Saturday, January 8, 2011

ஹலோ ஒரு (ரசிக) கிறுக்க ன் பேசுறேன் - 3


apsaravanan
பகுதி 3

என்னடா "தளபதி" இவ்வளவு பெரிய ஏமாற்றத்தை தந்திடுச்சென்னு நினைச்சப்ப, நண்பர்கள் வற்புறுத்தல் காரணமாக "குணா" பார்க்க போனேன், எப்படியா இருந்தாலும் நம்மாளுதானே இசை. படம் என்னவோ பண்ணுச்சு. ஆனா அதை வெளில சொல்லிக்கலை. இந்த சமயத்துல ரஜினி-ன் அடுத்த படமான "அண்ணாமலை" இளையராஜா இல்லாம எடுக்கபட்டுச்சுன்னு, கேள்வி பட்டு ரொம்பவே நொந்து போயிட்டேன். இந்த முறை ரஜினி பிரிஞ்சதை ஏத்துக்க முடியலை, இந்த படத்தையே பார்க்க கூடாதுன்னு முடிவு செஞ்சேன். அது கூட இளையராஜவிற்காக இல்லைன்னு நான் நம்பினேன். ஏன்னா ரஜினியை அவரது நடிப்புக்காக எத்தனை பேரு ரசித்தார்கள் என்று தெரியாது. ஆனா ரஜினி நட்பிற்கு, தன்னை வளர்த்தவர்களுக்கு ஆதரவு தரக்கூடியவர் அப்படிங்குற குணத்தினாலேயே தான் எனக்கு ரஜினியை ரொம்ப பிடிச்சது. அப்படிப்பட்ட ரஜினி ராஜாவுடனான தனது நட்பை துண்டிச்சுக்கிட்டாரே அப்படின்னு நினச்சு மனசு ரொம்ப வெறுத்துடுச்சு அதனாலத்தான் அந்த படத்தை பார்க்க வேண்டாம்னு முடிவு செஞ்சேன். ஆனா அந்த படம் கூட பாலச்சந்தர் என்ற தனது குருவின் மேல் கொண்ட பக்தியினால பண்றார்னு நம்ப மனம் மறந்தது. அதாவது என்னையும் அறியாமல் ராஜாதான் என் மனசில் ஆழமா பதிஞ்சுட்டார். அப்படிங்கிறதை இந்த விஷயம் நன்கு உணர்த்தியது. சரி இனிமேல் நம் விருப்ப லிஸ்ட்-ல் ரஜினி இல்லை. அடுத்த வாரத்தில் இன்னொரு அடி, அதாவது பாலச்சந்தர் தயாரிக்கும் ஒரு படத்தை மணிரத்தினம் இயக்குவதாகவும் அதற்கு ராஜா இசை இல்லைன்னும் ஒரு செய்தி. என்னடா இது நமக்கு வந்த சோதனை பின்ன சின்ன வயசிலிருந்து முதலிடத்தில் இருந்த ரஜினியையே ஒதுக்கியாச்சு. இப்ப என்னடான்னா விருப்ப இயக்குனரையும் இழக்கணும் போல இருக்கே. அப்போ மணிரத்தினம் பல கல்லூரி மாணவர்களின் விருப்ப இயக்குனர். சாமி கும்பிடுரப்ப எல்லாம் இந்த செய்தி பொய்யா இருக்கணும்னு வேண்ட ஆரம்பிச்சேன். ஆனா நான் சாமியை சரியா கும்பிடலை போல, என் வேண்டுதல் பலிக்கல. அந்த படத்துக்கான விளம்பரம் வந்துச்சு, அதில் இசை ஏ.ஆர்.ரஹ்மான் அப்படின்னு போட்டிருந்துச்சு. நான் அதை பெருசா எடுத்துக்கல. ஏன்னா ராஜா பார்க்காத ஆளுங்களா..? நிச்சயம் ராஜா ஜெய்ப்பார் அப்படின்னு நான் ஆணித்தனமா நம்புனேன். படம் ரிலீஸ் ஆகி மக்கள் எல்லாம் அந்த படத்தின் பாடலகளை வெகுவாக பாராட்டி பேசிக் கொண்டிருந்தார்கள். எனக்கு ரொம்ப நெருக்கமான ஒரு நண்பன் கூட முதன் முதலாக சண்டை எல்லாம் போட்டேன். எல்லாரும் சொன்னார்கள் இதுல என்ன இருக்கு அன்றைக்கு எப்படி ராஜ பெரிய ஆளா ஆனாரோ அது மாதிரிதான் இதுவும் மேலும் ராஜாவும் சும்மா இல்லை அவரு நிறைய சாதனைகள் எல்லாம் பண்ணிட்டார்னு. மனம் நம்ப மறுத்துச்சு, கிட்டத்தட்ட இந்த கால கட்டத்துல தான் நான் முழு பைத்தியமானேன். அது எப்படி இவ்வளவு சாதனைகள் செஞ்ச ஒரு ஆளு ஒரு படத்துலையே கீழே போயிருவார்..? குமுதம் இதழில் "ரோஜா" படத்துக்கான விமர்சனத்துல இசை பற்றி குறிப்பிடும் போது "பாடல்களில் ஒரு புது தொனி தெரிகிறது. (இளையராஜாவிற்கு ஒரு சக்களத்தி)" அப்படின்னு போட்டிருந்தார்கள். ராஜாவிற்கு போட்டியா..? ஹ ஹா..எத்தனை பேரை பார்த்தவர் ராஜா..? டி.ராஜேந்தர்,சங்கர்-கணேஷ்,பாலபாரதி,தேவா,ரவீந்திரன்,தேவேந்திரன் இப்படி பல பேரை சம காலத்தில் சர்வ சாதரணமாக ஓரம் கட்டியவர். அந்த பட்டியலில் இந்த ஏ.ஆர்.ரஹ்மானும் ஒன்று. ராஜாவை பற்றிய விஷயங்களை தேடி தேடி படிக்க ஆரம்பித்தேன். மணிரத்னத்தின் பெயரும் விருப்ப லிஸ்டிலிருந்து தூக்கியாச்சு. "புதிய முகம்" என்று ஒரு படம் அதிலும் பாடல்கள் சூப்பர் ஹிட் அப்படின்னு சொன்னாங்க. அந்த படத்தை பார்த்தேன், அந்த படத்திலும் ஒரு குறை தெரிந்தது. சொல்ல மறந்துட்டனே "ரோஜா" படம் பார்த்த பொழுது எல்லோரும் படத்தையும் இசையையும் சொன்னபொழுது என் மனதில் அந்த படத்தை பற்றி ஆஹா என்றோ ஓஹோ என்றோ தோன்றவில்லை. சொல்லப் போனால் அந்த படத்தின் பின்னணி இசையில் ஒரு குறையே தென்பட்டது. இதை சொன்ன போது நண்பர்கள் எல்லோரும் எனக்கு முழு பைத்தியம் பிடித்ததை உறுதி செய்தார்கள்.
சரி இனிமே நாம என்ன சொன்னாலும் கேட்கவா போறாங்க. இந்த சமயத்துல கூட எனக்கு உதவியது ராஜாவின் பாடல் தான். 'எது வந்தால் என்ன எது போனால் என்ன என்றும் மாறாது வானம் தான்..". வான் போல இளையராஜா இருக்க என்ன கவலை. கிட்டத்தட்ட இந்த சமயத்தில் தான் கமலின் "தேவர் மகன்" வெளிவந்தது. எல்லா பாடலும் அருமையா இருந்துச்சு. ஆனா பாருங்க எல்லா ஊடகங்களிலும் விமர்சனங்களிலும் ரொம்ப அருமை பெருமையா எழுதாமல் இதெல்லாம் இளையராஜாவின் கடமை அதாவது இளையராஜாவிற்கு சாதரண விஷயம் என்பது போல. அடுத்து "ஜென்டில் மேன்","காதலன்" அப்படின்னு ஹிட் கொடுத்து ஏ.ஆர்.ரஹ்மான் மேலே ஏற ஆரம்பித்தார். ஆனால் அந்த காலத்திலும் இளையராஜா கொஞ்சம் கூட தரம் குறையாமல் பாடல்களை கொடுத்தார் உதாரணத்திற்கு சிலவை இங்கே "ராஜகுமாரன்","வள்ளி","சிறைச்சாலை","மகாநதி","பிரியங்கா","மகளிர் மட்டும்" இப்படி பல படங்கள் இவற்றில் இளையராஜாவின் பங்களிப்பு எல்லாம் பெரிய அளவில் பேச படவில்லை, ராஜாவின் ரசிகர்களை தவிர. அல்லது இவை அந்த பாடல்களுக்குரிய தகுதியான இடத்தை பெறவில்லை. இவை எல்லாம் எப்படி நிகழ்ந்தது..? ராஜாவை எல்லாரும் ஒதுக்கிய பொழுது என்னை போன்ற (முழு அல்லது அரை) பைத்தியங்களை எல்லாம் ஒரு தனி தீவில் விட்டுவிட்டு மற்றவர்கள் எல்லாம் சென்று விட்டதை போலவே நான் உணர்ந்தேன். இதன் பிறகு ராஜா எவ்வளவோ ரொம்ப ரொம்ப சாதரண படங்கள் பண்ணி இருக்கிறார், சில படங்கள் ரிலீஸ் ஆகமலே இருந்திருக்கின்றன (பரணி,பூஞ்சோலை,காதல் சாதி இன்னும் பல)
ஆனால் எந்த படமானாலும் அந்த படத்தின் ஆடியோ கேசட் அல்லது சி.டி. வாங்குவதை ஒரு கடமையாகவே செய்ய ஆரம்பித்தேன். இன்னும் ஞாபகம் இருக்கிறது அன்று "தேவதை" படத்தின் ஆடியோ ரிலீஸ் என்று. சாப்பிட வைத்திருந்த காசில் ஆடியோ கேசட் வாங்கிவிட்டு கிட்டத்தட்ட நான்கு கிலோமீட்டர் நடந்தே நான் தங்கி இருந்த இடத்திற்கு சென்றேன். இதை நான் பெருமையாக இப்பொழுது கூட நினைத்து பார்க்க முடியவில்லை. மாறாக இது எல்லாம் அதி அற்புதமான இசையை வழங்கிய ஒரு மகா கலைஞனுக்கு செய்யும் ஒரு கடமையாகவே பார்த்தேன், பார்க்கிறேன். மேற்சொன்ன அந்த படத்தின் பாடல்களிலும் நான் "இளமை ஊஞ்சலாடுகிறது" -வில் பார்த்த ராஜா தெரிகிறார். எல்லாரும் சொன்னாங்க ராஜா ஹிட் டைரக்டர்களின் படத்திற்கு இசை அமைப்பதில்லை, அவர் முன்னாடி பண்ண மாதிரி அவர் இசை அமைச்சாலே படங்கள் ஓடணும்னு எதிர்பார்க்க முடியாது, அவரால் இளைய தலைமுறையினருக்கு ஏற்ற மாதிரி இசை அமைப்பதில்லை, அவருக்கு தலைகனம் அதிகம், இயக்குனர்கள் சொல்வதை கேட்பதில்லை தனக்கு தோன்றியவற்றை தான் இசை அமைக்கிறார், இப்படி பல குற்றச்சாட்டுகள். நான் எதையும் நம்புவதில்லை, சொல்லப்போனால் எல்லாவற்றிற்கும் (ஒரு வெறியனா) என்னிடத்தில் நியாயமான பதில்கள் இருக்கு. ஒரு விஷயம் ராஜா 90 களுக்கு பிறகு நல்ல பாடல்களை தருவதில்லை என்று சொல்பவர்களுக்காக ஒரு லிஸ்ட்..
பூமணி, ஒரு ஊர்ல ஒரு ராஜ குமாரி,கட்டுமரக்காரன்,பூந்தோட்டம்,அவதாரம்,வீட்ல விசேஷங்க, காக்கை சிறகினிலே,இவன்,HOUSEFULL,காதல் கவிதை,என்னருகே நீ இருந்தால், சக்கரை தேவன்,வியட்நாம் காலனி,பிரியங்கா,ஜூலி கணபதி,காத்திருக்க நேரமில்லை,காதல் சாதி(வெளியாகவில்லை இதுவரை)
இந்த லிஸ்ட் இன்னும் பெரியது, இந்த படங்களின் பாடல்களை கேளுங்கள் கேட்டுவிட்டு இந்த பாடல்கள் ஏன் அவை வெளிவந்த காலகட்டத்தில் பெரிய அளவில் பேசப்படாமல் போனது என்பதற்கு காரணம் சொல்லுங்கள். பிறகு சொல்கிறேன் இளையராஜா ஏன் ஹிட் இயக்குனர்களின் படங்களுக்கு இசை அமைப்பதில்லை என்றும், ஏன் தனக்கு தோன்றியவற்றை மட்டும் இசை அமைக்கிறார் என்றும். இதோ இன்றைக்கு இந்த அளவு வந்தபிறகும் கூட இளையராஜாவை அந்த இடத்திலிருந்து இறக்க மனசு வரவில்லை, எனக்கு தெரிந்து இறக்கும் வரை இப்படியேதான் இருப்பேன். இதை பிடிவாதம் என்று ஒத்துக்கொள்ள மாட்டேன். ஏன்னா இன்றைய பழசி ராஜா வரை ராஜாவின் பாடல்களை என்னால் அன்று எப்படி "முரட்டு காளையை" ரசித்தேனோ அதே முழு மனதுடன் ரசிக்க முடிகிறது.
நான் அடித்து சொல்றேன் வருங்காலங்களில் இளையராஜாவால் இன்னொரு "மௌன ராகம்","சிந்து பைரவி","முதல் மரியாதை" தர முடியும். இதற்கு அவருக்கு எல்லாம் வல்ல அந்த இறைவன் நிச்சயம் உதவுவான். இளையராஜாவை இன்று மதிக்காமல் அல்லது அவரது இசையை உதாசீனம் செய்பவர்களுக்கு ஒரு வேண்டுகோள், ராஜா ஒரு இசை பெருங் கடல் அதை நீங்கள் போற்றி புகழ வேண்டாம் எங்களைப் போல், ஆனால் குறைந்த பட்சம் குறை சொல்லாமலாவது இருக்கலாமே. இதை நீங்கள் ராஜாவுக்கு செய்யும் மரியாதையாக கூட நினைக்கவேண்டாம், இசைக்கு செய்யும் மரியாதையாக நினையுங்கள். இசை வேறுபாடுகளை களைய கூடியது, இங்கு வேண்டாமே விரோதம். இதை சொன்னால் என்னை கிறுக்கன் என்கிறார்கள்.

நன்றி: எண்ணங்கள் சரவணன்

ஹலோ ஒரு (ரசிக) கிறுக்க ன் பேசுறேன் - 2



apsaravanan
பகுதி 2

கால்வாசி கிறுக்கனா மாறினாலும் அந்த தலைவர் (ரஜினி) வெறி மனதை தாண்ட மறுத்தது. கிராமமும் அல்லாத நகரமும் அல்லாத ஒரு இடத்தில் சின்ன வயதில் எந்த சாயமும், அதாவது எந்த ஒரு தமிழ் நடிகரின் ஆதரவாளனாக இல்லாமல் வளருவது என்பது கொஞ்சம் கஷ்டமும் கூட. வளர்ந்து நமக்கு விவரம் தெரிந்த பிறகு வண்ணமில்லாமல் தோன்றலாம் ஆனால் எதையும் தெளிவாக புரிந்து கொள்ள முடியாத அந்த சிறு வயதில் ஒரு வண்ணம் அவசியம் முன்னமே சொன்னது போல மற்றவர்களோடு சேர்ந்து விளையாடுவதற்காகவாது அது தேவை பட்டது.
கழுகு என்று ஒரு படம், ஏற்கனவே கூட படிக்கிற பசங்க எல்லாம் பாத்துட்டு "பயமா இருக்குதுன்னு" சொல்லி இருந்தாலும் தலைவருக்காக பார்க்க கிளம்பினேன். படத்தை முழுசா பர்ர்த்ததை விட, கை விரல்களுக்கு நடுவில் பார்த்தது தான் அதிகம். அவ்வளவு பயமா இருந்தது அதுக்கு காரணம் இளையராஜாவின் பின்னணி இசை என்பதை காலம் தான் சொல்லியது. சங்கிலி முருகன் ஒரு மந்திரவாதியாக நடித்திருப்பார் அவர் முகம் கண்களை விட அந்த காங்கோ வாத்திய கருவியின் பீட்டு நிறைய அதிர்வை தந்தது. கிட்டத்தட்ட
அதே கால கட்டத்தில் வந்த "குரு" கமல் நடித்த அந்த படம் இலங்கை வானொலியில் அடிக்கடி அந்த "ஆடுங்கள் பாடுங்கள்" பாடலை போட்டு கலக்கி கொண்டிருந்தார்கள். இருந்தாலும் தலைவர் விதி அந்த படத்திற்கு போக அனுமதிக்க வில்லை. ஆனால் வீட்டிலுள்ளவர்களால் அந்த படத்திற்கும் வலு கட்டாயமாக அழைத்து செல்லப்பட்டேன். அந்த படத்தில் கமல் குருவாய் தோன்றும் பொழுதெல்லாம் எழுப்பப்படும் இசை அப்படியே நாமளும் குதிரையில் போனால் எப்படி இருக்குமோ அப்படி இருந்துச்சு. அட என்னடா இப்படி ஒரு இசையை கமல் படத்தில் போட்டுட்டாரே இந்த ஆளு. அப்படின்னு நினைக்கும் பொழுது "தனிக்காட்டு ராஜா" வந்தது எல்லா பாட்டும் சும்மா அப்படி இருந்தது. அப்ப கூட எனக்கு இதெல்லாம் இளையராஜாவிற்கு சாதாரணம் என்பதை நம்ப மறுத்தேன்.

