Saturday, January 8, 2011

இளையராஜா: காலத்தில் கரையாத கலைஞன்



ஜி. ஆர். சுரேந்தர்நாத்


2010, மே மாதம். பல வருடங்கள் கழித்து, குடும்பத்தினர் இல்லாமல் நண்பர்கள் மட்டும் கேரளா டூர் சென்றிருந்தோம். குமுளி, சித்தாரா ஹோட்டல் அறையில் அந்த இரவு இளையராஜாவின் இசையால் நிரம்பி வழிந்தது. நான் மொபைலில் ஒவ்வொரு இளையராஜா பாடலாக ஒலிக்க விட… நிகழ்காலம் மௌள மௌள மறைந்து, எங்கள் கண் முன்பு காலடியில் உதிர… இறந்த காலம் உயிர் பெற்று எங்களைப் பிரியத்துடன் தழுவிக்கொண்டது. ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு பாடல் சார்ந்தும் சொல்வதற்கு ஏதேனும் அந்தரங்கமான நினைவுகள் இருந்தன.
இளையராஜாவின் பாடல்கள், வெறும் திரையிசைப் பாடல்கள் மட்டுமே அல்ல. அவைக ஏறத்தாழ இருபது ஆண்டுகள், தமிழர்களின் வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருந்தது. ஒரு மகத்தான அந்தரங்க நண்பனாக இருந்தது. அது அவனுக்காக காதலித்தது. அவனுக்காக, குமுறியது. தாயை மறந்த கணங்களை உக்கிரத்துடன் நினைவூட்டியது. சக மனிதர்களால் கைவிடப்பட்ட தருணங்களில் இளையராஜாவின் இசையே அவனைத் தாங்கிக்கொண்டது(அதனால்தான் இளையராஜாவைப் பற்றி ஒரு சிறு விமர்சனம் வந்தால் கூட, தன் தாயைப் பழித்தது போல் பலரும் பொங்கி எழுகின்றனர்.).
இளையராஜாவின் பாடல்கள் உருவாக்கிய கவித்துவமான மனநிலையுடன் அன்றிரவு நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தோம். ஒரு கட்டத்தில் அனைவரும் தூங்கிவிட… என்னால் மட்டும் இளையராஜாவிலிருந்து வெளியே வரமுடியவில்லை. தொடர்ந்து பாடல் கேட்கவேண்டும் போல் இருந்தது.
நண்பர்களின் தூக்கத்தை தொந்தரவு செய்யவேண்டாம் என்று மொபைலுடன் வெளியே வந்தேன். இரவு இரண்டு மணி போல இருக்கும். அந்நேரத்திலும் குமுளி பஸ் ஸ்டாண்டில் ஆட்கள் நடமாட்டம் தென்பட்டது. நான் மெதுவாக தேக்கடி ஏரிக்கரையை நோக்கி நடந்தேன். நடை தளர… ஒரு மூடிக்கிடந்த கடையின் முன்பு படுத்துக்கொண்டேன். மெல்லிய குளிர்… அமைதியான இரவு... தூரத்தில் நிலவொளியில் சலசலக்கும் மரங்கள்… மீண்டும் மொபைலில் இளையராஜாவின் பாடல்களைக் கேட்க ஆரம்பித்தேன்.
முதலில் ~‘நானே ராஜா… நானே மந்திரி’ படத்தில் இடம் பெற்ற ~~மயங்கினேன்… சொல்லத் தயங்கினேன்" பாடல். பாடல் முடிந்தபோதுதான் எதிர்க்கடையின் வாசலில் இருவர் அமர்ந்திருந்ததைக் கவனித்தேன். என்னைப் பார்த்தபடி ஏதோ பேசிக்கொண்டிருந்தனர். நான் பொருட்படுத்தாமல் அடுத்து ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’ படத்தில் இடம் பெற்ற, ~~என்னுள்ளில் எங்கோ… ஏங்கும் கீதம்…" என்ற பாடலுக்குள் நுழைந்தேன். அப்படியே அடுத்து… அடுத்து… என்று வரிசையாக இளையராஜா பாடல்களில் கரைந்துகொண்டேயிருந்தேன். இடம், காலம், இருப்பு… என்று அனைத்தையும் மறந்து இசையில் மூழ்கும் தருணங்கள் எல்லாம் இதுபோல் எப்போதாவதுதான் அரிதாக அமையும்.
