Saturday, January 8, 2011

ஹலோ ஒரு (ரசிக) கிறுக்க ன் பேசுறேன் - 3


apsaravanan
பகுதி 3

என்னடா "தளபதி" இவ்வளவு பெரிய ஏமாற்றத்தை தந்திடுச்சென்னு நினைச்சப்ப, நண்பர்கள் வற்புறுத்தல் காரணமாக "குணா" பார்க்க போனேன், எப்படியா இருந்தாலும் நம்மாளுதானே இசை. படம் என்னவோ பண்ணுச்சு. ஆனா அதை வெளில சொல்லிக்கலை. இந்த சமயத்துல ரஜினி-ன் அடுத்த படமான "அண்ணாமலை" இளையராஜா இல்லாம எடுக்கபட்டுச்சுன்னு, கேள்வி பட்டு ரொம்பவே நொந்து போயிட்டேன். இந்த முறை ரஜினி பிரிஞ்சதை ஏத்துக்க முடியலை, இந்த படத்தையே பார்க்க கூடாதுன்னு முடிவு செஞ்சேன். அது கூட இளையராஜவிற்காக இல்லைன்னு நான் நம்பினேன். ஏன்னா ரஜினியை அவரது நடிப்புக்காக எத்தனை பேரு ரசித்தார்கள் என்று தெரியாது. ஆனா ரஜினி நட்பிற்கு, தன்னை வளர்த்தவர்களுக்கு ஆதரவு தரக்கூடியவர் அப்படிங்குற குணத்தினாலேயே தான் எனக்கு ரஜினியை ரொம்ப பிடிச்சது. அப்படிப்பட்ட ரஜினி ராஜாவுடனான தனது நட்பை துண்டிச்சுக்கிட்டாரே அப்படின்னு நினச்சு மனசு ரொம்ப வெறுத்துடுச்சு அதனாலத்தான் அந்த படத்தை பார்க்க வேண்டாம்னு முடிவு செஞ்சேன். ஆனா அந்த படம் கூட பாலச்சந்தர் என்ற தனது குருவின் மேல் கொண்ட பக்தியினால பண்றார்னு நம்ப மனம் மறந்தது. அதாவது என்னையும் அறியாமல் ராஜாதான் என் மனசில் ஆழமா பதிஞ்சுட்டார். அப்படிங்கிறதை இந்த விஷயம் நன்கு உணர்த்தியது. சரி இனிமேல் நம் விருப்ப லிஸ்ட்-ல் ரஜினி இல்லை. அடுத்த வாரத்தில் இன்னொரு அடி, அதாவது பாலச்சந்தர் தயாரிக்கும் ஒரு படத்தை மணிரத்தினம் இயக்குவதாகவும் அதற்கு ராஜா இசை இல்லைன்னும் ஒரு செய்தி. என்னடா இது நமக்கு வந்த சோதனை பின்ன சின்ன வயசிலிருந்து முதலிடத்தில் இருந்த ரஜினியையே ஒதுக்கியாச்சு. இப்ப என்னடான்னா விருப்ப இயக்குனரையும் இழக்கணும் போல இருக்கே. அப்போ மணிரத்தினம் பல கல்லூரி மாணவர்களின் விருப்ப இயக்குனர். சாமி கும்பிடுரப்ப எல்லாம் இந்த செய்தி பொய்யா இருக்கணும்னு வேண்ட ஆரம்பிச்சேன். ஆனா நான் சாமியை சரியா கும்பிடலை போல, என் வேண்டுதல் பலிக்கல. அந்த படத்துக்கான விளம்பரம் வந்துச்சு, அதில் இசை ஏ.