அப்பொழுதெல்லாம் இளையராஜாவின் பாட்டுக்கள் ஹிட் என்பது எழுதப்படாத ஒரு விதி. இளையராஜா ஒரு பேட்டியில் சொன்னதைபோல "அதை கேட்க வேண்டியது தமிழக மக்களின் தலை விதியாக " மாறிப் போயிருந்தது. "அழகே உன்னை ஆராதிக்கிறேன்" , "ப்ரியா" என படங்கள் வரிசை யாக ஹிட் அடித்த நேரம். கொஞ்சம் கொஞ்ச மாக மனசு இளையராஜாவை நோக்கி நகர்ந்தது. சரி தலைவரையும் விட வேணாம் ராஜாவையும் விட வேணாம் ஏன்னா தலைவர் படங்கள் எல்லாவற்றிற்குமே ராஜாதானே இசை. அதனால் ரஜினி பாதி ராஜா பாதின்னு வச்சுக்கலாம்னு முடிவு பண்ணியது மனசு. அப்பவெல்லாம் தலைவர் படத்திலேயே பிடிக்காத படம் "ராணுவ வீரன்" ஆனா அதை வெளிப்படையா சொல்ல முடியலை அல்லது தெரியலை. ஆனா அந்த படத்தில் ஒரு குறை தென் பட்டது. அது ராஜாவின் இசை என்பதை வளர்ந்த பிறகே தெரிந்து கொண்டேன். இந்த காலகட்டத்துக்கு அப்புறம் எனக்கு நினைவில் இருப்பது "புன்னகை மன்னன்" படத்தின் பாடல்கள் வெளியான புதிதில் அந்த படத்தின் கேசட்டை நண்பர் ஒருவரிடமிருந்து அவ்வப்பொழுது இரவல் வாங்கி கேட்பது வழக்கம். அதில் போட்டிருக்கும் இளையராஜா படத்துடன் பேசி இருக்கிறேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். எப்படி இந்த இசை இவருக்கு சாத்தியமானது. ஒரு பக்கம் "சலங்கை ஒலி" மாதிரியான சாஸ்திரிய இசை, "முதல் மரியாதை", "மண்வாசனை" போன்ற கிராமத்து பாடல்கள், இன்னொரு பக்கம் "புன்னகை மன்னன்" மாதிரியான மேற்கத்திய இசை. அப்புறம் இசையில் வேற என்னதான் இருக்குது...? எல்லாமே என் வசம் இப்பவாது என்னை முழுமையா நம்புறியா இல்லையா என்றது "புன்னகை மன்னன்" கேசட்டின் மேலிருந்த இளையராஜா. விடுவோமோ..? ஹும் நாங்க எல்லாம் கொள்கை குலவிளக்கு. எங்க கிட்டயேவா. இந்த படங்களில் சம்மந்த பட்டிருந்தவர்களும் என்னுடைய விருப்ப லிஸ்ட்-ல் பிடித்த இயக்குனர்களாக பாரதிராஜாவும்,வைரமுத்துவும்,மணிவண்ணனும் இருந்தார்கள். திடீரென்று ஒரு குமுதம் இதழில் வைரமுத்து இனிமே இளையராஜா கூட பணிபுரிய மாட்டார் என்ற செய்தி படித்து. அட இது என்னடா என்று நினைத்து, வைரமுத்துவை என்னுடைய விருப்ப லிஸ்ட்-இலிருந்து தூக்கி விட்டேன். அப்புறம் பார்த்தா பாரதிராஜாவும் போறார்னு போட்டிருந்துச்சு. ஆனால் அவரை அவ்வளவு சீக்கிரம் தூக்க முடியவில்ல அத்துடன் அப்பொழுதுதான் "வேதம் புதிது" பார்த்தேன். ஆனா இவ்வளவு திறமையான படத்தில் இளையராஜாவிற்கு இடமில்லையே அப்படி என்றால் ....? என்று யோசித்து கொண்டிருக்கும் போதே வந்துச்சு "மௌன ராகம்" இளையராஜா அனேகமாக பாரதிராஜாவின் மேலிருந்த கோபத்திலேயே இந்த மாதிரியான படங்களுக்கு ட்யூன் போட்டிருக்க வேண்டும், இதை நான் எப்படி சொல்கிறேன் என்றால், இளையராஜா திரை துறையின் தனிக்காட்டு ராஜாவாக வலம் வரத்துவங்கிய பொழுதில் வந்தது "ஒரு தலை ராகம்" எல்லா பாடல்களும் ஹிட், ராஜாவிற்கு மாற்றா டி.ராஜேந்தர் என்ற விமர்சனம் வந்ததாம், அப்பொழுது தான் அவர் "பயணங்கள் முடிவதில்லை" கொடுத்ததாக ஒரு பத்திரிகையில் படித்தேன். எப்படியோ "மௌன ராகம்", "இதயகோவில்", என வரிசையா ஹிட். சரி பாரதிராஜா போனால் என்ன அதான் மணிரத்னம் இருக்காரே, அவரது புதுமையும் மிகவும் பிடித்திருந்தது. வந்தது "நாயகன்" என் மனதில் ரஜினி பாதி ராஜா பாதி என்ற நிலைமை மாறி ராஜா முக்கால், ரஜினி கால் என்ற நிலைமை உருவானது. ரஜினியும் ராஜாவை விட்டுவிட்டு "மனிதன்", "ராஜா சின்ன ரோஜா" போன்ற படங்களை பண்ணினார். ஆனால் அப்பொழுதெல்லாம் ரஜினியை சுத்தமா வெறுக்க முடியவில்லை. "அக்னி நட்சத்திரம்" வந்தது யாரவது அந்த படத்தை பத்தி பேசினாலே அவுங்கதான் எனக்கு நண்பர்கள். "ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா.." பாடலின் படமாக்கல் மணிரத்தினம் மீதான மரியாதையை கூட்டி போயிருந்தது. "பணக்காரன்","மன்னன்" என ரஜினி மீண்டும் இளையராஜாவிற்கு மாறி இருந்ததால் ரஜினியையும் மெய்ண்டைன் பண்ணுவது சுலபமாக இருந்தது. இந்த கட்டத்தில் நடந்த மிகப் பெரிய மாற்றம் தான் நிரந்தரமாக இருக்கப் போகிறது என்று நான் அன்று அறியவில்லை.
மிகவும் பிடித்த இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் தலைவர் நடிக்கும் "தளபதி" என்னை அதை பற்றி மட்டுமே சிந்திக்க வைத்தது. சாப்பிடும் போதும் தூங்கும் போதும் "தளபதி" தான். அந்த தீபாவளிக்கு "தளபதி" யுடன் கமலின் "குணா" மற்றும் பாரதிராஜாவின் "நாடோடி தென்றல்" போன்ற படங்கள் ரிலீஸ் செய்யப்பட்டன. வழக்கம் போல் "தளபதி" பார்த்தாச்சு ஆனால் ரொம்ப புடிச்ச இயக்குனர் இயக்கி இருந்தும், ரொம்ப புடிச்ச நடிகர் நடித்திருந்தும், அந்த படம் பெரிய அளவு தாக்கத்தை என் மனதில் உண்டு பண்ணவில்லை மாறாக பெரிய ஏமாற்றத்தை தந்தது. ஆனால் ராஜாவின் இசை மட்டும் திருப்தியை இருந்தது. திருப்தின்னா என்ன எதிர்பார்ப்பை பூர்த்தியாவது, "தளபதி" படத்தில் என்னை போன்ற ரசிகர்களுக்கு எல்லா துறையிலும் இருந்தது ஆனால் இசையை தவிர வேறு எதுவும் மனசை ஆக்கிரமிக்கவில்லை. மனசு மீண்டும் சொல்லியது ராஜா யாருடன் இணைந்தாலும் அங்குதான் வெற்றி இருக்கும்னு. ஒருவரை ரசிக்க வெற்றியும் தேவைன்னு நினைத்திருந்த காலகட்டம் அது. ஏன்னா கல்லூரி காலம் அல்லவா..? நிச்சயம் முழு பைத்தியம் (ரசிகன்) ஆன கதை அடுத்த பகுதியில் சொல்லப்படும்.

நன்றி: எண்ணங்கள் சரவணன்

ஹலோ ஒரு (ரசிக) கிறுக்க ன் பேசுறேன்



apsaravanan
பகுதி 1
"டேய் நாளைக்கு நம்ம ஊரு எக்ஸ்ல் தியட்டர்ல முரட்டுகாளை படம்டா" -- நண்பன் சொல்லியவுடன் தூக்கமே வரவில்லை. படத்தின் போஸ்டர் வைத்தே பல கதைகளை மனதில் நினைத்தவாறே தூங்கி போனேன். மறு நாள் காலைல போயி பார்த்தால், ரஜினி மன்னிக்கணும் தலைவர் கம்பீரமா நிக்கும் போஸ்டரும் அதை சுற்றி கலர் கலர் பேப்பர்களும் ஒட்டப்பட்டிருந்தன. இதற்கு முன் வேறு எந்த படம் வரும் போதும் அப்படி ஒட்டி நான் பார்த்ததில்லை. அப்பவெல்லாம் ரிக்கார்ட் பிளேயர் தான் பாட்டு போடுவதற்கு சவுண்ட் சர்வீஸ் அதைத்தான் பயன் படுத்தும். பென்ச் டிக்கெட் 50 காசுகள், உட்கார குஷன் வைத்த சீட் 1.50 , சாய்வதற்கும் உட்காருவதற்கும் குஷன் வைத்தது 2.00 ரூபாய். மிடில் கிளாஸ்-ல அதை நிரூபிக்கும் விதமாக 1.50 க்கு தான் நாங்கள் எல்லாம் அழைத்து செல்ல படுவோம். ஆனால் எனக்கோ 50 காசு பெஞ்சில் அமர்ந்து கொண்டு விசிலடிக்கும் நண்பர்களை நோக்கியே மனசு இருந்தது, அவர்கள் எல்லாம் தனியாக வந்து படம் பார்ப்பார்கள். எங்கள் வீட்டில் அதெல்லாம் பற்றி கனவு கூட காண முடியாது. படம் ஆரம்பிக்கிறது, "எவண்டா இந்த காளையை அடக்குவான்.." அப்படின்னு சொன்னதுமே, கேமரா வானம் பார்க்கிறது, இப்ப மாதிரி கொஞ்சம் விஷயம் தெரிஞ்சால் ஏன் கேமரா மேனின் அங்கிள் மாறி போச்சுன்னு யோசித்திருப்பேன், அப்ப அதெல்லாம் முக்கியமாய் தெரியலை சீக்கிரம் தலைவரை காட்டுங்கப்பா அப்படின்னு மனசு துடிக்க ஆரம்பித்தது, தலைவர் சும்மா அப்படி துள்ளி வர்றார் எனக்கு அப்படியே காத்துல பறக்குற மாதிரி இருந்துச்சு. ஆனா இதெல்லாம் மனசுக்குள்ள தான் வெளில இதெல்லாம் காட்ட முடியாது காட்டுனா அவ்வளவுதான் "இனிமே சினிமாவே கிடையாதுன்னு" ஒரு கட்டளை பிறப்பிக்கப்படும். அதுனால எல்லாத்தையும் மனசுக்குள்ள அடக்கிகிட்டு படம் பார்த்தேன், அதுல வந்த பாட்டுக்கள் மட்டும் மனசை என்னவோ பண்ணுச்சு. ஆனா அவை எல்லாம் தலைவருக்காகதான்னு மனசு நினச்சுசு. அதுக்கு பின்னாடி இளையராஜாங்குற பெரிய இசை சிங்கம் இருக்குன்னு தெரியலை. ஒரு நாள் அந்த படத்தை பத்தி பேசுறப்ப ஒரு நண்பன் சொன்னான் (ரெண்டு வயசு பெரியவன்னு நினைக்கிறேன்) "இந்த படத்துக்கு மட்டும் M.S.V மியூசிக் போட்டிருந்தா படம் எங்கேயோ போயி இருக்கும், இந்த இளையராஜா சாவு மேளம் அடிச்சு படத்தையே கெடுத்து வச்சிருக்கார்." அப்படின்னு. அப்ப அந்த நபர் இளையராஜாவை சாதி சார்ந்து பேசுறார்ன்னு தெரியாம போச்சு பத்து பதினைந்து வருடங்களுக்கு பிறகுதான் அதை தெரிந்து கொண்டேன். ஆனா அப்ப அந்த நண்பன் சொன்னதை ஆமோதிக்கும் கூட்டத்தில் நானும் ஒருத்தனாய் மண்டை ஆட்டினேன். ஏன்னா அப்படி செயலைன்னா நாளைக்கு பின்ன விளையாட்டுல சேத்துக்க மாட்டங்களே, ஆனா மனசு மட்டும் சொன்னுச்சு நல்லாத்தானே இருந்துச்சு பாட்டெல்லாம். அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சு அதே எக்சல் தியட்டர்ல "சகல கலா வல்லவன்" அப்படிங்குற படம் கமல் நடிச்சது வந்தது, எனக்கென்னவோ படத்துக்கு போகவே பிடிக்கல, பின்ன ஒரு ரஜினி ரசிகன் எப்படி கமல் படம் பார்க்குறது..? ஆனா அந்த படத்துல வர்ற "இளமை இதோ இதோ .." பாடல் மட்டும் மனசுல பதிஞ்சு போச்சு. அதுக்காக இந்த படத்தை பார்க்கலாம்னு தீர்மானிச்சேன், மத்தபடி நிச்சயம் கமலுக்காக இல்லைன்னு தீர்மானமா என் மனசுக்குள் சொல்லிக்கிட்டேன். அப்பவும் அந்த நண்பன் "இதுல வர்ற முக்கியமான டிரம்ஸ் இசை எல்லாம் M.S.V ஐடியாவின் படியே போட்டது.." அப்படின்னு சொன்னார். அதுக்கும் தலையசைப்பு தான் வேற வழி. ஒரு சமயம் விளையாடுறப்ப அந்த நண்பனை எதிர்த்து பேசும் படி ஆகி விட்டது, ஆனால் அதுக்கு நான் எதிர்பார்த்தமாதிரி பெரிய ரீ ஆக்ஷன் எல்லாம் இல்லை மற்றவர்கள் மத்தியில். கொஞ்சம் தைரியம் வந்துச்சுன்னே சொல்லலாம். அப்புறம் அது மாதிரியான நிறைய படங்களுக்கு அவரும் அவரை சார்ந்தவர்களும் இளையராஜாவின் இசையை குறை சொல்லாமல் அவை M.S.V ஐடியாவை வைத்தே ராஜா இசை அமைப்பதாக சொல்லி வந்தார்கள். அந்த நண்பர் அப்படி பேச பேச மனசுக்குள் ராஜாவின் இசையை இன்னும் நெருங்கி பார்க்கவே தோன்றியது. ஆனால் அதை எல்லாம் விட பெரிய ஆளாக இருந்தது ரஜினி தானே அதனால் அவற்றை புறம் தள்ளி வைத்து விட்டேன். காலங்கள் சென்றன, "பயணங்கள் முடிவதில்லை" அப்படின்னு ஒரு படம், அப்பவெல்லாம் "சண்டை பயிற்சி" அப்படின்னு டைட்டில் கார்டு வரலைன்னலே அந்த படம் ஒரு அறுவை (அதாவது இப்ப குப்பைன்னு சொல்றோமே அது மாதிரி) அப்படின்னு சொல்லி முத்திரை குத்தி அந்த படத்தை தலைவிதியேன்னு பார்க்குறது. "பயணங்கள் முடிவதில்லை" படம் ஆரம்பித்து அதில் வரும் "இளையநிலா பொழிகிறது" அப்படின்னு பாடல் ஓடுது, மனசு என்னையும் அறியாமல் ஒரு வேளை இளையராஜா நிஜமாவே பெரிய ஆளோன்னு தோனுச்சு. "சண்டை பயிற்சி" டைட்டில் கார்டில் வராமலேயே ஒரு நல்ல படம் (!?) பார்த்தேன் என்றால் அது "பயணங்கள் முடிவதில்லை" மட்டும்தான். அதுக்கு காரணம் அந்த படத்தில் வரும் பாட்டுகளே என்பது அப்போதைய என் எண்ணம். அது வரையில் அந்த நண்பருக்காக இளையராஜா பெரிய ஆளுன்னு நினைக்கிற கோணம் மாறி நிஜமாவே பெரிய ஆளுதானோ அப்படின்னு நினைக்க தோன்றியது. ஆனாலும் மனசு அவ்வளவு சீக்கிரம் ரஜினியை கீழே தள்ளுவதை ஏற்கவில்லை, ஒரு வேளை அப்பொழுதெல்லாம் ஒரு நடிகனுக்கு கிடைத்த மரியாதை ஒரு தொழில்நுட்ப கலைஞனுக்கு கிடைப்பதில்லை அதுவும் கூட ஒரு காரணமா இருக்கலாம். சுற்றி இருப்பவர்கள் ஒன்றை சொல்லும் போது அந்த வயதில் அதை உறுதிபட நம்பத்தான் தோன்றும். அதை ஆராய தோன்றாது. அப்புறம் "நான் பாடும் பாடல்" என்று ஒரு படம் முதன் முதலாக ஒரு இசை அமைப்பாளரின் பெயரை பெரிதாக போட்டு ஒட்டிய போஸ்டர்ஸ் கண்டு சற்று அதிர்ந்தே போனேன். "இளையராஜாவின் இசையில்" என்று போட்டிருந்தார்கள், அந்த படத்தின் பாடலான "பாடவா உன் பாடலை.." பாடல் இலங்கை வானொலியில் ஒலித்துக் கொண்டே இருந்தது. ஊர்களில் நடக்கும் கல்யாணா வீடுகளில் எல்லாம் "விநாயகனே வினை தீர்ப்பவனே .." பாடலுக்கு பிறகு "பாடவா உன் பாடலை .." தான். இப்போ மனசுக்குள் ஒரு போராட்டமே வந்துவிட்டது என்னடா இது ஒரு இசை அமைப்பாளரை போயி ஒரு நடிகருடன் ஒப்பிடுவதா. அப்படின்னு. அதனாலேயே இளையராஜாவை அவ்வளவு சீக்கிரம் மனம் அங்கீகரிக்க வில்லை. "உதய கீதம்" ன்னு ஒரு படம் "சங்கீத மேகம்.." என்றொரு பாடல், ஊரில் அப்பொழுதான் அங்கொன்றும் இங்கொன்றுமாக இசை பதிவகங்கள் (மியுசிக்கல்ஸ்) ஆரம்பித்த தருணம். எங்கு போனாலும் இந்த பாட்டு தான் பதிந்து கொண்டிருப்பார்கள். அப்பவெல்லாம் செருப்பு போடாமல் தான் பள்ளிக்கூடம் செல்வது, அப்பத்தானே வெளையாடும் போது வேகமா ஓட முடியும், செருப்பை எங்கே கழற்றி வைக்கிரதுங்குற கவலை இல்லாமல் இருக்கலாமே அதுக்காகத்தான். அப்படி போகும் போது நிழல் எங்காவது கிடைத்தால் சற்றே ஒதுங்கி இருந்துவிட்டு மீண்டும் வெயிலில் நடப்பது. அப்படி ஒதுங்குகிற இடமும் இசை பதிவகங்களா இருந்தா கூட சில மணித்துளிகள் ஒதுங்கி இருந்துவிட்டு போவது வழக்கம். அப்படி ஒதுங்கும் போதெல்லாம் கேட்ட பாடல் இளையராஜவினுடயது என்பது அப்பொழுது அறியாவிட்டாலும் பிற்காலத்தில் அறிந்து கொண்டேன், ஆனால் அந்த பாடல்கள் மனசை அப்பவே ஆக்கிரமிக்க ஆரம்பித்து விட்டன. அவ்வாறு கேட்ட சில பாடல்கள்
"கேட்டேளா இங்கே அதை பார்த்தேளா இங்கே .." -- பத்ரகாளி
"கண்ணன் ஒரு கை குழந்தை.." -- பத்ரகாளி
"கீதா சங்கீதா..." -- அன்பே சங்கீதா
"சிறு பறவைகள் மலை முழுவதும்..." -- நிறம் மாறாத பூக்கள்
"கோவில் மணி ஓசை தனை .." -- கிழக்கே போகும் ரயில்
"சிந்து நதிக்கரை ஓரம்..." --- நல்லதொரு குடும்பம்
கிட்டத்தட்ட இந்த தருணத்தில் எல்லாம் நான் கால்வாசி கிறுக்கனாய் (ரசிகன்) போயிருந்தேன் என்றுதான் எனக்கு இப்பொழுது தோன்றுகிறது. அடுத்த பகுதியில் எப்பொழுது எப்படி அரை கிறுக்கனாய் ஆகியிருந்தேன் என்று சொல்கிறேன்.