திடீரென்று அருகில் நிழலாட நிமிர்ந்தேன். எதிரேயிருந்த இருவரும் இப்போது என்னருகில் நின்றுகொண்டிருந்தனர். எனக்கு சொரேலென்றது. முன் பின் தெரியாத ஊர். வழிப்பறிக் கொள்ளையாக இருக்குமோ என்று பயத்துடன் எழுந்து அமர்ந்தேன்.
அதில் ஒருவன், "ஸார்… டூரிஸ்ட்டா?" என்றான். உச்சரிப்பில் மலையாளம்.
"ஆமாம்…" என்று எழுந்தேன்.
"யாரு ஸாங்கு இதெல்லாம்… அடிபொலி…" என்ற பிறகுதான் அவர்கள் இருவரும் பாடல்களைக் கேட்டுக்கொண்டு அமர்ந்திருந்தனர் என்பது புரிந்தது. நான் அனைத்தும் இளையராஜாவின் பாடல்கள் என்று கூறினேன். ~~எல்லாப் பாட்டும் எங்கயோ கொண்டு போய்டுது சார்… இதெல்லாம் இளையராஜா பழைய தமிழ் பாட்டா சார்… நாங்க கேட்டதேயில்லை…’’ என்று பேச ஆரம்பித்தார்கள். நானும் ஆர்வத்துடன் உரையாட ஆரம்பித்தேன். இடையிடையே மிகவும் உற்சாகத்துடன் பாடல்களை ஒலிக்கவிட்டு அவர்களின் கருத்தைக் கேட்டேன். அப்படியே நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு அவர்கள் பிரிந்தபோது, மள்ள விடிய ஆரம்பித்திருந்தது.
அவர்கள் இருவருக்கும் கிட்டத்தட்ட இருபது வயதுதான் இருக்கும். இப்போதுதான் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கிறார்கள். இளையராஜா உச்சத்தில் இருந்த காலத்தில் அநேகமாக அவர்கள் பிறந்திருக்கமாட்டார்கள். மேலும் பொதுவாக மலையாளிகள் அவ்வளவு சீக்கிரம் ஒட்டிவிடமாட்டார்கள்(இந்த விஷயத்தில் அவர்கள் ஜெர்மானியர்கள் மாதிரி.). முதல் அறிமுகத்தில் எல்லாம் ஏறத்தாழ எதிரியிடம் பேசுவது போலத்தான் பேசுவார்கள். ஆனால் இளையராஜாவின் இசை அவர்களை உடனே என்னுடன் நெருங்கச் செய்தது, பல மணி நேரம் பேசச் செய்தது.
ஆம்… இளையராஜாவின் இசையின் அற்புதம் அதுதான். அது உங்கள் மனதை இளகச் செய்கிறது. நெகிழச் செய்கிறது. உங்கள் கர்வத்தை எல்லாம் மறக்கச் செய்கிறது.
இவ்வாண்டு சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருது இளையராஜாவிற்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. இளையராஜாவின் பாடல்கள் போல, இளையராஜாவின் பின்னணி இசையும் ஒரு தனி வரலாறு. அதிகம் விவாதிக்கப்படாத வரலாறு.
இளையராஜாவிற்கு முன்பு பின்னணி இசை என்பது, வசனங்களுக்கிடையேயான மௌனத்தை நிரப்பும் வெறும் வாத்தியங்களின் சத்தமாகவே இருந்தது. இளையராஜாவே காட்சிகளுக்கேற்றாற் போன்ற உயிரோட்டமான இசையை அளித்து, பின்னணி இசையை ஒரு மகத்தான கலை அனுபவமாக மாற்றிக் காட்டினார். எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் ஒரு கட்டுரையில், ‘இளையராஜாவின் பின்னணி இசையைத் தொகுத்து ஒரு ஆல்பமாக கொண்டுவரவேண்டும். என்று கூறியது இத்தருணத்தில் நினைவிற்கு வருகிறது.
