Sunday, July 12, 2015

இளையராஜாவை 3 படங்களுக்கு ஒப்பந்தம் செய்தார், ஏ.வி.எம்.
 
இளையராஜாவை, தனது 3 படங்களுக்கு இசை அமைக்க "ஏ.வி.எம்'' அதிபர் மெய்யப்ப செட்டியார் ஒப்பந்தம் செய்தார்.

"அன்னக்கிளி'' படத்திற்குப் பிறகு இளையராஜாவின் இசையில் வெளிவந்த சில படங்கள், எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. என்றாலும் இசையமைப்புப் பணியில் தீவிரமாகவே இருந்தார் இளையராஜா.

இந்த நேரத்தில் அவர் கொஞ்சமும் எதிர்பார்த்திராத சம்பவம் நடந்தது. அது ஏ.வி.எம். பட அதிபர் மெய்யப்ப செட்டியாரிடம் இருந்து வந்த அழைப்பு.

அதுபற்றி இளையராஜா கூறுகிறார்:

"இசையமைத்த பாடல்கள் பேசப்பட்டாலும், அந்தப் படங்கள் வெற்றிகரமாக ஓடினால்தானே படைப்பாளிக்கான திருப்தி கிடைக்கும். "அன்னக்கிளி''க்கு அடுத்து பெரிய வெற்றியை எதிர்பார்த்த நேரத்தில்தான் ஏ.வி.மெய்யப்ப செட்டியாரிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. ஏவி.எம். ஸ்டூடியோவில் அவரை சந்திக்கப் போனேன்.

என்னைப் பார்த்ததும் "நீங்கள்தான் இளையராஜாவா?'' என்று கேட்டவர், நேரடியாக விஷயத்துக்கு வந்தார். "நீங்கள் ஏவி.எம். சம்பந்தப்படும் மூன்று படங்களுக்கு இசையமைக்க வேண்டும்'' என்றார்.

ஏவி.எம். அவர்களே கேட்கிறார். என்ன சொல்வது என்று யோசனையில் இருந்தபோது, அவரே "என்ன சம்பளம் வாங்குகிறீர்கள்?'' என்று கேட்டார்.

இதற்கும் என் பதில் வருவதற்குள் அவரே தொடர்ந்தார். "நாங்கள் எடுக்கும் முதல் படத்துக்கு இவ்வளவு தருகிறோம்'' என்று ஒரு தொகையைச் சொன்னார். இரண்டாவது படத்துக்கு அதைவிட ஐயாயிரமும், மூன்றாவது படத்துக்கு இன்னும் ஐயாயிரமும் சேர்த்துத் தருகிறோம்'' 

என்றார்.இப்படிச் சொன்னதோடு, "மூன்று படத்துக்குமாக இதை அட்வான்சாக வைத்துக் கொள்ளுங்கள்'' என்று ஒரு தொகையை என் கையில் வைத்தார். ஐயாயிரம் ரூபாய் இருந்தது.

சந்தோஷமாக விடைபெற்று வந்தேன்.

இதற்கிடையே பாரதிராஜா, கிருஷ்ணன் நாயர், சங்கரய்யர், அவினாசி மணி போன்ற பல டைரக்டர்களிடம் உதவியாளராக இருந்து, அந்த அனுபவத்தில் சொந்த ஊரான பொள்ளாச்சியில் இருந்து படம் தயாரிக்கும் ஆர்வத்துடன் வந்திருக்கிறார் ராஜ்கண்ணு.

வந்த வேகத்தில் பாரதிராஜாவை சந்தித்து தன் விருப்பத்தை சொன்னார்.

பாரதிராஜா ஏற்கனவே என்.எப்.டி.சி. நிதி உதவியுடன் தயாரிக்க தயார் நிலையில் வைத்திருந்த "மயில்'' படத்தின் கதையைச் சொல்ல, ராஜ்கண்ணுவுக்கு பிடித்துவிட்டது. "மயில்'' கதையை படமாக்கும் முடிவுக்கு வந்தார். இந்தப்படம் மூலமாக டைரக்டராகிவிட்ட பாரதிராஜாவுடன், நான் இசையமைப்பாளராக கைகோர்ப்பேன் என்பது நானே எதிர்பார்த்திராத விஷயம்.

அப்போது நடிகர் திலகம் சிவாஜியை வைத்து, நடிகர் பாலாஜி தொடர்ச்சியாக படங்கள் எடுத்து வந்தார். பாலாஜி ஒரு மலையாளப்படத்தை தமிழில் எடுக்கப்போவதாகவும், நான் இசையமைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மலையாளப்படத்தை எனக்கு திரையிட்டுக் 

காட்டினார்.தமிழில் அதற்கு "தீபம்'' என்று பெயர் சூட்டினார்கள். ஏ.எல்.நாராயணன் வசனம் எழுதினார். இவர் பார்ப்பதற்கு என் அண்ணன் `பாவலர்' போலவே இருப்பார். சிரிப்பது, பேசுவது எல்லாமே எனக்கு அண்ணனை ஞாபகப்படுத்தும். என்னவொரு வித்தியாசம் என்றால் அண்ணன் கறுப்பு.