நன்றி: எண்ணங்கள் சரவணன்

இளையராஜா: காலத்தில் கரையாத கலைஞன்



ஜி. ஆர். சுரேந்தர்நாத்


2010, மே மாதம். பல வருடங்கள் கழித்து, குடும்பத்தினர் இல்லாமல் நண்பர்கள் மட்டும் கேரளா டூர் சென்றிருந்தோம். குமுளி, சித்தாரா ஹோட்டல் அறையில் அந்த இரவு இளையராஜாவின் இசையால் நிரம்பி வழிந்தது. நான் மொபைலில் ஒவ்வொரு இளையராஜா பாடலாக ஒலிக்க விட… நிகழ்காலம் மௌள மௌள மறைந்து, எங்கள் கண் முன்பு காலடியில் உதிர… இறந்த காலம் உயிர் பெற்று எங்களைப் பிரியத்துடன் தழுவிக்கொண்டது. ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு பாடல் சார்ந்தும் சொல்வதற்கு ஏதேனும் அந்தரங்கமான நினைவுகள் இருந்தன.
இளையராஜாவின் பாடல்கள், வெறும் திரையிசைப் பாடல்கள் மட்டுமே அல்ல. அவைக ஏறத்தாழ இருபது ஆண்டுகள், தமிழர்களின் வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருந்தது. ஒரு மகத்தான அந்தரங்க நண்பனாக இருந்தது. அது அவனுக்காக காதலித்தது. அவனுக்காக, குமுறியது. தாயை மறந்த கணங்களை உக்கிரத்துடன் நினைவூட்டியது. சக மனிதர்களால் கைவிடப்பட்ட தருணங்களில் இளையராஜாவின் இசையே அவனைத் தாங்கிக்கொண்டது(அதனால்தான் இளையராஜாவைப் பற்றி ஒரு சிறு விமர்சனம் வந்தால் கூட, தன் தாயைப் பழித்தது போல் பலரும் பொங்கி எழுகின்றனர்.).
இளையராஜாவின் பாடல்கள் உருவாக்கிய கவித்துவமான மனநிலையுடன் அன்றிரவு நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தோம். ஒரு கட்டத்தில் அனைவரும் தூங்கிவிட… என்னால் மட்டும் இளையராஜாவிலிருந்து வெளியே வரமுடியவில்லை. தொடர்ந்து பாடல் கேட்கவேண்டும் போல் இருந்தது.
நண்பர்களின் தூக்கத்தை தொந்தரவு செய்யவேண்டாம் என்று மொபைலுடன் வெளியே வந்தேன். இரவு இரண்டு மணி போல இருக்கும். அந்நேரத்திலும் குமுளி பஸ் ஸ்டாண்டில் ஆட்கள் நடமாட்டம் தென்பட்டது. நான் மெதுவாக தேக்கடி ஏரிக்கரையை நோக்கி நடந்தேன். நடை தளர… ஒரு மூடிக்கிடந்த கடையின் முன்பு படுத்துக்கொண்டேன். மெல்லிய குளிர்… அமைதியான இரவு... தூரத்தில் நிலவொளியில் சலசலக்கும் மரங்கள்… மீண்டும் மொபைலில் இளையராஜாவின் பாடல்களைக் கேட்க ஆரம்பித்தேன்.
முதலில் ~‘நானே ராஜா… நானே மந்திரி’ படத்தில் இடம் பெற்ற ~~மயங்கினேன்… சொல்லத் தயங்கினேன்" பாடல். பாடல் முடிந்தபோதுதான் எதிர்க்கடையின் வாசலில் இருவர் அமர்ந்திருந்ததைக் கவனித்தேன். என்னைப் பார்த்தபடி ஏதோ பேசிக்கொண்டிருந்தனர். நான் பொருட்படுத்தாமல் அடுத்து ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’ படத்தில் இடம் பெற்ற, ~~என்னுள்ளில் எங்கோ… ஏங்கும் கீதம்…" என்ற பாடலுக்குள் நுழைந்தேன். அப்படியே அடுத்து… அடுத்து… என்று வரிசையாக இளையராஜா பாடல்களில் கரைந்துகொண்டேயிருந்தேன். இடம், காலம், இருப்பு… என்று அனைத்தையும் மறந்து இசையில் மூழ்கும் தருணங்கள் எல்லாம் இதுபோல் எப்போதாவதுதான் அரிதாக அமையும்.
திடீரென்று அருகில் நிழலாட நிமிர்ந்தேன். எதிரேயிருந்த இருவரும் இப்போது என்னருகில் நின்றுகொண்டிருந்தனர். எனக்கு சொரேலென்றது. முன் பின் தெரியாத ஊர். வழிப்பறிக் கொள்ளையாக இருக்குமோ என்று பயத்துடன் எழுந்து அமர்ந்தேன்.
அதில் ஒருவன், "ஸார்… டூரிஸ்ட்டா?" என்றான். உச்சரிப்பில் மலையாளம்.
"ஆமாம்…" என்று எழுந்தேன்.
"யாரு ஸாங்கு இதெல்லாம்… அடிபொலி…" என்ற பிறகுதான் அவர்கள் இருவரும் பாடல்களைக் கேட்டுக்கொண்டு அமர்ந்திருந்தனர் என்பது புரிந்தது. நான் அனைத்தும் இளையராஜாவின் பாடல்கள் என்று கூறினேன். ~~எல்லாப் பாட்டும் எங்கயோ கொண்டு போய்டுது சார்… இதெல்லாம் இளையராஜா பழைய தமிழ் பாட்டா சார்… நாங்க கேட்டதேயில்லை…’’ என்று பேச ஆரம்பித்தார்கள். நானும் ஆர்வத்துடன் உரையாட ஆரம்பித்தேன். இடையிடையே மிகவும் உற்சாகத்துடன் பாடல்களை ஒலிக்கவிட்டு அவர்களின் கருத்தைக் கேட்டேன். அப்படியே நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு அவர்கள் பிரிந்தபோது, மள்ள விடிய ஆரம்பித்திருந்தது.
அவர்கள் இருவருக்கும் கிட்டத்தட்ட இருபது வயதுதான் இருக்கும். இப்போதுதான் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கிறார்கள். இளையராஜா உச்சத்தில் இருந்த காலத்தில் அநேகமாக அவர்கள் பிறந்திருக்கமாட்டார்கள். மேலும் பொதுவாக மலையாளிகள் அவ்வளவு சீக்கிரம் ஒட்டிவிடமாட்டார்கள்(இந்த விஷயத்தில் அவர்கள் ஜெர்மானியர்கள் மாதிரி.). முதல் அறிமுகத்தில் எல்லாம் ஏறத்தாழ எதிரியிடம் பேசுவது போலத்தான் பேசுவார்கள். ஆனால் இளையராஜாவின் இசை அவர்களை உடனே என்னுடன் நெருங்கச் செய்தது, பல மணி நேரம் பேசச் செய்தது.
ஆம்… இளையராஜாவின் இசையின் அற்புதம் அதுதான். அது உங்கள் மனதை இளகச் செய்கிறது. நெகிழச் செய்கிறது. உங்கள் கர்வத்தை எல்லாம் மறக்கச் செய்கிறது.
இவ்வாண்டு சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருது இளையராஜாவிற்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. இளையராஜாவின் பாடல்கள் போல, இளையராஜாவின் பின்னணி இசையும் ஒரு தனி வரலாறு. அதிகம் விவாதிக்கப்படாத வரலாறு.
இளையராஜாவிற்கு முன்பு பின்னணி இசை என்பது, வசனங்களுக்கிடையேயான மௌனத்தை நிரப்பும் வெறும் வாத்தியங்களின் சத்தமாகவே இருந்தது. இளையராஜாவே காட்சிகளுக்கேற்றாற் போன்ற உயிரோட்டமான இசையை அளித்து, பின்னணி இசையை ஒரு மகத்தான கலை அனுபவமாக மாற்றிக் காட்டினார். எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் ஒரு கட்டுரையில், ‘இளையராஜாவின் பின்னணி இசையைத் தொகுத்து ஒரு ஆல்பமாக கொண்டுவரவேண்டும். என்று கூறியது இத்தருணத்தில் நினைவிற்கு வருகிறது.
வார்த்தைகளாலோ, காட்சிகளாலோ… ஏன் மௌனத்தாலோ கூட வெளிப்படுத்த முடியாத சில அபூர்வ கணங்கள் வாழ்க்கையில் உள்ளன. உதாரணத்திற்கு திரைப்படங்களில், கதாபாத்திரங்களின் கண்களில் காதல் உணர்வைக் கொண்டு வந்து காட்டினாலும், ஒரு கட்டத்திற்கு மேல் அதை அழுத்தமாகச் சொல்வதற்கு ஒரு துணை தேவைப்பட்டது. அந்த துணையாக இளையராஜா இருந்தார். இளையராஜாவின் பின்னணி இசை என்பது, வெறும் இசை மட்டும் அல்ல. அது திரைக்கதையில் எழுதப்படாத ஒரு பகுதியாகவே எப்போதும் இருந்து வருகிறது. இளையராஜாவின் பின்னணி இசையால், காட்சிகள் கவிதைகளாக மாறும் அதிசயம் நிகழ்ந்தது.
அவற்றில் சிலவற்றை இங்கே உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். ஏனெனில், இசை விமர்சகர் ஷாஜியின், ~இசையின் தனிமை’ குறித்த கலந்துரையாடல் கூட்டத்தில் கவிஞர் மனுஷ்ய புத்திரன் அழகாகக் கூறியது போல், தமிழ்ச் சமூகம் மறதியின் மீதுதான் நடந்துகொண்டிருக்கிறது.
‘வருஷம் 16’ படத்தில் ஒரு காட்சி. கார்த்திக்கும், குஷ்புவும் முதலில் வீட்டில் சந்திக்கின்றனர். பிறகு மறுநாள் வெளியே ஒரு வயல் வரப்பில் சந்திக்கின்றனர். அப்போது கார்த்திக் குஷ்புவிடம், "இந்த ஊர்ல அருந்ததி பூங்கான்னு ஒரு பூங்கா இருக்கு. அங்க கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடி ஒரு குட்டி கண்ணணும்(கார்த்திக் கதாபாத்திரத்தின் பெயர்), ஒரு குட்டி ராதிகாவும்(குஷ்பு)…" என்று துவங்கும்போது, இசை ஒலிக்க ஆரம்பிக்கும். முதலில் மிகவும் வேகமாக… அதாவது அவர்களுடைய நினைவுகள் வேகமாக இறந்த காலத்தில் நுழைவதைக் காண்பிப்பதற்கு மிகவும் வேகமான ஒரு இசையும், பிறகு அவர்கள் இறந்த காலத்திற்குள் நுழைந்து அந்த நினைவுகளில் தேங்கியவுடன் ஒரு அமைதியான புல்லாங்குழல் இசையும் ஒலிக்கும். இங்கு ஃப்ளாஷ்பேக் ஏதும் கிடையாது. ஏனெனில் ஒரு அழுத்தமான ஃப்ளாஷ்பேக் அளித்திருக்கக்கூடிய தாக்கத்தை அந்த இசையால் அளிக்க முடிந்தது. அந்த இசையே, அந்தக் காட்சியை இன்னும் என்னால் மறக்க முடியாத காட்சியாக்குகிறது.
அதே போல் ‘சலங்கை ஒலி’ படத்தில் ஜெயப்ரதாவுக்கு ஏற்கனவே திருமணமாகியிருக்கிறது என்று தெரிந்தவுடன், கமல் ஆவேசமாக கடற்கரையில் ஒரு நடனம் ஆடுவார். அந்த நாட்டியத்திற்கான இளையராஜாவின் இசை, இளையராஜாவின் ஆகப்பெரிய அற்புதங்களில் ஒன்றாகும். கமலின் அந்த மனக்கொந்தளிப்பு, குமுறல், இயலாமை… என்று அத்தனை உணர்வுகளையும் வாத்தியங்களில் இளையராஜா வெளிக்கொணர்ந்த விதம்…. இப்போது நினைத்தாலும் சிலிர்க்கிறது.
நம் வாழ்வில் ஒரு மிகப் பெரிய துக்கத்தை அனுபவித்து, அழுதுப் புரண்டு ஓய்ந்தவுடன் மனதில் ஒரு சோகமான அமைதி மெள்ள வந்து தழுவும். அதை வார்த்தைகளால் கூட வெளிப்படுத்துவது கடினம். ஆனால் அதனை இளையராஜா ~அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் அற்புதமாகச் செய்திருப்பார். டைட்டிலுக்கு முன்பு ஆற்றங்கரையில் கமல் கொல்லப்பட்டு, ஸ்ரீவித்யா படகில் கதறியழுது, ஓய்ந்து அமைதியானவுடன் மெள்ள ஒரு புல்லாங்குழல் இசை ஒலிக்க ஆரம்பிக்கும்(படத்தின் தீம் மியூசிக்கும் அதுதான்). அந்த இசை உருவாக்கும் துயரமும், அமைதியும் மிகவும் அலாதியானது.
மேலும் ‘முதல் மரியாதை’ படத்தில், ரஞ்சனி இறந்தவுடன், தீபன் புல்லாங்குழலை மேலே எறிந்துவிட்டு நீரை நீக்கி ஓடுவார். காற்றில் பறக்கும் புல்லாங்குழல் மேலே நீண்ட தூரம் செல்ல… இடையில் ஊரார் ஓடிவருவது உள்ளிட்ட ஏராளமான கட் ஷாட்களுடன் இணைந்து, அந்த புல்லாங்குழல் மீண்டும் நீரில் விழும் வரையிலான காட்சிக்கு இளையராஜா இசைத்த புல்லாங்குழல் இசை, இளையராஜாவின் மாஸ்டர் பீஸ்களில் ஒன்றாகும். வாழ்க்கையில் சற்றும் எதிர்பாராத ஒரு துயரத்தையும், அதன் விளைவுகளையும் இசையால் காட்சிப்படுத்திய அபூர்வ திரைத் தருணங்களில் அதுவும் ஒன்றாகும்.
அதே போல் ‘மௌன ராகம்’ படத்தின் பின்னணி இசையை , வசனங்களை மட்டும் கட் செய்துவிட்டு நீங்கள் கேட்டுக்கொண்டே இருக்கலாம். இவ்வாறு ‘அலைகள் ஓய்வதில்லை’,‘ சிந்து பைரவி’ என்று பல படங்களிலிருந்து என்னால் ஏராளமான உதாரணங்களை கூறமுடியும்.
இத்தனைக்கும் எனக்கு இசையின் நுணுக்கங்கள் குறித்தோ, ராகங்கள் பற்றியோ எதுவும் தெரியாது. கேட்பதற்கு நன்றாக இருக்கும் இசையை ரசிப்பேன் அவ்வளவுதான். இளையராஜாவின் ‘ஹெள டூ நேம் இட்’ குறித்து, ~சொல்வனம்" இணைய இதழில், ரா. கிரிதரன் என்பவர் இசை பற்றிய நுணுக்கமான அறிவுடன், அது மேற்கத்திய இசையின் என்ன கூறுகளைக் கொண்டது என்றெல்லாம் மிகவும் விரிவாகக் கூறியிருந்தார். அந்த விபரங்கள் எல்லாம் எனக்கு ஒரு அட்சரம் கூடத் தெரியாது. அதைப் படித்தபோது இதில் இவ்வளவு மேட்டர் இருக்கிறதா என்று எனக்கு பிரமிப்பாக இருந்தது. அதைப் பற்றியெல்லாம் எதுவுமே தெரியாமல் என்னால் எப்படி அந்த இசையை ரசிக்க முடிந்தது?
அதுதான் இளையராஜாவின் தனித்துவம். தமிழ்நாட்டில் மேதைமையும், வெகுஜன ரசனையும் ஒன்றிணையும் கணங்கள் மிகவும் அபூர்வம். ஆனால் இளையராஜா நமது நாட்டுப்புற, கர்நாடக மற்றும் மேற்கத்திய செவ்வியல் இசைக்கூறுகளின் அபாரமான சாத்தியங்களை எளிமையாக இணைத்து, இசையைப் பற்றி ஆனா, ஆவன்னா தெரியாதவனும் ரசிக்கும்படி செய்து மேதைமையை, வெகுஜன ரசனைக்குரியதாக மாற்றிக் காட்டினார்.
அடுத்து இளையராஜாவின் மிகப்பெரிய பங்களிப்பு, மனித உறவுகளில் அது ஏற்படுத்திய விளைவுகள். இளையராஜாவின் பொற்காலத்தில், இளையராஜாவின் பாடல்கள் என்ற ஒற்றைப் புள்ளியில் சந்தித்துக் காதலித்தவர்கள் அனேகம் பேர். வீட்டிற்குள் நிலவிய எத்தனையோ கசப்புகளை, அந்த வீட்டிற்கு சம்பந்தமேயில்லாத இளையராஜா போக்கியிருக்கிறார். என் வாழ்வில் அவ்வாறு நிகழ்ந்திருக்கிறது.
அந்தக் காலத்தில் தந்தை-மகன் உறவு என்பது கிட்டத்தட்ட ஒரு எஸ்.பி.க்கும், கான்ஸ்டபிள்க்கும் உள்ள உறவு போன்றது. அப்பாக்கள் எஸ்பிக்கள். மகன்கள் கான்ஸ்டபிள்கள். அப்போது தந்தைக்கும் மகன்களுக்கும் நடுவே தெளிவாக, உறுதியாக ஒரு பெரிய இடைவெளி இருக்கும்(நடிகர் கமல்ஹாசன் ஒரு பேட்டியில், "எனது தந்தை மிகவும் சீரியஸாக சாகக் கிடந்த சமயத்தில், ஒரு நாள் அவர் தோளைத் தொட்டு தூக்கி அமர வைத்தபோதுதான்; எனக்கு விபரம் தெரிந்து முதன் முதலாக அவரைத் தொட்டேன்." என்று கூறியது ஞாபகத்திற்கு வருகிறது.).
இவ்வாறு எல்லா தந்தைகளுக்கும், மகன்களுக்கும் இருந்த இடைவெளி என் தந்தைக்கும் எனக்கும் கூட இருந்து வந்தது. பிறிதொரு காலத்தில் அந்த இடைவெளி மேலும் அதிகரிக்கும் சூழல் உருவானது. நான் பத்தாவதில் ஐநூறுக்கு 434 மார்க் எடுத்தேன். அது நல்ல மார்க். அப்போது ஸ்டேட் ரேங்கே 455, 460 என்றுதான் இருக்கும். அதனால் என் தந்தை தன் வாழ்நாளின் ஆகப் பெரிய கனவைச் சுமக்க ஆரம்பித்தார். எப்படியும் ப்ளஸ்டூவில் நான் நிறைய மதிப்பெண்கள் பெற்று, மருத்துவர் படிப்பில் சேருவேன் என்று உறுதியாக நம்பினார். எனது உறவினர்களும் நம்பினார்கள். என் பக்கத்து வீட்டுக்காரர்கள் எல்லாம் எனக்கு டாக்டர் சீட் கிடைத்துவிட்டது போலத்தான் பேசிக்கொண்டிருப்பார்கள்("நமக்கு ஒண்ணும் பிரச்சினையில்ல. சுரேந்தர் க்ளினிக் போட்டுட்டான்னா, ஃப்ரீயா வைத்தியம் பாத்துக்கலாம்."). ஏன்… நானும் நம்பினேன்.
ஆனால் எனது விடலைப் பருவத்தின் சில விரும்பத்தகாத காரியங்களால்(அதைப் பற்றி பிறிதொரு சந்தர்ப்பத்தில் விரிவாகப் பார்க்கலாம்.)பள்ளி மாறி, ஒரு அரசுப் பள்ளியில் சேர்ந்து, பல்வேறு விஷயங்களால் படிப்பில் ஆர்வம் போய், ப்ளஸ்டூவில் 1200க்கு 840 மட்டுமே எடுத்தேன். மேலும் மருத்துவ நுழைவுத்தேர்வு எழுதுவதற்கான குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்களைக் கூடப் பெறவில்லை. எனது தந்தை இதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. ரிசல்ட் வந்து, மதிப்பெண் பட்டியலைப் பார்த்தபோது என் தந்தையின் கண்களில் தெரிந்த வலி இன்னும் என் ஞாபகத்தில் இருக்கிறது. தனது குழந்தைகள் குறித்த ஒரு தந்தையின் கனவுகள் சிதையும் கணங்கள் மிகவும் கொடுமையானவை. மிகுந்த கோபக்காரரான எனது தந்தை அப்போது ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
நிச்சயம் என்னால் சாதித்திருக்கக்கூடிய விஷயம், எனது காரியங்களால், எனது தந்தையின் எச்சரிக்கையையும் மீறி நான் நடந்துகொண்ட முறையால் கெட்டது. அதனால் அதன் பிறகு எனது தந்தை என் மீது ஆழமான வெறுப்பைக் கொட்ட ஆரம்பித்தார். எனக்கான சுதந்திரங்கள் மறுக்கப்பட்டன. செலவுக்கு அஞ்சு பைசா கூட தரமாட்டார்.
பதிலுக்கு நான் காந்திய வழியில் அறப்போராட்டத்தில் இறங்கினேன். ஆனால் முற்றிலும் பட்டினி கிடைக்க முடியாத காரணத்தால், ஒரு வித்தியாசமான போராட்டத்தை ஆரம்பித்தேன். அது என்னவென்றால், காலையில் பேருக்கு ஒரு இட்லி, ஒரு தோசை மட்டும் சாப்பிடுவேன். அதற்கும் சட்னியெல்லாம் வேண்டாம் என்று கூறிவிடுவேன். மதிய, இரவு சாப்பாடுகளில் குழம்பு, ரசம், சைட்டிஷ் எல்லாம் வேண்டாம் என்று கூறிவிடுவேன். வெறும் தயிர்சாதம் மட்டும்தான் சாப்பிடுவேன். அதுவும் ஒரு மிகைநடிப்புடன், தொட்டுக்க ஒன்றுமின்றி நான் மிகவும் கஷ்டப்படுகிறேன் என்பதை உணர்த்துவதற்காக ஒவ்வொரு வாய் சாதத்திற்கும், ஒரு வாய் தண்ணீர் மடக் மடக்கென்று குடித்துக்கொள்வேன். வீட்டில் கறி, மீன் எடுக்கும்போது அதைக் கையால் கூட சீந்தமாட்டேன். அப்போதெல்லாம் என் அம்மாவுக்கு ஒரே லட்சியம்தான் இருந்து வந்தது. உயிரே போனாலும், ஞாயித்துக்கிழமை பிள்ளைகளுக்கு கறிசோறு ஆக்கிப் போட்டுவிட்டுதான் சாகவேண்டும். ஆனால் அதையும் நான் நிராகரித்துவிட்டு, என் தம்பிகள் எல்லாம் கறிசோறு தின்ன… நான் மட்டும் தயிர்சாதம் தின்பதை என் தாய் கண்ணீருடன் பார்த்துக்கொண்டிருப்பார். இந்தப் போராட்டம் பல மாதங்கள் நீடித்தது. ஆனாலும் என் தந்தை இறங்கி வரவில்லை.
என் அப்பா சென்னை சென்றுவிட்டு திரும்பும்போதெல்லாம் ஏராளமான கேஸட்டுகளுடன் வருவார். வந்தவுடனேயே கேஸட்டுகளை ஒலிக்கவிட்டுவிடுவார். பெரும்பாலும் அவை சினிமா பாடல்களாகவே இருக்கும். ஆனால் ஒரு விடியற்காலையில் அவர் சென்னையிலிருந்து திரும்பியபோது, வித்தியாசமாக ஒரு கருவி இசைப்பாடல் ஒலிக்க ஆரம்பித்தது. அது திரைப்பட இசை கிடையாது. அசுவராஸ்யமாக கேட்க ஆரம்பித்த நான், என்னை அறியாமல் மெள்ள, மெள்ள ஒரு பிரமாண்டமான இசைச்சூழலில் சிக்கிக்கொண்டதை உணர முடிந்தது. வயலினும், புல்லாங்குழலும் மாற்றி, மாற்றி இழைந்து என்னுள் ஏதேதோ செய்தது. அதுவும் ஒரு இசைப்பாடல், ஒரு மலை ஊற்றுப் போல மெள்ள சுரக்க ஆரம்பித்து, பிறகு மகா நதியாகப் பெருகி ஓடி, கடலில் கலந்து அமைதியாவதைப் போல முடிந்தபோது என்னை அறியாமல் என் கண்களிலிருந்து நீர் வழிந்திருந்தது.
அதற்கு மேல் தாங்க முடியாமல் எழுந்துவிட்டேன். அன்று காலைதான் நெடு நாட்களுக்குப் பிறகு என் தந்தையிடம் நான் பேசினேன்.
"என்ன கேஸட்?"
"இளையராஜாவோட நத்திங் பட் வின்ட்…" என்றவர் தொடர்ந்து இந்த தருணத்திற்காகவே காத்திருந்தது போல், "உனக்கு இங்க என்னடா பிரச்னை? எதா இருந்தாலும் சொல்லு…" என்றார்.
"நிறைய இருக்கு. கைல காசே தரமாட்டேங்கறீங்க." என்றேன்.
"எதுக்கு காசு?"
"சினிமாப் பாக்குறதுக்கு. அப்புறம் இளையராஜா பாட்டுல்லாம் ரிகார்ட் பண்றதுக்கு."
"அவ்ளோதான… இது வேணும்னு வாய்விட்டு கேட்டாதானே தெரியும். அதுவும் இளையராஜா பாட்டு ரிக்கார்ட் பண்றதுக்குன்னா நான் வேண்டாம்னா சொல்வேன்…" என்று ஒரு நூறு ரூபாயை எடுத்து நீட்டினார்.
அப்போதெல்லாம் பாடல்கள் கேஸட்களில்தான் கேட்போம். நான் ஒவ்வொரு இளையராஜா பாடலாகக் குறித்து வைத்துக்கொண்டே வருவேன். இருபது பாடல்கள் சேர்ந்தவுடன் ரிக்கார்டிங் சென்டருக்கு சென்று, டிடிகே 90 அல்லது மெல்ட்ராக் கேஸட்டில் பதிவு செய்துகொண்டு வருவேன். அது இளையராஜா வருடத்திற்கு 30, 40 படங்கள் எல்லாம் இசையமைத்துக்கொண்டிருந்த காலம். ஒரு மாதத்திற்குள்ளாகவே இரண்டு, மூன்று கேஸட்டுகள் பதிவு செய்யவேண்டி வரும். அதற்காக எப்போது கேட்டாலும் மறுக்காமல் எனது தந்தை பணம் தந்துவிடுவார்.
நான் பதிவு செய்துகொண்டு வந்தவுடன் என் தந்தையும், நானும் சேர்ந்தாற்போல் ரசித்துக் கேட்போம். அப்போது எங்கள் உரையாடலின் மையப்புள்ளியாக இளையராஜாவே இருந்தார். (அப்போதெல்லாம் எனது தந்தை அடிக்கடி, "என் கைல மட்டும் நிறைய காசு இருந்துச்சுன்னா, நம்ம நால் ரோட்டுல இளையராஜாவுக்கு தங்கத்துல சிலை வச்சிடுவன்டா" என்று கூறுவார்.). இல்லையென்றால் எனது தந்தையிடமிருந்து நான் மிகவும் விலகிக் சென்றிருக்கக்கூடும்.
இவ்வாறு இளையராஜா, தமிழர்களின் தனி மனித வாழ்க்கையில் மிகப் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறார். வேறு விஷயங்களில் வெவ்வேறு ரசனைக் கொண்டவர்களும், பல்வேறு கருத்து வேறுபாடுகளும் கொண்டிருந்தவர்களும் கூட இளையராஜாவின் இசை என்ற புள்ளியில் ஒன்றிணைந்தனர். அந்தப் புள்ளியிலிருந்து புறப்பட்டு, அவர்கள் ஒற்றுமையுடன் வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்குச் செல்ல முடிந்தது. இவ்வாறு இளையராஜா கலையும், வாழ்க்கையும் இணையும் அபூர்வத்தை வெகுஜனங்களிடையே நிகழ்த்திக் காட்டினார்.
அன்று இளையராஜாவோடு வேறு பல விஷயங்களும் எனக்கு மிகுந்த போதை ஊட்டுவதாக இருந்தன. ஹோட்டலில் ரவா தோசை தின்பதற்காக, என் அப்பாவின் சட்டைப் பையில் திருடத் தயங்கமாட்டேன். எனது வெள்ளிக்கிழமை காலைகள், காலைக்காட்சி பலான மலையாளப் படங்கள் இல்லாமல் இருக்காது. பாலகுமாரன் நாவல்கள் என்றால் பைத்தியம்.
இன்று என்னோடு ரவா தோசை இல்லை. காலைக் காட்சி மலையாளப் படங்கள் இல்லை. பாலகுமாரன் இல்லை. நாட்கள் நகர, நகர… ஒரு காலத்தில் நாம் மிகவும் முக்கியமாக கருதும் விஷயங்கள் , பிறகு ஒன்றுமே இல்லாமல் ஆகிவிடுகிறது. ஆனால் இளையராஜா மட்டும் நேற்றும் என்னோடு இருந்தார். இன்றும் என்னோடு இருக்கிறார். நாளையும் என்னோடு இருப்பார். ஏனெனில் இளையராஜா காலத்தில் கரையாத கலைஞன்.
gsurendar@yahoo.com