ஆர்.ரஹ்மான் அப்படின்னு போட்டிருந்துச்சு. நான் அதை பெருசா எடுத்துக்கல. ஏன்னா ராஜா பார்க்காத ஆளுங்களா..? நிச்சயம் ராஜா ஜெய்ப்பார் அப்படின்னு நான் ஆணித்தனமா நம்புனேன். படம் ரிலீஸ் ஆகி மக்கள் எல்லாம் அந்த படத்தின் பாடலகளை வெகுவாக பாராட்டி பேசிக் கொண்டிருந்தார்கள். எனக்கு ரொம்ப நெருக்கமான ஒரு நண்பன் கூட முதன் முதலாக சண்டை எல்லாம் போட்டேன். எல்லாரும் சொன்னார்கள் இதுல என்ன இருக்கு அன்றைக்கு எப்படி ராஜ பெரிய ஆளா ஆனாரோ அது மாதிரிதான் இதுவும் மேலும் ராஜாவும் சும்மா இல்லை அவரு நிறைய சாதனைகள் எல்லாம் பண்ணிட்டார்னு. மனம் நம்ப மறுத்துச்சு, கிட்டத்தட்ட இந்த கால கட்டத்துல தான் நான் முழு பைத்தியமானேன். அது எப்படி இவ்வளவு சாதனைகள் செஞ்ச ஒரு ஆளு ஒரு படத்துலையே கீழே போயிருவார்..? குமுதம் இதழில் "ரோஜா" படத்துக்கான விமர்சனத்துல இசை பற்றி குறிப்பிடும் போது "பாடல்களில் ஒரு புது தொனி தெரிகிறது. (இளையராஜாவிற்கு ஒரு சக்களத்தி)" அப்படின்னு போட்டிருந்தார்கள். ராஜாவிற்கு போட்டியா..? ஹ ஹா..எத்தனை பேரை பார்த்தவர் ராஜா..? டி.ராஜேந்தர்,சங்கர்-கணேஷ்,பாலபாரதி,தேவா,ரவீந்திரன்,தேவேந்திரன் இப்படி பல பேரை சம காலத்தில் சர்வ சாதரணமாக ஓரம் கட்டியவர். அந்த பட்டியலில் இந்த ஏ.ஆர்.ரஹ்மானும் ஒன்று. ராஜாவை பற்றிய விஷயங்களை தேடி தேடி படிக்க ஆரம்பித்தேன். மணிரத்னத்தின் பெயரும் விருப்ப லிஸ்டிலிருந்து தூக்கியாச்சு. "புதிய முகம்" என்று ஒரு படம் அதிலும் பாடல்கள் சூப்பர் ஹிட் அப்படின்னு சொன்னாங்க. அந்த படத்தை பார்த்தேன், அந்த படத்திலும் ஒரு குறை தெரிந்தது. சொல்ல மறந்துட்டனே "ரோஜா" படம் பார்த்த பொழுது எல்லோரும் படத்தையும் இசையையும் சொன்னபொழுது என் மனதில் அந்த படத்தை பற்றி ஆஹா என்றோ ஓஹோ என்றோ தோன்றவில்லை. சொல்லப் போனால் அந்த படத்தின் பின்னணி இசையில் ஒரு குறையே தென்பட்டது. இதை சொன்ன போது நண்பர்கள் எல்லோரும் எனக்கு முழு பைத்தியம் பிடித்ததை உறுதி செய்தார்கள்.