இந்த `தீபம்' படம்தான் என் இசை வாழ்வில் எனக்கு இரண்டாவது வெற்றிப்படமாக அமைந்தது.

அதுவரை அண்ணன் சிவாஜியை பார்த்ததில்லை. வாகினி ஸ்டூடியோவில் `தீபம்' பட பூஜை நடந்தபோது, சிவாஜி வந்திருந்தார். பாலாஜியும், ஏ.எல்.நாராயணனும் என்னை சிவாஜியிடம் அறிமுகப்படுத்தினார்கள்.

அப்போது எனக்கு டைரக்டர் மகேந்திரன் (அப்போது அவர் டைரக்டர் ஆகியிருக்கவில்லை) சொன்ன ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது.

அப்போது, சிவாஜி நடித்து வெற்றிகரமாக ஓடிய "தங்கப்பதக்கம்'' படத்தின் வசனகர்த்தா, மகேந்திரன்.

அவரும் கதாசிரியர் - டைரக்டர் குகநாதனும் சிவாஜியை பார்த்துவர அவரது வீட்டுக்குப் போயிருக்கிறார்கள். அவர் அவர்களிடம் பேசினாரே தவிர, உட்காரச் சொல்லவில்லை.

அதே நேரத்தில் வசனகர்த்தா பாலமுருகன் வந்திருக்கிறார். அவரைப் பார்த்ததும் "வாடா பாலமுருகா! உட்கார்!'' என்று உட்காரச் சொல்லியிருக்கிறார்.

பாலமுருகனோ மகேந்திரன் நிற்பதைப் பார்த்து "உட்காருங்கள்'' என்று சொல்லிய பிறகே சிவாஜி "உட்கார், மகேந்திரா!'' என்று சொன்னார்.

பாலமுருகன் வசனம் எழுதி சிவாஜி நடித்த "ராஜபார்ட் ரங்கதுரை'' தோல்வி அடைந்திருந்த நேரம் அது.

சிவாஜியின் எண்ண ஓட்டத்தைப் புரிந்து கொண்ட மகேந்திரன், "இல்லண்ணே! நான் இப்படியே நிற்கிறேன்'' என்று சொல்லியிருக்கிறார்.

சிவாஜியை "தீபம்'' பட செட்டில் பார்க்கப் போகிற நேரத்தில் மகேந்திரன் சொன்ன சம்பவம் நினைவுக்கு வர, இதோ மேக்கப் ரூமில் இருந்த சிவாஜியை நெருங்கி விட்டேன். பாலாஜி என்னை சிவாஜியிடம் அறிமுகப்படுத்தினார். உடனே அவர், பாலாஜியையும், ஏ.எல்.நாராயணனையும் உட்காரச் சொன்னார். அவர்கள் உட்கார்ந்தார்கள். அவர்களுடன் நானும் `படக்'கென உட்கார்ந்துவிட்டேன். அதிலிருந்து என்னை எங்கே கண்டாலும் உடனே உட்காரச் சொல்லிவிடுவார்.

பிற்காலத்தில் இதை நினைத்து வருத்தப்பட்டிருக்கிறேன். அவர் முன் நின்றால் என்ன தவறு? உட்கார்ந்தால் மட்டும் சிவாஜியோடு சரி சமம் ஆகிவிடுவேனா! என்று என்னையே நான் பலமுறை கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

பெரியவர்களுக்கு மரியாதை அளிக்கும் பண்பு இளைய தலைமுறையிடம் எப்படி மழுங்கடிக்கப்பட்டிருக்கிறது என்பதற்கு இதுவே உதாரணம். அதாவது `அன்றைய' நானே உதாரணம்!

தீபம் படம் 100 நாள் ஓடி சாந்தி தியேட்டரில் விழா எடுக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து டைரக்டர் ஏ.சி.திரிலோகசந்தரிடம் இருந்து வந்ததே "பத்ரகாளி'' படத்துக்கான அழைப்பு.

இங்கேதான் முதன்முதலாக கவிஞர் வாலி என் இசையமைப்பில் பாடல் எழுதினார். அப்போது எனக்கும், அவருக்குமான ஒரு பழைய சம்பவத்தை வாலி நினைவுபடுத்தினார்.

பிரசாத் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் `பிதாயி' என்ற இந்திப்படம் வந்தது. இந்தப்படத்தை தமிழில் எடுக்க முடிவு செய்தார் தயாரிப்பாளர். படத்துக்கு `பிரியாவிடை' என்று பெயர் வைக்கப்பட்டது.

இசை ஜி.கே.வெங்கடேஷ். இந்திப்படத்தின் ஒரு பாடல் காட்சியில் `ஒரு சீட்டுக்கட்டு ராஜாராணி' போல நாயகன் - நாயகியை மாற்றி, முழுக்க முழுக்க `ஸ்லோமோஷனில்' பாடல் முழுவதையும் உதட்டசைவு மாறாத வகையில் படமாக்கி இருந்தார். இந்த இந்திப்பாடல் `ஹிட்' ஆனதால் அதே மெட்டை தமிழிலும் போட எல்.வி.பிரசாத் விரும்பினார். ஜி.கே.வெங்கடேஷும் "ஓ.கே'' சொன்னார்.