நன்றி: உயிர்மை

Monday, May 31, 2010

இளையராஜா மீதான விமர்சனங்கள்.. - ஜெயமோகன்


அன்புள்ள ஜெ,
உயிர்மை இதழில் ஷாஜி இளையராஜாவைப்பற்றி எழுதிய் கட்டுரைக்கு உங்கள் பதிலை நான் மிகவும் எதிர்பார்த்தேன். இரண்டுமுறை சேட்டிலே வந்து கேட்டேன் நினைவிருக்கும். நீங்கள்தான் ஷாஜியின் கட்டுரைகளை அறிமுகப்படுத்தினீர்கள். உங்கள் வழியாகவே எனக்கு அவரை தெரியும். நீங்கள் ராஜாவுக்கு ஓரளவு நெருக்கமாக தெரிந்தவர். இசையைப்பற்றி ஒன்றுமே தெரியாது என்று நீங்கள் தப்பிவிடுவீர்கள். ஆனால் நான் கேட்பது அவரது தனிப்பட்ட விஷயங்களைப்பற்றி அக்கட்டுரை எழுதப்பட்டிருப்பதனால்தான்…நீங்கள் ஒன்றும் சொல்லாமல் இருப்பது தந்திரமாகவே எனக்கு தோன்றுகிறது மன்னிக்கவும். இந்தக்கட்டுரையைக் கவனித்தீர்கள் அல்லவா?
http://chandanaar.blogspot.com/2010/01/blog-post_22.htmlபோஸ்

அன்புள்ள போஸ்,
எனக்கு எப்படியும் ஒரு முப்பதுநாற்பதுபேர் எழுதியிருப்பார்கள். நான் ஏன் ஒன்றும் சொல்லவில்லை என்றால் நீங்கள் சொல்வதுபோல உண்மையிலேயே இசையைப்பற்றி எனக்கு பெரிதாக ஒன்றும் தெரியாது என்பதனாலேயே. எல்லா நல்ல பாடல்களையும் ரசிக்கக்கூடியவன் நான்.
மேலும் ஷாஜி என் நெருக்கமான நண்பர். அவரை நான் நன்கறிவேன். உணர்ச்சிகரமானவர். விமரிசனங்களால் அழமாக புண்படுபவர். ஆகவே ஒன்றும் சொல்லவேண்டியதில்லை என நினைத்தேன். ஆனால் கடிதங்களைப் பார்க்கையில் எது மனதில்பட்ட உண்மையோ அதை சொல்வதே நல்லதென்று பட்டது. நண்பர் என்ற முறையில் அவர் அதை புரிந்துகொள்ளவேண்டும் என்று எதிர்பார்ப்பதே ஒரே வழி
நான் அக்கட்டுரை வெளிவந்த சிலநாட்களிலேயே ஷாஜியிடம் என் கருத்தை தெளிவாகவே சொல்லிவிட்டேன். நான் அக்கட்டுரையை நிராகரிப்பது எந்த அபிமானத்தின் அடிப்படையிலும் அல்ல. அதில் பல அடிப்படைச் சிக்கல்கள் உள்ளன என்பதனால்தான். அதாவது அது சாரு நிவேதிதாவின் பாணியில், அத்தகைய வாசகர்களை உத்தேசித்து எழுதப்பட்ட கட்டுரை.
முதலாவதாக, ஷாஜியின் கட்டுரைவிமரிசன ஒழுங்கு இல்லாதது. இளையராஜாவின் இசையின் எல்லைகளை அல்லது சரிவுகளைப்பற்றி இதைவிட தீவிரமாகவேகூட எழுதலாம். ஆனால் இக்கட்டுரையில் ஷாஜி இசைவிமரிசகனின் எல்லைகளை மீறிச் செல்கிறார். அவரது ஆன்மீகம்,சமூக அக்கறை போன்றவற்றை இசைக்கு அளவுகோலாகக் கொள்கிறார் என்றால் இந்த அளவுகோலை எந்தவிதமாக இவர் அடைந்தார், இதற்கு முன் எப்படியெல்லாம் பயன்படுத்தினார் என்பதெல்லாம் முக்கியமான கேள்விகள்.
இளையராஜாவின் சமூகப்பங்களிப்பு குறித்தெல்லாம் சமூக விமரிசகன் எழுதலாம். உதாரணமாக என் பெருமதிப்புக்குரிய இதழாளரான ஞாநி கடுமையாகவேகூட எழுதியிருக்கிறார். அவர் சமூக விமரிசகராக தொடர்ந்து செயலாற்றுபவர். ஆகவே அவர் கருத்துக்களுக்கு ஒரு தர்க்கபூர்வமான நீட்சி உண்டு. அவரது ஆய்வுக்கருவிகள் நாம் அறிந்தவை. அவர் அனைவர்மேலும் அதை சீராக கையாள்கிறார்.
ஷாஜி இவ்விஷயங்களைப்பற்றி எழுதுவதற்கு அவருக்கு தமிழ்ச்சமூகச்சூழலைப்பற்றி என்ன தெரியும், அவரது அளவுகோல்கள் என்ன என்பதெல்லாம் நமக்குத்தெரியாது. அப்படி சமூகவியல்கோணத்தில் அவரைப்பற்றி எழுதுவதாக இருந்தால் தன்னுடைய ஆய்வுகளையும் அணுகுமுறையையும் தெளிவாக முன்வைத்து எழுதவேண்டும். நாம் அவற்றை பரிசீலிக்கலாம். தீர்ப்புகளை மட்டுமே எழுதிசெல்வது சரி அல்ல.
இரண்டாவதாக, ஷாஜி இப்படி ஒரு தனிப்பட்ட மதிப்பீடுகளை தொடுப்பதற்கு உரிய ஆதாரங்களை நேர்மையாக திரட்டிக்கொள்ளவில்லை. அவர் பெரும்பாலும் இதழ்களில் வெளிவந்த ஆதாரமில்லாத கட்டுரைகள் கிசுகிசுக்கள் செய்திகள் போன்றவற்றை நம்பி, அவற்றை உறுதிசெய்துகொள்ளக்கூட முயலாமல், எழுதுகிறார். அவர் அதில் ராஜா குறித்துச் சொன்ன பல விஷயங்கள் பிழையானவை.
ஒருசாதாரண எழுத்தாளனாகிய என்னைப்பற்றி அச்சில், இணையத்தில் கிடைக்கும் தகவல்களை வைத்து ஒருவர் மதிப்பிட ஆரம்பித்தால் தமிழகத்தின் முதல்தர அயோக்கியர்களில், பொறுக்கிகளில் ஒருவன் நான் என எழுதிவிடமுடியும். நான் மறுக்காதவை எல்லாம் உண்மையே என்றும் ஒருவர் வாதிடலாம். ஆனால் எந்த ஒரு அறியப்பட்ட ஆளுமையும் தன்னைப்பற்றி எழுதப்படுவதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது. சொன்னால் வேறு வேலையும் நடக்காது.
முன்தீர்மானத்துடனும் மனக்கசப்புடனும்தான் தகவல்களை அணுகினார் ஷாஜி. உதாரணமாக, பழசிராஜா பாடலில் இளையராஜா ஓ.என்.வி குறித்து என்ன சொன்னார் என்று அப்படத்தில் நேரடியாக சம்பந்தப்பட்டவன் என்ற முறையில் நானே அவரிடம் விளக்கினேன். ‘ஓஎன்வி அவருக்கு மெட்டு அனுப்பியும்கூட களநடைப்பாடலாக பாடல்வரிகளை எழுதிக்கொடுத்தார், நான் அதை புதிய மெட்டுக்கு மாற்றினேன்’ என்று சொல்லி அதை எனக்குப் பாடியும் காட்டியிருந்தார் ராஜா.
ராஜா அதைத்தான் பின்பு மேடையிலும் சொன்னார். எரிச்சலுடனோ, எதற்கும் விளக்கமாகவோ அல்ல. பொதுவாக பட ‘பிரமோ’க்களில் இதழாளர்கள் செய்திபோட வசதியாக இம்மாதிரி சில துணுக்குகளை கொடுப்பார்கள். அந்த நோக்கில், அந்த மனநிலையில். அதாவது இது ஒருவகை ‘வொர்க்கிங் ஸ்டில்’ மட்டுமே. பழசிராஜா பாடல்கள் ‘வெற்றியா’ என்ற கேள்வியே எழவில்லை.
மலையாள மனோரமாவின் சென்னைநிருபர் செய்தியைத் திரித்தார். அதற்கு ஓர் கேரள அமைச்சர் பதில்சொல்லப்போக அங்கே அலைகளை கிளப்பியது. ராஜா பேசியதன் வீடியோ கிளிப்பிங் வெளிவந்தபோது அலை அடங்கியது. அந்த கிளிப்பிங் யூடியூபில் கிடைக்கிறது. ஆனால் மனோரமாவின் பதிவே ஆதாரம் என்று ஷாஜி உறுதியாகச் சொன்னார். நான் நிறுத்திக்கொண்டேன்.
இளையராஜாவின் குணநலன்களைப் பற்றி ஷாஜி எழுதியதை அவதூறு என்று மட்டுமே சொல்லமுடியும். இத்தனை வருடங்கள் ஒரு பொதுவெளியில் செயல்பட்ட மனிதரைப்பற்றி கசப்புகள் இருக்கும்தான். மேலும் பொதுவாக படைப்பாளிகள் உள்சுருங்கியவர்கள். நிலையான உணர்வுகள் இல்லாதவர்கள். மிகையாக எதிர்வினையாற்றுபவர்கள். இதற்கு எவருமே விதிவிலக்கல்ல.

ஆனால் முப்பது வருடங்களுக்கும் மேலாக கனவு தவிர எந்த ஆதாரமும் இல்லாத ஆரம்ப இயக்குநர்கள், இளைஞர்கள் முழுநம்பிக்கையுடன் வெறும் கையுடன் சென்று நிற்கும் வாசலாக இளையராஜாவின் இசையலுவலகம் இருந்திருக்கிறது. அவர்களை ஆதரித்து, சர்வதேசத்தரம் கொண்ட இசையை அளித்து, மனம்சோரும் தருணங்களிலெல்லாம் ஆறுதலும் ஊக்கமும் அளித்து மேடையேற்றிவிட்டவர் ராஜா. அப்படி ஒரு பெரும்பட்டியலே உண்டு. அந்த கனிவும் பண்பும் கொண்ட இன்னொரு முன்னிலை கடந்த அரைநூற்றாண்டு தமிழ் சினிமாவில் இருந்ததில்லை
சந்தேகமிருந்தால் பாலாவிடம் ஷாஜி கேட்டுக்கொள்ளலாம். கண்ணீரில்லாமல் அதைப்பற்றிப் பேச பாலாவால் முடியாது. அப்படி ராஜாவை எண்ணும் குறைந்தது நூறு இயக்குநர்கள் தமிழில் உண்டு. அவர்கள்தான் தமிழின் நல்ல சினிமாவின் தூண்களும்கூட.
மேலும் கலைஞர்களை நல்ல மனிதர்களா, அன்பானவர்களா என்று பார்க்கும் பார்வையும் சரி; அதைவைத்து கலையை மதிப்பிடும் போக்கும் சரி மிக மிக ஆபத்தானவை. ஒரு கலைஞனின் கலையின் அந்தரங்கமான சில தளங்களை புரிந்துகொள்ள அவனது தனிவாழ்க்கை உதவும். புரிந்துகொள்ள மட்டுமே, மதிப்பிட அல்ல. அதற்குமேல் தனிவாழ்க்கையில் நுழைவதென்பது வெறும் வம்பு மட்டுமே.
மூன்றாவதாக, ஷாஜியின் கட்டுரைக்கு தனிப்பட்ட பின்னணி உண்டு. அதை அவர் கட்டுரையில் சொல்லியிருக்கிறார், ஆனால் முழுமையாகச் சொல்லவில்லை. பாடகி கல்யாணி ஷாஜிக்கு குடும்பநண்பர். அவருக்காக ஷாஜி பலவகைகளில் வாய்ப்புகளுக்காக முயல்வதுண்டு. விளம்பரப்பாடல்களில் அவரை பயன்படுத்துவதுண்டு. கஸ்தூரிமான் படம் ஆரம்பிக்கும்போது கல்யாணிக்காக இளையராஜாவின் சொல்லும்படி ஷாஜி லோகியை கட்டாயப்படுத்தினார். லோகி ராஜாவின் கல்யாணியை அறிமுகம் செய்தார்.
அந்த குரல்சோதனையின்போது கல்யாணி வித்யாசாகர் பாடிய பாடலைப் பாடியபோது ராஜா கோபம் கொண்டது உண்மை. ஆனால் கல்யாணி நிராகரிக்கப்பட்டதற்கு அது காரணம் அல்ல. லோகியிடம் நிதானமாகவே அதை ராஜா விளக்கினார். ‘நல்ல குரல், ஆனால் குரலில் புதுமை இல்லை’ என்றார். ‘அப்படியானால் குரல் இனிமையாக இருக்கவேண்டாமா’ என்று லோகி கேட்டதற்கு ‘தேவையே இல்லை’ என்று ராஜா சொன்னதாகவும் அதில் தனக்கு உடன்பாடே இல்லை என்றும் லோகி சொன்னார்.
இந்த நிராகரிப்பில் இருந்துதான் ஷாஜியின் இளையராஜா வெறுப்பு ஆரம்பமாகிறது. கடந்த இருவருடங்களில் அவர் எப்போதுமே ராஜாவை கடுமையாக நிராகரித்து மட்டுமே பேசி வந்தார் என்பதை நண்பர்கள் அறிவார்கள். அதற்கு முன் அப்படியல்ல என்பதையும் நண்பர்கள் அறிவார்கள். இக்கட்டுரையில் ஷாஜி விட்டுவிட்டது அவருக்கு இளையராஜாவை முன்னரே தெரியும் என்பதுதான்.

பலவருடங்களுக்கு முன்னர் சலீல் சௌதுரி •பௌண்டேஷனின் செயலர் என்ற முறையில் சலீல் சௌதுரிக்கு ஒரு விழா எடுத்து அதில் இளையராஜாவை பங்குகொள்ளும்படி அழைத்தார். ராஜாவின் உச்ச நாட்கள் அவை. ராஜா அப்போது ஷாஜி யாரென்றே அறியாதவர். விழா மிகச்சிறிது. ஆனால் ராஜா அந்த நிகழ்ச்சிக்கு அவரே வந்தார், சலீல் சௌதுரி மீது இருந்த மதிப்பு காரணமாக மட்டும்.
சலீல் சௌதுரிக்கு வந்திருக்கும் அந்த மிகக் குறைவான கூட்டத்தைப்பற்றி மேடையில் மனக்குறைப்பட்டு பேசிய ராஜா சலீல் சௌதுரியின் இசையின் பல நுட்பங்களை தொட்டுக்காட்டி பேசினார். இசையின் ‘அரேஞ்ச்மெண்ட்’ குறித்து அவர் அன்று பேசியது மிக முக்கியமானது என்று ஷாஜி பலமுறை சொல்லியிருக்கிறார்.
சலீல் சௌதுரியின் பல பாடல்கள் மீது திருட்டுக்குற்றச்சாட்டு உண்டு. அதற்கு விளக்கமளித்து பேசிய ராஜா இசை என்பது எல்லைக்குட்பட்ட ஸ்வரங்களால் ஆனது என்னும்போது சாயல்கள் ஏற்படும். சிலசமயம் பிறிதொரு இசை மனத்தூண்டலாக அமையலாம். ஆனால் அந்த தொடக்கத்தில் இருந்து எப்படியெல்லாம் மேலே செல்லமுடிந்திருக்கிறது என்பதையே அளவாகக் கொள்ளவேண்டும் என்றார். இதுவும் ஷாஜி சொல்லி நான் அறிந்ததே. இச்செய்தியை மிகுந்த நெகிழ்ச்சியுடன் ஷாஜி சொல்லியிருக்கிறார்.
கடைசியாக, ஷாஜிக்கு இளையராஜாவின் இசையில் மையமான சில விஷயங்களை மதிப்பிடும் ஆற்றல் இல்லை. காரணம் அவருக்கும் கர்நாடக சங்கீதமோ, ராகங்களோ தெரியாது. மேலையிசையில் செவ்வியலிசை இலக்கணமும் தெரியாது. ராஜா அவரது முக்கியமான சோதனைகளையும் சாதனைகளையும் அந்த தளங்களில்தான் நிகழ்த்தியிருக்கிறார்.
அவ்விரு இசைமரபுகளையும் துல்லியமாக தெரியாமல் விமரிசிக்கக் கூடாதா என்றால் செய்யலாம் என்றே சொல்வேன். காரணம் சினிமாப்பாடல்கள் பொதுரசிகனுக்குரியவை. ஆனால் அந்த எல்லையை புரிந்துகொண்டு அதற்குள் தன்னை நிறுத்திக்கொண்டு செய்யவேண்டும். நான் எதிர்மறை விமரிசனத்தில் எனக்கு தெரியாத இடங்களைச் சுட்டிக்காட்டியபின்னரே பேச ஆரம்பிப்பேன்.
இளையராஜா இசையில் என்ன செய்தார் என்று தெரியாத நிலையில் ஷாஜி அவரது ‘வெற்றி’களை கொண்டே அவரை மதிப்பிடுகிறார். மேலைநாட்டு பரப்பிசையைப் பற்றிப் பேசும்போது அவர் எப்போதுமே வணிக வெற்றியையே அளவுகோலாகக் கொள்கிறார். அப்பாடல்களின் நயம் குறித்து ஏதும் சொல்வதில்லை. அப்படியானால் வெகுஜன வெற்றிதான் இசையை அளக்க அளவுகோலா என்றால் அவர் மதன்மோகன் போன்ற ‘தோல்வி’ அடைந்த இசைமேதைகளைப்பற்றிச் சொன்னது இடையூறாக இருக்கிறது.
வணிக வெற்றியை அளவுகோலாகக் கொண்டால் ராஜா தொண்ணூறுகள் வரை முப்பது வருடம் ஈடிணையில்லாத புகழுடன்தான் இருந்தார். ஷாஜி அவர் முதல் பத்து வருடங்களுடன் தீர்ந்துவிட்டார் என்கிறார். இசையின் தரம் அல்லது நுட்பத்தை வைத்து அளவிடுகிறார் என்றால் அதற்கான அவரது அளவுகோல்கள் சொல்லப்பட்டாக வேண்டும். அதைச் சொல்ல அவரது தகுதி வெளிப்பட்டாக வேண்டும்.
ஆக, வெறுமே ஒரு மனக்கசப்பில் இருந்து ஆரம்பித்து வம்புகளைக்கொண்டு நிரப்பி ஷாஜி தன் கட்டுரையை எழுதியிருக்கிறார். நானறிந்த ஷாஜி சிறந்த நகைச்சுவை உணர்ச்சியும், ஆழமான நல்லியல்புகளும், நுட்பமான ரசனையும் கொண்ட நல்ல நண்பர். இந்தக் கசப்பு அவரது சமநிலையை இல்லாமல் செய்துவிட்டது. அதை அவர் உணர்ந்தாரென்றால் இந்த மனநிலையைப் பற்றி கவனமாக இருக்க முடியும். அது அவரது நம்பகத்தன்மைக்கு நல்லது.
மாறாக, எவரை வசைபாடினாலும் உடனே வந்து ஆதரவு தெரிவிக்கும் ஒரு கூட்டத்தின் கைத்தட்டலையோ அல்லது வம்புகளை எழுதிவாங்குவதில் குறியாக இருக்கும் இதழாசிரியரின் தூண்டுதலையே ஆதாரமாகக் கொள்வாரென்றால் அது அவரை இன்னொரு சாரு நிவேதிதாவாகவே ஆக்கும். அதை ஷாஜி எந்த அளவுக்கு வெறுப்பார் என்பதை அவர் அறிவார்.
ஒருவரை பாராட்டும்போது சமநிலைகுலையலாம், எதிர்க்கும்போது நம் சமநிலையைப்பற்றி மேலும் மேலும் கவனம் கொள்ளவேண்டும். அம்மாதிரி சமநிலை இல்லாமல் நானும் பலவற்றை ஆரம்பகாலத்தில் எழுதி பின்னர் வருத்தப்பட்டிருக்கிறேன். இதை நான் என் ஆத்மாவுக்கு மிக நெருக்கமாக உணரும் நண்பராகிய ஷாஜியிடம் வெளிப்படையாகவே சொல்லிக்கொள்கிறேன்.
*


