Wednesday, March 24, 2010

இளையராஜா: ஒரு வரலாற்று நிகழ்வு - ஷாஜி


இரண்டாயிரத்து நான்கு செப்டெம்பரின் ஓர் பிற்பகலில் நான் பாடகரும் ஒலிப்பொறியியலாளருமான நண்பர் தினேஷுடன், சென்னையிலுள்ள பிரசாத் ஒலிப்பதிவுக் கூடத்தின் விருந்தினர் அறையில் இசையமைப்பாளர் இளையராஜாவை சந்திப்பதற்காக காத்திருந்தேன். எண்பதுகளில் தினேஷ் இளையராஜாவுடன் பல படங்களில் ஒலித்தடப் பாடகராகவும் இசைக்கோப்பு உதவியாளராகவும் பணியாற்றியிருந்தார். தன் வழிபாட்டுக்குரிய இசையமைப்பாளரை அவர் பதினைந்துவருடம் கழித்துச் சந்திக்கவிருக்கிறார். நினைவுகளில் மூழ்கியவரைப்போல காணப்பட்டார். இளையராஜா இசை அமைத்த பலநூறு பாடல்களின் பேரலை எனக்குள்ளும் அடித்துக் கொண்டிருந்தது.

அவர் வந்தபின்னர்தான் தமிழ் திரைப் பாடல்கள் கேரளத்தில் எப்போதுமே இல்லாத அளவுக்குப் புகழ்பெற்றன.
அந்த பாடல்களை நெஞ்சில் ஏற்றிக் கொண்டு அலைந்த இளமைக்கால நாட்களில் என் நினைவுகள் திரிந்தன......

இளையராஜா பிறந்த பண்ணைபுரம், என்னுடைய சொந்த ஊரான நெடும்கண்டத்தில் இருந்து வெகுதூரத்தில் இல்லை. இடுக்கி தேனி மலைகளுக்கு இப்பால் இருக்கிறது பண்ணைப்புரம். ஒரு பள்ளிகூடம் கூட இல்லாத அந்த ஊரில் ஏழைக் குடும்பத்தில் பிறந்த ராசையா வறுமை காரணமாக எட்டாவது வகுப்புடன் கல்வியை நிறுத்திக்கொள்ள நேர்ந்ததும், அவர் பிறந்து வளர்ந்த சூழல் நாட்டுப்புற இசையால் நிரம்பியிருந்ததால் அதுவே அவரது உண்மையான கல்வியாக மாறியதும் நான் கேட்டு அறிந்திருந்தேன். பதிநான்காவது வயதில் கம்யூனிஸ்டுக் கட்சியின் பிரச்சாரப் பாடகராக இருந்த தன் அண்ணன் பாவலர் வரதராஜனுடன் சேர்ந்து இளையராஜா கேரளத்திலும் பல சிற்றூர்களுக்குச் சென்று இசைநிகழ்ச்சிகள் நடத்தியிருக்கிறார். இளையராஜா சகோதரர்கள் பல்வேறு இசைநிகழ்ச்சிகளுக்காக எங்கள் பகுதிகளுக்கு வருவதுண்டு என்பதையும், அப்போதைய அவர்கள் வாழ்க்கையின் போராட்டங்களையும், பிறகு அவர்கள் சென்னைக்குச் சென்று திரையிசையில் பெரும் சாதனைகளை நிகழ்த்தியதையும் பற்றியெல்லாம் நிறைய கதைகளை நான் சிறுவயது முதலே கேள்விப்பட்டிருக்கிறேன்.

இருபத்தைந்து வயதில் அவர் சென்னைக்கு வந்ததையும் தன் இசைப்பயிற்சி போதுமானதல்ல என்று உணர்ந்தபின் தன்ராஜ் மாஸ்டரிடம் சேர்ந்து மேலை இசையும் இசையமைப்பு நுட்பங்களும் பயின்றதையும் மேலைநாட்டுச் செவ்வியல் இசையமைப்பாளர்களான பாக், பீத்தோவன், மொசார்த் ஆகியோரின் வலிமையனா பாதிப்பு அவரிடம் ஏற்பட்டதையும் லண்டன் டிரினிட்டி இசைக்கல்லூரியிலிருந்து மேலைநாட்டுச் செவ்வியல் கித்தார் இசையில் தங்கப்பதக்கத்துடன் பயிற்சியை நிறைவு செய்ததையும் பற்றியெல்லாம், இருபது வருடங்களுக்கு முன் நான் மலையாளத்தில்
விரிவாக எழுதியுமிருக்கிறேன்*.

ஆனால் சென்னையில் பல வருடங்களாகவே வாழ்ந்து இசைத்துறையில் பணியாற்றியபோதிலும்கூட என்னால் இளையராஜாவை பார்த்துப்பழக முடிந்ததில்லை. விளம்பர இசை தொடர்பாக அவரது மகனும் இசையமைப்பாளருமான கார்த்திக் ராஜாவை சந்திப்பதற்காக அவரது வீட்டுக்குக் கூட சென்றிருக்கிறேன். அங்கு இளையராஜா வெள்ளை உடை அணிந்து கம்பீரமாக அமர்ந்து எதையாவது படித்துக் கொண்டோ இசைக்குறிப்புகளைச் சரிபார்த்துக் கொண்டோ இருப்பதை பார்த்திருக்கிறேன்........

கதவு திறந்தது, நாங்கள் உள்ளே அழைக்கப்பட்டோம். வெண்ணிற நுரைமெத்தை இருக்கையில் இளையராஜா அமர்ந்திருந்தார். எங்களை அமரச்சொன்னார். தினேஷ் அமர மறுத்தார். இளையராஜா தினேஷை அடையாளம் கண்டுகொள்ளவில்லை என்று தோன்றியது. தினேஷையும் அமரும்படிச் சொல்லிக் கட்டாயப்படுத்தினார். தினேஷ் மெல்ல ''சார், உங்களுக்கு என்னை அடையாளம் தெரியவில்லை போல'' என்றார். கூர்ந்து கவனித்தபின் இளையராஜா புன்னகைசெய்து மலையாளத்தில் ''ஆ தினேஷ்! என்ன ஆளே மாறிவிட்டாய், தாடியும் அதுவுமாக? அடையாளமே தெரியவில்லை! நீண்டகாலம் ஆகிறதே!" என்றார். தினேஷுக்கு அதுபோதும், அவரது கண்கள் ஈரமாயின.

சலில் சௌதுரி நினைவு அமைப்பின் செயலாளராகத்தான் நான் அப்போது இளையராஜாவைப்பார்க்க சென்றிருந்தேன். சலில் சௌதுரியின் எண்பதாவது பிறந்தநாளில் நடத்தவிருந்த இசைநிகழ்ச்சியை தொடங்கிவைப்பதற்கு இளையராஜாவை முறைப்படி அழைத்தோம். ''நான் சலில்தாவின் மிகப்பெரிய ரசிகன். அவரை என் குருநாதர்களில் ஒருவராகவே எண்ணுகிறேன்'' என்றுதான் அழைத்ததுமே இளையராஜா சொன்னார். சலில்தாவுக்கும் இளையராஜாவின் இசைமேல் மதிப்பு இருந்ததாக சலில்தாவின் குடும்பத்தினர் என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். சலில்தாவின் குழந்தைகள் இளையராஜாவை 'இளை அங்கிள்' என்றே அழைத்துவந்தார்கள். இளையராஜா நிகழ்ச்சியில் பங்கெடுக்க சம்மதித்தார்.

நவம்பர் பத்தொன்பதாம்தேதி நடந்த நிகழ்ச்சியில் சரியான நேரத்துக்கு இளையராஜா வந்தபோது அதிக கூட்டம் இல்லை. சலில்தா போன்ற ஒரு மேதையின் நினைவுக்கு இத்தனை குறைவானபேர் வந்திருக்கிறார்களே என ஆதங்கப்பட்ட இளையராஜா அன்று சலில்தாவைப்பற்றிய தன் நினைவுகளைப்பகிர்ந்துகொண்டார். 'சுஹானா சஃபர்' போன்ற சலில்தாவின் பாடல்களை பாடி அவற்றின் இசைநுட்பங்களை விவரித்தார். எம் எஸ் விஸ்வனாதன், ஜி கெ வெங்கடேஷ் போன்றவரின் பாடல்களைப்பற்றியும் அவர் அந்த மேடையில் பேசினார்.


சென்னையில், தன் போராட்ட நாட்களில் பல்வேறு இசைக்குழுக்களில் கித்தார் கலைஞனாக பணியாற்றிய இளையராஜா பின்னர்
திரையிசையில் கித்தார் கலைஞனாகவும் காம்போ ஆர்கன் வாசிப்பவராகவும் நுழைந்தபோது சலில் சௌதுரியிடம் பணியார்றியிருக்கிறார். எழுபதுகளின் தொடக்கத்தில் இசையமைப்பாளர் ஜி.கெ.வெங்கடேஷின் இசை உதவியாளராக மாறிய இளையராஜா அவரது நூற்றுக்கணக்கான கன்னடப்பாடல்களின் இசையமைப்பில் பங்கெடுத்திருக்கிறார். இக்காலகட்டத்தில் தான் இளையராஜா திரை இசைமைப்பின் நுட்பங்களையும் நடைமுறைச்சிக்கல்களையும் விரிவாகவே கற்றுக் கொண்டார்.

எம்.எஸ்.விஸ்வநாதனின் பொற்காலம் முடிந்து தமிழ் திரையிசையில் நிலவிய சோர்வை விலக்கி தமிழ் நாட்டார் இசையின் ஜீவனை திரையிசைக்குள் கொண்டுவந்து இளையராஜாவின் 'அன்னக்கிளி' 1976ல் வெளியாயிற்று. அதில் அத்தனை பாடலும் பெருவெற்றிபெற்று இளையராஜாவின் பெயர் தமிழகமெங்கும் அறியப்படலாயிற்று. தமிழ் திரை இசையில் ஒரு புதியபாதை திறக்கப்பட்டது. தொடர்ந்து பதினைந்து வருடத்துக்கு மேல் இளையராஜா தமிழ் திரையிசையின் ஒரே முகமாக விளங்கினார். தமிழர்களின் இரு தலைமுறையினர் அவரது பாடல்களை மட்டுமே கேட்டு வளர்ந்து வந்திருக்கிறார்கள்.

இளையராஜாவின் இசையின் சிறப்பம்சமென்ன என்று கேட்டால் சாதாரண ரசிகர்கள் அவற்றின் எளிமையையும் நாட்டார் இசை சார்ந்த தன்மையையும் சுட்டிக்காட்டுவார்கள். இசைநுட்பம் அறிந்தவர்கள் அவற்றின் இசைப்பின்னணியின் அமைப்பில் உள்ள அபாரமான நுட்பங்களையும் அவற்றில் தெளிந்தும் தெளியாமலும் ஒலிக்கும் இசைமெட்டுகளின் நம்ப முடியாத கற்பனைத்தாவல்களையும் சுட்டிக்காட்டுவார்கள். இவ்விரண்டு அம்சங்களும் முரண்பாடே இல்லாமல் ஒன்றுசேரக்கூடிய ஒரு புள்ளி இளையராஜாவின் பாடல்களில் உள்ளது. அதுதான் அவரது தனி இடம். எளிமையான நாட்டுப்புற மெட்டுகளுக்கு பின்னணியாக பலவகையிலும் சுழன்றும் துள்ளியும் ஓடும் சிக்கலான ஆனால் காதுக்கு இனிமையான இசை இடையீடுகள் உருவாக்கும் ஒரு அதிசய உலகம் அது.