சரி இனிமே நாம என்ன சொன்னாலும் கேட்கவா போறாங்க. இந்த சமயத்துல கூட எனக்கு உதவியது ராஜாவின் பாடல் தான். 'எது வந்தால் என்ன எது போனால் என்ன என்றும் மாறாது வானம் தான்..". வான் போல இளையராஜா இருக்க என்ன கவலை. கிட்டத்தட்ட இந்த சமயத்தில் தான் கமலின் "தேவர் மகன்" வெளிவந்தது. எல்லா பாடலும் அருமையா இருந்துச்சு. ஆனா பாருங்க எல்லா ஊடகங்களிலும் விமர்சனங்களிலும் ரொம்ப அருமை பெருமையா எழுதாமல் இதெல்லாம் இளையராஜாவின் கடமை அதாவது இளையராஜாவிற்கு சாதரண விஷயம் என்பது போல. அடுத்து "ஜென்டில் மேன்","காதலன்" அப்படின்னு ஹிட் கொடுத்து ஏ.ஆர்.ரஹ்மான் மேலே ஏற ஆரம்பித்தார். ஆனால் அந்த காலத்திலும் இளையராஜா கொஞ்சம் கூட தரம் குறையாமல் பாடல்களை கொடுத்தார் உதாரணத்திற்கு சிலவை இங்கே "ராஜகுமாரன்","வள்ளி","சிறைச்சாலை","மகாநதி","பிரியங்கா","மகளிர் மட்டும்" இப்படி பல படங்கள் இவற்றில் இளையராஜாவின் பங்களிப்பு எல்லாம் பெரிய அளவில் பேச படவில்லை, ராஜாவின் ரசிகர்களை தவிர. அல்லது இவை அந்த பாடல்களுக்குரிய தகுதியான இடத்தை பெறவில்லை. இவை எல்லாம் எப்படி நிகழ்ந்தது..? ராஜாவை எல்லாரும் ஒதுக்கிய பொழுது என்னை போன்ற (முழு அல்லது அரை) பைத்தியங்களை எல்லாம் ஒரு தனி தீவில் விட்டுவிட்டு மற்றவர்கள் எல்லாம் சென்று விட்டதை போலவே நான் உணர்ந்தேன். இதன் பிறகு ராஜா எவ்வளவோ ரொம்ப ரொம்ப சாதரண படங்கள் பண்ணி இருக்கிறார், சில படங்கள் ரிலீஸ் ஆகமலே இருந்திருக்கின்றன (பரணி,பூஞ்சோலை,காதல் சாதி இன்னும் பல)
ஆனால் எந்த படமானாலும் அந்த படத்தின் ஆடியோ கேசட் அல்லது சி.டி. வாங்குவதை ஒரு கடமையாகவே செய்ய ஆரம்பித்தேன். இன்னும் ஞாபகம் இருக்கிறது அன்று "தேவதை" படத்தின் ஆடியோ ரிலீஸ் என்று. சாப்பிட வைத்திருந்த காசில் ஆடியோ கேசட் வாங்கிவிட்டு கிட்டத்தட்ட நான்கு கிலோமீட்டர் நடந்தே நான் தங்கி இருந்த இடத்திற்கு சென்றேன். இதை நான் பெருமையாக இப்பொழுது கூட நினைத்து பார்க்க முடியவில்லை. மாறாக இது எல்லாம் அதி அற்புதமான இசையை வழங்கிய ஒரு மகா கலைஞனுக்கு செய்யும் ஒரு கடமையாகவே பார்த்தேன், பார்க்கிறேன். மேற்சொன்ன அந்த படத்தின் பாடல்களிலும் நான் "இளமை ஊஞ்சலாடுகிறது" -வில் பார்த்த ராஜா தெரிகிறார். எல்லாரும் சொன்னாங்க ராஜா ஹிட் டைரக்டர்களின் படத்திற்கு இசை அமைப்பதில்லை, அவர் முன்னாடி பண்ண மாதிரி அவர் இசை அமைச்சாலே படங்கள் ஓடணும்னு எதிர்பார்க்க முடியாது, அவரால் இளைய தலைமுறையினருக்கு ஏற்ற மாதிரி இசை அமைப்பதில்லை, அவருக்கு தலைகனம் அதிகம், இயக்குனர்கள் சொல்வதை கேட்பதில்லை தனக்கு தோன்றியவற்றை தான் இசை அமைக்கிறார், இப்படி பல குற்றச்சாட்டுகள். நான் எதையும் நம்புவதில்லை, சொல்லப்போனால் எல்லாவற்றிற்கும் (ஒரு வெறியனா) என்னிடத்தில் நியாயமான பதில்கள் இருக்கு. ஒரு விஷயம் ராஜா 90 களுக்கு பிறகு நல்ல பாடல்களை தருவதில்லை என்று சொல்பவர்களுக்காக ஒரு லிஸ்ட்..
