை தமிழில் தந்து தமிழ் மக்களின் ரசனையையே மாற்றிய அவதார புருஷர் இளையராஜா. அவர் அறிமுகமானது இந்த படத்தில் தான். அவரது மச்சானை பார்த்தீங்கள பாடல் இன்றளவும் நமது செவிக்குள் ஒலித்துகொண்டிருக்கிறது. ஆனால் அவரை பற்றியோ அல்லது அன்னக்கிளி வெற்றி பெற மாபெரும் காரணமாக இருந்த அவரது இசை பற்றியோ ஒரு வார்த்தை கூட இந்த விமர்சனத்தில் இல்லை. இதுதான் இவர்கள் விமர்சனம் எழுதும் லட்சணம்.
அட வேறு ஏதாவது ஒரு விஷயத்தை இப்படி புறக்கணித்தனர் என்றால் கூட விட்டுவிடலாம். ஆனால் ஒரு படத்திற்கும் அதன் வெற்றிக்கும் இசை என்பது எவ்வளவு முக்கியம்? ஒரு பத்திரிகை அதை புறக்கணிக்கிறது என்றால் அதன் தகுதி என்ன?
இத்தனை காலம் இவர்கள் எழுதியதையா நாம் படிச்சி ஒரு படத்தை பற்றி முடிவு பண்ணினோம்? என்ன கொடுமை இது?
பெயர் போட வேண்டாம். அட அட்லீஸ்ட் “ஒருவர் இசை அறிமுகமாகியிருக்கிறார் இந்த படத்தில். அவர் பாடல்கள் அருமை” என்றாவது எழுதியிருக்கலாம் அல்லவா?

புதியவர்களையும் திறமைசாலிகளையும் ஊக்குவிப்பதாக பீற்றிகொள்ளும் விகடனின் லட்சணம் பன்னெடுங்காலமாக இதுதான். இவர்கள் புறக்கணிப்புகளையும் இருட்டடிப்புகளையும் தாண்டி தான் இளையராஜா வெற்றி கொடி நாட்டினார். பிற்காலத்தில் அவர் பல வெற்றிபடங்களை கொடுத்த பின்பு தான் விகடன் அவரை கண்டுகொண்டது. கிட்ட தட்ட குமுதமும் இதே போல தான். மேற்படி இருபத்திரிக்கைகளும் செய்த செய்யும் அடாவடி கொஞ்சம் நஞ்சமில்லை.
விகடன் மற்றும் இன்ன பிற பத்திரிக்கைகள் ஏதோ இளையராஜாவை மட்டும் இப்படி புறக்கணித்ததாக நினைக்கவேண்டாம். ரஜினியை கூட இப்படித்தான் நடத்தினார்கள். இவர்களின் அத்தனை கொடுமை மற்றும் அவதூறுகளையும் மீறித்தான் சூப்பர் ஸ்டார் அந்த நாற்காலியில் உட்கார்ந்தார். இன்றும் உட்கார்ந்துகொண்டிருக்கிறார். “இப்படியே ரஜினி நடித்து கொண்டிருந்தால் சூப்பர் தனியாக ஸ்டார் தனியாக போய்விடும்!!” என்றெல்லாம் பல ஆண்டுகளுக்கு முன்பே விமர்சனம் எழுதியவர்கள் தானே இவர்கள்.
மேலும் விகடன் என்றால் ஏதோ தரமான பத்திரிகை என்பது போல அனைத்து தரப்பு மக்களிடம் ஒரு நம்பிக்கை உள்ளது. அது ஒரு கட்டுக்கதை என்று இப்போது புரிந்ததா?
எதற்கு இந்த பதிவு என்றால் - பத்திரிக்கைகளின் எதிர்ப்பால் புறக்கணிப்பால் ஒருவரது முன்னேற்றத்தை தடுத்து விடமுடியாது என்பதை உணர்த்தவே!!
ரஜினி ரசிகர்கள் மட்டுமல்ல; இளையராஜாவின் ரசிகர்கள் கூட இவர்களை புறக்கணிக்க வேண்டும். அது தான் இவர்களுக்கு சரியான தண்டனை.
இப்போது விகடனுக்கு நாம் வழங்கும் மதிப்பெண் 0/100.
எப்படி இவர்களை வழிக்கு கொண்டு வருவது?
நமது புறக்கணிப்பால் குறைந்தபட்சம் ஒவ்வொரு இதழுக்கும் 1000 பிரதிகளாவது அவர்களது விற்பனை குறைய வேண்டும். 1000 பிரதிகளின் முக்கியத்துவம் என்ன என்பது விகடன் குமுதம் இருவருக்கும் நன்கு தெரியும். அப்போது தானாகவே ரஜினி பற்றிய தவறான செய்திகள் மற்றும் அவதூறுகள் நின்றுவிடும். இதை ஒரு சபதமாக ஏற்போம். அப்படி ஒரு நிலையை நாம் ஏற்படுத்திவிட்டால் அதுவே நமக்கு பெரும் வெற்றி தான். சூப்பர் ஸ்டாருக்கு நாம் செய்யும் பெரும் உதவியும் அதுவே. (ஆன் லைன் வாசகர்களாக இருக்கும் நமது ரசிகர்கள் தங்களது விகடன்.காம் சந்தாவை உடனடியாக ரத்து செய்து அதற்கான காரணத்தையும் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவித்துவிடுங்கள்!!)
நன்றி :onlysuperstar.com