இளையராஜா தன் இசையின் வலிமையினால் மற்றுமே காலூன்றிய ஒரு இசையமைபபளர். அவரது ஆரம்பகாலத்தில் பல வருடங்கள் அவருக்கு பெரிய நிறுவனக்கள் எடுக்கும் படங்களோ பெரிய நட்சத்திரங்கள் நடிக்கும் படங்களோ அமையவில்லை. அதிசயம் அழைக்கிறது [1976], பாலூட்டி வளர்த்த கிளி [1976], உறவாடும் நெஞ்சம் [1976], கவிக்குயில் [1977], ஓடிவிளையாடு தாத்தா [1977], சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு [1977], துணையிருப்பாள் மீனாட்சி [1977] முதல் மலையாளப்படமான வியாமோகம் [1977] போன்றவை, இன்று அவற்றின் பாடல்களினால் மட்டும் நினைவு கூறப்படும் சாதாரணமான படங்கள்.

இளையராஜாவைப்பொறுத்தவரை தன் முதல் படத்திலிருந்தே படங்களை நம்பி அவர் இல்லை, அவரை நம்பியே படங்கள் இருந்தன. 2004 வரைக்கும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்பட்ட மொழிகளில் ஏறத்தாழ எண்ணூறுக்கும் மேற்ப்பட்ட படங்களுக்கு இளையராஜா இசையமைத்துவிட்டிருந்தார். அவற்றில் பல படங்களின் வெற்றிக்கு முழுக்க முழுக்க அவரது இசை மட்டுமே காரணம் என்பதையும் மறுக்க முடியாது.

பாடல்களின் பின்னணி இசையொழுங்கின் நுட்பங்களில் அவரது பிரமிக்க வைக்கும் படைப்பூக்கம் காணப்படுகிறது. தெம்மாங்கு மெட்டில் அமைந்த திரைப்பாடல்களுக்கு ஜாஸ் இசையின் பின்னணியை சற்றும் முரண்படாமல் அமைக்க அவரால் முடிந்தது. முழுக்க முழுக்க நாட்டுப்புறப்பாடலாகவே ஒலிக்கும் பாடலை அபூர்வமான கர்நாடக இசை ராகத்தில் அமைக்கவும் அவரால் முடிந்தது. ஒரு பிரபல கர்நாடக இசை ராகத்தை எடுத்துக்கொண்டு அந்த ராகத்தின் விரிவையும் அதற்க்குள் தன் கற்பனை வீச்சையும் வெளிப்படுத்தும் நூற்றுக்கணக்கான பாடல்களை அதில் அமைத்தது, தீவிர கர்நாடக இசைமேடைகளில் கூட வழக்கமாக பாடப்படாத அபூர்வமான, சிக்கலான ராகங்களை எடுத்துக் கொண்டு அவற்றை சாதாரணர்கள் கூட ரசிக்கும்படியாக எளிய பாடல்களை அமைத்தது போன்ற எத்தனையோ சாதனைகள்!

நாட்டாரிசையை அடிப்படையாகக் கொண்ட பாடல்களில் இளையராஜா அளித்த வகைமைகளும் வண்ணங்களும் எண்ணற்றவை. நகர்மயமாதலின் விளைவாக தமிழ்பண்பாடு மறந்துவிட்ட நாட்டாரிசையை மீட்டு மீண்டும் மையத்துக் கொண்டுவந்தவரே இளையராஜாதான். தொழில்களுடனும் தொழிலாளர்களுடனும் இணைந்துள்ள நாட்டுப்புற இசையின் வலிமை அதன் உணர்ச்சிகரமே. இளையராஜா நாட்டார் மெட்டுக்களை கர்நாடக இசைராகங்களுடன் இணைத்து விரிவாக்குவது, மேலைநாட்டு இசைப்பின்னணியைச் சேர்ப்பது ஆகியவற்றின் மூலம் அதை நவீனப்படுத்தினார். தூல்லியமான உச்சரிப்பும் கம்பீரமான பாடுமுறையும் கொண்ட பழையவகைப் பாடல்களுக்குப் பதிலாக இளையராஜா கதையின் உணர்ச்சியோடு இணைந்து கதைச்சூழலுடன் பிரிக்கமுடியாதபடி கலந்து ஒலிக்கும் பாடல்களை உருவாக்கினார். திரைப்பாடல் என்பது காதுக்கினிய ஒரு நுகர்பொருள் மட்டுமல்ல அது ஒரு பண்பாட்டின் இயல்பான வெளிப்பாடு என்று காட்டியவர் அவர்.

இளையராஜாவின் இன்னொரு சாதனையானது திரைப்படத்தின் பின்னணி இசைக்கோர்பை மிகமிகப் படைப்பூக்கம் கொண்ட ஒரு
கலைவெளிப்பாடாக நிறுவியதாகும். பின்னணி இசையை காட்சியை சத்தமயமாக ஆக்குவதற்காகவும் காட்சியின் இடைவெளிகளை
நிரப்புவதற்காகவும் மட்டுமே பயன்படுத்திவந்த சூழலில் இருந்து இளையராஜா மாறுபட்டார். படத்தின் மையத்தை இசையின் வழியாக பலவகையில் தீவிரமாக வெளிப்படுத்த பின்னணி இசையை அவர் பயன்படுத்தினார். ஒரு காட்சியின் இடைவெளிகளை நிரப்பி காட்சிக்கு தொடர்ச்சியை உருவாக்குவதுடன் இயக்குநர் கூறவருவதற்குமேலாகச் சென்று மேலும் ஒரு தளத்தை பின்னணி இசை மூலம் கூறினார். காட்சிகளின் உணர்ச்சிகரத்தையும் அழுத்தத்தையும் பின்னணி இசை மூலம் பலமடங்கு மேம்படுத்தினார்.

பின்னணி இசைச்சேர்ப்பின்போது இளையராஜா காட்சியை ஒருமுறை பார்த்ததுமே தாளில் இசைக்குறிப்புகளை எழுதிக் கொடுத்து உடனடியாகவே ஒலிப்பதிவுக்குச் சென்றுவிடுவார் என்பதை ஒரு ஐதீகக்கதைபோல சொல்லிக் கொள்கிறார்கள். வாத்தியத்தில் வாசித்துப்பார்ப்பதோ இசைவரிசையை காதால்கேட்டு சரிசெய்வதோ இல்லை. இசைக்குழு அந்த இசைக்குறிப்புகளை வாசிக்கும்போது அவை மிகக் கச்சிதமாக இணைந்து ஒரே இசையோட்டமாக சிறப்பாக வெளிப்படும். ஒத்திசைவிலும் காலக்கணக்கிலும் அவை கச்சிதமாக இருக்கும். பின்னணி இசை எங்கே தொடங்க வேண்டுமோ அங்கே தொடங்கி அக்காட்சிக்கு இசை எங்கே முடியவேண்டுமோ அங்கே கச்சிதமாக முடிந்துவிடும். சரிபார்த்துக் கொள்வதற்காக ஒருமுறைகூட அவர் வாத்தியங்களை தொட்டுப்பார்க்கவேண்டியதில்லை. அனைத்துமே அவரது மனதில் மிகச்சரியாக உருக்கொண்டிருக்கும்.

இசையமைப்பின் அனைத்து தளங்களையும் முழுமையாக தன் கட்டுக்குள் வைத்திருந்த முழுமையான மையமாக இசையமைப்பாளர் மாறினார். இசை உருவாக்கம், இசைக்கோப்பு, இசை நிகழ்த்துதல், ஒலிப்பதிவு ஆகிய அனைத்திலும் இசையமைப்பாளரின் முழுமையான கட்டுப்பாடு இளையராஜாவால் கொண்டுவரப்பட்டது. அவர் காலையில் பிரசாத் ஸ்டுடியோவுக்கு வந்துவிடுவார் என்றும் வந்ததுமே ஒரு படத்தின் பாடல்களுக்குரிய இசையை அப்போதே அமைத்து விரிவான இசைக்குறிப்புகளாக எழுதிவிடுவார் என்றும் சொல்லப்படுகிறது. பின்னர் நாள்முழுக்க அதை ஒருங்கிணைப்பதும் நடத்துவதும் பதிவுசெய்வதும்தான் நடக்கும். ஒரே மாதத்தில் ஆறு படங்களுக்கு அவர் இசையமைத்திருக்கிறார். அவற்றில் எல்லா பாடல்களும் பெரும் வெற்றிகளாகியிருக்கின்றன. ஒரு வருடம் 56 படங்கள் வரை!

நாட்டாரிசையிலேயே வளர்ந்த இளையராஜா தன் இருபத்தைந்து வயதுவரை இசைப்பயிர்ச்சிக்கு வேறுவகையான வாய்ப்புகள் இல்லாமல் இருந்தவர். அதர்க்கு பின் தன்ராஜ் மாஸடரிடம் சிறிது காலம் மேலையிசை பயின்றார். லண்டன் டிரினிடி கல்லூரியின் தங்க பதக்கத்தை ஆறுமாதத்தில் அவர் பெற்றார் எனப்படுகிறது. சிலகாலம் டி.வி.கோபாலகிருஷ்ணனிடம் அவர் தென்னிந்திய மரபிசையையும் பயின்றார். ஆனால் கேள்வி இதுதான், சிலவருடங்களின் பயிற்சியிலேயே அவர் எப்படி இவ்விரு இசைமரபுகளையும் துல்லியமாக உள்வாங்கிக் கொண்டு அவற்றில் உச்சகட்ட புதுமைகளைப் படைப்பவராக ஆனார்? அவரது திரையிசைப்பாடல்களில் உள்ள அழகும் நேர்த்தியும் வெகுஜன கலை என்ற எல்லைக்குள் நிற்பவை அல்ல என விமரிசகர்கள் நன்றாகவே அறிவார்கள்.

திரையிசைக்கு அப்பால் அவர் இசையமைத்த மேலையிசைத்தொகைகளும் அவருக்கு பெரும்புகழ் பெற்றுத்தந்தன. 1993ல் அவர் ஒரு மேலையிசை சிம்பனியை அமைத்தார். அதில் புகழ்பெற்ற ஜான் ஸ்காட் நடத்துகையில் லண்டனின் ராயல் ஃபில்ஹார்மானிக் ஆர்கெஸ்டிரா வாசித்தது. அந்த சிம்பனி ஒரு மாதகாலத்துக்குள் அமைக்கப்பட்டது. ஜான் ஸ்காட் சொன்னார் "இளையராஜாவின் இந்த புதிய சிம்பனியை நடத்தும் நல்வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. ஐந்து சலனங்களில் சிம்பனிக்கான ஒத்திசைவுகள் ஓடும் ஒரு படைப்பு இது. ஒருமணிநேரம் இசைக்கப்படுவது. இது அவருடைய முதல் முயற்சி என்று தெரியவருகிறது. இது அவர் ஒரு இசையமைப்பு நிபுணர் என்றும் இன்னிசை மற்றும் உணர்ச்சிகளின் பெரும் செல்வத்தை நமக்கு அளிக்கும் வல்லமை கொண்டவர் என்றும் காட்டுகிறது''. அவரது இரு கருவியிசைத் தொகுப்புகள் How to name it? மற்றும் Nothing but wind இசையுலகில் நிலைத்து நிற்கும் தகுதி கொண்டவை.