சிலமாதங்கள் முன்பு நானும் ஷாஜியும் தனிப்பட்டமுறையில் ராஜாபற்றி பேசினோம். அப்போது இக்கட்டுரையில் உள்ள ‘ராஜா ஒன்றுமே செய்யவில்லை’ என்ற வரியை ஷாஜி வேறுவகையில் சொன்னார். ராஜா அவர் சொன்ன எதுவும் நடக்கும் என்ற நிலை இருந்தபோது தமிழ்சினிமாவுக்காக ஒன்றுமே செய்யவில்லை என்றார் ஷாஜி.
நான் அதை திட்டவட்டமாக ஆதாரங்களுடன் மறுத்தேன். ஷாஜிக்கு தமிழ்சினிமா வரலாறே தெரியவில்லை என்றேன். அதன் பின் அவர் தன் கட்டுரையில் அந்த குற்றச்சாட்டு இல்லாமல் எழுதியிருக்கிறார். மாறாக ‘ சமூகத்துக்கு’ ஒன்றும் செய்யவில்லை என்கிறார். செய்தாரா என ராஜா விளம்பரப்படுத்த வேண்டுமா என்ன?
தமிழின் நல்ல சினிமாவுக்காக இளையராஜா அளவுக்குப் பங்காற்றிய இன்னொரு ஆளுமையே கிடையாது. இன்னும்கூட பதிவுபெறாத ஒரு மகத்தான பக்கம் அது. 1976ல் ராஜா திரையுலகுக்கு வந்தார். எம்.ஜி.ஆர்-சிவாஜி யுகம் முடிந்து எழுபதுகளில் உருவான யதார்த்தவாத அலைக்குக் காரணமாக அமைந்ததே ராஜாவின் வருகைதான். இன்றுவரை தமிழ்சினிமாவின் பொற்காலமாக திகழ்வது அதுவே. இப்போதுவரும் யதார்த்தவாதபடங்களின் இலக்கணம் அமைந்ததும் அப்போதே.
அந்த அலையின் ஒரு பகுதியாக இளையராஜா திகழவில்லை. மாறாக அவர்தான் அந்த அலையை வழிநடத்திய சக்தி. பாரதிராஜா படவுலகில் நுழைய முனைந்தபோது எஸ்.ஏ.ராஜ்கண்ணு போட்ட ஒரேநிபந்தனை இளையராஜா இசையமைப்பாரா என்பதே. அந்த உறுதியை வாங்கியபிறகே பாரதிராஜாவால் படம் தொடங்க முடிந்தது.
நட்சத்திரங்கள் இல்லாமல், நாடகத்தன்மை இல்லாமல், மிகச்சிறிய யதார்த்தப் படங்கள் வணிகவெற்றி பெறமுடியும் என்ற நிலையை உருவாக்கியது இளையராஜாவின் துடிப்பான இசைதான். புதியவர்களின் சிறு முதலீட்டுப் படங்கள் வென்றால்தான் திரைக்கலையில் மாற்றம் வரும். இளையராஜா அக்காலத்தில் புதிய தயாரிப்பாளர்களின் படங்களுக்கு துணிந்து இசையமைத்தார். மிகத்தரமாக. அதற்கு மிகமிகக் குறைவான ஊதியம் பெற்றுக்கொண்டார். அவரது பங்களிப்பு இல்லாமல் அந்தப் படங்கள் உருவாகியிருக்க முடியாது, வெற்றி பெற்றிருக்கவும் முடியாது என்பது வரலாறு. அவையே தமிழ்சினிமாவை மாற்றியமைத்தன.
மலையாள சினிமாவும் ஏறத்தாழ இதே காலகட்டத்தில்தான் யதார்த்தவாதம் நோக்கி வந்தது. பரதன், பத்மராஜன், ஐ.வி.சசி போன்றவர்கள் உள்ளே வந்தார்கள். புதுநடிகர்கள் அறிமுகமானார்கள். ஆனால் மலையாள சினிமா அந்த மாற்றத்தைக் கொண்டுவர பாலுணர்ச்சியை நம்பியிருந்தது. துணிச்சலான செக்ஸ்படங்கள் வழியாகவே மலையாள சினிமாவில் சிறு படங்கள் வென்றன. மலையாளசினிமா உலகம் அதன்வழியாகவே தன் அமைப்பு, சூழல் எல்லாவற்றையும் மாற்றிக்கொண்டது. அதாவது அங்கே செக்ஸ் செய்ததை இங்கே ராஜா செய்தார்.
பாரதிராஜா, தேவராஜ் மோகன், மகேந்திரன், துரை, ருத்ரையா,பாக்யராஜ் என ஆரம்பித்து மணிரத்தினம், பாலா வரை தமிழில் தீவிரமான இலக்குகளோடு நுழைந்த அத்தனை இயக்குநர்களும் ராஜாவிடம்தான் முதலில் சென்றிருக்கிறார்கள். அவர்கள் அவரால் முன்னிறுத்தப்பட்டிருக்கிறார்கள். அவரால் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். ஐ.வி.சசி, பரதன்,பாசில் முதலிய தரமான மலையாள இயக்குநர்கள் தமிழுக்கு வந்தபோது அவர்களின் வருகையை மிகச்சிறந்த இசையால் கௌரவித்திருக்கிறார் ராஜா.
ஓர் இளம் இயக்குநருக்கு எந்த வித நிபந்தனையும் இல்லாமல் மிகச்சிறந்த இசையை அளிப்பதென்ற ராஜாவின் கொள்கையை தொடர்ச்சியாக முப்பது வருடம் தமிழில் நாம் காணமுடிகிறது. ராஜாவின் மகத்தான பாடல்கள் பல புது இயக்குநர்களின் படங்களில் அமைந்தவை என்பதை பலர் நினைப்பதில்லை. தமிழில் புதிய விஷயங்கள் வருவதற்கு அமைப்புக்கு உள்ளே இருந்து வரும் ஒரே ஆதரவுக்கரம் இளையராஜாவுடையதாகவே இருந்திருக்கிறது என்பது வரலாறு.
பலசமயம் அந்த முதல்படங்கள் காணாமல் போயிருக்கின்றன, இசையால் மட்டுமே அறியப்படுகின்றன. சிலசமயம் நல்ல படங்கள்கூட. சிறந்த உதாரணம், சின்னத்தாயி. திருநெல்வேலியின் ஆத்மா பதிவான ஒரு நல்ல படம் அது. மிகமிகக் குறைவான செலவில் எடுக்கப்பட்டது. அனேகமாக ராஜாவுக்கு சில ஆயிரங்கள் அளிக்கப்பட்டிருக்கலாம், அதைக்கூட முழுமையாகக் கொடுத்தார்களா என்பது ஐயத்திற்குரியது. அற்புதமான இசையால், நெல்லை நாட்டுப்புறத்தன்மை அதற்கே உரிய வாத்தியங்களுடன் வெளிப்பட்ட பாடல்களால் அந்தப்படம் அழுத்தம் பெற்றிருந்தது. துரதிருஷ்டவசமாக அது வெற்றி பெறவில்லை. அதன் இயக்குநர் இளமையில் இறந்தும் விட்டார் என்றார்கள். அப்படி எத்தனை படங்கள்.
சிந்தித்துப் பார்த்தால் இது எவ்வளவு பெரிய ஓர் வாய்ப்பு என்பது தெரியும். இன்று நல்ல படம் எடுக்க முனையும் இயக்குநர்களுக்கு இருக்கும் சிக்கலே இசைதான். தரமான இசை தேவை என்றால் அது படத்துக்கான செலவில் மூன்றில் ஒருபங்கை சாப்பிடும். செலவைக்குறைத்தால் இசை வெளிறிக் கிடக்கும். சமீபகாலத்தில் வெற்றிபெற்ற சின்னப்படங்களின் இசையைக் கவனித்தால் இது தெரியும்.
ராஜா அவரது இசையை அது மிகமிக விரும்பப்பட்ட நாட்களில்கூட வியாபாரப் பொருள் ஆக்கவில்லை. அதனால் அவர் கோடிகளை இழந்திருக்கக் கூடும். ஆனால் தரமான ஒரு திரை இயக்கத்தின் பகுதியாக தன் இசை இருக்கவேண்டுமென்பதில் அவர் குறியாக இருந்தார். வேறெந்த திரைச் சாதனையாளரும் ராஜா அளவுக்கு நல்ல சினிமா மீது இத்தனை பற்றுடன் இருந்ததில்லை.

கடைசியாக ஒன்று.பாலுமகேந்திரா தனிப்பேச்சில் சொன்னது இது. ராஜா தமிழில் அறிமுகமானபோது தமிழ்சினிமாவின் திரைமொழி மிகப்பழமையாக இருந்தது. காரணம் அது அனைவருக்கும் புரிந்தாகவேண்டும் என்ற கட்டாயம். திரைக்கதையில் ஒவ்வொரு காட்சிக்கு முடிவிலும் அடுத்த காட்சிக்கான குறிப்பு இருக்கும். ‘எங்கே அந்த சண்முகம், வாங்க போய் பாப்போம்’ என்பது போன்ற வசனங்கள். அல்லது காட்சி அடையாளங்கள். ஏன், பாடலிலேயே அடுத்த காட்சிக்கான தொடக்கம் அவ்வப்போது எட்டிப்பார்க்கும். இல்லாவிட்டால் தொடர்ச்சியை அன்றைய ரசிகன் உணர முடியாது.
அதேபோல காட்சி மாறும்போது ‘ர்ரீங்’ என்பது போல ஒரு சத்தம் இருக்கும். கதை பின்னுக்கு நகர்ந்தால் அது தெளிவாகவே காட்டப்படும். ஆரம்பத்தில் கொசுவத்திச் சுருள். பிற்காலத்தில் பிம்பம் மீது பிம்பம் ஏறுவது, அணைந்து மீள்வது போன்ற காட்சிகள். கதாபாத்திரம் ஓர் அறைவிட்டு இன்னொரு அறைக்குப் போகவேண்டுமென்றால்கூட அதைக் காட்டியாக வேண்டும். ஒரு கதாபாத்திரம் நல்லவிஷயம் சொல்லப்போகிறதா கெட்ட விஷயம் சொல்லப்போகிறதா என்பதை தனித்தனி அண்மைக்காட்சிகள் மூலம் காட்ட வேண்டும். வசனத்தில்கூடச் சொல்ல வேண்டும். கதாபாத்திர மனநிலைகளை தெளிவாக வசனம் மூலம் காட்டியாகவேண்டும்.
ஏன், நடிப்புக்கே இந்தச் சிக்கல்கள் இருந்தன. அக்கால நடிப்பு ஏன் செயற்கையாக இருந்தது என்றால் திரையில் உணர்ச்சிகள் தெளிவாக புரியவேண்டும் என்ற கட்டாயம் இருந்தது என்பதனால்தான். திடுக்கிடுவது, அதிர்ச்சி அடைவது, துயரப்படுவது எல்லாவற்றையும் முகத்தசைகள் உடலசைவுகள் மூலம் காட்டியே ஆகவேண்டியிருந்தது. தமிழ் ரசிகனின் எல்லை அது.
இந்த எல்லையைப் புரிந்துகொண்டு, நவீன சினிமாவின் சாத்தியங்களையும் தெரிந்துகொண்டு பின்னணி இசையமைக்க இளையராஜா முன்வந்த ஒரே காரணத்தால்தான் தமிழ் சினிமாவின் காட்சிமொழியை துணிந்து மாற்ற முடிந்தது. இளையராஜா எழுபதுகளின் கன்னடநவசினிமா அலையில் இருந்து நவீனக் காட்சிமொழியின் சாத்தியங்களை நன்றாகப் புரிந்துகொண்டு உள்ளே வந்தவர் என்பதே அதற்குக் காரணம்.
ராஜாவின் பின்னணி இசையை இந்த வரலாற்றுச்சூழலை புரிந்துகொள்ளாமல் எவரும் மதிப்பிட்டுவிடமுடியாது. ராஜாவுக்கு முன்னால் பின்னணி இசையில் இசையமைப்பாளர்கள் கவனம் செலுத்தியதில்லை. அவற்றை அனேகமாக அவர்களின் உதவியாளர்களே அமைபப்பாகள். அவை ‘இ•பக்ட்’ என்ற அளவிலேயே இருக்கும். கதையைப்புரிந்துகொண்டு தொடர்ச்சியான இசை அமைக்கப்படுவதில்லை. மாறாக தனிக்காட்சிகளுக்கே இசை அமைக்கப்படும்.
ராஜா முழுப்படத்துக்கும் மொத்தமாக இசையமைத்தார். படத்துக்கு அதன் சாரம்புரிந்து தீம் இசையை உருவாக்கினார். உதாரணமாக மகேந்திரனின் ‘உதிரிப்பூக்கள்’ படம் ஒரு குடும்பத்தின் கதைதான். ராஜா தன் தீம் இசை மூலம் அதை அக்குழந்தைகளின் கதையாக அழுத்தம் கொடுப்பதைக் காணலாம். உதிரிப்பூக்கள் தொடர்ச்சியே இல்லாத தனிச்சம்பவங்களால் ஆன படம். பின்னணி இசையே அதை கோர்வையாக கொண்டுசெல்கிறது.
படத்துக்கு ராஜா இசைமூலம் தொடர்ச்சியை உருவாக்கினார். அழுத்திக் காட்டவேண்டியதை அழுத்திக்காட்டினார். உணர்ச்சிகளை திட்டவட்டமாக அடையாளப்படுத்தினார். கதாபாத்திரங்களுக்குக் கூட தனியான இசை அடையாளங்களை உருவாக்கினார். பல படங்களில் இயக்குநர் சொல்ல வருவதைக்கூட இசை விளக்கியது. ‘நிறம் மாறாத பூக்களில்’ கதை முன்னும்பின்னும் நகர்வதை இசைதான் காட்டியது
இந்த வசதியைக் கொண்டுதான் இயக்குநர்கள் திரைமொழியை மாற்றியமைத்தார்கள். மிதமான நடிப்பு போதும் என்ற நிலை வந்தது. செயற்கையான காட்சிமாற்றமும் ‘க்ளூ’ கொடுக்கும் வசனமும் தேவையில்லை என்றாகியது. தன்னுடைய ‘மூடுபனி’ படத்தில் சாதாரணமான ஆரம்பக் காட்சியிலேயே அதை ‘சைக்கோ திரில்லர்’ என ராஜா காட்டிவிட்டார் என்றார் பாலு. இல்லாவிட்டால் அதற்கு நான்கு காட்சிகளை ‘சமைக்க’ வேண்டியிருந்திருக்கும் என்றார்.
ஒரு கலைவடிவம் என்பது அது உருவான சமூக,பண்பாட்டுச்சூழலை ஒட்டி அதன் இடைவெளிகளை நிரப்பியபடி வளர்வது. உலகமெங்கும் முதிர்ச்சி உள்ள விமரிசகர்கள் கலையை அப்படித்தான் மதிப்பிட்டிருக்கிறார்கள். அதற்கு கலையின் நுட்பங்களையும் அதன் வரலாற்றுப் பரிணாமத்தையும் கூர்ந்து அவதானிக்கும் விரிவான ஆய்வுமனநிலை தேவை. இங்கே பொத்தாம் பொதுவாக ‘அமெரிக்காவிலே வேறமாதிரி தெரியுமா?’ என்றவகை எழுத்துக்களே விமரிசனமாக முன்வைக்கப்படுகின்றன. எல்லா தளத்திலும். நம் துரதிருஷ்டம் இது.
அதிலும் குறிப்பாக வெகுஜனக்கலை என்பது அது எதிர்கொள்ளும் சமூகத்துடனான உரையாடல் வழியாகவே உருவாகக்கூடியது. அச்சமூகத்தின் போதாமைகள நிரப்பிக்கொண்டு உச்சங்களை உள்வாங்கிக்கொண்டு அது முன்னகரும். எந்த இடத்தில் அது கலைஞனின் வெளிப்பாடு எந்த இடத்தில் சமூகத்தின் விழைவின் வெளிப்பாடு என்று கண்டுபிடிப்பது எளிதல்ல. அண்டோனியோ கிராம்ஷி முதல் டில்யூஸ் கத்தாரி வரை பற்பல கோணங்களில் விவாதிக்கப்பட்ட பொருள் இது. அக்கப்போர் தளத்தில் இதை அணுகும் பார்வைகள் அபத்தமான விளைவுகளையே உருவாக்குகின்றன.
படத்துக்குப் படம் ராஜா மாறிக்கொள்வதைப் பார்க்கும் எவரும் அவர் எந்த அளவுக்கு இயக்குநருக்கு தன்னை அளிக்கிறார் என்ற வியப்பை அடைவார்கள். ‘புதியவார்ப்பு’களில் உள்ள இசைக்கும் ‘அவள் அப்படித்தா’னில் உள்ள இசைக்கும் உள்ள வேறுபாடுகளையே பார்த்தால் போதும். இரண்டும் முற்றிலும் வேறுபட்ட படங்கள். புதியவார்ப்புகளில் பின்னணி இசை பாடிக்கொண்டே இருக்கிறது. அவள் அபப்டித்தானில் அது வெறுமே முனகுகிறது.
திரைமொழி வளர்ந்தபோது காலப்போக்கில் இளையராஜா இசையில் காட்சிகளுக்கு பரஸ்பரத் தொடர்பு கொடுப்பது விளக்குவது போன்றவற்றில் இருந்து முன்னகர்ந்து மேலும் நுட்பமான பல விஷயங்களைச் செய்திருக்கிறார். என்னைப்போன்ற எளிய ரசிகனே உணரும் நுட்பங்கள். பல படங்களில் பின்னணி இசை ஒரு ஆழ்ந்த வேறு பொருளையும் காட்சிக்கு சேர்ப்பதைக் காணலாம்.
இன்றைய யதார்த்த தமிழ் சினிமாவுக்கு ராஜாவின் பங்களிப்பு என்ன என்பதைப்பற்றி இன்றுவரை விஷயமறிந்த எவரும் எழுதியதில்லை. தகவலறிவுடன், சமநிலையுடன் எழுத நம்மிடம் ஆட்கள் இல்லை. தெரிந்தவர்கள் எழுதுவதும் இல்லை. ஆகவேதான் என்ன ஏது என்றறியாமல் எழுதும் எழுத்துக்களையும், அசட்டு பீற்றல்களையும் நாம் சகித்துக்கொண்டிருக்கவேண்டியிருக்கிறது.
இளையராஜாவின் இசையின் இன்னொரு பக்கம் என்பது அவர் கர்நாடக இசையின் அமைப்பில் செய்த சோதனைகள். அவற்றை அத்துறை சார்ந்தவர்களே சொல்லமுடியும். பத்து வருடம்முன்பு ‘சொல்புதிது’ இதழுக்காக தமிழிசை அறிஞர் நா.மம்முதுவை நான் பேட்டி எடுத்தேன். அப்போது அபூர்வமான ராகங்களுக்கான, ராகங்களை பயன்படுத்துவதில் உள்ள அழகியல்சாத்தியங்களுக்கான நுட்பமான உதாரணமாக அவர் சுட்டிக்காட்டிய எல்லா பாடல்களும் இளையராஜாவின் சினிமாப்பாடல்கள். இளையராஜா தேங்கி அழிந்துவிட்டார் என்று ஷாஜி ‘அறிவித்த’ பிற்காலப் பத்து வருடங்களைச் சேர்ந்த பாடல்கள் அவை. அந்தப்பேட்டி என் ‘இலக்கிய உரையாடல்கள்’ என்ற நூலில் உள்ளது [எனி இண்டியன் பிரசுரம்]
அதன்பின் நான் முக்கியமான பல மரபிசை நிபுணர்களிடம் பேசியிருக்கிறேன். ராஜாவின் மிகச்சிறந்த,நுட்பமான இசைப்பின்னல்களுடன் சோதனைநோக்குடன் அமைந்த, படைப்புகள் என அவர்கள் சொன்னபல பாடல்கள் அவர் பிற்காலத்தில் அமைத்தவை. அவர்கள் சொன்ன பல விஷயங்கள் எனக்குப் புரிந்ததில்லை. ஆனால் அந்தப்பாடல்கள் வெகுஜன அளவில் பெரிதும் ரசிக்கப்பட்டவை என்பது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
உதாரணமாக திருவாரூரைச் சேர்ந்த ஒரு வயதான நாதஸ்வரக் கலைஞர் ஒரு ராகத்தின் அழகை காட்டும் பாடலாக ‘ஆட்டமா தேரோட்டமா’ என்ற பாட்டை சுட்டிக்காட்டினார். தாளம் மூலம் அந்த ராகத்தின் காலக்கட்டுமானத்தை எப்படியெல்லாம் மாற்றலாம், ஆலாபனையை எப்படி விசித்திரமாக உடைத்து செய்யலாம் என்பதற்கான அற்புதமான உதாரணமாக அதை அவர் சுட்டிக்காட்டி பேசிக் கொண்டே இருந்தார்.
இளையராஜாவின் இந்த தளத்தில் உள்ள சாதனைகளை இந்த தளத்தில் பயிற்சியும் ரசனையும் உடையவர்களே சொல்லமுடியும். மற்றவர்கள் கருத்துச் சொல்லும்போது தங்களுடைய எல்லைகளை உணர்ந்து அதற்குள் நின்று பேசுவதே கௌரவமான விஷயமாகும். வெறும் வம்புதான் நோக்கம் என எண்ணுபவர்களுக்கு எதையும் சொல்லும் உரிமை உண்டு. ஆனால் இசைவிமரிசகனுக்கு அவன் பேசுதளம் சார்ந்த புரிதல் இருக்க வேண்டும்.
அனைத்துக்கும் அப்பால் மேதைகளைப் பற்றிப் பேசும்போது நம் எளிய தீர்ப்புகளை அவர்கள் மேல் போடக்கூடாது என்ற அடக்கம் எந்த விமரிசகனுக்கும் தேவை. சாதாரணர்களின் விதிகளுக்கு உட்பட்டவர்கள் அல்ல மேதைகள். உதாரணமாக நா.மம்முது இளையராஜாவின் அதிநுட்பமான பாடல்கள் என்று சுட்டிக்காட்டிய பாடல்களை போட்ட காலத்தில் அவர் வருடத்திற்கு ஐம்பது படங்களுக்கு இசையமைத்துக்கொண்டிருந்தார். ஒரு நாளுக்கு இரண்டுபாடல்களைக்கூட போட்டிருந்தார். இதை புரிந்துகொள்வதுதான் விமரிசகனின் வேலையே ஒழிய கலைஞனுக்கு ஆலோசனை சொல்வதல்ல.
தன்வாழ்நாளில் தல்ஸ்தோய் எழுதியது ஒரு குட்டி நூலகம் அளவுக்கு! டாக்டர் சிவராம காரந்த் எழுதிய மொத்த பக்கங்கள் கிட்டத்தட்ட ஐம்பதாயிரம்! அவற்றில் இரு முழு கலைக்களஞ்சியத்தொகுதிகளும் அடக்கம். இத்தனையும் எழுதிவிட்டு அவர் யட்சகான நடனமும் கற்றுக்கொண்டு மேடையில் ஆடினார். சிற்பக்கலை குறித்து புகைப்பட நூல்களை வெளியிட்டார். சுற்றுச்சூழலுக்காக கிட்டத்தட்ட நூறு வழக்குகளை நடத்தினார். மிச்ச நேரத்தில் இந்திய சட்டநூல்களை கன்னடத்தில் மொழியாக்கம் செய்தார். விதிகளை யார் சொல்வது, விமரிசகனா?
வாழ்நாள் முழுக்க பிற எழுத்துக்களை வாசித்த இலக்கிய மேதைகள் உண்டு. தன் சொந்த எழுத்துக்களை அல்லாமல் எதையுமே வாசிக்காத மேதைகளும் உண்டு. வாழ்நாள் முழுக்க அலைந்து திரிந்து அனுபவங்களில் திளைத்த மேதைகள் உண்டு, அறையை விட்டு வெளியே செல்லாதவர்களும் உண்டு. ‘நான் பயணங்களை அறவே வெறுக்கிறேன்’ என்றார் போர்ஹெஸ். வாழ்நாள் முழுக்க பயணங்களை பற்றி எழுதிக்கொண்டுமிருந்தார்.இலக்கியத்தில் என்றல்ல, எந்த துறையிலும் இம்மாதிரி எளிமைப்படுத்தல்களுக்கு இடமில்லை. கலையின் பித்தெடுத்த இயக்க விதிகளை அறிந்த ஒருவன் கலைஞன் எப்படி இயங்கியிருக்க வேண்டும் என சொல்ல துணிவானா? எங்கோ ஒரு இடத்தில் அவனது அகம் கூச வேண்டாமா?
கடைசியாக மீண்டும், இளையராஜாவை மிகக் கடுமையாக கறாராக விமரிசனம் செய்யும் தரமான கட்டுரைகள் இன்னமும் தமிழில் வரவேண்டும் என்றே சொல்ல விரும்புகிறேன். அவருக்கு பாடலின் கவித்துவம் மீதிருக்கும் உதாசீனம் பற்றி எனக்கே கடுமையான விமரிசனம் உண்டு. ஆனால் அந்த விமரிசனங்கள் தங்கள் எல்லையை உணர்ந்த விமரிசகர்களால் சமநிலையுடன் செய்யப்படாவிட்டால் எந்த மதிப்பும் இல்லை.