பாட்டெழுத கவிஞர் கண்ணதாசன் வந்து விட்டுப் போனார். அந்தப்பாடல் டைரக்டருக்கும், எல்.வி.பிரசாத்துக்கும் பிடிக்கவில்லை. அதனால் வாலியை பாட்டெழுத அழைத்தார்கள். அவரும் வந்தவுடன் டிïனை கேட்டுவிட்டு, "ராஜாவைப் பாருங்க'' என்று பல்லவியை தொடங்கி 

விட்டார்.இது எல்லாருக்கும் பிடிக்க ஓ.கே. சொல்லிவிட்டார்கள்.

நான் மட்டும் வாலி அண்ணனிடம், "அண்ணா! வரிகள் டிïனுக்கு சற்று மாறி வந்திருக்கிறது'' என்றேன்.

"எப்படி?'' என்று திருப்பிக் கேட்டார் வாலி.

"டிïனின் சத்தம் `தானா தானானா', `தானானத் தானானா' என்று வருகிறது. இதில் முதல் `சந்தம்' தானா என்று தான் வருகிறது. நீங்கள் `ராஜாவை' என்று தொடங்கியதால் சந்தம் `தானானா' என்று மாறி வருகிறது'' என்றேன்.

"இன்னொரு தடவை சொல்லு'' என்றார் வாலி.

"தானா தானானா தானானத் தானானா'' என்று பாடினேன்.

உடனே அவர், "ராஜா பாருங்க! ராஜாவைப் பாருங்க என்று வைச்சுக்கோ'' என்றார்.

"இது சரியாக இருக்கிறது'' என்றேன்.

அன்றிரவு எம்.எஸ்.விஸ்வநாதனின் பிறந்த நாள் பார்ட்டியில் ஜி.கே.வெங்கடேஷை பார்த்த வாலி, "யோவ்! சாதாரண கிட்டார்காரனைவுட்டு சந்தத்துக்கு சரியா பாட்டெழுதலைன்னு சொல்லவெச்சு என்னை அவமானப்படுத்திட்டேயில்ல?'' என்று சத்தம் போட்டிருக்கிறார்.

ஜி.கே.வி.யும் விட்டுக் கொடுக்காமல், "அதெல்லாம் இல்ல வாலி! சரியா வர்றதுக்குத்தானே எல்லாரும் சொல்வாங்க. அதிலென்ன தப்பு?'' என்று சொல்லி சமாதானப்படுத்தியிருக்கிறார்.

இந்த சம்பவத்தை இப்போது என்னிடம் நினைவு கூர்ந்த வாலி, "இப்போ, பத்ரகாளி படத்துக்கான பாட்டு என்ன சிச்சுவேஷன்?'' என்று கேட்டார்.

சிச்சுவேஷனை வசனகர்த்தா ஆரூர்தாஸ் சொல்ல, நான் டிïனை பாடிக்காட்டினேன். தம்பி கங்கை அமரன் எழுதி, பக்திப்பாடலாக்க முயற்சி செய்த டிïன் அது.

அதை வாசித்தேன். கேட்டு விட்டு "கண்ணன் ஒரு கைக்குழந்தை'' என்று ஆரம்பித்து முழுப்பாடலையும் முடித்தார்.

அடுத்த பாடல்தான் "வாங்கோன்னா, அட வாங்கோன்னா.''

இந்தப் படத்தில் நாயகியாக நடித்த ராணி சந்திரா விமான விபத்தில் மரணமடைந்து விட்டார். திரிலோகசந்தர் ஒருவழியாக சமாளித்து படத்தை முடித்தார். படம் பெரிய வெற்றி.

இந்தப்படத்தின் பின்னணி இசையமைப்பின்போதுதான் இரண்டாவது தடவையாக மூகாம்பிகை போகமுடிந்தது.

இது என் மூன்றாவது வெற்றிப்படம்.''
Thanks Malai Malar
http://www.maalaimalar.com/2015/04/18220955/cinema-history-april-18-ilayar.html

2 comments:

  1. t is spectacular how individuals must correctly analyze a self-explanatory affair like this. Skin Care first appeared on the market in that year as well. Without regard to this, Skin Care is effortless. Skin Care is a routine to win at Anti Aging.

    https://www.salubritymd.com/

    https://sites.google.com/view/hydroserum-ocean-shake/

    ReplyDelete
  2. https://sites.google.com/view/hydroserum-ocean-shake/
    https://www.salubritymd.com/hyaluronan-crema/
    https://sites.google.com/d/1BuQQ0AZl4PatYYpm8o9-6b0WevsQdoGR/p/1-c2w5CsSyNxRlT3BDc_d3vN1N86RKt7k/edit

    ReplyDelete