வார்த்தைகளாலோ, காட்சிகளாலோ… ஏன் மௌனத்தாலோ கூட வெளிப்படுத்த முடியாத சில அபூர்வ கணங்கள் வாழ்க்கையில் உள்ளன. உதாரணத்திற்கு திரைப்படங்களில், கதாபாத்திரங்களின் கண்களில் காதல் உணர்வைக் கொண்டு வந்து காட்டினாலும், ஒரு கட்டத்திற்கு மேல் அதை அழுத்தமாகச் சொல்வதற்கு ஒரு துணை தேவைப்பட்டது. அந்த துணையாக இளையராஜா இருந்தார். இளையராஜாவின் பின்னணி இசை என்பது, வெறும் இசை மட்டும் அல்ல. அது திரைக்கதையில் எழுதப்படாத ஒரு பகுதியாகவே எப்போதும் இருந்து வருகிறது. இளையராஜாவின் பின்னணி இசையால், காட்சிகள் கவிதைகளாக மாறும் அதிசயம் நிகழ்ந்தது.
அவற்றில் சிலவற்றை இங்கே உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். ஏனெனில், இசை விமர்சகர் ஷாஜியின், ~இசையின் தனிமை’ குறித்த கலந்துரையாடல் கூட்டத்தில் கவிஞர் மனுஷ்ய புத்திரன் அழகாகக் கூறியது போல், தமிழ்ச் சமூகம் மறதியின் மீதுதான் நடந்துகொண்டிருக்கிறது.
‘வருஷம் 16’ படத்தில் ஒரு காட்சி. கார்த்திக்கும், குஷ்புவும் முதலில் வீட்டில் சந்திக்கின்றனர். பிறகு மறுநாள் வெளியே ஒரு வயல் வரப்பில் சந்திக்கின்றனர். அப்போது கார்த்திக் குஷ்புவிடம், "இந்த ஊர்ல அருந்ததி பூங்கான்னு ஒரு பூங்கா இருக்கு. அங்க கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடி ஒரு குட்டி கண்ணணும்(கார்த்திக் கதாபாத்திரத்தின் பெயர்), ஒரு குட்டி ராதிகாவும்(குஷ்பு)…" என்று துவங்கும்போது, இசை ஒலிக்க ஆரம்பிக்கும். முதலில் மிகவும் வேகமாக… அதாவது அவர்களுடைய நினைவுகள் வேகமாக இறந்த காலத்தில் நுழைவதைக் காண்பிப்பதற்கு மிகவும் வேகமான ஒரு இசையும், பிறகு அவர்கள் இறந்த காலத்திற்குள் நுழைந்து அந்த நினைவுகளில் தேங்கியவுடன் ஒரு அமைதியான புல்லாங்குழல் இசையும் ஒலிக்கும். இங்கு ஃப்ளாஷ்பேக் ஏதும் கிடையாது. ஏனெனில் ஒரு அழுத்தமான ஃப்ளாஷ்பேக் அளித்திருக்கக்கூடிய தாக்கத்தை அந்த இசையால் அளிக்க முடிந்தது. அந்த இசையே, அந்தக் காட்சியை இன்னும் என்னால் மறக்க முடியாத காட்சியாக்குகிறது.
அதே போல் ‘சலங்கை ஒலி’ படத்தில் ஜெயப்ரதாவுக்கு ஏற்கனவே திருமணமாகியிருக்கிறது என்று தெரிந்தவுடன், கமல் ஆவேசமாக கடற்கரையில் ஒரு நடனம் ஆடுவார். அந்த நாட்டியத்திற்கான இளையராஜாவின் இசை, இளையராஜாவின் ஆகப்பெரிய அற்புதங்களில் ஒன்றாகும். கமலின் அந்த மனக்கொந்தளிப்பு, குமுறல், இயலாமை… என்று அத்தனை உணர்வுகளையும் வாத்தியங்களில் இளையராஜா வெளிக்கொணர்ந்த விதம்…. இப்போது நினைத்தாலும் சிலிர்க்கிறது.
நம் வாழ்வில் ஒரு மிகப் பெரிய துக்கத்தை அனுபவித்து, அழுதுப் புரண்டு ஓய்ந்தவுடன் மனதில் ஒரு சோகமான அமைதி மெள்ள வந்து தழுவும். அதை வார்த்தைகளால் கூட வெளிப்படுத்துவது கடினம். ஆனால் அதனை இளையராஜா ~அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் அற்புதமாகச் செய்திருப்பார். டைட்டிலுக்கு முன்பு ஆற்றங்கரையில் கமல் கொல்லப்பட்டு, ஸ்ரீவித்யா படகில் கதறியழுது, ஓய்ந்து அமைதியானவுடன் மெள்ள ஒரு புல்லாங்குழல் இசை ஒலிக்க ஆரம்பிக்கும்(படத்தின் தீம் மியூசிக்கும் அதுதான்). அந்த இசை உருவாக்கும் துயரமும், அமைதியும் மிகவும் அலாதியானது.