பூமணி, ஒரு ஊர்ல ஒரு ராஜ குமாரி,கட்டுமரக்காரன்,பூந்தோட்டம்,அவதாரம்,வீட்ல விசேஷங்க, காக்கை சிறகினிலே,இவன்,HOUSEFULL,காதல் கவிதை,என்னருகே நீ இருந்தால், சக்கரை தேவன்,வியட்நாம் காலனி,பிரியங்கா,ஜூலி கணபதி,காத்திருக்க நேரமில்லை,காதல் சாதி(வெளியாகவில்லை இதுவரை)
இந்த லிஸ்ட் இன்னும் பெரியது, இந்த படங்களின் பாடல்களை கேளுங்கள் கேட்டுவிட்டு இந்த பாடல்கள் ஏன் அவை வெளிவந்த காலகட்டத்தில் பெரிய அளவில் பேசப்படாமல் போனது என்பதற்கு காரணம் சொல்லுங்கள். பிறகு சொல்கிறேன் இளையராஜா ஏன் ஹிட் இயக்குனர்களின் படங்களுக்கு இசை அமைப்பதில்லை என்றும், ஏன் தனக்கு தோன்றியவற்றை மட்டும் இசை அமைக்கிறார் என்றும். இதோ இன்றைக்கு இந்த அளவு வந்தபிறகும் கூட இளையராஜாவை அந்த இடத்திலிருந்து இறக்க மனசு வரவில்லை, எனக்கு தெரிந்து இறக்கும் வரை இப்படியேதான் இருப்பேன். இதை பிடிவாதம் என்று ஒத்துக்கொள்ள மாட்டேன். ஏன்னா இன்றைய பழசி ராஜா வரை ராஜாவின் பாடல்களை என்னால் அன்று எப்படி "முரட்டு காளையை" ரசித்தேனோ அதே முழு மனதுடன் ரசிக்க முடிகிறது.
நான் அடித்து சொல்றேன் வருங்காலங்களில் இளையராஜாவால் இன்னொரு "மௌன ராகம்","சிந்து பைரவி","முதல் மரியாதை" தர முடியும். இதற்கு அவருக்கு எல்லாம் வல்ல அந்த இறைவன் நிச்சயம் உதவுவான். இளையராஜாவை இன்று மதிக்காமல் அல்லது அவரது இசையை உதாசீனம் செய்பவர்களுக்கு ஒரு வேண்டுகோள், ராஜா ஒரு இசை பெருங் கடல் அதை நீங்கள் போற்றி புகழ வேண்டாம் எங்களைப் போல், ஆனால் குறைந்த பட்சம் குறை சொல்லாமலாவது இருக்கலாமே. இதை நீங்கள் ராஜாவுக்கு செய்யும் மரியாதையாக கூட நினைக்கவேண்டாம், இசைக்கு செய்யும் மரியாதையாக நினையுங்கள். இசை வேறுபாடுகளை களைய கூடியது, இங்கு வேண்டாமே விரோதம். இதை சொன்னால் என்னை கிறுக்கன் என்கிறார்கள்.

நன்றி: எண்ணங்கள் சரவணன்

ஹலோ ஒரு (ரசிக) கிறுக்க ன் பேசுறேன் - 2



apsaravanan
பகுதி 2

கால்வாசி கிறுக்கனா மாறினாலும் அந்த தலைவர் (ரஜினி) வெறி மனதை தாண்ட மறுத்தது. கிராமமும் அல்லாத நகரமும் அல்லாத ஒரு இடத்தில் சின்ன வயதில் எந்த சாயமும், அதாவது எந்த ஒரு தமிழ் நடிகரின் ஆதரவாளனாக இல்லாமல் வளருவது என்பது கொஞ்சம் கஷ்டமும் கூட. வளர்ந்து நமக்கு விவரம் தெரிந்த பிறகு வண்ணமில்லாமல் தோன்றலாம் ஆனால் எதையும் தெளிவாக புரிந்து கொள்ள முடியாத அந்த சிறு வயதில் ஒரு வண்ணம் அவசியம் முன்னமே சொன்னது போல மற்றவர்களோடு சேர்ந்து விளையாடுவதற்காகவாது அது தேவை பட்டது.