லண்டனைச்சேர்ந்த இசையமைப்பாளரான மைக்கேல் டவுன்செண்ட் சொன்னார் "இந்த மனிதர் மேல் கணிசமான மரியாதையுடன்தான் நான் சென்னைக்குச் சென்றேன். ஆனால் உள்ளூர ஒருவகையான அவநம்பிக்கையும் இருந்தது. அவரது பேரளவிலான படைப்புகளின் எண்ணிகை காரணமாக உருவாக்கப்பட்ட மிகைப்படுத்தப்பட்ட சித்திரமே எனக்கு அளிக்கப்பட்டது என்ற எண்ணம் எனக்கு இருந்தது. ஆனால் இசைக்கான தொடக்க சமிக்ஞை வரிசைகள் இல்லாமல், இசைத்தொகுப்பாளாரின் சேவை இல்லாமல், ஏன் ஒரு நிறுத்தக்கடிகாரம் கூட இல்லாமல் ஒரு படத்துக்கான இசைக்குறிப்பை ஒர் இசையமைபாளர் வெறும் மனக்கணக்காகவே எழுதி அமைக்க; அது அந்தக்காட்சியுடன் மிக கச்சிதமாக இணைவதைக் கண்டபோது என் பிரமிப்பும் வியப்பும் உச்சத்துக்குச் சென்றது. அது சண்டைக்காட்சி என்றால் அதன் பதற்றத்தை அதிகரிக்கவும் அது காதல்காட்சி என்றால் அதன் பரவசத்தை இன்னிசை மெட்டுகள் மூலம் விரிவாக்கவும் நடனக்காட்சிக்கு இயல்பான தாளக்கட்டுகள் மூலம் உற்சாகத்தை உருவாக்கவும் அவரால் முடிந்தது".

இன்றும் இளையராஜா தொடர்ந்து இசையமைத்துவருகிறார். மலையாளத்தில் அவரது இசையமைப்பில் படங்கள் வெளிவந்து வெற்றிபெற்று வருகின்றன. அமிதாப் பச்சன் நடித்து வெளிவந்த 'சீனி கம்' இந்திப்படத்தில் அவர் தனது சில பழைய பாடல்களை மறு ஆக்கம் செய்து பயன்படுத்தியிருக்கிராற். 'ஸூனி ஸூனி' [மன்றம் வந்த தென்றலுக்கு], 'பாத்தேன் ஹவா' [குழலூதும் கண்ணனுக்கு], ஜானே தோ னா' [விழியிலே மணிவிழியிலே] போன்ற 'சீனி கம்' பாடல்கள் வெற்றி பெற்றது.

2005ல் சலில்தாவின் மகள் அந்தரா சௌதுரியுடன் சேர்ந்து இளையராஜாவை மீண்டும் நேரில் சந்தித்து உரையாட முடிந்தது. சலில் சௌதுரி நினைவு அமைப்பு கல்கத்தாவிலும் கேரளத்திலும் நடத்தவிருந்த நினைவுநிகழ்ச்சிகளுக்காக அவர் ஒரு வாழ்த்துச்செய்தியை ஒளிப்பதிவுசெய்தளிக்க சம்மதித்தார். அவர் இசையமைத்து வரவிருந்த திருவாசகம் பற்றி பேசிக்கொண்டிருந்தார். ச,ரி,க என்னும் மூன்று ஸ்வரங்களை மட்டுமே பயன்படுத்தி அவர் அமைத்திருக்கும் ஒரு பாடலைப்பற்றியும் சொன்னார்.

வரலாறு எப்போதும் நம் கண்ணெதிரே தான் நிகழ்கிறது. ஆனால் அது காலத்தில் பின்னகர்ந்து பழையதாக ஆனபின்னரே நம்மால் அதைக் காணமுடிகிறது. தமிழகத்தின் சிறிய ஒரு கிராமத்தில் பிறந்து சொல்லும்படியான படிப்பறிவு எதுவும் இல்லாமல் வளர்ந்து வந்து, இசைரசிகர்களைக் கவர்ந்து, இசைவிமரிசகர்களையும் பாமரர்களையும் ரசிக்கச்செய்த இளையராஜா நம் கண்முன் நிகழ்ந்துகொண்டிருக்கும் ஒரு வரலாறு.

தமிழில் ஜெயமோகன்

நன்றி: ஷாஜி musicshaji.blogspot.com

Tuesday, March 23, 2010

கலைஞனை மதிக்காத சமூகமே...! - சரவணன்

ஒரு குறிப்பிட்ட நபரின் கேள்விக்காக இந்த கட்டுரை எழுதப்பட்டிருந்தாலும் நீண்ட நாட்களாகவே மனதை உறுத்திக்கொண்டிருந்த ஒரு விஷயத்தையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள இது உதவும் என்று நம்பிக்கையோடு. .
சமீபத்தில் நாம் எழுதியிருந்த "ராஜாவின் புகழுக்கு மற்றுமொரு சான்று" என்ற கட்டுரையில் வந்த விஷயத்தை ஒரு நண்பர் "ஏண்டா அதையே திரும்ப திரும்ப சொல்லிகிட்டே இருக்க ..?" என்று கேட்டிருந்தார். அதாவது சும்மா ராஜாவின் புகழை திரும்ப திரும்ப பேசிகிட்டே இருக்க என்று.
சமீபத்தில் விகடன் பொக்கிஷம் என்ற தலைப்பில் ஆனந்த விகடன் பழைய விகடனில் வந்த பேட்டிகள்,விமர்சனங்கள் என்று பல விஷயங்களையும் மீண்டும் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறது. அந்த வரிசையில் "சிகப்பு ரோஜாக்கள்", "முதல் மரியாதை" போன்ற படங்களின் விமர்சனங்களும் வந்திருந்தது. அதில் ஒரு வரி கூட ஒரு வார்த்தை கூட ராஜாவின் இசையை பற்றி குறிப்பிடவில்லை. அது ஏன் ..? தயவு செய்து யாரும் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம், காரணம், திட்டமிட்டு அவரது இசை திறமையை ஒடுக்க நினைத்த மேல்தட்டு கனவான்களே. விகடன் விமர்சனம் நம்மிடையே எந்த அளவிற்கு பிரபலம் என்பதை யாருக்கும் சொல்லி தெரிய வேண்டியதில்லை, அந்த விமர்சனத்திலேயே இப்படி என்றால்..? சரி அவர்கள் சொல்லி என்ன ஆக வேண்டியது அப்படின்னு சொல்லிட்டு போக என்னால் முடியாது. விகடனை படிக்கும் லட்சக்கணக்கான வாசகர்களில் சில ஆயிரம் பேர்களாவது இப்படி எடுத்து சொன்னால்தான் உண்டு.
அவர்களுக்கு எடுத்து சொல்லி புரிய வைக்க வேண்டியது ஒரு நல்ல இசை ரசிகனின் கடமை என்று நினைக்கிறேன். அதை விகடன் இணையதளத்திலேயே பதிவு செய்து இருக்கிறேன். அதை பலபேர் ஆதரித்தும் இருக்கிறார்கள். அதுவுமில்லாமல் இப்படி பேசாமல் போய் போய் தான் இன்று ராஜாவை சாருநிவேதிதா போன்றவர்கள் விமர்சித்து கொண்டுள்ளார்கள். அதுவும் கண்மூடித்தனமாக. எல்லா படைப்பும் விமர்சனத்துக்குரியவை தான் அதில் சந்தேகம் இல்லை. ஆனால் கண்மூடித்தனமாக செய்யப்படுபவை தான் கண்டிக்கத்தக்கவை. சாருநிவேதிதா போன்றவர்கள் ஆரம்ப காலம் தொட்டே இளையராஜா நல்ல இசையை வழங்கவில்லை என்று சொல்வதுடன் இளையராஜாவின் ஒரு பாடல் கூட நல்ல பாடல் இல்லை என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம்..? விமர்சனத்திலும் ஒரு தர்மம் வேண்டாமா ..? ஒரு சின்ன உதாரணம் சாருநிவேதிதா சொல்கிறார் "நான் கடவுள் படம் ஒரு உலக தரமான படம் என்பதில் சந்தேகமே இல்லை ஆனால் அதை அப்படி பார்க்க முடியாமல் செய்வது இளையராஜாவின் இசையே..." -இதற்கு மேல் அவரிடம் இருந்து எதிர்பார்க்கமுடியும். ஒரு கூடுதல் செய்தி "உலகிலேயே மிகவும் கடினமான காரியம் என்பது என்னைப் பொறுத்தவரை ஜேசுதாசின் பாடல்களை கேட்பது தான் என்ன ஒரு கொடுமையான (!!!!???) குரல் ..." இது சாருநேவேதிதா சொன்ன மற்றொரு விமர்சனம். இப்படியெல்லாம் பேசுபவர்கள் இருக்கிற பட்சத்தில், இப்படியெல்லாம் ராஜாவின் இசையை இருட்டடிப்பு செய்பவர்கள் இருக்கிற பட்சத்தில் என்னைப் போன்றவர்கள் தொடர்ந்து குரல் எழுப்பி கொண்டிருப்போம். இதில் தவறு இருப்பதாக தெரியவில்லை. ஒரு கலைஞனுக்கு அவன் ஊதியத்தை விட உயர்வானது ரசிகர்களின் ஆதரவு தான். இங்கு எந்த சாதி என்று பார்த்துதான் கலைஞர்களும் மதிக்கப்படுவது வேதனையிலும் வேதனை. பாரதியார் பாடல்கள் சாஸ்தீரிய சங்கீதத்தில் இடம் பெற்றால் அது தர்மம் ஆனால் அதுவே கண்ணதாசன் பாடல்கள் வந்தால் வரம்பு மீறல். பாரதியார், கப்பலோட்டிய தமிழர் சிதம்பரனார், வீர பாண்டிய கட்டபொம்மன் , காமராஜர் போன்றோர் சாதியை ஒழிக்க பாடு பட்டார்கள் ஆனால் அவர்களுக்கு சாதி முத்திரை குத்திக்காடிய மக்களை என்னவென்று சொல்வது..? இங்கே நான் இளையராஜாவின் புகழ் பாடியதாக சுட்டிக்காட்டிய நண்பருக்கு ஒன்று சொல்லி கொள்கிறேன், நல்ல கலைஞனை மதிக்க வேண்டியது ஒரு சமுதாயத்தின் கடமை, இளையராஜாவை யாரும் மதிக்கலைன்னு சொல்ல வரலை ஆனால் அந்த கலைஞனின் திறமைக்கேற்ற சன்மானம் (அங்கீகாரம்) வழங்கப் படவில்லை என்பதே என் போன்றோரின் வாதம். அந்த அங்கீகாரம் கிடைக்கும் வரை நான் சொல்லிக் கொண்டேதான் இருப்பேன்.
அந்த நண்பருக்கு இன்னொரு செய்தி இசை அமைப்பாளர் ரஹ்மானுக்கு பாராட்டு விழா நடந்த பொழுது ஏற்புரை வழங்கிய அவர் சொன்னார் ... "...ஆஸ்கார் அவார்டு வாங்குவதற்கு சில சேனல்கள் இருக்கின்றன அதன் மூலமாக நாம் அப்ரோச் செய்ய வேண்டும். அப்படி செய்யாவிட்டால் அவர்களுக்கு நம்மை பற்றி தெரியாது..." அது போலத்தான் இதுவும் ராஜாவின் இசை நல்ல இசை என்று மனசுக்குள் வைத்துக்கொண்டிருந்தால் மட்டும் போதாது அது எப்பேர்பட்ட நல்லிசை என்பதை புரிய வைக்க வேண்டும். அதில் ஒரு சிறு முயற்சி தான் இது.

நன்றி சரவணன் - apsaravanan.blogspot.com

Monday, March 22, 2010

இளையராஜா பற்றி வைரமுத்துவின் கவிதையும் சில சந்தேகங்கள்


இளையராஜா பற்றி வைரமுத்து

இசை ஞானியே!

என்னோடு சேர்ந்துதான் வெற்றிபெற முடியும் என்ற நிலையில் நீயும் இல்லை.
உன்னோடு சேர்ந்துதான் வெற்றிபெற முடியும் என்ற நிலையில் நானும் இல்லை.