மேலும் ‘முதல் மரியாதை’ படத்தில், ரஞ்சனி இறந்தவுடன், தீபன் புல்லாங்குழலை மேலே எறிந்துவிட்டு நீரை நீக்கி ஓடுவார். காற்றில் பறக்கும் புல்லாங்குழல் மேலே நீண்ட தூரம் செல்ல… இடையில் ஊரார் ஓடிவருவது உள்ளிட்ட ஏராளமான கட் ஷாட்களுடன் இணைந்து, அந்த புல்லாங்குழல் மீண்டும் நீரில் விழும் வரையிலான காட்சிக்கு இளையராஜா இசைத்த புல்லாங்குழல் இசை, இளையராஜாவின் மாஸ்டர் பீஸ்களில் ஒன்றாகும். வாழ்க்கையில் சற்றும் எதிர்பாராத ஒரு துயரத்தையும், அதன் விளைவுகளையும் இசையால் காட்சிப்படுத்திய அபூர்வ திரைத் தருணங்களில் அதுவும் ஒன்றாகும்.
அதே போல் ‘மௌன ராகம்’ படத்தின் பின்னணி இசையை , வசனங்களை மட்டும் கட் செய்துவிட்டு நீங்கள் கேட்டுக்கொண்டே இருக்கலாம். இவ்வாறு ‘அலைகள் ஓய்வதில்லை’,‘ சிந்து பைரவி’ என்று பல படங்களிலிருந்து என்னால் ஏராளமான உதாரணங்களை கூறமுடியும்.
இத்தனைக்கும் எனக்கு இசையின் நுணுக்கங்கள் குறித்தோ, ராகங்கள் பற்றியோ எதுவும் தெரியாது. கேட்பதற்கு நன்றாக இருக்கும் இசையை ரசிப்பேன் அவ்வளவுதான். இளையராஜாவின் ‘ஹெள டூ நேம் இட்’ குறித்து, ~சொல்வனம்" இணைய இதழில், ரா. கிரிதரன் என்பவர் இசை பற்றிய நுணுக்கமான அறிவுடன், அது மேற்கத்திய இசையின் என்ன கூறுகளைக் கொண்டது என்றெல்லாம் மிகவும் விரிவாகக் கூறியிருந்தார். அந்த விபரங்கள் எல்லாம் எனக்கு ஒரு அட்சரம் கூடத் தெரியாது. அதைப் படித்தபோது இதில் இவ்வளவு மேட்டர் இருக்கிறதா என்று எனக்கு பிரமிப்பாக இருந்தது. அதைப் பற்றியெல்லாம் எதுவுமே தெரியாமல் என்னால் எப்படி அந்த இசையை ரசிக்க முடிந்தது?
அதுதான் இளையராஜாவின் தனித்துவம். தமிழ்நாட்டில் மேதைமையும், வெகுஜன ரசனையும் ஒன்றிணையும் கணங்கள் மிகவும் அபூர்வம். ஆனால் இளையராஜா நமது நாட்டுப்புற, கர்நாடக மற்றும் மேற்கத்திய செவ்வியல் இசைக்கூறுகளின் அபாரமான சாத்தியங்களை எளிமையாக இணைத்து, இசையைப் பற்றி ஆனா, ஆவன்னா தெரியாதவனும் ரசிக்கும்படி செய்து மேதைமையை, வெகுஜன ரசனைக்குரியதாக மாற்றிக் காட்டினார்.
அடுத்து இளையராஜாவின் மிகப்பெரிய பங்களிப்பு, மனித உறவுகளில் அது ஏற்படுத்திய விளைவுகள். இளையராஜாவின் பொற்காலத்தில், இளையராஜாவின் பாடல்கள் என்ற ஒற்றைப் புள்ளியில் சந்தித்துக் காதலித்தவர்கள் அனேகம் பேர். வீட்டிற்குள் நிலவிய எத்தனையோ கசப்புகளை, அந்த வீட்டிற்கு சம்பந்தமேயில்லாத இளையராஜா போக்கியிருக்கிறார். என் வாழ்வில் அவ்வாறு நிகழ்ந்திருக்கிறது.