நன்றி: jeyamohan.in

Sunday, May 23, 2010

எப்பவும் நான் ராஜா!!


விடிந்தால் சென்னைக்கு கல்லூரியில் சேர செல்லவேண்டும்...மாலையில் சிறை அரங்கத்தில் அன்னக்கிளி படத்தின் 58 வது நாள் விழா. சிவகுமார், இளையராஜா என்று பெரிய ஆட்கள் வருகிறார்கள்ஆவலோடு விழாவிற்கு சென்றேன். விழாவுக்கு வந்த கூட்டம் முழுக்க இளையராஜாவுக்கு வந்த கூட்டம். அவருடைய இசை நிகழ்ச்சியும் உண்டு...ஒரு திரைப்படம் வெளியான இந்த குறைந்த நாட்களில் பெரிய ஆள் ஆன அந்த உருவத்தில் சிறிய மனிதனை பார்க்கத்தான் கூட்டம்!
டப்பா படங்களையே வெளியிட்டு வந்த அத்தாணி பாபு இந்த படத்தை வாங்கியிருந்தார். ஸ்டில்களுடன் அந்த படத்தின் பாடல்கள் அடங்கிய ஈபி ரெகார்ட் கவர் ஒன்றையும் கொடுத்தார். வண்ணத்தில் ஒரு கருப்பு மனிதனின் படம்..இசை அமைப்பாளர் என்று வெளியாகியிருந்தது. ஒரு புதிய சகாப்தத்தை படைக்கபோகிறவர் என்ற உணர்வு அப்போது ஏற்படவில்லை. படம் இருதயா தியேட்டரில் வெளியாகி டப்பாவுக்குள் போகும் நிலையில் பாடல்களால் சூடு பிடித்து கிடு கிடு என்று பற்றத்தொடங்கியது...எங்கு பார்த்தாலும் மச்சானை பார்த்தீங்களாதான்!!! படம் ஹிட்..வெற்றிவிழா என்று ஒரே கலக்கல்தான்...மேடையில் பேனர் வரைந்ததற்காக எங்கள் நிறுவனத்திற்கு ஒரு (கேடையம் எதுவும் ஸ்டாக் இல்லாததால்) வாட்ச் பரிசு...இளையராஜா கையால்தான் வாங்குவேன் என்று முதலிலேயே அத்தாணி பாபுவிடம் விண்ணப்பம்..வெள்ளை சட்டையை வெள்ளை பேண்ட்டில் இன் செய்திருந்த அந்த குட்டையான மாமனிதனிடம்..அப்போது அவரை விட குட்டியாயிருந்த இந்த பொடியன் எங்கப்பா சார்பில் இதை வாங்கினான்! மறக்க முடியாத கணங்கள்!!

ஆமாம்..இசையறிவு அப்படி என்னதான் இருந்தது...காலையில் பாடும் ராகம் என்னவோ...என்று தம்பி கேட்டவுடன்...நீளமாக ஆலாபனை செய்து 'பூபாளம்' என்று ராவணன் சொல்லி கேட்டது மட்டும்தான்...எல்லோரையும் போலவே திரைப்பாடல்கள் மட்டுமே இசை ரசனையை கொடுத்தன. டேப் ரிக்கார்டர் அப்போதுதான் பரவிக்கொண்டிருந்தது...மேடைகளில் வணக்கம் பலமுறை சொன்னேன்...என்று தமிழ்ப்பாடலில் சம்பிரதாயமாக ஆரம்பித்து பின்னர் ஷர்மிளியும், யாதோன் கி பாராத்தும், பாபியும் மட்டுமே கேட்கக்கிடைத்த காலம்...! எங்கும் யாவரும் இந்தி பாடல்களையே கேட்டு மகிழ்ந்திருந்தபோது...புறப்பட்டதுதான் ராஜாவின் பயணம்! ஏற்கனவே ஜி.கே.வெங்கடேஷின் பாடல்களை புதிய பாணியில் 'பொண்ணுக்கு தங்க மனசு' போன்ற படங்களில் கேட்டபோது...ஏற்பட்ட சந்தேகம் அவருடைய உதவியாளராக அறிமுகப்படுத்தப்பட்ட ராஜாவின் பாடல்களை கேட்டபோது தெளிந்தது...பட்டி தொட்டியெல்லாம் மேடையில் கம்யூனிச கானங்களை முழங்கிய பாவலரின் தம்பி என்ற ஹோதா...அதற்க்கு முன்னரே பத்மா சுப்பிரமணியம் குடும்பத்து பெண்கள் வெளியிட்ட தமிழக நாட்டு பாடல்கள் என்ற கேசட்டின் பாடல்கள் அன்னக்கிளியின் மூலத்தை பறைசாற்றின. அந்த கேசட்டும் கவரும் இன்னும் என்னிடம் ராஜாவின் பெயருடன் இருக்கின்றன.

அப்போதும் எம்.எஸ்.வி., கே.வி.எம்., போன்ற இசை அமைப்பாளர்கள் புகழின் உச்சியில் இருந்தாலும்..புதுமுக நடிகர்கள், புதுமுக இயக்குனர்கள் , புதிய பாணி திரைப்படங்கள் என்று கிளம்பி வந்த காலத்தில் உறுதுணையாய் இருந்தது ராஜாவின் இசை. பாமர ரசிகர்கள் கூட பின்னணி இசையின் அனுபவத்தை உணரத்தொடங்கிய காலம். ரீரிக்கார்டிங் சூப்பர் மா என்று யாரை பார்த்தாலும் பேசிக்கொண்டிருந்தது ஒரு ஆச்சரியமான திருப்பம்! பாரதிராஜா, மகேந்திரன், மணிரத்னம் என்று புறப்பட்ட பட்டாளம் இசை இளையராஜா என்ற டைட்டில் கார்டுடந்தான் ஆரம்பித்தனர்..சலீல் சவுத்ரியுடன் ஆரம்பித்த பாலு மகேந்திராவும் இந்த வரிசையில் சேர்ந்தவர்!! ஒரு இசை அமைப்பாளருக்கு கட் அவுட் வைக்கத் தொடங்கியது இவருக்குத்தான். பூஜை, இன்று முதல் விளம்பரங்கள் எல்லாமே நடிகர்களின் படங்களுக்கு ஈடாக இவருடைய போட்டோ, மற்றும் பட்டங்களுடன் வெளியிடத் தொடங்கினர்! இளையராஜாவும் ஒரு சாமியார் தோற்றத்தில் தரிசனம் கொடுக்க ஆரம்பித்தார்..கடும் பணிகளுக்கிடையே ஏராளமான படங்களுக்கு பாடல்களையும் பின்னணி இசையையும் தந்தார். எங்கள் கடையில் பேனர் வரையும்போது அவருடைய பெயருக்கு முக்கியத்துவம் கொடுத்து வருவோம்..இதனால் என் சக சிவாஜி / எம். எஸ்.வி. ரசிகர்களின் கோபத்துக்கு ஆளானேன். தியாகம், தீபம் போன்ற படங்கள் வந்தபோது முன்னவர்கள் சமாதானம் ஆனார்கள்.!

ரஜினி, கமல், மைக் மோகன் போன்றவர்களின் படங்களில் இளையராஜா கட்டாயம் ஆனார். ஆர்.சுந்தர்ராஜன், மணிவண்ணன், ராஜாவின் தம்பி கங்கை அமரன் போன்ற அடுத்த தலைமுறையினரின் படங்கள் பாடல்களுக்காகவே ஓடின. பாலசந்தர் போன்ற இயக்குனர்கள் கூட ராஜாவை அணுக நேர்ந்தது அவர்களுக்கே கஷ்டமாக இருந்திருக்கும். இதற்கெல்லாம் விடிவு காலமாக இளையராஜா அதிருப்தியாளர்களுக்கு ஒரு புதிய வழி பிறந்தது...அது ரகுமானின் வரவு. பாலசந்தரின் சொந்தப்படமான ரோஜாவுக்கு இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். மலையாள இசை அமைப்பாளரான எ.கே.சேகரின் மகனும் விளம்பர ஜிங்கிள்ஸ் இசை அமைப்பாளருமான இந்த இளைஞர் இசை மற்றும் தொழில்நுட்ப கலவைகளை சிறந்த முறையில் உருவாக்கி பெரும் புகழ் பெற ஆரம்பித்தார்...மணிரத்னம், பாலசந்தர், பாரதிராஜா போன்றவர்கள் அப்படியே முகாம் மாறினர். ராஜாவுக்கு அப்படியே மாற்றாக தோற்றம் தர ஆரம்பித்தார் ரகுமான். இமேஜ் பில்டிங் , மக்கள் தொடர்பு, எல்லாவற்றிலும் ரகுமான் முன்னிலைபடுத்தப்பட்டார். இவர் பரதேசி கோலம் என்றால் அவர் கார்ப்பரேட் ஸ்டைல்..உடை, சிகையலங்காரம் அனைத்தும் நிபுணர்களாலும் விளம்பர எஜெண்டுகளாலும் முடிவெடுக்கப்பட்டு அவருடைய பயணம் திட்டமிட்டு அமைக்கப்பட்டு இன்று ஆஸ்கார், கிராம்மி வரை சென்று விருதுகளை அள்ளி வருகிறார்.

இளையராஜா, ஒரு முசுடு, கஞ்சன், அல்பம் என்பது போல் ஒரு திட்டமிட்ட சித்தரிப்பு தமிழ் ஊடகங்களில் நிலவி வருகிறது..பலரால் ஒரு கருப்பு தலித் பேர்வழி இவ்வளவு உயரங்களை அடைந்ததை ஜீரணிக்க முடியவில்லை என்றுதான் நான் கருதுகிறேன். அவருடைய இசையை பற்றி ஒரு வரி விமர்சிக்க அருகதை இல்லாதவர்கள் அவருடைய பிற தன்மைகளை கடுமையாக சாடுகிறார்கள். சிலருக்கு அவரை பிராம்மணவாதியாக சித்தரிப்பதில் ஆனந்தம். செம்மங்குடியின் அறையில் உள்ள ஒரே ஒரு புகைப்படம் இளையராஜாவினுடையது என்று ஒரு புலனாய்வாளர் சித்தரிக்கிறார்..ஆயிரக்கணக்கான பாடல்களில் 'கனவு காணும் வாழ்க்கை யாவும்' போன்ற ஒன்றிரெண்டை கண்டுபிடித்து, அவரிடமோ பாலு மகேந்திராவிடமோ கேட்காமல் இளையராஜாவின் பாடல்கள் அனைத்தும் காப்பியடிக்கப்பட்டவை என்று தீர்ப்பளிக்கிரார்கள் பலர். ஆதாரமில்லாமல் அவர் பேசியதாக எதையோ சொல்லி கடுமையாக சாடுகிறார்கள் சிலர்..ஒட்டுண்ணி எழுத்தாளர்களோ பேட்டி காண வந்த நிருபருக்கு பச்சை தண்ணி கொடுக்க மறுத்த கஞ்சன் என்று புதுக்கதை புனைகிறார்கள். எத்தனை எத்தனை தாக்குதல்கள். என் அபிமான கட்டுரையாளரும் நண்பருமான ஷாஜி கூட அவருடைய குணநலன்களை கடுமையாக விமர்சித்து ஒரு கட்டுரை எழுதியிருந்தது ஒரு அதிர்ச்சி..நியாயமான காரணங்களை அவர் கூறினாலும்...மனதுக்கு கஷ்டமாக இருந்தது...என்ன செய்வது...என் மூளைக்குள் எங்கோ ஒரு இளையராஜா ரசிகன் பதுங்கியிருக்கிறானே!.

எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் ஆளுக்கு தகுந்த அளவுகோல்களை ஊடகங்கள் வைத்திருக்கின்றனவோ என்பதுதான். பி.ஆர்.வேலைகளில் படு வீக்கான ராஜாவை எங்கெல்லாம் இடம் கிடைக்கிறதோ அங்கெல்லாம் அடிப்பவர்கள் பிறரிடம் தாள் பணிந்து நிற்பது காமெடியாக இருக்கிறது. இந்திய திரைப்பட பாடல்கள் ஒப்பீட்டில் ஒரு சாதாரண பாடலான 'ஜெய் ஹோ' இத்தனை விருதுகளை குவிக்கும் அரசியலும் பின்புலமும் , எந்த புலனாய்வு எழுத்தாளர்களாலும் விவாதிக்கப்படுவதில்லை...தேசிய பெருமிதம் தடுக்கும் போலிருக்கிறது. ஒருவருடைய மத நம்பிக்கை மற்றும் செயல்களும் விவாதிக்கப்படும்போது, இன்னொருவரை சவுகரியமாக மறக்கக்கூடிய வசதிகள் இங்கிருக்கின்றன.

சரி எங்கேயோ ஆரம்பித்து எங்கேயோ போய்விட்டேன். 'அதர்மம்' பட பூஜை ஏவிஎம்மில். என் தம்பியின் முதல் படம் என்பதால் போயிருந்தேன். கடும் மழை.. எங்கும் சேறும் சகதியும்...வெள்ளை வெளேர் செருப்பை கழற்றி வைத்துவிட்டு இளையராஜா உள்ளே வந்து வணங்குகிறார். வெளியே வரும்போது நெரிசலில் ஒரு தள்ளு முள்ளு. செருப்பை மாட்ட குனிகிறார். பதட்டப்பட்ட என் நண்பர் ஒருவர் பச்சக் என்று தன் சேற்று காலை செருப்பின் மீது வைக்க..செருப்பு ஒரே கண்றாவியாகிவிட்டது...ராஜாவின் இமேஜ் குறித்து ஒரு வித எண்ணம் கொண்டிருந்த நண்பர் நடுங்கி விட்டார்...வாய் குழற எதோ சொல்ல வந்த அவரை ராஜா சமாதானப்படுத்தி, குனிந்து தேங்கி நின்ற நீரில் செருப்பை அலசி அணிந்து கொண்டு வெளியேறினார்.

அவரை கடைசியாக நேரில் நான் பார்த்தது அப்போதுதான்

நன்றி:ஜீவா, ஜீவா ஓவியக்கூடம

Sunday, May 16, 2010

நான் பார்த்த இளையராஜா - அகிலன் (அகி மியூஸிக்)



இசை துறையில் ப‌ல‌கால‌மாக‌ ஈடுப‌ட்டு வ‌ந்த‌ நிறுவ‌ன‌ங்க‌ள், இசை ஆர்வ‌லர்க‌ள், இளைய‌ராஜாவின் இசை பிரிய‌ர்க‌ள் என‌ ப‌ல‌த‌ர‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளுக்கும் அண்மையில் வெளிவ‌ந்த‌ ப‌த்திரிகைச் செய்தி விய‌ப்பையும் ம‌கிழ்வையும் அளித்திருக்கும். ந‌ம‌து நாட்டின் 'அகி மியூசிக்' இசை நிறுவ‌ன‌த்திற்கு த‌ன‌து எல்லா இசை உரிம‌த்தையும் இசைஞானி இளைய‌ராஜா வ‌ழ‌ங்கியிருந்தார்.