என் இலக்கிய வாழ்க்கையின் இரண்டாம் பாகத்தைத் தொடங்கி வைத்தவனே! தூக்கி நிறுத்தியவனே!

உன்னை நினைக்கும் போதெல்லாம் என் மனசின் ஈரமான பக்கங்களே படபடக்கின்றன.

கொட்டையை எறிந்துவிட்டு, பேரீச்சம்பழத்தை மட்டுமே சுவைக்கும் குழந்தையைப்போல என் இதயத்தில் உன்னைப் பற்றிய இனிப்பான நினைவுகளுக்கு மட்டுமே இடம் தந்திருக்கிறேன்.

மனைவியின் பிரிவுக்குப் பிறகு அவள் புடவையைத் தலைக்கு வைத்துப் படுத்திருக்கும் காதலுள்ள கணவனைப் போல அவ்வப்போது உன் நினைவுகளோடு நான் நித்திரை கொள்கிறேன்.

---

திரை உலகில் நான் அதிக நேரம் செலவிட்டது உன்னிடம்தான்.

மனசில் மிச்சமில்லாமல் பேசிச் சிரித்தது உன்னோடுதான்.

பெண்களைத் தவிர என் கனவில் வரும் ஒரே ஆண் நீதான்.

நமக்குள் விளைந்த பேதம் ஏதோ நகம் கிழித்த கோடுதான்.

ஆனால் நான் கண்ணினும் மெல்லியவன்; நகத்தின் கிழிப்பை என் விழிப்பை தாங்காது.

பரணில் கிடக்கும் ஆர்மோனியம் எடுத்து, தூசு தட்டி, வாசிப்பது போல் உன் தூசுகளைத் துடைத்துவிட்டு உன்னை நான் ஆர்மோனியமாகவே நேசிக்கிறேன்.

---

நீளமான வருடங்களின் நீண்ட இடைவெளியைப் பிறகு ராஜாஜி ஹாலில் எம்.ஜி.ஆர். இரங்கல் கூட்டத்தில் இருவரும் சந்தித்துக் கொள்கிறோம்.

என்னை நீ குறுகுறுவென்று பார்க்கிறாய்.

உன்னை நானும் பார்க்கிறேன்.

தூண்டிலில் சிக்கிய மீனாய்த் தொண்டையில் ஏதோ தவிக்கிறது.

வார்த்தை துடிக்கிறது;

வைராக்கியம் தடுக்கிறது;

வந்துவிட்டேன்.

---

அன்று... இரவெல்லாம் உன் ஞாபகக்கொசுக்கள் என்னைத் தூங்கவிடவில்லை.

உன்னோடு சேர்ந்த பின்தான் எத்தனை எத்தனை மாற்றங்கள் என்னில்.

ஒரே வருஷத்தில் சூரியனை என் பக்கம் திருப்பிச் சுள்ளென்று அடிக்க வைத்தாய்.

இந்த விதைக்குள் இருந்த விருட்சத்தை வெளியே கொண்டு வந்தாய்.

என் பெயரைக் காற்றுக்குச் சொல்லிக் கொடுத்தாய்.

நீதான்... அந்த நீதான் ஒரு நாள் எனக்கு வக்கீல் நோட்டீசும் அனுப்பினாய்.

ஒரு கணம் திகைத்தேன்.

வெள்ளைத் தாமரையாய் இருந்த மனசு கார்பன் தாளாய்க் கறுத்தது.

பிறகு நிதானமாய் சிந்தித்தேன்.

நீ எனக்குச் செய்த நன்மைகள் மட்டுமே என் நினைவுக்கு வந்தன.

சினிமாக் கம்பெனிகளின் முகவரிகளே தெரியாத அந்த வெள்ளை நாட்களில் என்னை வீட்டுக்கு வந்து அழைத்துப் போவாயே! அதை நினைத்தேன்.

நான் கார் வாங்குகிற காலம் வரை உன் காரில் என்னை என் வீட்டில் இறக்கி விட்டுப் போவாயே! அதை நினைத்தேன்.

உன் வீட்டிலிருந்து உனக்காகக் காய்ச்சி அனுப்பப்படும் ஒரு கோப்பைப் பாலில் எனக்குப் பாதி கொடுக்காமல் எப்போதும் நீ அருந்தியதில்லையே! அதை நினைத்தேன்.

‘ஆயிரம் தாமரை மொட்டுக்களே’ பாடல் பதிவாகி முடிந்ததும் என்னைப் பரவசத்தோடு தழுவிக்கொண்டு என் கன்னங்களை வருடிக்கொண்டு, அப்படியே புகைப்படக்காரரைப் படமெடுக்கச் சொன்னாயே! அதை நினைத்தேன்.

அந்த நினைவுகளின் இதமான உஷ்ணத்தில் உன் வக்கீல் நோட்டீஸ் எரிந்து போனது.

---

எனக்கு எதிராக உன் பெயரில் ஓர் அறிக்கை வருகிறது.

இருக்காதே என்று நினைக்கிறேன்.

பிறகு நண்பர்களுக்குச் சொல்லி நகலைக் கைப்பற்றுகிறேன்.

உன் அறிக்கைதான்.

ஒரு பெண் வெட்கப்படுவது மாதிரி இருக்கும் உனது கையெழுத்தேதான்.

படித்தேன். சிரித்தேன். கிழித்தேன். வேறோரு கோணத்தில் நினைத்தேன்.

உன் எழுத்தில் இந்த உஷ்ணம் இருந்தால் உன் இருதய அடுப்பில் எத்தனை விறகு எரிந்திருக்கும்!

உன் உள்ள உலை எத்தனை முறை கொதித்திருக்கும்!

காரணமே இல்லையே.

இது இருதயத்திற்கு ஆகாதே.

---

நண்பர் கமல்ஹாசன் என்னை அழைத்து அவரது புதிய சரித்திரப் படத்துக்கு வசனம் எழுதச் சொல்கிறார். சந்தோஷத்தோடு ‘சரி’ என்கிறேன்.

ஆனால் லோக்சபையின் தீர்மானத்தை ராஜ்யசபா அடித்துவிடுவது மாதிரி நீ தடுத்து விடுகிறாய்.

இப்படியெல்லாம் அடிக்கடி நான் சிரித்துக்கொள்ள சந்தர்ப்பம் தருகிறாய்.

---

நான் எப்போதும் நேசிக்கும் இனியவனே!

இப்போது சொல்கிறேன்.

உனது பட்டறையில் எனக்கெதிராய் அம்புகள் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன.

ஆனால் எனது யுத்தத் தொழிற்சாலையில் கவசங்கள் மட்டுமே தயாரிக்க வேண்டும் என்று கட்டளையிட்டிருக்கிறேன்.

ஏனென்றால், என்னை எதிரியாக நீ நினைக்கிறாயே தவிர உன்னை எதிரியாக நான் நினைக்கவில்லை.

---

உன்னை நான் பிரிந்தோ என்னை நீ பிரிந்தோ அல்லது பிரிக்கப்பட்டோ நாம் தனித்து நின்ற சமயம் உனக்கு வேண்டாதவர்கள் சிலர் என் வீட்டுக்கு வந்தார்கள்.

உனக்கெதிரான அவர்களின் கூட்டணிக்கு என்னைத் தலைமையேற்க சொன்னார்கள்.

நான் கொதித்தேன்.

"அவன் சிங்கம். நானும் சிங்கம். சிங்கத்துக்கும் சிங்கத்திற்குமே யுத்தம். நரிகளின் கூட்டணியோடு சிங்கங்கள் போர்க்களம் புகுவதில்லை" என்று சீறிச் சினந்து "போய் வாருங்கள்" என்றேன்.

மறுகணம் யோசித்து, வார்த்தைகளில் பாதியை வாபஸ் வாங்கிக்கொண்டு, "போங்கள்" என்றேன்.

நீ வீழ்ந்தாலும் - வீழ்த்தப்பட்டாலும் எனக்கு சம்மதமில்லை.

இவ்வளவு உயரத்தில் ஏறியிருக்கும் ஒரு தமிழன் உருண்டு விடக்கூடாது.

---

நீயும் நானும் சேர வேண்டுமாம்.

சில தூய இதயங்கள் சொல்லுகின்றன.

உனக்கு ஞாபகமிருக்கிறதா?

‘ஈரமான ரோஜாவே’ எழுதி முடித்துவிட்டு ஆழியாறு அணையின் மீது நடந்து கொண்டிருந்தோம். திடீரென்று என்னை நீ துரத்தினாய்; நான் ஓடினேன். நீ துரத்திக்கொண்டேயிருந்தாய்; நான் ஓடிக்கொண்டேயிருந்தேன்.

மழை வந்தது.

நின்று விட்டேன்.

என்னை நீ பிடித்து விட்டாய்.

அப்போது சேர்ந்து விட்டோம்.

ஏனென்றால் இருவரும் ஒரே திசையில் ஓடிக் கொண்டிருந்தோம்.

இப்போது முடியுமா?

இருவரும் வேறு வேறு திசையில் அல்லவா ஓடிக்கொண்டிருக்கிறோம்?

---

வைரமுத்து தனிப்பட்ட வாழ்க்கையிலும் திரையுலக வாழ்க்கையிலும் சந்தித்த மனிதர்களில் தன்னை ஏதெனும் ஒரு விதத்தில் பாதித்தவர்களை பற்றி தனக்கே உரிய நடையில் எழுதியிருக்கும் புத்தகம் ‘இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்’. சிவாஜி, எம்.ஜி.ஆர்., கலைஞர், பாரதிராஜா, கே.பாக்யராஜ், ஏ.வி.எம். சரவணன், சாலமன் பாப்பையா என நமக்கு தெரிந்தவர்கள் பற்றிய...

இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்
வைரமுத்து.
219 பக்கங்கள்.
ரூ. 70.
சூர்யா லிட்ரேச்சர் லிமிடெட்.
திருமகள் நிலையம்.
தெரியாத விஷயங்களை, அவர்களின் உயர்ந்த பண்புகளை சிலாகித்து, சிலாகிக்க வைக்கிறது வைரமுத்து எழுத்துக்கள்

நன்றி: குமரன் குடில்

வைரமுத்துவிடம் சில சந்தேகங்கள் எப்பூடிவலைப்பூவிலிருந்து

கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் இசைஞானிக்கு எழுதிய கவிதை ஒன்று சரவனகுமரனின் 'குமரன் குடில் ' வலைப்பூவில் வெளியாகியது. அந்த கவிதை வைரமுத்துவின் 'கவிதை தொகுப்பில்' இடம் பிடிக்காததால் இதற்கு முன்னர் நான் அந்த கவிதையை பார்க்கவில்லை. ஆனால் அதை பார்த்த கணத்திலிருந்து சில சந்தேகங்களை வைரமுத்து அவர்களிடம் வசன நடையில் கேட்கவேண்டும் போல் தோன்றியது. அந்த சந்தேகங்களை இந்த பதிவில்ன் மூலமாக வைரமுத்து அவர்களிடம் அல்லது அவரின் தீவிர வெறியர்களிடம் .....

வைரமுத்து அய்யா....