அந்தக் காலத்தில் தந்தை-மகன் உறவு என்பது கிட்டத்தட்ட ஒரு எஸ்.பி.க்கும், கான்ஸ்டபிள்க்கும் உள்ள உறவு போன்றது. அப்பாக்கள் எஸ்பிக்கள். மகன்கள் கான்ஸ்டபிள்கள். அப்போது தந்தைக்கும் மகன்களுக்கும் நடுவே தெளிவாக, உறுதியாக ஒரு பெரிய இடைவெளி இருக்கும்(நடிகர் கமல்ஹாசன் ஒரு பேட்டியில், "எனது தந்தை மிகவும் சீரியஸாக சாகக் கிடந்த சமயத்தில், ஒரு நாள் அவர் தோளைத் தொட்டு தூக்கி அமர வைத்தபோதுதான்; எனக்கு விபரம் தெரிந்து முதன் முதலாக அவரைத் தொட்டேன்." என்று கூறியது ஞாபகத்திற்கு வருகிறது.).
இவ்வாறு எல்லா தந்தைகளுக்கும், மகன்களுக்கும் இருந்த இடைவெளி என் தந்தைக்கும் எனக்கும் கூட இருந்து வந்தது. பிறிதொரு காலத்தில் அந்த இடைவெளி மேலும் அதிகரிக்கும் சூழல் உருவானது. நான் பத்தாவதில் ஐநூறுக்கு 434 மார்க் எடுத்தேன். அது நல்ல மார்க். அப்போது ஸ்டேட் ரேங்கே 455, 460 என்றுதான் இருக்கும். அதனால் என் தந்தை தன் வாழ்நாளின் ஆகப் பெரிய கனவைச் சுமக்க ஆரம்பித்தார். எப்படியும் ப்ளஸ்டூவில் நான் நிறைய மதிப்பெண்கள் பெற்று, மருத்துவர் படிப்பில் சேருவேன் என்று உறுதியாக நம்பினார். எனது உறவினர்களும் நம்பினார்கள். என் பக்கத்து வீட்டுக்காரர்கள் எல்லாம் எனக்கு டாக்டர் சீட் கிடைத்துவிட்டது போலத்தான் பேசிக்கொண்டிருப்பார்கள்("நமக்கு ஒண்ணும் பிரச்சினையில்ல. சுரேந்தர் க்ளினிக் போட்டுட்டான்னா, ஃப்ரீயா வைத்தியம் பாத்துக்கலாம்."). ஏன்… நானும் நம்பினேன்.
ஆனால் எனது விடலைப் பருவத்தின் சில விரும்பத்தகாத காரியங்களால்(அதைப் பற்றி பிறிதொரு சந்தர்ப்பத்தில் விரிவாகப் பார்க்கலாம்.)பள்ளி மாறி, ஒரு அரசுப் பள்ளியில் சேர்ந்து, பல்வேறு விஷயங்களால் படிப்பில் ஆர்வம் போய், ப்ளஸ்டூவில் 1200க்கு 840 மட்டுமே எடுத்தேன். மேலும் மருத்துவ நுழைவுத்தேர்வு எழுதுவதற்கான குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்களைக் கூடப் பெறவில்லை. எனது தந்தை இதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. ரிசல்ட் வந்து, மதிப்பெண் பட்டியலைப் பார்த்தபோது என் தந்தையின் கண்களில் தெரிந்த வலி இன்னும் என் ஞாபகத்தில் இருக்கிறது. தனது குழந்தைகள் குறித்த ஒரு தந்தையின் கனவுகள் சிதையும் கணங்கள் மிகவும் கொடுமையானவை. மிகுந்த கோபக்காரரான எனது தந்தை அப்போது ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
நிச்சயம் என்னால் சாதித்திருக்கக்கூடிய விஷயம், எனது காரியங்களால், எனது தந்தையின் எச்சரிக்கையையும் மீறி நான் நடந்துகொண்ட முறையால் கெட்டது. அதனால் அதன் பிறகு எனது தந்தை என் மீது ஆழமான வெறுப்பைக் கொட்ட ஆரம்பித்தார். எனக்கான சுதந்திரங்கள் மறுக்கப்பட்டன. செலவுக்கு அஞ்சு பைசா கூட தரமாட்டார்.