Wednesday, March 3, 2010

அய்யா சாருவின் அருமை பெருமைகள்- சந்திரமோகன்

சந்திரமோகனின் வலைப்பூவில் இருந்து...
'தேவதைகள் கால் வைக்க தயங்கும் பிரதேசத்தில் முட்டாள்கள் குதித்தாடியபடி செல்வார்கள்' என்றார் எம்.ஜி. சுரேஷ், அருமை அண்ணன் சாருவின் ஒரு நேர்காணல் குறித்து எழுதியபோது.
எவ்வளவு அறியாமையில் இருக்கிறார், எம்.ஜி.எஸ்.
அண்ணன் சாரு எப்பேர்பட்ட ஆள். உலகெங்கும்
உள்ள மலையாளிகள் அனைவரும் காலையில் பாத்ரூம் செல்வதற்கு முன் அய்யாவின் முகத்தை ஒரு முறை பார்த்து விட்டு சென்றால் தான், எல்லாம் நல்லபடியாய் போகும் என்று அவர் , படத்தை கையிலேயே வைத்துக்கொண்டு தான் தூங்க செல்கிறார்கள். குறிப்பாக பெண்கள்.
உலகெங்கும் உள்ள(குறிப்பாக இலத்தீன் அமெரிக்க நாடுகளை சேர்ந்த) இயக்குனர்கள் தங்கள்
படங்களின் முதல் காப்பியை அய்யாவுக்கு அர்ப்பணம் செய்த பிறகே உலகெங்கும் திரையிட செல்கிறார்கள். அகிரா குரோசோவா உயிரோடிருந்திருந்தால் அய்யா அவர்களின் நாவல்களில் ஒன்றை படமாக எடுத்து அன்றே தன் வாழ்நாளை முடித்துக்கொண்டிருப்பார்.

இவ்வளவு அருமை வாய்ந்த நம் அய்யாவை அவமதித்துப் பேசிய எம்.ஜி.எஸ்ஸை நினைத்து
சிரிக்காமல் இருக்க முடியவில்லை.
அய்யா சாரு பற்றி ஒரு எழவும் தெரியாத தற்குறி தமிழர்களுக்கு அவரின் மேன்மைகளை எடுத்து சொல்லவேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். (அய்யாவை கேரளாவில் அறியாத தெரு நாய் ஒன்று கூட இல்லையாக்கும்!)
என்னமோ சாரு சாரு என்கிறீர்களே , சாரு யாரு? என்று கேட்கும் தமிழர்களே கேளுங்கள் எங்கள் அய்யாவின் அருமை மற்றும் பெருமைகளை..

அய்யா சரியாக எழுத
துவங்கும் முன்பே சு.ரா. போன்ற சுறாக்களை விமர்சன வேட்டையாடிய பெருமை கொண்டவராக்கும். (விமர்சனத்தின் பெரும்பகுதி பிரமிள் எழுதிய கட்டுரையின் காப்பி என்று சொல்பவர்கள் நரகத்துக்கு போக. )
அய்யா நாளிதழ் ஒன்றின் sponsorship இல் காலம் கழிப்பதாய் சொல்பவர்கள் நாசமாய்ப்போக.
அய்யாவின் விமர்சனம் படித்த தமிழ் இளம் இயக்குனர்கள் அவரை ஒரு படத்திலாவது தாதா வேடத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்று சோறு தண்ணியில்லாமல் வெறும் சிக்கன் பிரியாணி , பீர் பிராந்தி என்று மட்டும் உண்டு தவம் கிடக்கிறார்கள். தாதாவா தாத்தாவா என்பது இயக்குனர்களும் இவரும் மட்டுமே அறிந்த ரகசியமாக்கும்.