உங்கள் தமிழ்மீது வைத்திருக்கும் மரியாதை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு சென்றாலும் உங்கள் மீதுள்ள மரியாதை வரவர குறைவடைந்து கொண்டே செல்கிறது. கவிஞருக்குரிய மிடுக்கு உங்கள் தோற்றத்தில் இருந்தாலும் உங்கள் நடத்தையில் இல்லைபோல் தெரிகிறது. இதற்கு பல உதாரணங்களை சொல்லலாம்,

1 ) உங்களை கலைஞர் அவைப்புலவர் ஸ்தானத்தில் வைத்திருந்தபோது நீங்கள் ஜெயலிதாவை பாராட்டியதற்காக உங்கள் இடத்திற்கு புதிதாக பா. விஜயை நியமிக்க அவருக்கு 'வித்தாக கலைஞர் ' பட்டத்தை கலைஞர் கருணாநிதி வழங்கிய நாளிலிருந்து நீங்கள் விட்ட இடத்தை பிடிக்க கலைஞர் துதிபாடாத இடமில்லை, ஏனென்றால் உங்களுக்கு ஆட்சிபலம்தேவை.

2 ) இளைய கவிஞர்களில் யாராவது ஒருவருடன் நல்லுறவு வைத்துள்ளீர்களா? அல்லது நீங்கள்தான் யாரையாவது புகழ்ந்திருக்கிரிகளா? அதற்கு பதிலாக "இருக்கும் கவிஞர்கள் இம்சைகள் போதும் என்னையும் கவிஞன் ஆக்காதே" என்ற பாடல் வரிகளை எழுதி அல்லவா உள்ரிர்

3 ) கண்ணதாசனின் 'கவியரசர்' பட்டத்திற்குமேல் ஒரு பட்டம் வேண்டும் என்பதற்காக 'கவிப்பேரரசு' என அடைமொழி வைத்து உங்கள் தரத்தை குறைத்து கொண்டவர்தானே நீங்கள்?

4 ) சரணின் அனைத்து படங்களுக்கும் பாட்டு எழுதுவது நீங்கள்தான் என்பதால் சரண் கேட்டால் எதையும் எழுதிக்கொடுத்து விடுவீர்களா? உங்களுக்கு பணம் தந்தாள் யாரை பற்றியும் கேவலமாக விமர்சிப்பீர்களா? இல்லாவிட்டால் விஜயை பார்த்து அஜித் "எனக்கொரு நண்பன் என்று இருப்பதற்கு தனிப்பட்ட தகுதிகள் எதுவுமில்லை" என பாடும் கீழ்த்தரமான வரிகளை எழுதியிருப்பீர்களா? இன்று அதே சரணின் 'அசல்' திரைப்படத்தில் 'எம் தந்தை' பாடலில் சிவாஜியை புகழ்ந்து பாட்டெழுதுவதாக கூறி சரணுக்கு பிடிக்காத உங்களின் நண்பன் கமலை காயப்படுத்தும் வகையில் "உன்போல சிலர் இன்று உருவாகலாம் , உன்னுடல் கொண்ட அசைவுக்கு நிகராகுமா? " என சிவாஜியை புகழ்வதுபோல கமலை தாக்கியது எதற்காக பணத்துக்கும் சரணின் அடுத்த படவாய்ப்புக்கும்தானே?

இப்படி உங்களிடம் கேட்க பல சந்தேகங்கள் இருந்தாலும் 'இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்' புத்தகத்தில் நீங்கள் ராஜாவிற்கு எழுதிய கவிதையில் இருந்து சில சந்தேகங்களை உங்களிடம் கேட்க விரும்புகிறேன்.


//இசை ஞானியே! , என்னோடு சேர்ந்துதான் வெற்றிபெற முடியும் என்ற நிலையில் நீயும் இல்லை,உன்னோடு சேர்ந்துதான் வெற்றிபெற முடியும் என்ற நிலையில் நானும் இல்லை.//


உண்மைதான் யாரையும் நம்பி யாரும் இல்லைதான், ஆனால் இளைய ராஜா இல்லாவிட்டால் நீங்கள் எப்படி இருந்திருப்பீர்கள் என்று நினைக்கும்போது எனக்கு எல்லாமே சூனியமாகத்தான் தெரிகிறது. உங்களுக்கு 1981 இல் இளையராஜா நிழல்கள் திரைப்படத்தில் சந்தர்ப்பம் வழங்கவில்லை என்றால் எப்படி உங்களை வெளிக்கொண்டு வந்திருப்பீர்கள்? சந்திரபோஸ், சங்கர் கணேஷ், 1980 களின் பின்னர் எம்.எஸ்.வி என எப்போதாவது ஒரு படத்தின் பாடல்கள் பிரபல்யமாகும் இசையமைப்பாளர்களின் மூலம் உங்களை நிரூபித்திருக்க முடியுமா?

ரகுமானின் வருகையின் பின்னர் வைரமுத்து அவர்கள் தன்னை நிரூபித்திருப்பார் என்று கூறும் உங்கள் ஆதரவாளர்களுக்கு ரகுமான் ஆரம்பகாலங்களில் பிரபல்யமான பாடலாசிரியர்களைதான் பயன்படுத்தினார் என்பது தெரியாதென்று நினைக்கிறேன், அதனால்தான் தனது ஆரம்பகால படங்களுக்கு உங்களையும் 'வாலி அய்யா' அவர்களையும் பயன் படுத்தினார். இளையராஜாவால் நீங்கள் பிரபல்யம் அடையவில்லை என்றால் அன்று ரகுமான் உங்களுக்கு சந்தர்ப்பம் வழங்கியிருப்பாரா? இன்று நீங்கள் இருக்கும் நிலைக்கு உயர்ந்திருக்க முடியுமா? நீங்கள் கேட்கலாம் ராஜாவிற்கு எனது பாடல்கள் பலமில்லையா என்று , உண்மைதான் உங்கள் இருவரது கூட்டணியில் உருவான பாடல்கள் போல் ஒருபோதும் பாடல்கள் வராதென்பது எனது கருத்து. ஆனால் நீங்கள் இல்லாவிடாலும் பாட்டெழுத வாலி, புலமைபித்தன், முத்துலிங்கம் என நிறைய கவிஞர்கள் இருந்தார்கள் ஆனால் உங்களுக்கு ராஜாவை விட்டால்?
//சினிமாக் கம்பெனிகளின் முகவரிகளே தெரியாத அந்த வெள்ளை நாட்களில் என்னை வீட்டுக்கு வந்து அழைத்துப் போவாயே! அதை நினைத்தேன்,நான் கார் வாங்குகிற காலம் வரை உன் காரில் என்னை என் வீட்டில் இறக்கி விட்டுப் போவாயே! அதை நினைத்தேன்,உன் வீட்டிலிருந்து உனக்காகக் காய்ச்சி அனுப்பப்படும் ஒரு கோப்பைப் பாலில் எனக்குப் பாதி கொடுக்காமல் எப்போதும் நீ அருந்தியதில்லையே! அதை நினைத்தேன்,ஆயிரம் தாமரை மொட்டுக்களே’ பாடல் பதிவாகி முடிந்ததும் என்னைப் பரவசத்தோடு தழுவிக்கொண்டு என் கன்னங்களை வருடிக்கொண்டு, அப்படியே புகைப்படக்காரரைப் படமெடுக்கச் சொன்னாயே! அதை நினைத்தேன்.//

//திரை உலகில் நான் அதிக நேரம் செலவிட்டது உன்னிடம்தான்,மனசில் மிச்சமில்லாமல் பேசிச் சிரித்தது உன்னோடுதான்//

//உன்னோடு சேர்ந்த பின்தான் எத்தனை எத்தனை மாற்றங்கள் என்னில்,ஒரே வருஷத்தில் சூரியனை என் பக்கம் திருப்பிச் சுள்ளென்று அடிக்க வைத்தாய்,இந்த விதைக்குள் இருந்த விருட்சத்தை வெளியே கொண்டு வந்தாய்,என் பெயரைக் காற்றுக்குச் சொல்லிக் கொடுத்தாய்.//

//நீதான்... அந்த நீதான் ஒரு நாள் எனக்கு வக்கீல் நோட்டீசும் அனுப்பினாய்.//

எதற்காக அந்த வக்கீல் நோட்டீசை அனுப்பினாரென்று நீங்கள் கடைசிவரை கூறவே இல்லை, அதுதவிர உங்களுக்கு இத்தனை நன்மை செய்த இளையராஜா ஒரு காரணமும் இல்லாமலா உங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியிருப்பார்? இளையராஜாவின் குணம் உங்களுக்கு அதுவரை தெரியாதா? அவர் நோட்டிஸ் அனுப்பினாலும் அந்த பிரர்ச்சினையை பேசித்தீர்க்கவேண்டியது நீங்களா அல்லது இளையராஜாவா? பின்னர் அந்த வழக்கு என்னவாயிற்று என்பது யாருக்கும் தெரியாதுள்ளதே, இறுதியாக அந்த வக்கீல் நோட்டிஸ் என்னவானது என்பதை தயவு செய்து கூறமுடியுமா?


//உன் எழுத்தில் இந்த உஷ்ணம் இருந்தால் உன் இருதய அடுப்பில் எத்தனை விறகு எரிந்திருக்கும்,உன் உள்ள உலை எத்தனை முறை கொதித்திருக்கும்,காரணமே இல்லையே.//

காரணமில்லாமல் கோவப்பட இளையராஜா என்ன மனநலம் பாதிக்கபட்டவாரா? அல்லது சிறு குழந்தையா ? அப்படிஎன்றால்கூட நீங்கள் அவரைவிட்டு விலகியிருக்ககூடாதே? இளையராஜா மீது முழுவதும் குற்றம் சுமத்தும் நீங்கள் இளையராஜாவுக்கு ஒருதீங்கும் செய்யவில்லையா? நீங்கள் அம்புட்டு நல்லவரா?

//நண்பர் கமல்ஹாசன் என்னை அழைத்து அவரது புதிய சரித்திரப் படத்துக்கு வசனம் எழுதச் சொல்கிறார். சந்தோஷத்தோடு ‘சரி’ என்கிறேன்,ஆனால் லோக்சபையின் தீர்மானத்தை ராஜ்யசபா அடித்துவிடுவது மாதிரி நீ தடுத்து விடுகிறாய்.//

இங்குதான் எனக்கு சில சந்தேகங்கள், இளையராஜா அப்படி சொன்னதாகவே இருக்கட்டும் அது உங்களுக்கு எப்படி தெரியும்? கமல் வந்து சொன்னாரா? அப்படியென்றால்றால் கமல் 'புறம்' பேசுபவரா ? ராஜா பேச்சை கேட்டு உங்களுக்கு வரவிருந்த வாய்ப்பை நிறுத்துகிறார் என்றால் கமல் சொந்தமாக சிந்திக்க மாட்டாதவரா? அல்லது ராஜாவை நம்பித்தான் கமல் இருக்கிறாரா? கமல் ராஜாவின் நண்பன் என்றால் நண்பன் சொன்னதை வேறொருவரிடம் பொய் கொள்மூட்டுபவரா? அல்லது கமல் உங்கள் நண்பன் என்றால் உங்களுக்கு பிடிக்காதவர் உங்களை பற்றி சொன்னதை உங்களிடம் சொல்லுமளவிற்கு நாகரிகம் தெரியாதவரா ? பின்னர் நீங்கள் எத்தனை படங்களுக்கு திரைக்கதை எழுதினீர்கள்? தொடர்ந்தும் உங்களுக்கு கிடைத்த சந்தர்ப்பங்களை இளையராஜா தடுத்துவிட்டாரா? அல்லது உங்களை நல்லவராக காட்டிக்கொள்ள ராஜாவை வில்லனாக்குகிரீர்களா?
// நான் எப்போதும் நேசிக்கும் இனியவனே!,இப்போது சொல்கிறேன்,உனது பட்டறையில் எனக்கெதிராய் அம்புகள் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன,ஆனால் எனது யுத்தத் தொழிற்சாலையில் கவசங்கள் மட்டுமே தயாரிக்க வேண்டும் என்று கட்டளையிட்டிருக்கிறேன்,ஏனென்றால், என்னை எதிரியாக நீ நினைக்கிறாயே தவிர உன்னை எதிரியாக நான் நினைக்கவில்லை.//

இளையராஜாவின் பாசறையில் அம்புகள் மட்டுமே தயாரிகட்டும் ,ஆனால் உங்களின் இந்த கவிதையை பார்த்தால் நீங்கள் பேனாவால் 'விஷ அம்பை' ராஜாமீது எய்துள்ளது போலல்லவா தெரிகிறது. விஷ அம்பு எப்படி கேடயமாகும்?