பதிலுக்கு நான் காந்திய வழியில் அறப்போராட்டத்தில் இறங்கினேன். ஆனால் முற்றிலும் பட்டினி கிடைக்க முடியாத காரணத்தால், ஒரு வித்தியாசமான போராட்டத்தை ஆரம்பித்தேன். அது என்னவென்றால், காலையில் பேருக்கு ஒரு இட்லி, ஒரு தோசை மட்டும் சாப்பிடுவேன். அதற்கும் சட்னியெல்லாம் வேண்டாம் என்று கூறிவிடுவேன். மதிய, இரவு சாப்பாடுகளில் குழம்பு, ரசம், சைட்டிஷ் எல்லாம் வேண்டாம் என்று கூறிவிடுவேன். வெறும் தயிர்சாதம் மட்டும்தான் சாப்பிடுவேன். அதுவும் ஒரு மிகைநடிப்புடன், தொட்டுக்க ஒன்றுமின்றி நான் மிகவும் கஷ்டப்படுகிறேன் என்பதை உணர்த்துவதற்காக ஒவ்வொரு வாய் சாதத்திற்கும், ஒரு வாய் தண்ணீர் மடக் மடக்கென்று குடித்துக்கொள்வேன். வீட்டில் கறி, மீன் எடுக்கும்போது அதைக் கையால் கூட சீந்தமாட்டேன். அப்போதெல்லாம் என் அம்மாவுக்கு ஒரே லட்சியம்தான் இருந்து வந்தது. உயிரே போனாலும், ஞாயித்துக்கிழமை பிள்ளைகளுக்கு கறிசோறு ஆக்கிப் போட்டுவிட்டுதான் சாகவேண்டும். ஆனால் அதையும் நான் நிராகரித்துவிட்டு, என் தம்பிகள் எல்லாம் கறிசோறு தின்ன… நான் மட்டும் தயிர்சாதம் தின்பதை என் தாய் கண்ணீருடன் பார்த்துக்கொண்டிருப்பார். இந்தப் போராட்டம் பல மாதங்கள் நீடித்தது. ஆனாலும் என் தந்தை இறங்கி வரவில்லை.
என் அப்பா சென்னை சென்றுவிட்டு திரும்பும்போதெல்லாம் ஏராளமான கேஸட்டுகளுடன் வருவார். வந்தவுடனேயே கேஸட்டுகளை ஒலிக்கவிட்டுவிடுவார். பெரும்பாலும் அவை சினிமா பாடல்களாகவே இருக்கும். ஆனால் ஒரு விடியற்காலையில் அவர் சென்னையிலிருந்து திரும்பியபோது, வித்தியாசமாக ஒரு கருவி இசைப்பாடல் ஒலிக்க ஆரம்பித்தது. அது திரைப்பட இசை கிடையாது. அசுவராஸ்யமாக கேட்க ஆரம்பித்த நான், என்னை அறியாமல் மெள்ள, மெள்ள ஒரு பிரமாண்டமான இசைச்சூழலில் சிக்கிக்கொண்டதை உணர முடிந்தது. வயலினும், புல்லாங்குழலும் மாற்றி, மாற்றி இழைந்து என்னுள் ஏதேதோ செய்தது. அதுவும் ஒரு இசைப்பாடல், ஒரு மலை ஊற்றுப் போல மெள்ள சுரக்க ஆரம்பித்து, பிறகு மகா நதியாகப் பெருகி ஓடி, கடலில் கலந்து அமைதியாவதைப் போல முடிந்தபோது என்னை அறியாமல் என் கண்களிலிருந்து நீர் வழிந்திருந்தது.
அதற்கு மேல் தாங்க முடியாமல் எழுந்துவிட்டேன். அன்று காலைதான் நெடு நாட்களுக்குப் பிறகு என் தந்தையிடம் நான் பேசினேன்.
"என்ன கேஸட்?"
"இளையராஜாவோட நத்திங் பட் வின்ட்…" என்றவர் தொடர்ந்து இந்த தருணத்திற்காகவே காத்திருந்தது போல், "உனக்கு இங்க என்னடா பிரச்னை? எதா இருந்தாலும் சொல்லு…" என்றார்.
"நிறைய இருக்கு. கைல காசே தரமாட்டேங்கறீங்க." என்றேன்.
"எதுக்கு காசு?"