கழுகு என்று ஒரு படம், ஏற்கனவே கூட படிக்கிற பசங்க எல்லாம் பாத்துட்டு "பயமா இருக்குதுன்னு" சொல்லி இருந்தாலும் தலைவருக்காக பார்க்க கிளம்பினேன். படத்தை முழுசா பர்ர்த்ததை விட, கை விரல்களுக்கு நடுவில் பார்த்தது தான் அதிகம். அவ்வளவு பயமா இருந்தது அதுக்கு காரணம் இளையராஜாவின் பின்னணி இசை என்பதை காலம் தான் சொல்லியது. சங்கிலி முருகன் ஒரு மந்திரவாதியாக நடித்திருப்பார் அவர் முகம் கண்களை விட அந்த காங்கோ வாத்திய கருவியின் பீட்டு நிறைய அதிர்வை தந்தது. கிட்டத்தட்ட
அதே கால கட்டத்தில் வந்த "குரு" கமல் நடித்த அந்த படம் இலங்கை வானொலியில் அடிக்கடி அந்த "ஆடுங்கள் பாடுங்கள்" பாடலை போட்டு கலக்கி கொண்டிருந்தார்கள். இருந்தாலும் தலைவர் விதி அந்த படத்திற்கு போக அனுமதிக்க வில்லை. ஆனால் வீட்டிலுள்ளவர்களால் அந்த படத்திற்கும் வலு கட்டாயமாக அழைத்து செல்லப்பட்டேன். அந்த படத்தில் கமல் குருவாய் தோன்றும் பொழுதெல்லாம் எழுப்பப்படும் இசை அப்படியே நாமளும் குதிரையில் போனால் எப்படி இருக்குமோ அப்படி இருந்துச்சு. அட என்னடா இப்படி ஒரு இசையை கமல் படத்தில் போட்டுட்டாரே இந்த ஆளு. அப்படின்னு நினைக்கும் பொழுது "தனிக்காட்டு ராஜா" வந்தது எல்லா பாட்டும் சும்மா அப்படி இருந்தது. அப்ப கூட எனக்கு இதெல்லாம் இளையராஜாவிற்கு சாதாரணம் என்பதை நம்ப மறுத்தேன்.

அப்பொழுதெல்லாம் இளையராஜாவின் பாட்டுக்கள் ஹிட் என்பது எழுதப்படாத ஒரு விதி. இளையராஜா ஒரு பேட்டியில் சொன்னதைபோல "அதை கேட்க வேண்டியது தமிழக மக்களின் தலை விதியாக " மாறிப் போயிருந்தது. "அழகே உன்னை ஆராதிக்கிறேன்" , "ப்ரியா" என படங்கள் வரிசை யாக ஹிட் அடித்த நேரம். கொஞ்சம் கொஞ்ச மாக மனசு இளையராஜாவை நோக்கி நகர்ந்தது. சரி தலைவரையும் விட வேணாம் ராஜாவையும் விட வேணாம் ஏன்னா தலைவர் படங்கள் எல்லாவற்றிற்குமே ராஜாதானே இசை. அதனால் ரஜினி பாதி ராஜா பாதின்னு வச்சுக்கலாம்னு முடிவு பண்ணியது மனசு. அப்பவெல்லாம் தலைவர் படத்திலேயே பிடிக்காத படம் "ராணுவ வீரன்" ஆனா அதை வெளிப்படையா சொல்ல முடியலை அல்லது தெரியலை. ஆனா அந்த படத்தில் ஒரு குறை தென் பட்டது. அது ராஜாவின் இசை என்பதை வளர்ந்த பிறகே தெரிந்து கொண்டேன். இந்த காலகட்டத்துக்கு அப்புறம் எனக்கு நினைவில் இருப்பது "புன்னகை மன்னன்" படத்தின் பாடல்கள் வெளியான புதிதில் அந்த படத்தின் கேசட்டை நண்பர் ஒருவரிடமிருந்து அவ்வப்பொழுது இரவல் வாங்கி கேட்பது வழக்கம். அதில் போட்டிருக்கும் இளையராஜா படத்துடன் பேசி இருக்கிறேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். எப்படி இந்த இசை இவருக்கு சாத்தியமானது. ஒரு பக்கம் "சலங்கை ஒலி" மாதிரியான சாஸ்திரிய