//உன்னை நான் பிரிந்தோ என்னை நீ பிரிந்தோ அல்லது பிரிக்கப்பட்டோ நாம் தனித்து நின்ற சமயம் உனக்கு வேண்டாதவர்கள் சிலர் என் வீட்டுக்கு வந்தார்கள்,உனக்கெதிரான அவர்களின் கூட்டணிக்கு என்னைத் தலைமையேற்க சொன்னார்கள்,நான் கொதித்தேன், "அவன் சிங்கம். நானும் சிங்கம். சிங்கத்துக்கும் சிங்கத்திற்குமே யுத்தம். நரிகளின் கூட்டணியோடு சிங்கங்கள் போர்க்களம் புகுவதில்லை" என்று சீறிச் சினந்து "போய் வாருங்கள்" என்றேன்.//

வைரமுத்து அவர்களே உங்கள் வாயால் ராஜாவை சிங்கம் என்றதற்கு நன்றி , ஆனால் குள்ளநரியான உங்களையும் சிங்கம் என்று கூறுவது சிங்க இனத்துக்கே அவமானமில்லையா? சிங்கம் ஒருபோதும் முதுகில் குத்துவதில்லையாமே? இது உண்மையா?


//நீ வீழ்ந்தாலும் - வீழ்த்தப்பட்டாலும் எனக்கு சம்மதமில்லை,இவ்வளவு உயரத்தில் ஏறியிருக்கும் ஒரு தமிழன் உருண்டு விடக்கூடாது.//

நீங்கள் நினைத்தாலும் அவரை வீழ்த்த முடியாது, தமிழ் இருக்கும் வரை அவர் இருப்பார். உங்கள் இயற்தமிழிலும் பார்க்க அவரது இசைத்தமிழுக்கு ஆயுள் அதிகம்.
//நீயும் நானும் சேர வேண்டுமாம்,சில தூய இதயங்கள் சொல்லுகின்றன,உனக்கு ஞாபகமிருக்கிறதா?,‘ஈரமான ரோஜாவே’ எழுதி முடித்துவிட்டு ஆழியாறு அணையின் மீது நடந்து கொண்டிருந்தோம், திடீரென்று என்னை நீ துரத்தினாய்; நான் ஓடினேன்.,நீ துரத்திக்கொண்டேயிருந்தாய்; நான் ஓடிக்கொண்டேயிருந்தேன்,மழை வந்தது,நின்று விட்டேன்,என்னை நீ பிடித்து விட்டாய்,அப்போது சேர்ந்து விட்டோம்,ஏனென்றால் இருவரும் ஒரே திசையில் ஓடிக் கொண்டிருந்தோம்,இப்போது முடியுமா? இருவரும் வேறு வேறு திசையில் அல்லவா ஓடிக்கொண்டிருக்கிறோம்?//

நீங்கள் வேறுவேறு திசையில் ஓடினாலும் வட்டப்பாதையில் ஓடுவதாக அல்லவா நாம் நினைத்தோம் , ஆனால் நீங்கள் நேர்கோட்டில் ஓடுவது எனக்கு இத்தனை ஆண்டுகளுக்கு பின்னர் இந்த கவிதையை படித்த பின்னர்தான் தெரிந்தது , உங்களுக்கு தேவையென்றால் வளைந்து நெளிந்த பாதையிலும் போகும் நீங்கள் இன்று உங்களுக்கு தேவைப்படாத ராஜாவிற்கு எதிர்த்திசையில் நேர்கோட்டில் ஓடுவதில் ஆச்சரியமில்லை. ஓடுங்கள், நன்றாக ஓடுங்கள், பணத்துக்காகவும் புகழுக்காகவும் ஜால்றாக்காகவும் கூட இருப்பவர்களையும் ,நண்பர்களையும் தூக்கிஎறிந்துவிட்டு இப்படியே ஓடினால் நீங்கள் மட்டும்தான் கடைசியில் மிஞ்சுவீர்கள்.


ஔவையார், திருவள்ளுவர், கம்பர், இளங்கோ, பாரதியார்,பாரதிதாசன், அண்ணா, கலைஞர், பட்டுக்கோட்டை கண்ணதாசன் என ஒரு பெரும்பட்டியலே உங்கள் தமிழுக்கு முன்னால் இருக்கிறது, ஆனால் இளையராஜாவின் தமிழிசைக்கு முன்னாலும் சரி பின்னாலும் சரி கண்ணுக்கெட்டியதூரம்வரை யாருமில்லை என்பதை மறவாதீர்கள்.

வைரமுத்துவை விமர்சிக்க உனக்கென்ன தகுதி இருக்கிறது என்பவர்களுக்கான விடை "இளையராஜாவின் ரசிகன் என்கிற தகுதியும், வைரமுத்துவின் தமிழுக்கு [மட்டும் ] ரசிகன் என்கிற தகுதியும் போதுமானது என்பது எனது தாழ்மையான கருத்து

நன்றி: எப்பூடி இனையதளம்

Sunday, March 21, 2010

நாயகன் படத்துல இளையராஜா தெரியலையாம் விகடனுக்கு


ஒரு விருதும் சில வினாக்களும்

என்ன ஒரு ராஜா ரசிகர் நீங்கள் இவ்வளவு நாட்களாக எதிர்பார்த்த விருது கிடைச்சிருக்கு ஆனா ஒரு பதிவும் போடலையே..? அப்படின்னு ஒருத்தர் கேட்டார். ஒரு வேளை இந்த விருது பத்து வருடங்களுக்கு முன்னால் ராஜாவுக்கு கொடுக்கப்பட்டிருந்தால் வரிந்து வரிந்து எழுத தோன்றியிருக்கும். ஆனால் இப்ப அப்படி தோணலை அதாவது விருது வாங்கினதை பத்தி. இப்பவும் நான் நம்புறேன் ராஜா விருதுகளுக்கு அப்பாற்பட்ட ஒரு கலைஞன். ஆனால் அது சம்மந்தமாக ராஜாவை நோகடிக்கும் நோக்கோடு எழுதப்பட்ட ஒரு விமர்சனத்திற்கு பதில் சொல்லலாம்ன்னு நினைக்கிறேன். ராஜா விருது வாங்கியவுடன் அவரை சந்தித்த ஊடக நண்பர்கள் கேட்ட கேள்வியில் எழுந்ததுதான் இந்த விமர்சனம். ஒரு நிருபர் கேட்டார் "உங்களுடன் ஏ.ஆர்.ரஹ்மானும் விருது வாங்கி இருக்கிறார் அது பத்தி என்ன சொல்றீங்க..?" அப்படின்னு கேட்டார் அதற்கு ராஜா "அவர் வாங்கியது அவருக்கு." அப்படின்னு சொன்னார். உடனே மிகவும் பணிவான எண்ணம் (!?) கொண்டவர்களால் அதை தாங்கி கொள்ள முடியவில்லை. என்ன மனுஷன் இவர் சக இசை அமைப்பாளர் வாங்கும் போது ஒரு மூத்தவர் என்ற முறையில் பாராட்ட வேண்டாமா..? என்ற கூக்குரல்கள். பணிவான இதயம் கொண்டவர்களே உங்களுக்கு சில கேள்விகள்...
1. இந்த கேள்விக்கு பதிலை ராஜா "ரஹ்மான் இரண்டு ஆஸ்கார் அவார்டை வாங்கிவிட்டார் என்னை விட பெரியவர். என்னை விட சிறந்த இசை அமைப்பாளர். ஏன் இந்தியாவிலேயே அவர்தான் சிறந்த இசை அமைப்பாளர்." அப்படின்னு சொல்லி இருந்தா "பணிவானவர்கள்" பாராட்டி இருக்கலாம். அதை தான் எதிர் பார்க்கிறார்களா..? என்னை பொறுத்தவரை அப்படி தான் ராஜா "பணிவு" ன்னு நிரூபிக்கனும்ன்னு இருந்தா அது தேவையே இல்லை. அதுவும் இவ்வளவு தூரம் தன்னை இசை துறையில் நிரூபித்த பிறகும். பணிவானர்களே நீங்கள் ராஜாவை அவரது இசைக்காக ரசியுங்கள் அவருக்கு பணிவா இருக்க தெரியலை அப்படிங்கிறதுக்காக நோகடிக்காதீங்க.

2. இந்த பணிவு எல்லாம் பார்க்கும் பார்வையில் தான் இருக்கு. அதுவுமில்லாம ராஜாவுக்கானா அங்கீகாரம் அவரது இசைக்கானதே அன்றி அவரது பணிவுக்காகவோ அல்லது அவர் போட்டிருக்கிற வெள்ளை நிற காலணிக்காகவோ அல்ல. ஒவ்வொரு முறையும் உங்களுக்கானா அங்கீகாரம் மறுக்கப்படும் போது நீங்க ஒரு முறையாவது எனக்கு ஏன் இப்படி நடக்குதுன்னு நினச்சிருக்கீங்களா இல்லையா..? அதையேதானே ராஜா பிரதிபலித்திருக்கிறார். ஒரு சக மனிதனா யோசிச்சு பாருங்க அவரோட வலி என்னன்னு தெரியும்.

3. பணிவானர்களே உங்களால் பணிவுதிலகம் என்று போற்ற படுகிற ஏ.ஆர்.ரஹ்மான் ரோஜா படம் வெற்றியடைந்த பிறகு குமுதம் இதழில் வந்த பேட்டியில் "என்னை கவர்ந்த இசை அமைப்பாளர்கள் எம்.எஸ்.வி, கே.வி.மகாதேவன், டி.ராஜேந்தர்..." அப்படின்னு எல்லாம் சொல்லிவிட்டு அன்று தொட முடியாத உயரத்தில் இருந்தாரே ராஜா அவரை மட்டும் சொல்லாமல் விட்டாரே (அதுவும் அவரிடம் பணிபுரிந்த பிறகும்) அதுதான் பணிவின் எடுத்துக்காட்டா..? நான் இதை சரி என்றோ தவறு என்றோ சொல்லவில்லை. ஆனால் இது சரி ராஜா சொன்னதுதான் தவறு அப்படின்னு சொல்றவங்களைதான் நான் கேட்குறேன்.

இது மாதிரி இன்னும் நிறைய கேள்விகள் இருக்கு. ஆனா என்னை போன்றவர்களின் ஆதங்கம் எல்லாம் ஏன் இளையராஜா மட்டும் அதற்கு இலக்காகிறார் என்பது தான் புரியவில்லை. இன்னைக்குதான் படித்தேன் இந்த வார விகடனில் பொக்கிஷம் பகுதியில் வந்த "நாயகன்" விமர்சனத்தை அதன் கடைசி வரிகள் உங்களுக்காக "இளையராஜாவின் 400-வது படமாம்! படத்தின் செட், டேக்கிங், கலர், ரிச்னெஸ் - இவற்றுக்கு நடுவே இளையராஜாவே இருக்கும் இடம் தெரியாமல் அமுங்கிப் போய்விடுகிறார்... பாவம்!" இதை என்னன்னு சொல்றது..? நாயகன் படத்துல இளையராஜா தெரியலையாம் விகடனுக்கு, (சொல்ல கஷ்டமாத்தான் இருக்கு இருந்தாலும் ..) எப்படி தெரியும் ...மணிரத்தினம், கமல்,ஸ்ரீராம்.. இவாளெல்லாம் இணைந்து பணிபுரிந்திருக்கும் பொழுது..?!