"சினிமாப் பாக்குறதுக்கு. அப்புறம் இளையராஜா பாட்டுல்லாம் ரிகார்ட் பண்றதுக்கு."
"அவ்ளோதான… இது வேணும்னு வாய்விட்டு கேட்டாதானே தெரியும். அதுவும் இளையராஜா பாட்டு ரிக்கார்ட் பண்றதுக்குன்னா நான் வேண்டாம்னா சொல்வேன்…" என்று ஒரு நூறு ரூபாயை எடுத்து நீட்டினார்.
அப்போதெல்லாம் பாடல்கள் கேஸட்களில்தான் கேட்போம். நான் ஒவ்வொரு இளையராஜா பாடலாகக் குறித்து வைத்துக்கொண்டே வருவேன். இருபது பாடல்கள் சேர்ந்தவுடன் ரிக்கார்டிங் சென்டருக்கு சென்று, டிடிகே 90 அல்லது மெல்ட்ராக் கேஸட்டில் பதிவு செய்துகொண்டு வருவேன். அது இளையராஜா வருடத்திற்கு 30, 40 படங்கள் எல்லாம் இசையமைத்துக்கொண்டிருந்த காலம். ஒரு மாதத்திற்குள்ளாகவே இரண்டு, மூன்று கேஸட்டுகள் பதிவு செய்யவேண்டி வரும். அதற்காக எப்போது கேட்டாலும் மறுக்காமல் எனது தந்தை பணம் தந்துவிடுவார்.
நான் பதிவு செய்துகொண்டு வந்தவுடன் என் தந்தையும், நானும் சேர்ந்தாற்போல் ரசித்துக் கேட்போம். அப்போது எங்கள் உரையாடலின் மையப்புள்ளியாக இளையராஜாவே இருந்தார். (அப்போதெல்லாம் எனது தந்தை அடிக்கடி, "என் கைல மட்டும் நிறைய காசு இருந்துச்சுன்னா, நம்ம நால் ரோட்டுல இளையராஜாவுக்கு தங்கத்துல சிலை வச்சிடுவன்டா" என்று கூறுவார்.). இல்லையென்றால் எனது தந்தையிடமிருந்து நான் மிகவும் விலகிக் சென்றிருக்கக்கூடும்.
இவ்வாறு இளையராஜா, தமிழர்களின் தனி மனித வாழ்க்கையில் மிகப் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறார். வேறு விஷயங்களில் வெவ்வேறு ரசனைக் கொண்டவர்களும், பல்வேறு கருத்து வேறுபாடுகளும் கொண்டிருந்தவர்களும் கூட இளையராஜாவின் இசை என்ற புள்ளியில் ஒன்றிணைந்தனர். அந்தப் புள்ளியிலிருந்து புறப்பட்டு, அவர்கள் ஒற்றுமையுடன் வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்குச் செல்ல முடிந்தது. இவ்வாறு இளையராஜா கலையும், வாழ்க்கையும் இணையும் அபூர்வத்தை வெகுஜனங்களிடையே நிகழ்த்திக் காட்டினார்.
அன்று இளையராஜாவோடு வேறு பல விஷயங்களும் எனக்கு மிகுந்த போதை ஊட்டுவதாக இருந்தன. ஹோட்டலில் ரவா தோசை தின்பதற்காக, என் அப்பாவின் சட்டைப் பையில் திருடத் தயங்கமாட்டேன். எனது வெள்ளிக்கிழமை காலைகள், காலைக்காட்சி பலான மலையாளப் படங்கள் இல்லாமல் இருக்காது. பாலகுமாரன் நாவல்கள் என்றால் பைத்தியம்.
இன்று என்னோடு ரவா தோசை இல்லை. காலைக் காட்சி மலையாளப் படங்கள் இல்லை. பாலகுமாரன் இல்லை. நாட்கள் நகர, நகர… ஒரு காலத்தில் நாம் மிகவும் முக்கியமாக கருதும் விஷயங்கள் , பிறகு ஒன்றுமே இல்லாமல் ஆகிவிடுகிறது. ஆனால் இளையராஜா மட்டும் நேற்றும் என்னோடு இருந்தார். இன்றும் என்னோடு இருக்கிறார். நாளையும் என்னோடு இருப்பார். ஏனெனில் இளையராஜா காலத்தில் கரையாத கலைஞன்.
gsurendar@yahoo.com

நன்றி: உயிர்மை

No comments:

Post a Comment