அய்யா அவர்கள் ஒரு சிறந்த கண்டுபிடிப்பாளரும் கூட.
அய்யாவின் கண்டுபிடிப்புகளில் சில:
கண்டுபிடிப்பு நம்பர் 1:

பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய தேசங்களில் மருந்துக்குக்கூட கற்பழிப்புகள் நடப்பதில்லை.
(ஆதாரம் அய்யா அவர்கள் கழிப்பறைக்கு செல்லும் முன் பிரான்ஸ், ரஷ்யா, பிரேசில் போன்ற அனைத்துலக நாடுகளின் e-paper களை படிக்கிறார். அவற்றில் ஒரு கற்பழிப்பு செய்தி கூட வராததைக்கண்டு ஆச்சரியமடைந்தவாறே கழிப்பறையை நோக்கி ஒரு பெருமிதத்துடன் நடக்கிறார்!)

கண்டுபிடிப்பு நம்பர் 2 :


ஷாருக்கான் நடித்த ஓம் சாந்தி ஓம் ஒரு பின் நவீனத்துவ படமாக்கும். என்னய்யா அப்படி பார்க்கிறீர்? சொன்னது யாரு ?
அருமை அண்ணன் சாரு!

கண்டுபிடிப்பு நம்பர் 3 :


செல்வராகவனின் 'புதுப்பேட்டை
' தான் தமிழின் முதல் ஸ்பார்ல்டன் சினிமா. செல்வராகவன் தமிழின் அகிரா குரோசோவா.
கண்டுபிடிப்புகளுக்கு கணக்கேயில்லை.

அய்யா ஒரு அதிரடி நாயகனாக்கும். கலைஞர் முதல் கமல்
வரைக்கும் ஒரு பிடி பிடித்து விடுவார் தெரியுமா ? (சொந்த ஊர் குற்றாலமா எனக்கேட்கும் கஸ்மாலம் யார்?)

தமிழின் ஒரே எழுத்தாளரான அய்யா அவர்கள் , சமூக பொறுப்பாளியும் கூட.
விஜய் டிவி யின் 'நீயா நானா ?' நிகழ்ச்சியில் தம்பிடி பைசா கூட பெற்றுக்கொள்ளாமல் , சினிமாவில் தலைகாட்ட டிவி ஒரு முதல் படி என்றெல்லாம் நினைக்காமல் , தமிழ் மக்களின் நலன் ஒன்றே தன்னலம் என்ற அரிய பெருந்தன்மையுடன் , பங்கேற்றவர்.
(பின்பு ஏனய்யா பேசிய பைசா கைக்கு வரவில்லை என்று ஆனந்த விகடனில் அழுது ஒப்பாரி வைத்தீர் என்று கேட்பவன் யாரடா?)
எல்லாவற்றுக்கும் மேலாக எல்லோரையும் சிரிக்க வைக்கும் பணியில் தன்னை வெகு நாட்களாக அர்ப்பணித்துக்கொண்டு தனக்கு தெரிந்த தெரியாத புரிந்த புரியாத மொழி திரைப்படங்களையும் , கோடி வீட்டு குப்பனும் சுப்பனும் அறியும் படி செய்யும் விமரசனப்பணியில் ஈடுபட்டு இன்னல்பட்டு வருகிறார்.

அய்யாவுக்கு பிடித்த இசை அமைப்பாளர் ரஹ்.... ஏய் நிறுத்து நிறுத்து! பிடித்த இசை அமைப்பாளர் எதற்கு? பிடிக்காத ஒரே இசை அமைப்பாளர் இளையராஜா என்ற இசை தெரியாத
ஒருவர்.
இததகைய முடிவுக்கு அய்யா
வர காரணம்?

நீண்ட நாட்களாகவே மாபெரும் இசை மற்றும் கலை விமர்சகரான அய்யா சாரு நிவேதிதா அவர்கள் தனக்கு தெரிந்த அனைத்து வித்தைகளையும் செய்து , தமிழ் சமூகத்தின் தீராத அவலமான கொடூரமான இசை தந்து வரும் ,இசை பற்றி எதுவுமே தெரியாத இளையராஜாவை புறக்கணிக்க சொல்லி தனது மேலான விமர்சனப்பணியை எவ்வித உள் மற்றும் வெளிநோக்கம் இல்லாமல் செய்துவருகிறார். எனினும் அறிவே இல்லாத ஜென்மங்களான தமிழ் மக்கள் அவர் போல் இலத்தீன் மற்றும் கிசிக்ககோ(?) இசை கேட்காமல்
இளையராஜாவின் அபசுரங்களை கேட்டு அல்லல்படுகின்றனர். அவருக்கு பிற்பாடு உலக இசை மற்றும் செவ்வாய் கிரகம் மற்றும் சனி கிரக இசை மற்றும் வாயில் நுழைய முடியாத இசை வகைகளை அறிந்தவரான இசையின் எந்திர வடிவமான ஆஸ்கார் புகழ் ரஹ்மானின்
இசையை கேட்க சொல்லியும் எந்தவித லாப நட்ட நோக்கமின்றி சேவை செய்து
வருகிறார்.
அன்னாரின் அருமையான கருத்துக்களை கேட்க விரும்பாத Existentialism என்றால்
என்ன சமாசாரம் என்று கேட்கும் பாவிகள் நிறைந்த தமிழ் மக்கள் இனிமேலாவது திருந்த வேண்டும் என்று அய்யாவின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