இசை, "முதல் மரியாதை", "மண்வாசனை" போன்ற கிராமத்து பாடல்கள், இன்னொரு பக்கம் "புன்னகை மன்னன்" மாதிரியான மேற்கத்திய இசை. அப்புறம் இசையில் வேற என்னதான் இருக்குது...? எல்லாமே என் வசம் இப்பவாது என்னை முழுமையா நம்புறியா இல்லையா என்றது "புன்னகை மன்னன்" கேசட்டின் மேலிருந்த இளையராஜா. விடுவோமோ..? ஹும் நாங்க எல்லாம் கொள்கை குலவிளக்கு. எங்க கிட்டயேவா. இந்த படங்களில் சம்மந்த பட்டிருந்தவர்களும் என்னுடைய விருப்ப லிஸ்ட்-ல் பிடித்த இயக்குனர்களாக பாரதிராஜாவும்,வைரமுத்துவும்,மணிவண்ணனும் இருந்தார்கள். திடீரென்று ஒரு குமுதம் இதழில் வைரமுத்து இனிமே இளையராஜா கூட பணிபுரிய மாட்டார் என்ற செய்தி படித்து. அட இது என்னடா என்று நினைத்து, வைரமுத்துவை என்னுடைய விருப்ப லிஸ்ட்-இலிருந்து தூக்கி விட்டேன். அப்புறம் பார்த்தா பாரதிராஜாவும் போறார்னு போட்டிருந்துச்சு. ஆனால் அவரை அவ்வளவு சீக்கிரம் தூக்க முடியவில்ல அத்துடன் அப்பொழுதுதான் "வேதம் புதிது" பார்த்தேன். ஆனா இவ்வளவு திறமையான படத்தில் இளையராஜாவிற்கு இடமில்லையே அப்படி என்றால் ....? என்று யோசித்து கொண்டிருக்கும் போதே வந்துச்சு "மௌன ராகம்" இளையராஜா அனேகமாக பாரதிராஜாவின் மேலிருந்த கோபத்திலேயே இந்த மாதிரியான படங்களுக்கு ட்யூன் போட்டிருக்க வேண்டும், இதை நான் எப்படி சொல்கிறேன் என்றால், இளையராஜா திரை துறையின் தனிக்காட்டு ராஜாவாக வலம் வரத்துவங்கிய பொழுதில் வந்தது "ஒரு தலை ராகம்" எல்லா பாடல்களும் ஹிட், ராஜாவிற்கு மாற்றா டி.ராஜேந்தர் என்ற விமர்சனம் வந்ததாம், அப்பொழுது தான் அவர் "பயணங்கள் முடிவதில்லை" கொடுத்ததாக ஒரு பத்திரிகையில் படித்தேன். எப்படியோ "மௌன ராகம்", "இதயகோவில்", என வரிசையா ஹிட். சரி பாரதிராஜா போனால் என்ன அதான் மணிரத்னம் இருக்காரே, அவரது புதுமையும் மிகவும் பிடித்திருந்தது. வந்தது "நாயகன்" என் மனதில் ரஜினி பாதி ராஜா பாதி என்ற நிலைமை மாறி ராஜா முக்கால், ரஜினி கால் என்ற நிலைமை உருவானது. ரஜினியும் ராஜாவை விட்டுவிட்டு "மனிதன்", "ராஜா சின்ன ரோஜா" போன்ற படங்களை பண்ணினார். ஆனால் அப்பொழுதெல்லாம் ரஜினியை சுத்தமா வெறுக்க முடியவில்லை. "அக்னி நட்சத்திரம்" வந்தது யாரவது அந்த படத்தை பத்தி பேசினாலே அவுங்கதான் எனக்கு நண்பர்கள். "ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா.." பாடலின் படமாக்கல் மணிரத்தினம் மீதான மரியாதையை கூட்டி போயிருந்தது. "பணக்காரன்","மன்னன்" என ரஜினி மீண்டும் இளையராஜாவிற்கு மாறி இருந்ததால் ரஜினியையும் மெய்ண்டைன் பண்ணுவது சுலபமாக இருந்தது. இந்த கட்டத்தில் நடந்த மிகப் பெரிய மாற்றம் தான் நிரந்தரமாக இருக்கப் போகிறது என்று நான் அன்று அறியவில்லை.