நன்றி apsaravanan.blogspot.com

விகடன் விமர்சனத்தின் லட்சணம் இது தான்-2


இளையராஜா புறக்கணிப்பு முடிவதில்லை

புதுசா அறிமுகமாகும் ஒரு டைரக்டரோட (ஆர்.சுந்தர்ராஜன்) படமாச்சே, எப்படி இருக்குமோ ஏதா இருக்குமோனு பயந்துகிட்டே தியேட்டருக்குள் போனேன். இரண் டாவது ரீல்லேயே எனக்கு சரியான நோஸ் கட்!

துணிக்குப் போடற கஞ்சியைக் குடிச்சே வயித்தை நிரப்பிக்கிற ஏழ்மை; இருந்தாலும் பாடகனா ஆகணுங்கற லட்சியம் - இது கதாநாயகன் ரவி (மோகன்).
ரவியின் திறமையை வெளி உலகுக்குக் கொண்டுவர எல்லா முயற்சிகளையும் எடுத்து, அவ னைக் காதலிக்கவும் செய்யும் கதாநாயகி ராதா (பூர்ணிமா ஜெயராம்).
- இவங்க ரெண்டு பேரையும் சுற்றி, டைரக்டர் திரைக்கதையைப் பின்னியிருக்கும் அழகு அப்படியே அசத்திடுது.
'முதன்முதல் ராக தீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோ' பாடலும், டி.வி-க்காக ரவி பாடும் இன்னொரு பாடலும் படமாக்கப்பட்டுள்ள விதம் டைரக்டரோட எதிர்காலத்துக்கு உத்தரவாதம் அளிக்குது! (இளையராஜாவும் எஸ்.பி.பி- யும் இவருக்கு அசைக்க முடி யாத இரு தூண்கள்!)
தனக்கு பிளட் கான்சர்ங்கறதை ராதாகிட்டே சொல்ல முடியாம ரவி திண்டாடறது, தன் மீதுள்ள காதலை அவ மறக்கணும்கறதுக்காக அவளை டீஸ் பண்றது, மூன்றாவது ஒரு மதுரை டாக்டர் (ராஜேஷ்) அறி முகமாறது - பின்பகுதி விவ காரங்கள்லே துளிக்கூட அமெச்சூர்த்தனமே தெரியலே!
படத்துலே என்னதான் குறை?
ஹீரோவோட பிளட் கான் சர், 'வாழ்வே மாய'த்தின் பாதிப்பு! டாக்டர் குமார் விஷயத்தில் 'அந்த 7 நாட்கள்' பாதிப்பு!
இருந்தாலும், ஒரு ஊக்க போனஸ் மாதிரி 48 மார்க் தரலாம்!

-பயணங்கள் முடிவதில்லை படத்தின் "ஆனந்த விகடன்" விமர்சனம் தான் நீங்கள் மேலே பார்த்தது. ஹும்.. என்னத்த சொல்றது....?
முடிஞ்சா அப்படியே "கலைஞனை மதிக்காத சமூகமே" படியுங்கள்,
முன்னாடியே படிச்சிருந்தா அதை ஞாபக படுத்திக்கொள்ளுங்கள். விகடனின் இளையராஜா புறக்கணிப்பு முடிவதில்லை போல.

நன்றி apsaravanan.blogspot

விகடன் விமர்சனத்தின் லட்சணம் இது தான்

23 ஆகஸ்ட் 2008ல் ஒன்லிரஜினி.காம் வெளியிட்டகட்டுரை


இந்த வார விகடனில் வந்த கூடுதல் இணைப்பில் கண்ட விஷயம் இது. விகடன் வாங்குவதை நான் நிறுத்திவிட்டபடியால் நண்பரிடம் இரவல் வாங்கி இப்பதிவிற்க்காக பயன்படுத்தினேன்.
இதை படிப்பவர்கள் நிச்சயம் இத்தனை நாள் இவனுங்க விமர்சனத்தையா விழுந்து விழுந்து படிச்சிட்டு இருந்தோம்முன்னு உங்களையே நொந்துக்கபோறீங்க…

கீழ்கண்ட அன்னக்கிளி விமர்சனம் 30.05.1976 ஆனந்த விகடனில் வெளியானது.
விமர்சனத்தை முழுதுமாக படியுங்கள். அதிர்ச்சியடைவீர்கள்.

தமிழ் திரை வரலாற்றில் ஒரு புது அத்தியாயத்தையே துவக்கிய இசைஞானி இளையராஜா அறிமுகமான படம் இது. ஹிந்தி திரை இசை ஆதிக்கத்திலிருந்த தமிழ் ரசிகர்களுக்கு கேட்க கேட்க தெவிட்டாத பாடல்களை தமிழில் தந்து தமிழ் மக்களின் ரசனையையே மாற்றிய அவதார புருஷர் இளையராஜா. அவர் அறிமுகமானது இந்த படத்தில் தான். அவரது மச்சானை பார்த்தீங்கள பாடல் இன்றளவும் நமது செவிக்குள் ஒலித்துகொண்டிருக்கிறது. ஆனால் அவரை பற்றியோ அல்லது அன்னக்கிளி வெற்றி பெற மாபெரும் காரணமாக இருந்த அவரது இசை பற்றியோ ஒரு வார்த்தை கூட இந்த விமர்சனத்தில் இல்லை. இதுதான் இவர்கள் விமர்சனம் எழுதும் லட்சணம்.
அட வேறு ஏதாவது ஒரு விஷயத்தை இப்படி புறக்கணித்தனர் என்றால் கூட விட்டுவிடலாம். ஆனால் ஒரு படத்திற்கும் அதன் வெற்றிக்கும் இசை என்பது எவ்வளவு முக்கியம்? ஒரு பத்திரிகை அதை புறக்கணிக்கிறது என்றால் அதன் தகுதி என்ன?
இத்தனை காலம் இவர்கள் எழுதியதையா நாம் படிச்சி ஒரு படத்தை பற்றி முடிவு பண்ணினோம்? என்ன கொடுமை இது?
பெயர் போட வேண்டாம். அட அட்லீஸ்ட் “ஒருவர் இசை அறிமுகமாகியிருக்கிறார் இந்த படத்தில். அவர் பாடல்கள் அருமை” என்றாவது எழுதியிருக்கலாம் அல்லவா?

புதியவர்களையும் திறமைசாலிகளையும் ஊக்குவிப்பதாக பீற்றிகொள்ளும் விகடனின் லட்சணம் பன்னெடுங்காலமாக இதுதான். இவர்கள் புறக்கணிப்புகளையும் இருட்டடிப்புகளையும் தாண்டி தான் இளையராஜா வெற்றி கொடி நாட்டினார். பிற்காலத்தில் அவர் பல வெற்றிபடங்களை கொடுத்த பின்பு தான் விகடன் அவரை கண்டுகொண்டது. கிட்ட தட்ட குமுதமும் இதே போல தான். மேற்படி இருபத்திரிக்கைகளும் செய்த செய்யும் அடாவடி கொஞ்சம் நஞ்சமில்லை.
விகடன் மற்றும் இன்ன பிற பத்திரிக்கைகள் ஏதோ இளையராஜாவை மட்டும் இப்படி புறக்கணித்ததாக நினைக்கவேண்டாம். ரஜினியை கூட இப்படித்தான் நடத்தினார்கள். இவர்களின் அத்தனை கொடுமை மற்றும் அவதூறுகளையும் மீறித்தான் சூப்பர் ஸ்டார் அந்த நாற்காலியில் உட்கார்ந்தார். இன்றும் உட்கார்ந்துகொண்டிருக்கிறார். “இப்படியே ரஜினி நடித்து கொண்டிருந்தால் சூப்பர் தனியாக ஸ்டார் தனியாக போய்விடும்!!” என்றெல்லாம் பல ஆண்டுகளுக்கு முன்பே விமர்சனம் எழுதியவர்கள் தானே இவர்கள்.
மேலும் விகடன் என்றால் ஏதோ தரமான பத்திரிகை என்பது போல அனைத்து தரப்பு மக்களிடம் ஒரு நம்பிக்கை உள்ளது. அது ஒரு கட்டுக்கதை என்று இப்போது புரிந்ததா?
எதற்கு இந்த பதிவு என்றால் - பத்திரிக்கைகளின் எதிர்ப்பால் புறக்கணிப்பால் ஒருவரது முன்னேற்றத்தை தடுத்து விடமுடியாது என்பதை உணர்த்தவே!!
ரஜினி ரசிகர்கள் மட்டுமல்ல; இளையராஜாவின் ரசிகர்கள் கூட இவர்களை புறக்கணிக்க வேண்டும். அது தான் இவர்களுக்கு சரியான தண்டனை.
இப்போது விகடனுக்கு நாம் வழங்கும் மதிப்பெண் 0/100.
எப்படி இவர்களை வழிக்கு கொண்டு வருவது?
நமது புறக்கணிப்பால் குறைந்தபட்சம் ஒவ்வொரு இதழுக்கும் 1000 பிரதிகளாவது அவர்களது விற்பனை குறைய வேண்டும். 1000 பிரதிகளின் முக்கியத்துவம் என்ன என்பது விகடன் குமுதம் இருவருக்கும் நன்கு தெரியும். அப்போது தானாகவே ரஜினி பற்றிய தவறான செய்திகள் மற்றும் அவதூறுகள் நின்றுவிடும். இதை ஒரு சபதமாக ஏற்போம். அப்படி ஒரு நிலையை நாம் ஏற்படுத்திவிட்டால் அதுவே நமக்கு பெரும் வெற்றி தான். சூப்பர் ஸ்டாருக்கு நாம் செய்யும் பெரும் உதவியும் அதுவே. (ஆன் லைன் வாசகர்களாக இருக்கும் நமது ரசிகர்கள் தங்களது விகடன்.காம் சந்தாவை உடனடியாக ரத்து செய்து அதற்கான காரணத்தையும் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவித்துவிடுங்கள்!!)
நன்றி :onlysuperstar.com

Wednesday, March 3, 2010

அய்யா சாருவின் அருமை பெருமைகள்- சந்திரமோகன்

சந்திரமோகனின் வலைப்பூவில் இருந்து...
'தேவதைகள் கால் வைக்க தயங்கும் பிரதேசத்தில் முட்டாள்கள் குதித்தாடியபடி செல்வார்கள்' என்றார் எம்.ஜி. சுரேஷ், அருமை அண்ணன் சாருவின் ஒரு நேர்காணல் குறித்து எழுதியபோது.
எவ்வளவு அறியாமையில் இருக்கிறார், எம்.ஜி.எஸ்.
அண்ணன் சாரு எப்பேர்பட்ட ஆள். உலகெங்கும்
உள்ள மலையாளிகள் அனைவரும் காலையில் பாத்ரூம் செல்வதற்கு முன் அய்யாவின் முகத்தை ஒரு முறை பார்த்து விட்டு சென்றால் தான், எல்லாம் நல்லபடியாய் போகும் என்று அவர் , படத்தை கையிலேயே வைத்துக்கொண்டு தான் தூங்க செல்கிறார்கள். குறிப்பாக பெண்கள்.
உலகெங்கும் உள்ள(குறிப்பாக இலத்தீன் அமெரிக்க நாடுகளை சேர்ந்த) இயக்குனர்கள் தங்கள்
படங்களின் முதல் காப்பியை அய்யாவுக்கு அர்ப்பணம் செய்த பிறகே உலகெங்கும் திரையிட செல்கிறார்கள். அகிரா குரோசோவா உயிரோடிருந்திருந்தால் அய்யா அவர்களின் நாவல்களில் ஒன்றை படமாக எடுத்து அன்றே தன் வாழ்நாளை முடித்துக்கொண்டிருப்பார்.