(கிசிக்ககோ இசை பற்றி கேள்விப்படாதவர்கள் காதை அறுத்துக்கொள்ள வேண்டும். இது டிக்சிகோ நாட்டை சேர்ந்த இசை அறிஞரும் அங்கு கஞ்சா மற்றும் அபின் போன்ற அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்பவருமான டின்ச்கி இவருப்புடுங்கி என்ற பெயர் கொண்ட அக்கக்கோ ஆராரிராரோ என்ற மயன் இனத்தை சேர்ந்த ஒருவரின் கண்டுபிடிப்பான இசையாகும். )

அய்யா அவர்கள் இரவு பகல் எந்நேரம் ஆனாலும் நகாரா இசையைக்கேட்டுக்கொண்டே வேலை பார்ப்பவராக்கும்.

அய்யா அவர்களின் லேட்டஸ்ட் கண்டுபிடிப்பு :
இளையராஜா இசை அமைத்த 'பா' ஹிந்தி படத்தின் இசை ஒரு மாபெரும் நகைச்சுவை என்று பம்பாய் சினிமாக்காரர்கள் பல் தெரிய சிரிக்கிறார்களாம். பம்பாயின் பெரிய பெரிய தலைகள் எல்லாம் போன் போட்டு இவரிடம் சிரியோ சிரியென்று விலா நோக சிரிக்கிறார்களாம். எப்பேர்பட்ட கண்டு பிடிப்பு பார்த்தீர்களா? இது போன்ற ஒன்றை உங்களால் கற்பனை செய்தாவது பார்க்கமுடியுமா மக்களே? இங்கு டெல்லியில் எனது பக்கத்துக்கு வீட்டுக்கார பஞ்சாபி 'பா' இசையைக்கேட்டு வயிறு வலிக்க வலிக்க சிரித்து Safdarjung hospital இல் அட்மிட் ஆகிவிட்டார் என்று அய்யாவுக்கு எப்படித்தான் தெரிந்ததோ ? எல்லாம் ஞான திருஷ்டி தான் போங்கள்.

ஆனால் அய்யா தனது தத்துவத்தின் இறுதியில் ஒரு குண்டை தூக்கிப்போட்டிருக்கிறார்.
மேற்கண்ட தகவலை இல்லை என்று நிரூபித்தால் தான் எழுதுவதையே நிறுத்தி கொள்ளப்போவதாக அய்யா எழுதி இருந்ததை படித்தவுடன் என் இதயமே நின்று விட்டது. அய்யா எழுதவதை நிறுத்தி விட்டால் தமிழகத்துக்கு எப்பேர்பட்ட இழப்பு? தமிழகம் கிடக்குது தமிழகம் , அவருக்கு கட்-அவுட் எல்லாம் வைத்து தலையில் வைத்துக்கொண்டாடும் மலையாள இலக்கிய உலகம் மரித்துப்போய் விடாதா?
இலத்தீன் அமெரிக்கா, பிரான்ஸ் ரஷ்யா போன்ற நாடுகள் மற்றும் செவ்வாய் கிரகத்தின் இயக்குனர்கள் தங்கள் திரைப்படங்களை யாரிடம் சென்று காட்டி கருத்துப்பெறுவார்கள்?
ஐயோ.. நினைக்கவே மனம் பதறுகிறதே.
எனவே மக்களே, என்னருமை மக்களே அவர் சொல்வது போல் 'பா' இசை இந்த நூற்றாண்டின் தலைசிறந்த நகைச்சுவை என்று கூறி (அடேய் அறிவு கெட்ட பயலே ! வட இந்தியாவில் பா படத்தின் பாடல்களுக்கு சிறப்பான வரவேற்பு
இருக்கிறதடா மடையா! என்றெல்லாம் எடுத்தெறிந்து பேசாமல் !) அய்யாவின் எழுதுலகப்பணி என்றென்றும் தொடர வழிவகுக்குமாறு பேரன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
ஏனெனில் கைப்புள்ளை காமெடியை விட சிறந்த காமெடியை வழங்க அய்யாவை விட்டால் நமக்குதான் ஒரு நாதியுண்டா?

நன்றி chandanaar.blogspot