ந‌ண்ப‌ர் அகில‌ன் அடைந்திருக்கும் ம‌க‌த்தான‌ வெற்றி இது. பொதுவாக‌ வெற்றிக‌ளுக்குப் பின்னே வ‌லி மிகுந்த‌ க‌தைக‌ள் இருக்கும். ஐந்து வ‌ருட‌ ந‌ட்பில் அகில‌னை ஓர‌ள‌வு அறிவேன். மிகுந்த‌ கூச்ச‌ சுபாவ‌ம் உடைய‌வ‌ர். அகி மியூசிக்கின் வ‌ள‌ர்ச்சி ப‌ற்றி எழுத‌ ப‌ணித்தேன். மிக‌வும் த‌ய‌ங்கினார். அது சுய‌புராண‌ம் ஆகிவிடுமோ என‌ ம‌றுத்தார். நெடிய‌ த‌ய‌க்க‌த்துட‌ன் பின்ன‌ர் எழுதி கொடுத்தார். ச‌ம‌கால‌த்தில் நாம் காணும் ஒரு வெற்றி அத‌ன் பிசு பிசுப்பு மாறாம‌ல் ஒலிக்கிற‌து. - மா. நவீன்

அகி மியூஸிக் தொடங்கி இப்பொழுது ஐந்து வருடங்கள் நிறைவடைந்திருக்கிறது. இந்த ஐந்து வருடமும் மிகப்பெரிய போராட்டக் காலங்கள். இன்னமும்தான். எப்படி இந்த இசைக் கனவு எனக்கு நனவானது என்பது ஒரு சுவாரசியமான கதை. இளையராஜா அவர்களை தவிர்த்து சொல்லிவிட முடியாத கதை. இளையராஜாவை எனது வாழ்விலிருந்து அகற்ற முடியாது. அதேபோல் அகி மியூஸிக்கின் வளர்ச்சியையும், இளையராஜாவை தவிர்த்து என்னால் நினைவுக்கூற முடியாது.

எனக்கு இளையராஜாவின் இசை 90களில்தான் அறிமுகமாகியது. ஒரு தமிழனுக்கு இது எப்படி சாத்தியம் என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். அதை நான் விளக்கினால் அது இந்தக் கட்டுரையை வேறு தளத்திற்குக் கொண்டுப் போக நேரும். அதனால் அதை தவிர்க்கிறேன்.

90களில், அம்மா பள்ளிக்கு செல்ல தரும் பணத்தை பட்டினி கிடந்தும், சில சமயம் வீட்டிலிருந்து காலை சிற்றுண்டியை பள்ளிக்கு எடுத்துக் கொண்டு சென்றும், அதன் மூலம் பணத்தை மிச்சப்படுத்தி, ஒரு வாரத்திற்கு ஒரு கேசட் என்று வாங்குவேன். அம்மா எப்பொழுதும் திட்டுவார். நாம் இருக்கும் நிலமையில் இந்த செலவு அவசியமா என்று. தினம் தினம் ஏச்சு. காசெல்லாம் இப்படி கரையுதே என்று. இத்தனைக்கும் வாரம் ரிங்கிட் மலேசியா 3.50 மட்டும்தான். மாதம் நான்கு கேசட். எனது பிறந்த நாள் அல்லது எதற்காவது யாராவது எனக்கு பரிசு தர எண்ணியிருக்கிறார்களா என்று முன் கூட்டியே கேட்டு, அப்படி ஆம் என்று பதில் வந்தால், ஒரு கேசட் வாங்கித் தரும்படி கேட்டுக்கொள்வேன். எனது வறுமையில், எனக்கு போதையாகவும் மதமாகவும் ஆகியிருந்தது இசை, அதிலும் இளையராஜாவின் இசை.

அம்மா ஒரு முறை படுமோசமாகத் திட்டிய போது, மனதுக்குள் ஒரு வைராக்கியம் எழுந்தது. எந்த இசைக்கு நான் இப்படி பணத்தையெல்லாம் அழிப்பதாக அம்மா சொல்கிறார்களோ அந்த இசையையே நான் காசாக்கிக் காட்டுகிறேன் என்று முடிவெடுத்தேன். இசை எனது பயணம் என்று என் ஆழ்மனதில் பதிந்து விட்டது. ஆனால் எந்த இசை திறனும் என்னிடம் இல்லை. பியானோ சில மாதங்களும், கர்நாடக வாய்பாட்டு சில மாதங்களும் வெவ்வேறு காலக்கட்டத்தில் படித்தேன். எனக்கு எப்பொழுதும் பொறுமையிருந்ததில்லை. இதை எழுதிக்கொண்டிருக்கும் போது கூட, என்னை எழுத துன்புறுத்திக் கொண்டிருக்கும் நண்பர் நவீனின் முகம் வந்து வந்து போகிறது. இல்லையென்றால், இந்த அளவு பொறுமையும் வராது. அதனால் இசையைப் படிப்பது எனக்கு அலுப்பாக இருந்தது.

பிறகு இசை வியாபாரத்தில் கால் வைக்கலாம் என்று முடிவு பண்ணினேன். அது சுத்தமாக எனக்கு பரீட்சயம் இல்லாதது. எனது மனதில் தோன்றும் அத்தனை உணர்வுகளையும் இசையாக வெளிக் கொண்டு வருவது, நிறைய இசைத் தொகுப்புகளை வெளியிடுவது என்று கனவு கண்டேன். அது கனவு என்பதைவிடவும் ஆசையாகவே அதிகம் வளர்ந்து வந்தது. எல்லா துன்பங்களுக்கும் ஆதாரம் ஆசைதான் என்று புத்தர் கூறியது அப்பொழுது நினைவுக்கு வரவில்லை. கனவுகள் கண்டிருக்கிறேன், இளையராஜாவுடன் பேசுவதுபோல், இளையராஜாவின் இசையை வெளியிடுவதுபோல். இங்கு கனவு என்று நான் சொல்வது அப்துல் க‌லாம் குறிப்பிடும் க‌ன‌வு அல்ல‌. சாதார‌ண‌மாக‌த் தூங்கும் போது வந்தக் கனவைதான். அது ஆழ்மனத்தின் ஆதீத ஆசையின் வெளிபாடு என்பதும் எனக்கு தெரியும். ஆனால் என்னுடைய வறுமையான குடும்ப நிலையில் இதெல்லாம் சாத்தியம் ஆகக் கூடிய ஒன்றா என்ற சந்தேகத்தை என் மனம் எப்பொழுதுமே எழுப்பி வந்திருக்கிறது.

அந்தக் காலக்கட்டத்தில் இளையராஜா அவர்களைப் பற்றி திரு. வீ. செல்வராஜ் எழுதிய ஞானவித்து என்ற கட்டுரை, இசை சார்ந்த தேடல்களில் என்னை மும்முரப்படுத்தியது. அந்தக் கட்டுரைதான் ஒருவகையில் இளையராஜாவின் இசையை நான் தேடிப்போகக் காரணமாக இருந்தாலும், இளையராஜாவின் பேட்டிகள் எல்லா வகையான இசைகளையும் நான் தேடி செல்ல, ரசிக்க என்னை உந்தியது. ஒரு பேட்டியில் அவர், 'இசைஞானிகள் என்று இன்று எவரும் இல்லை. தியாகராஜ சுவாமிகள் போன்றவர்களோடு முடிந்து விட்டது. நாம் எல்லோரும் அவர்கள் இட்ட பிச்சையில்தான் வாழ்கிறோம்' என்றார். அது எனது அடுத்தக் கட்டத்திற்கு வழிவகுத்தது. சினிமா இசையிலிருந்து எனது செவிகளை அகற்றி எனது இசைத் தரிசனத்தை விசாலமாக்க உதவியது அவருடைய அந்தப் பேட்டி. இசைஞானி என்று எல்லோராலும் அழைக்கப்படுபவர், தியாகராஜரையும் முத்து சுவாமி தீட்சதரையும் ஞானி என்கிறாரே, யார் அவர்கள் என்றும் என்ன பாடல் இசையமைத்தார்கள் என்றும் தேடிப்போய், கர்நாடக இசையை விரும்ப ஆரம்பித்தேன். மற்றொரு பேட்டியில் பாக்கையும் (Bach) மோசாட் (Mozart) பற்றியும், அவர் குறிப்பிட்டதைப்பற்றிப் படித்து சில காலங்கள் மேலைநாட்டு சாஸ்தீரிய சங்கீதத்தில் ஆழ்ந்துப்போனேன்.

சட்டென்று நிகழவில்லை எதுவும். முதன் முதலில் கேட்டபோது, அது கர்நாடகமோ, மேலை சங்கீதமோ, கேட்ட சில நிமிடங்களில் உறங்கிவிடுவேன். மிகப்பெரிய இழுவையாகவும் அறுவையாகவும், அலுப்புத் தட்டுவதுமாகவே இருந்தது. இளையராஜாவின் இசைக்கு உருகிப் போயிருக்கிறோம் ஆனால் அவரோ வேறொரு இசையை போற்றுகிறாரே, அப்படி என்ன மேன்மைகள் இருக்கிறது என்று மீண்டும் மீண்டும் கேட்டேன். பின்னாளில் எல்லா இசைக்கும் எனது செவியும் மனமும் இம்மூன் (immune) ஆகிவிட்டது.

பிறகு எனது கனவுகளை நினைவாக்க சில முன்முயற்சிகள் தொடங்கினேன். எம். நாசீர் என்ற மலாய் இசை கலைஞருடன் வேலை செய்தது, அதன் காரணமாக வர்னர் மியூசிக்கில் (Warner Music) வேலைக் கிடைத்தது என்று தொடர்ந்தது எனது பயணம். வ‌‌ர்னரில் சேர்ந்த இரண்டாவது வருடமே இளையராஜாவையும் ஏ.ஆர். ரஹ்மானையும் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. காப்புரிமை பற்றிய விழிப்புணர்வை இந்திய படைப்பாளிகளிடம் ஏற்படுத்தி, காப்புரிமை மூலமாக இசைத்துறையின் இன்னொரு தொழில் வாய்ப்புகளை இந்தியாவில் உருவாக்கிட வர்னர் முயற்சிகள் செய்தது. அதற்கு அதன் மலேசிய சீன முதலாளிகள் தலைசிறந்தப் படைப்பாளிகளாகத் தேர்ந்தெடுத்தது இளையராஜாவையும் ஏ.ஆர். ரஹ்மானையும். அந்தப் பயணத்தில் நானும் ஒரு ஆள். அப்பாய்ண்ட்மெண்ட் ஏற்படுத்தி தந்ததும் நான் தான். இந்தியாவில் வர்னர் தொடங்கப்போகும் நிறுவனத்தில் நான் மிக உயர்ந்தப் பதவியில் அங்கம் பிடித்துவிட வேண்டும் என்று அதிகமாக வேலைகள் செய்து, எனது அதிகாரத்திற்கு வெளியேயும் வேலை செய்து, வர்னர் எதிர்ப்பார்க்காத பல உதவிகளையும் செய்து தந்தேன்.


இளையராஜாவை வர்னரின் சார்பாக, ஆசியா வர்னரின் ஒரு சீனத் தலைமை இயக்குனருடன் 2001இல் சந்தித்தேன். சின்ன, கட்டையான, கருப்பான தேகம். இத்தனை பிரமாண்ட இசை இந்த உடம்புக்குள் இருந்தா வருகிறது. என்னால் நம்ப முடியாத தோற்றம். தாடியும் உருத்தராச்சமுமாக ஒரு வகையில் கொஞ்சம் அந்நியமாக தெரிந்த உருவம். வர்னர் அதற்கு முன்பாகவே ஏ.ஆர். ரஹ்மானுடைய திருடா திருடா, இந்திரா போன்ற படப்பாடல்களை மலேசியாவில் அதுவும் ஏ.ஆரை வரவழைத்து வெளியீடு செய்திருந்ததால் அவர்களுடைய மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏ.ஆராகத்தான் இருந்தது. ஆனால் அந்த எண்ணங்களையெல்லாம் வர்னர் இளையராஜாவை சந்தித்த ஓரிரு நிமிடங்களில் கைவிட்டிருந்தது. இளையராஜாவின் தி மியூசிக் மெசய்யா என்ற இசையின் ஒரு சில நிமிட இசை, வர்னர் தலைமை இளையராஜாவை ஆச்சரியத்துடன் பார்க்கவைத்தது.

இளையராஜாவுடன் புகைப்படம் எடுக்ககூடாது, ஆட்டோகிராப் வாங்கக்கூடாது என்று எனக்கு கட்டளையிட்டிருந்தவர், இளையராஜா இசையமைக்கும் வேகத்தைப் பார்த்து வியந்து அவருடன் நான் படம் எடுக்க வேண்டும் என்று என்னிடம் கூறினார் வர்னர் ஆசியாவின் தலைமை இயக்குனர் திரு. கே சி லோவ் (K C Low). ஆனால், அந்த வருட இறுதியிலேயே எனது அத்தனைக் கனவும் இடிந்து விழுந்தது. வர்னரின் ஆசியாவின் பல அலுவலகங்கள் மூடப்பட்டன. செப்டம்பர் பதினொன்றுக்குப் பிறகு அமெரிக்காவின் பொருளாதாரத்தைக் காரணம் காட்டி பலரை வேலையில் இருந்து நீக்கியது நிறுவனம். மலேசியாவிலிருந்து மட்டும் 30 பேரை வேலை நிறுத்தம் செய்தது. ஆனால் என் வேலைக்கு எந்தப் பாதிப்பும் இல்லையென்றாலும், எனது சொந்த இசை நிறுவனம் தொடங்கும் வேலைகளில் நான் மும்முரமாக ஈடுபட எனக்குள் ஒரு பொறியை அது ஏற்படுத்தியிருந்தது. பிறரின் தலைமையில் நல்ல வருமானத்தில் வேலை செய்தாலும், அவர்களுக்கு வேண்டாம் என்று தோன்றும் போது தூக்கி எறிந்து விடுவார்களே என்ற எண்ணம் மேலோங்கியது.

வியாபாரம் சார்ந்த எல்லா பயிற்சிகளிலும் கலந்து கொண்டேன். ஏறக்குறைய 40 தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், நண்பர்கள், உறவினர்கள் என்று எனது வியாபாரத் திட்டங்களை காட்டி முதலீடு தேடிவந்தேன். அவமானங்கள்தான் மிஞ்சியது. அசிங்கப்பட்டேன். பல வருடங்கள் மன உளைச்சலில் இருந்தேன். பணம் அற்றவன் தொழில் பற்றி நினைப்பது தவறு என்று எனக்கு விளங்கியது. மூலதனம் இல்லாது தொழில் என்பது சாத்தியமற்றதாய் இருந்தது. தினம் தினம் காலையில் காரில் வர்னருக்கு வேலைக்கு செல்லும்போது இளையராஜாவின் 'அம்மா ஜனனி, சரணாலயம் நீ, என் ஆன்மாவின் சங்கீதம் நீ அருள் நீ' என்ற பாடல் மட்டுமே எனக்கு மந்திரமும், பிரார்தனையுமாக இருந்தது.

யுவன் சங்கர் ராஜா, ஏ.ஆர். ரஹ்மான் என்று எனது நட்பு வட்டங்களைக் கூட நான் விட்டுவைக்கவில்லை. எனது இசைக் கனவிற்கு முதலீடு செய்ய முடியாத நிலைதான் எல்லோரிடமும். இளையராஜாவை அதுவரை அணுகாததற்கு காரணம் அவர் முன்னமே பலரால் தொழில் ரீதியாக ஏமாந்து நட்டம் அடைந்திருக்கிறார் என்று அவருடைய நெருங்கிய வட்டங்கள் கூறியிருந்ததோடு, அவர் உதவுவார் என்பது இந்த ஜென்மத்தில் நடக்காத ஒன்று என்று கூறினார்கள்.

2004 இல் இளையராஜா ரமணர் கான ரதம் என்ற இசைத்தொகுப்பை வெளியிட்டு இருக்கிறார், அது திருவண்ணாமலையில் மட்டுமே கிடைக்கும் என்று சில நண்பர்கள் மூலமாக கேள்விப்பட்டேன். அவரிடம் ஏன் முயற்சி செய்துப் பார்க்ககூடாது என்று தோன்றியது. பெரும் தயக்கத்துக்குப் பிறகு அவரிடம் பேசினேன். பிரசாத் ஸ்டியோவிற்கு போன் செய்து, ரமணர் இசைத்தொகுப்பைப் பற்றிக் கேட்டபோது, அது ரமணாஸ்ரமத்தின் நிதிக்காக அவரால் தயார் செய்து தரப்பட்டது என்றும், அதைக்கொண்டு அவர்கள் ஆஸ்ரமத்தின் பலத்திட்டங்களுக்கு நிதி திரட்டிக்கொள்வார்கள் என்றும் கூறினார்.

தயங்கி தயங்கி சொன்னேன், 'சொந்த இசை நிறுவனம் தொடங்கப் பல வருடங்களாக முயற்சிக்கிறேன். எனக்கு முதலீடு செய்யும் அளவுக்கு பண வசதியில்லை. முதலீட்டாளர்களும் புதிய, அனுபவம் இல்லாதவனுக்கு எப்படி முதலீடு செய்வது என்று அஞ்சுகிறார்கள். நீங்கள் இந்த ஆல்பத்தை எனக்கு கொடுத்தால் அதையே மூலதனமாகக் கொண்டு நான் என் கனவை அடைவேன்' என்றேன். சத்தியமாக இதில் இருப்பதுபோல் தெளிவாகவும் நிதானமாகவும் வார்த்தைகள் வரவில்லை. எனக்கு பேசுவதில் எப்பொழுதும் சில அசெளகரியங்கள் இருப்பதுண்டு, வார்த்தைகள் தெளிவில்லாமல் வரும்.


'சரி, ஆனால் ஒரு தொகையை முன்பணமாக ரமணாஸ்ரமத்திற்கு தந்துவிட்டு அவர்களிடமிருந்து நீங்கள் அதன் மாஸ்டர் காப்பியைப் பெற்றுக்கொள்ளுங்கள். எவ்வளவு தர முடியும்?' என்றார். நான் எதிர்பார்க்காத ஒன்றுபோல் மனம் குதித்தது. மலேசிய ரிங்கிட் பத்தாயிரம் என்றேன். எல்லா ஏற்பாடுகளும் செய்துவிட்டு அழைக்கிறேன் என்றேன்.

இப்பொழுது இந்த வாய்ப்பைக் காரணம் காட்டி முதலீடு தேடினேன். ரமணரின் மீது பெரும் ஈடுபாடு கொண்ட அதே சமயம் எனக்கு வழிகாட்டியாகவும் என் நலவிரும்பியாகவும் இருக்கும் டாக்டர் சண்முக சிவா அவர்கள் உதவ முன்வந்தார். பிறகு நிறுவனம் அமைப்பது, சிடி தயாரிப்பது, விநியோகம் என்று எல்லா செலவுகளும் மலைப்போல் தெரிந்தது. மீண்டும் இளையராஜாவிற்கு போன் செய்து, பத்தாயிரம் வெள்ளி எனக்கு சிரமமாக உள்ளது. ஐந்தாயிரம் வெள்ளி தருகிறேன் என்றேன். வேறெதுவும் சொல்லாமல் சரி என்றார்.

ஆனால் ஒரு சில நாட்களில் அதுவும் சிரமம் என்றுத் தெரிந்தது. பிறகு மறுபடியும் அவருக்கு போன் செய்து 'மன்னிக்கனும் ஆயிரம் வெள்ளிதான் என்னால் கொடுக்க முடியும், என்னால் பணம் புரட்ட முடியவில்லை' என்றேன். சிரித்துக் கொண்டே 'சரி, வாங்க பார்த்துக்கலாம்' என்றார். மறுநாள் பெரிய சந்தேகத்தினால் திரும்பவும் அழைத்தேன். 'சரி, வாங்க பார்த்துக்கலாம் என்றால் என்ன அர்த்தம், எனக்கு பயமா இருக்கு, வந்த பிறகு, பத்தாயிரம் வெள்ளியில் இருந்து ஆயிரம் வெள்ளிக்கு குறைத்து என்னை கேவலப்படுத்துகிறீர்களா, இதெல்லாம் சரிவராது என்று கூறி வெறும் கையோடு அனுப்பி விடுவீர்களா? பயண செலவுகள் நட்டமாகிவிடும் என்று பயமாய் இருக்கிறது' என்று தயங்கியபடி கேட்டேன். அவர் சிரித்துவிட்டு, 'வர சொல்லி விட்டு, காரணம் சொல்லி உங்களை திருப்பி அனுப்புவது, அவமானப்படுத்துவது போன்றது. நான் அதை செய்ய மாட்டேன், பயப்படாமல் வரவும்' என்றார்.