இவ்வளவு அருமை வாய்ந்த நம் அய்யாவை அவமதித்துப் பேசிய எம்.ஜி.எஸ்ஸை நினைத்து
சிரிக்காமல் இருக்க முடியவில்லை.
அய்யா சாரு பற்றி ஒரு எழவும் தெரியாத தற்குறி தமிழர்களுக்கு அவரின் மேன்மைகளை எடுத்து சொல்லவேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். (அய்யாவை கேரளாவில் அறியாத தெரு நாய் ஒன்று கூட இல்லையாக்கும்!)
என்னமோ சாரு சாரு என்கிறீர்களே , சாரு யாரு? என்று கேட்கும் தமிழர்களே கேளுங்கள் எங்கள் அய்யாவின் அருமை மற்றும் பெருமைகளை..

அய்யா சரியாக எழுத
துவங்கும் முன்பே சு.ரா. போன்ற சுறாக்களை விமர்சன வேட்டையாடிய பெருமை கொண்டவராக்கும். (விமர்சனத்தின் பெரும்பகுதி பிரமிள் எழுதிய கட்டுரையின் காப்பி என்று சொல்பவர்கள் நரகத்துக்கு போக. )
அய்யா நாளிதழ் ஒன்றின் sponsorship இல் காலம் கழிப்பதாய் சொல்பவர்கள் நாசமாய்ப்போக.
அய்யாவின் விமர்சனம் படித்த தமிழ் இளம் இயக்குனர்கள் அவரை ஒரு படத்திலாவது தாதா வேடத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்று சோறு தண்ணியில்லாமல் வெறும் சிக்கன் பிரியாணி , பீர் பிராந்தி என்று மட்டும் உண்டு தவம் கிடக்கிறார்கள். தாதாவா தாத்தாவா என்பது இயக்குனர்களும் இவரும் மட்டுமே அறிந்த ரகசியமாக்கும்.

அய்யா அவர்கள் ஒரு சிறந்த கண்டுபிடிப்பாளரும் கூட.
அய்யாவின் கண்டுபிடிப்புகளில் சில:
கண்டுபிடிப்பு நம்பர் 1:

பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய தேசங்களில் மருந்துக்குக்கூட கற்பழிப்புகள் நடப்பதில்லை.
(ஆதாரம் அய்யா அவர்கள் கழிப்பறைக்கு செல்லும் முன் பிரான்ஸ், ரஷ்யா, பிரேசில் போன்ற அனைத்துலக நாடுகளின் e-paper களை படிக்கிறார். அவற்றில் ஒரு கற்பழிப்பு செய்தி கூட வராததைக்கண்டு ஆச்சரியமடைந்தவாறே கழிப்பறையை நோக்கி ஒரு பெருமிதத்துடன் நடக்கிறார்!)

கண்டுபிடிப்பு நம்பர் 2 :


ஷாருக்கான் நடித்த ஓம் சாந்தி ஓம் ஒரு பின் நவீனத்துவ படமாக்கும். என்னய்யா அப்படி பார்க்கிறீர்? சொன்னது யாரு ?
அருமை அண்ணன் சாரு!

கண்டுபிடிப்பு நம்பர் 3 :


செல்வராகவனின் 'புதுப்பேட்டை
' தான் தமிழின் முதல் ஸ்பார்ல்டன் சினிமா. செல்வராகவன் தமிழின் அகிரா குரோசோவா.
கண்டுபிடிப்புகளுக்கு கணக்கேயில்லை.

அய்யா ஒரு அதிரடி நாயகனாக்கும். கலைஞர் முதல் கமல்
வரைக்கும் ஒரு பிடி பிடித்து விடுவார் தெரியுமா ? (சொந்த ஊர் குற்றாலமா எனக்கேட்கும் கஸ்மாலம் யார்?)

தமிழின் ஒரே எழுத்தாளரான அய்யா அவர்கள் , சமூக பொறுப்பாளியும் கூட.
விஜய் டிவி யின் 'நீயா நானா ?' நிகழ்ச்சியில் தம்பிடி பைசா கூட பெற்றுக்கொள்ளாமல் , சினிமாவில் தலைகாட்ட டிவி ஒரு முதல் படி என்றெல்லாம் நினைக்காமல் , தமிழ் மக்களின் நலன் ஒன்றே தன்னலம் என்ற அரிய பெருந்தன்மையுடன் , பங்கேற்றவர்.
(பின்பு ஏனய்யா பேசிய பைசா கைக்கு வரவில்லை என்று ஆனந்த விகடனில் அழுது ஒப்பாரி வைத்தீர் என்று கேட்பவன் யாரடா?)
எல்லாவற்றுக்கும் மேலாக எல்லோரையும் சிரிக்க வைக்கும் பணியில் தன்னை வெகு நாட்களாக அர்ப்பணித்துக்கொண்டு தனக்கு தெரிந்த தெரியாத புரிந்த புரியாத மொழி திரைப்படங்களையும் , கோடி வீட்டு குப்பனும் சுப்பனும் அறியும் படி செய்யும் விமரசனப்பணியில் ஈடுபட்டு இன்னல்பட்டு வருகிறார்.

அய்யாவுக்கு பிடித்த இசை அமைப்பாளர் ரஹ்.... ஏய் நிறுத்து நிறுத்து! பிடித்த இசை அமைப்பாளர் எதற்கு? பிடிக்காத ஒரே இசை அமைப்பாளர் இளையராஜா என்ற இசை தெரியாத
ஒருவர்.
இததகைய முடிவுக்கு அய்யா
வர காரணம்?

நீண்ட நாட்களாகவே மாபெரும் இசை மற்றும் கலை விமர்சகரான அய்யா சாரு நிவேதிதா அவர்கள் தனக்கு தெரிந்த அனைத்து வித்தைகளையும் செய்து , தமிழ் சமூகத்தின் தீராத அவலமான கொடூரமான இசை தந்து வரும் ,இசை பற்றி எதுவுமே தெரியாத இளையராஜாவை புறக்கணிக்க சொல்லி தனது மேலான விமர்சனப்பணியை எவ்வித உள் மற்றும் வெளிநோக்கம் இல்லாமல் செய்துவருகிறார். எனினும் அறிவே இல்லாத ஜென்மங்களான தமிழ் மக்கள் அவர் போல் இலத்தீன் மற்றும் கிசிக்ககோ(?) இசை கேட்காமல்
இளையராஜாவின் அபசுரங்களை கேட்டு அல்லல்படுகின்றனர். அவருக்கு பிற்பாடு உலக இசை மற்றும் செவ்வாய் கிரகம் மற்றும் சனி கிரக இசை மற்றும் வாயில் நுழைய முடியாத இசை வகைகளை அறிந்தவரான இசையின் எந்திர வடிவமான ஆஸ்கார் புகழ் ரஹ்மானின்
இசையை கேட்க சொல்லியும் எந்தவித லாப நட்ட நோக்கமின்றி சேவை செய்து
வருகிறார்.
அன்னாரின் அருமையான கருத்துக்களை கேட்க விரும்பாத Existentialism என்றால்
என்ன சமாசாரம் என்று கேட்கும் பாவிகள் நிறைந்த தமிழ் மக்கள் இனிமேலாவது திருந்த வேண்டும் என்று அய்யாவின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

(கிசிக்ககோ இசை பற்றி கேள்விப்படாதவர்கள் காதை அறுத்துக்கொள்ள வேண்டும். இது டிக்சிகோ நாட்டை சேர்ந்த இசை அறிஞரும் அங்கு கஞ்சா மற்றும் அபின் போன்ற அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்பவருமான டின்ச்கி இவருப்புடுங்கி என்ற பெயர் கொண்ட அக்கக்கோ ஆராரிராரோ என்ற மயன் இனத்தை சேர்ந்த ஒருவரின் கண்டுபிடிப்பான இசையாகும். )

அய்யா அவர்கள் இரவு பகல் எந்நேரம் ஆனாலும் நகாரா இசையைக்கேட்டுக்கொண்டே வேலை பார்ப்பவராக்கும்.

அய்யா அவர்களின் லேட்டஸ்ட் கண்டுபிடிப்பு :
இளையராஜா இசை அமைத்த 'பா' ஹிந்தி படத்தின் இசை ஒரு மாபெரும் நகைச்சுவை என்று பம்பாய் சினிமாக்காரர்கள் பல் தெரிய சிரிக்கிறார்களாம். பம்பாயின் பெரிய பெரிய தலைகள் எல்லாம் போன் போட்டு இவரிடம் சிரியோ சிரியென்று விலா நோக சிரிக்கிறார்களாம். எப்பேர்பட்ட கண்டு பிடிப்பு பார்த்தீர்களா? இது போன்ற ஒன்றை உங்களால் கற்பனை செய்தாவது பார்க்கமுடியுமா மக்களே? இங்கு டெல்லியில் எனது பக்கத்துக்கு வீட்டுக்கார பஞ்சாபி 'பா' இசையைக்கேட்டு வயிறு வலிக்க வலிக்க சிரித்து Safdarjung hospital இல் அட்மிட் ஆகிவிட்டார் என்று அய்யாவுக்கு எப்படித்தான் தெரிந்ததோ ? எல்லாம் ஞான திருஷ்டி தான் போங்கள்.

ஆனால் அய்யா தனது தத்துவத்தின் இறுதியில் ஒரு குண்டை தூக்கிப்போட்டிருக்கிறார்.
மேற்கண்ட தகவலை இல்லை என்று நிரூபித்தால் தான் எழுதுவதையே நிறுத்தி கொள்ளப்போவதாக அய்யா எழுதி இருந்ததை படித்தவுடன் என் இதயமே நின்று விட்டது. அய்யா எழுதவதை நிறுத்தி விட்டால் தமிழகத்துக்கு எப்பேர்பட்ட இழப்பு? தமிழகம் கிடக்குது தமிழகம் , அவருக்கு கட்-அவுட் எல்லாம் வைத்து தலையில் வைத்துக்கொண்டாடும் மலையாள இலக்கிய உலகம் மரித்துப்போய் விடாதா?
இலத்தீன் அமெரிக்கா, பிரான்ஸ் ரஷ்யா போன்ற நாடுகள் மற்றும் செவ்வாய் கிரகத்தின் இயக்குனர்கள் தங்கள் திரைப்படங்களை யாரிடம் சென்று காட்டி கருத்துப்பெறுவார்கள்?
ஐயோ.. நினைக்கவே மனம் பதறுகிறதே.
எனவே மக்களே, என்னருமை மக்களே அவர் சொல்வது போல் 'பா' இசை இந்த நூற்றாண்டின் தலைசிறந்த நகைச்சுவை என்று கூறி (அடேய் அறிவு கெட்ட பயலே ! வட இந்தியாவில் பா படத்தின் பாடல்களுக்கு சிறப்பான வரவேற்பு
இருக்கிறதடா மடையா! என்றெல்லாம் எடுத்தெறிந்து பேசாமல் !) அய்யாவின் எழுதுலகப்பணி என்றென்றும் தொடர வழிவகுக்குமாறு பேரன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
ஏனெனில் கைப்புள்ளை காமெடியை விட சிறந்த காமெடியை வழங்க அய்யாவை விட்டால் நமக்குதான் ஒரு நாதியுண்டா?

நன்றி chandanaar.blogspot