மிகப்பெரிய எதிர்பார்ப்போடு கிளம்பினேன். அகி மியூஸிக் என்ற பெயரை திடீரென முடிவு செய்தேன். என்னுடைய வியாபாரத்திட்டதில் நான் தொடங்கப் போகும் நிறுவனத்திற்கு யாழ் ரெக்கார்ட் என்றுதான் பெயரிட்டு இருந்தேன். நிறுவனம் தொடங்க ஏற்பாடு ஆனதும் அகி மியூசிக் என்று சிந்தையில் தோன்றியது. பதிவிற்கு ஏற்பாடு செய்துவிட்டு, அவரை சந்தித்தேன். அகி மியூசிக்கின் திட்டத்தையும் எவ்வளவு ராயல்டி வரும் சாத்தியங்கள் உள்ளது என்பதையும் நான் தயாரித்திருந்த வியாபார திட்டத்தைக்காட்டி விளக்கினேன். எனக்கு வியாபாரம் தெரியாது, நீங்கள் சொல்வதுபோல் நடந்துக்கொண்டால் போதும் என்றார். பணத்தை ரமணாஸ்ரமத்தில் கொடுத்துவிட்டு அங்கிருந்து மாஸ்டர் ஆடியோ கேசட்டை வாங்கிக்கொள்ளும்படியும், இது ரமணருக்காக செய்தது தனக்கு பணம் வேண்டாம் என்றும் கூறிவிட்டார். நிறுவனத்தில் பங்குதாரராக நீங்கள் ஆவதென்றால் அதிலும் எனக்கு ஆட்சேபனை இல்லை என்றேன். அதையும் மறுத்துவிட்டார்.

நான் ரமணாஸ்ரமம் சென்றேன். எனக்கு திருவண்ணாமலைப் பற்றித் தெரியாது, ரமணரைப் பற்றித் தெரியாது. இப்பொழுது நினைத்தால் இளையராஜாவின் 'அண்ணாமலையெனை தன்னால் அழைத்தது, சொன்னால் அதிசயம் அம்மா அம்மா' பாடல்தான் நினைவுக்கு வருகிறது. திருவண்ணாமலை சேர்ந்ததும் ரமணாஸ்ரமத்தில் ஒப்பந்தங்கள் கையெழுத்தான சில நிமிடங்களில் ரமணாஸ்ரம தலைவருக்கு இளையராஜா போன் செய்து, 'அந்த கேசட்டை ரமணர் சமாதியில் வைத்து பூஜை செய்து அகிலனிடம் கொடுங்கள்' என்று கூறிவிட்டு, என்னிடம் 'ரமணரிடம் ஆசீர்வாதம் பெற்று இதை நீங்கள் தொடங்குங்கள்' என்று கூறிவிட்டார். ரமணாஸ்ரமம் எனக்கு வேறு சில அனுபவங்களைத் தந்தது. இங்கு அதை சொல்வது தேவையில்லை என்று நினைக்கிறேன்.

சென்னை திரும்பியதும், சினிமாக்காரர்களைப் பற்றி பரவியிருந்த ஒரு மோசமான கருத்து எனது மனதிலிருந்து விலகியிருந்தது. அந்த நம்பிக்கையில் இளைய‌ராஜாவிட‌ம், வர்னர் மியூசிக்கில் இருந்து நாங்கள் வந்தபோது நீங்கள் போட்டு காண்பித்த இசையையும் தர முடியுமா என்று கேட்டு வேறு ஒரு திட்டத்தைக் காட்டினேன். 'இரவு வீட்டுக்கு வாங்க, தருகிறேன்' என்று வழியனுப்பி விட்டார். 5 நிமிடம் மட்டுமே இருந்தது அந்த சந்திப்பு. பெரும்பாலான அவருடனான எனது சந்திப்பு அதிக பட்சம் 15 நிமிடங்கள் தான்.

இரவு அவரது வீட்டில் நவராத்திரி பூஜை. 10.30 மணி வரை அவர் வரவில்லை. எனக்கு பல கேள்விகள் எழுந்த வண்ணம் இருந்தது. திடீரென்று வந்தவர் என்னை பார்த்து எதுவும் பேசவோ, புன்னகைக்கவோ இல்லை. நேரே மாடிக்கு சென்றார். கொஞ்ச நேரத்தில் கையில் ஒரு கேசட்டுடன் கீழ் இறங்கி, பூஜை அறை நுழைந்தவர், ஆராத்தி காட்டி என் கையில் கொடுத்தார். நான் அவரிடம் ஆசீர்வாதம் பெற்று அதை வாங்கிக் கொண்டேன். எனது முதல் வெற்றி என்று மனம் கொண்டாடியது.

அவரைப் பலர் ஆணவக்காரர், கோபக்காரர் என்று பலவாறு என்னிடம் குறைக்கூறியிருக்கிறார்கள். உங்களின் மூலம் இப்பொழுது பணம் பண்ணப் பார்க்கிறார், என்றெல்லாம் நகைத்திருக்கிறார்கள். எதுவும் இல்லாமல் சென்ற, அவருடன் எந்த நெருங்கிய உறவோ, நட்போ இல்லாத எனக்கு, யாரிடமிருந்தும் சிபாரிசோ, அறிமுகமோ இல்லாத எனக்கு நம்பிக்கைத் தந்து, ஆல்பம் தந்து என் கனவுகளுக்கு வழியமைத்துக் கொடுத்த அந்த இளையராஜா, நான் கேள்விப்படாத, படித்திராத, இளையராஜா.

ooo

மார்ச், 2005 இல் நான் மீண்டும் சென்னை சென்றேன். ரமணாஸ்ரமத்திற்கு ராயல்டி தரவும், கொஞ்சம் சீடிகள் தரவும். அதுவரையில் திருவண்ணாமலை கோவிலுக்குள் நான் நுழைந்ததில்லை. முதல் முறை சென்ற போதுக்கூட அவசரமாக ரமணாஸ்ரமம் சென்று அவசரமாக சென்னை திரும்பி விட்டேன். அன்று ஏழுமலை என்ற ரமணாஸ்ரம நண்பர் என்னை வற்புறுத்தி திருவண்ணாமலை கோவிலுக்கு அழைத்தார். இவ்வளவு தூரம் வந்து தமிழ் நாட்டின் பிரபலமான கோவில்களில் ஒன்றான திருவண்ணாமலையை தரிசிக்காது செல்வது பெரிய இழப்பு என்றார்.

அப்பொழுது நான் வைணவத்தில் அதிக நம்பிக்கையும் பிடிப்பும் உள்ளவன். மறந்தும் பிற தெய்வம் தொழாதவன். எனக்கு வர மனமில்லை என்று சொல்ல மனம் வரவில்லை. அவரின் அன்பு வற்புறுத்தல் அத்தகையது. முதல் முறைவந்தபோதும் அவர் இதுபோல் வற்புறுத்தி, பிறகு மலையை சுற்றிப் பார்க்க ஒப்புக்கொண்டேன். காரிலேயே சுற்றிவிட்டு வந்துவிட்டேன். இன்றோ முதல் முறையாக திருவண்ணாமலை கோவிலுக்குள் செல்கிறேன். எனக்கு சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு ஆகியிருந்தது. உள்ளே அழைத்து பெரிய லிங்கத்தின் முன் அமர சொன்னார்கள். அனைத்தும் எனக்கு வேடிக்கையாகவும் பொருளியலாகவும் தெரிந்தது. ஆனால் சிவ லிங்கத்தின் முன் அமர்ந்தவுடன், காரணம் தெரியாமல் கண்கள் நனைந்தன. இதுவரை எங்கெல்லாமோ, யார் யாரிடமோ நான் தேடிய அன்பு இங்கே கல்லாய் இறுகிப் போய், இத்தனை நாள் என் வரவிற்காக காத்திருப்பது போல் இருந்தது. என்னால் விளங்கிக் கொள்ள‌ முடியாத உணர்வு. எல்லாவற்றுக்கும் காரணம் தேடும் மனம், என் கண்ணீருக்கு அறிவியல் அல்லது உளவியல் காரணம் காண முடியாமல் திணறியது.

இத்தனை உணர்வுகளையும் நான் முன்னமே அனுபவித்திருக்கிறேன், இதே போல் கண்ணீர் விட்டிருக்கிறேன் என்பது மட்டும் நிச்சயமாக என்னால் உணர முடிந்தது. சட்டென்று என் சிந்தை முழுவதும் பரவியது ஹவ் டு நேம் இட் என்ற இசையின் நாதம். திருவண்ணாமலையில் நான் உணர்ந்தது 10 வருடங்களுக்கு முன் ஹவ் டூ நேம் இட் என்ற இசையை நான் முதல் முறை கேட்ட போது எழுந்த அதே உணர்வு நிலை. அது ஏன் என்ற காரணம் எனக்கு விளங்கவில்லை. ஆனால் அந்த அனுபவம் இளையராஜாவின் மீதான விளக்கமுடியாது சில நம்பிக்கைகளையும் மரியாதையையும் என்னுள் உருவாக்கியது. மதம், கடவுள் என்று நான் கொண்டிருந்த அத்தனை நம்பிக்கைகளையும் கட்டுடைத்து விட்டது. ஏதோ ஒரு சக்தி என்னிலிருந்து இந்த இசையை வெளிக்கொண்டுவருகிறது என்று அவர் எப்பொழுதும் கூறுவது அர்த்தம் நிறைந்ததாய் நான் உணர்ந்த நாள் அது.

பிதற்றத் தொடங்கியிருக்கிறான் அகிலன் என்று பலர் நினைக்ககூடும். ஆனால் இன்னமும் இந்த அனுபவம் என்னால் விளங்கிக் கொள்ள முடியாத ஒன்று. முற்பிறவி தொடர்பு, ஆன்மீகம் என்றெல்லாம் என்னால் நம்ப முடியவில்லை. பல வருடங்கள் மறந்துபோன இசை ஏன் என் நினைவிற்கு வரவேண்டும்? பரீட்சயம் இல்லாத சைவ தள‌த்தில் நான் ஏன் அளவிட முடியா அன்பால் அரவணைக்கப்பட வேண்டும்? என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால் இளையராஜாவின் ஆன்மீகம் போலியல்ல, அவரின் திருவண்ணாமலை பயணமும் அவர் ஏற்றுக்கொண்ட தோற்றமும் நாடகமல்ல என்பதை நான் நம்பத் தொடங்கிய, எனக்கு விளங்கத்தொடங்கிய நாட்கள் அவை.

ooo

இளையராஜாவின் குரு ரமண கீதம், இத்தாலி இசைப் பயணம், திருவாசகம், மியூசிக் மெசய்யா, அம்மா பாமாலை என்று 3 வருடத்தில் மொத்தம் 6 ஆல்பங்கள் மட்டுமே வெளியிட்டிருந்தேன். காரணம், பெரிய முதலீடு இல்லாமல் வரும் பணத்தை அலுவலக நிர்வாகத்திற்கு செலவு செய்வதும், வியாபாரத்திற்காக வாங்கிய கடனை செலுத்துவதிலும், மீதப் பணத்தில் ஆல்பம் வெளியிடுவதும், இப்படிதான் எனது தொழில் போய் கொண்டிருந்தது. திருவாசகத்தைக் கூட மிக சொற்ப முன்பணத்திற்குதான் இளையராஜா தந்தார். தமிழ் மையத்தின் அனுமதியோடு, அகிலன் தான் வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையோடு. அதற்கும் டாக்டர் சண்முகசிவாதான் எனக்கு உதவி செய்தார். 2006ல் ஏ.ஆரின் காட்பாதரையும் ரிலீஸ் செய்திருந்தேன்.

2007க்குள் வியாபாரத்தை விஸ்தாரமாக்க இயலாமல், முதலீடும் இல்லாமல், குடும்பம் நடத்த போதிய வருமானமும் இல்லாம், பொருளாதாரம் மோசமாகி, கடனாகி, மீண்டு வர முடியாத அளவு நான் நிலைகுலைந்து போனேன். தன்முனைப்பு அற்று, விரக்தியடைந்திருந்தேன். எனது வாழ்வின் இருண்ட காலங்கள் அவை. குடும்பத்திலிருந்து தனித்து விட்டேன். உறவினர்கள் கூடி அவமானப்படுத்தினார்கள். மனைவியுடன் விவாகரத்துக்கும் முயற்சி செய்தேன். எல்லோராலும் நம்பிக்கை இழக்கப்பட்டு கைவிடப்பட்டவனாகவே இருந்தேன். ஒன்றரை வருடங்கள் இளையராஜாவிற்கு ராயல்டி எதுவும் தரவில்லை. காரணம் சொல்லி வந்தேன். மே மாதம் சிங்கப்பூர் வந்திருந்தவர் என்னை தொடர்புக்கொள்ள முடியாமல் இரண்டு நாட்களுக்குப் பிறகு மலேசியாவில் உள்ள அவருடைய சில தொடர்புகள் மூலம் என்னைத் தொடர்பு கொண்டு, கோபித்து கொண்டு, உடனே என்னை சிங்கப்பூர் வந்து அவரைப் பார்க்கச் சொன்னார். எனக்கு அவரிடம் என் நிலையை விளக்க மனமில்லை.

சிங்கப்பூர் போகும் போது எனது போதாத நேரம் அவரை பார்ப்பதாக இருந்த நேரத்தைவிட மூன்று மணி நேரம் தாமதமாக சென்றேன். அவரைச் சந்தித்து, என்னால் இந்த சில காலமாக ராயல்டி தர முடியவில்லை, காரணம் சில பணப் பிரச்சனைகள் என்றேன். அவர் என் மீது நம்பிக்கை இழந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். அதனால் எனது இயலாமையை முடிந்தளவு மறைத்தேன். முடிந்த அளவு அகி மியூசிகின் நம்பகமான சில திட்டங்களை விளக்கி அது நமக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்கும் என்று விளக்கினேன். எனது தோல்வி அவரை என் மீது நம்பிக்கை இழக்க செய்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தேன். ஏதும் பேசாமல் என்னையே பார்த்திருந்தவர், பிறகு வழியனுப்பிவிட்டார். அன்று அவர் என்னிடம் எதுவும் பேசவில்லை.

பிறகு மலேசியாவில் ஜொகூருக்கு கிளம்பி இரவு அங்கு தங்கினேன். சிங்கப்பூரில் தங்க பணமில்லை. முடிந்தது எனக்கும் அவருக்குமான உறவு என்று நினைத்தேன். மறுநாள் காலையில் என்னை அழைத்து, மீண்டும் ஹோட்டலுக்கு வரும்படி கூறினார். எனக்கு விளங்கவில்லை. போனேன். மீண்டும் இரண்டு மணி நேரம் தாமதம். எனக்கும் இளையராஜாவிற்கும் இருக்கும் உறவு இன்றோடு முடிந்தது என்பது உறுதியானது போல் இருந்தது. எனது கடைசி நம்பிக்கையும் விட்டுப் போனது. நான் அவரை சந்தித்தபோது, அவர் மதியம் சாப்பிடாமல் காத்திருந்தார். கூட இருந்த இரண்டு பேர் என்னை ஏதோபோல் பார்த்தார்கள். உங்களுக்காக சாப்பிடாமல் காத்திருக்கிறேன் என்று கூறி என்னை அழைத்துக் கொண்டு போனார். வழியில் காரில் வந்த அவருடைய நண்பரிடம் என்னை அறிமுகம் செய்துவிட்டு இவரிடம் உங்களைப் பற்றி சொல்லியிருக்கிறேன். உங்கள் தொழிலில் இவர் முதலீடு செய்வார் என்று கூறினார். அந்த நண்பரும் பல கேள்விகள் கேட்டு இறுதியில் முதலீடு செய்ய சம்மதித்தார். உணவு முடிந்து ஹோட்டலுக்கு சென்றபின், 'உங்களுக்கு என்னால் ஆன உதவி, நீங்கள் முன்னுக்கு வருவதை பார்க்கனும்' என்று சுருக்கமாக சொல்லி கிளம்பிட்டார். என் கண்கள் ஈரமாகியது. நான் சம்பாதித்த எல்லாவற்றையும் இழந்திருந்தேன். எல்லோருடைய நம்பிக்கையையும் இழந்திருந்தேன். குடும்பமும் என்னை கைவிட்டிருந்தது. எந்த நம்பிக்கையில் இளையராஜா எனக்கு இந்த உதவியை செய்கிறார் என்று எனக்கு விளங்கவில்லை. இன்னும் என்னிடம் அவர் எந்த காரணத்தால் நம்பிக்கை வைத்திருக்கிறார் என்று தெரியவில்லை. அதிலும் நான் எனது நிலைப் பற்றி எதுவும் சொல்லவும் இல்லை. என்னிடம் ஏன் இந்த தனிப்பட்ட அக்கறை என்று மனம் பலமிழந்து நின்றிருந்தேன்.

இளையராஜாவின் முன்பு எல்லாவற்றிற்கும் ஒத்துக்கொண்ட அந்த நண்பர், பல்வேறு காரணங்களை சொல்லி முதலீடு செய்வதை தவிர்த்து வந்தார். அதை இளையராஜாவிற்கு தெரியப்படுத்தி விட்டு, வேறு வழிகளில் முயற்சித்து வந்தேன். இது நடந்த ஒரு ஐந்து மாதங்களுக்குப் பிறகு எனது அலுவலகத்தையும் காலி செய்ய சொல்லி நோட்டீஸ் வந்துவிட்டது. வேலையாட்களை எல்லாம் நிறுத்தினேன். நான் மட்டும் தனிமையில் எனது அலுவலகத்தில் இருண்டுப் போய் இருந்தேன். 31 டிசம்பர் 2007. வருடத்தின் கடைசி நாள். வியாபாரத்திலிருந்து ஒதுங்கி விடலாம் என்று நினைத்தேன். எங்காவது போய் ஒளிந்து கொள்ளலாம் போலிருந்தது. போராடியது போதும் என்று தோன்றியது. கேப்பிடலிஸத்தின் (Capitalism) நிதர்சணமாய், பணக்காரர்கள் மட்டுமே பணம் பண்ண முடியும் என்று நம்பத் தொடங்கினேன். அப்பொழுது ஒரு குரியர் வருகிறது. தனது எல்லா உரிமத்தையும் அகி மியூசிக்கிற்கு ஒப்படைத்து ஒப்பந்தம் ஒன்றை கையெழுத்திட்டு அனுப்பியிருந்தார் இளையராஜா. என் வாழ்நாளில் மறக்கவே முடியாத ஒரு நாள் அது. எந்த முன் பணமும் செலுத்தவில்லை. அவர் அறிமுகப்படுத்திய முதலீட்டாளரும் மறுத்திருந்த நிலையில், என்னை தூக்கிவிடுவது போல் ஒரு குரியர், அவரிடமிருந்து. மரணப் படுக்கையில் இருந்தவனுக்கு முதலுதவிப் போல் இருந்தது. நிமிர்ந்து மீண்டு வர இன்னொரு வாய்ப்பு. ஒருமுறை அவரை சந்தித்து, ஒவ்வொரு முறையும் எனது வாழ்வின் முக்கியமானத் தருணங்களில் அவருடைய இசைதான் என்னை ஆட்கொண்டது, நிதானப்படுத்தியது என்றபோது. 'எல்லாம் ரமணரிடமிருந்துதான் வருகிறது. என்னுடைய இசையால்தான் என்று நீங்கள் கருதினால், அந்த இசையும் ரமணரிடமிருந்து வருவதுதானே. நான் ஒரு கருவிதான்' என்றார். இதில் நான் எதையும் எனது கற்பனையில் எழுதவில்லை. நிகழ்ந்தவை. நான் பார்த்த இளையராஜாவின் இன்னொரு முகம். நான் பழகிய, மீடியாக்களுக்குத் தெரியாத இன்னொரு மனம்.

ஜெயமோகனிடம் ஒரு முறை அகி மியூசிக் உருவானதை நான் கூறிய போது, சினிமாத் துறையில் இளையராஜாவிற்கு மட்டும்தான் இப்படியொரு முகம் இருப்பதாக தான் கேள்விப்பட்டிருக்கிறேன் என்று இயக்குனர் பாலாவின் அனுபவத்தை சொன்னார். நடிகர் நாசரும் அவருடைய அவதாரம் படம் பணமில்லாது முடங்கிய போது, பணம் பெறாமல் இசையமைத்ததை தி மியூசிக் மெசைய்யா வெளியீட்டு விழாவில் கூறினார்.

இன்று அகி மியூசிக் அடைந்திருக்கும் உயரம், கிடைத்திருக்கும் வெளிச்சம், இளையராஜா என்ற ஒருவரை கொண்டே அடையப்பட்டது. இன்றைய சினிமா சூழல் பலப் படைப்பாளிகளை வியாபார ரீதியாக முன்னிறுத்தினாலும், இசையில் இளையராஜாவின் இடம் இன்னும் யாராலும் நெருங்க முடியாத உச்சத்தில் நிரந்தரமாக இருக்கிறது. இசை மேதமையில் மட்டுமல்ல, வியாபார ரீதியாகவும்.

இத்தனை வருடங்கள் தாண்டியும் தமிழ் மனங்களை அரவணக்கும் ஒரு இசையென்றால் அது இளையராஜாவின் இசையாக தலைமுறைகள் தாண்டி இன்றுவரை நீண்டு வருவதற்கு காரணம், அவரால் வெளிப்படையாக வெளிக்காட்டப்படாமல் இருக்கும் அன்புதான். அதுதான் அவரது இசையின் ஆதாரமாக இருந்து வருகிறது. எனது முந்தைய ஒரு கட்டுரையில் தமிழர்கள் அவர்களுடைய அடையாளங்களை இளையராஜாவின் இசையில் மீட்டெடுக்கிறார்கள் என்றேன். ஆனால் உணர்வு நிலையில் இருந்து யோசிக்கும் போது, இளையராஜாவின் இசை நம்மை அரவணைக்கிறது, ஆறுதல் அளிக்கிறது என்றுதான் சொல்ல தோன்றுகிறது, பலரும் சொல்வதும் இதைதான். அதுதான் அவருடைய நிஜ இயல்பு.

நன்றி: அகிலன் & ஜீவா ஓவியக்கூடம்