மிகவும் பிடித்த இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் தலைவர் நடிக்கும் "தளபதி" என்னை அதை பற்றி மட்டுமே சிந்திக்க வைத்தது. சாப்பிடும் போதும் தூங்கும் போதும் "தளபதி" தான். அந்த தீபாவளிக்கு "தளபதி" யுடன் கமலின் "குணா" மற்றும் பாரதிராஜாவின் "நாடோடி தென்றல்" போன்ற படங்கள் ரிலீஸ் செய்யப்பட்டன. வழக்கம் போல் "தளபதி" பார்த்தாச்சு ஆனால் ரொம்ப புடிச்ச இயக்குனர் இயக்கி இருந்தும், ரொம்ப புடிச்ச நடிகர் நடித்திருந்தும், அந்த படம் பெரிய அளவு தாக்கத்தை என் மனதில் உண்டு பண்ணவில்லை மாறாக பெரிய ஏமாற்றத்தை தந்தது. ஆனால் ராஜாவின் இசை மட்டும் திருப்தியை இருந்தது. திருப்தின்னா என்ன எதிர்பார்ப்பை பூர்த்தியாவது, "தளபதி" படத்தில் என்னை போன்ற ரசிகர்களுக்கு எல்லா துறையிலும் இருந்தது ஆனால் இசையை தவிர வேறு எதுவும் மனசை ஆக்கிரமிக்கவில்லை. மனசு மீண்டும் சொல்லியது ராஜா யாருடன் இணைந்தாலும் அங்குதான் வெற்றி இருக்கும்னு. ஒருவரை ரசிக்க வெற்றியும் தேவைன்னு நினைத்திருந்த காலகட்டம் அது. ஏன்னா கல்லூரி காலம் அல்லவா..? நிச்சயம் முழு பைத்தியம் (ரசிகன்) ஆன கதை அடுத்த பகுதியில் சொல்லப்படும்.

நன்றி: எண்ணங்கள் சரவணன்

ஹலோ ஒரு (ரசிக) கிறுக்க ன் பேசுறேன்



apsaravanan
பகுதி 1
"டேய் நாளைக்கு நம்ம ஊரு எக்ஸ்ல் தியட்டர்ல முரட்டுகாளை படம்டா" -- நண்பன் சொல்லியவுடன் தூக்கமே வரவில்லை. படத்தின் போஸ்டர் வைத்தே பல கதைகளை மனதில் நினைத்தவாறே தூங்கி போனேன். மறு நாள் காலைல போயி பார்த்தால், ரஜினி மன்னிக்கணும் தலைவர் கம்பீரமா நிக்கும் போஸ்டரும் அதை சுற்றி கலர் கலர் பேப்பர்களும் ஒட்டப்பட்டிருந்தன. இதற்கு முன் வேறு எந்த படம் வரும் போதும் அப்படி ஒட்டி நான் பார்த்ததில்லை. அப்பவெல்லாம் ரிக்கார்ட் பிளேயர் தான் பாட்டு போடுவதற்கு சவுண்ட் சர்வீஸ் அதைத்தான் பயன் படுத்தும். பென்ச் டிக்கெட் 50 காசுகள், உட்கார குஷன் வைத்த சீட் 1.50 , சாய்வதற்கும் உட்காருவதற்கும் குஷன் வைத்தது 2.00 ரூபாய். மிடில் கிளாஸ்-ல அதை நிரூபிக்கும் விதமாக 1.50 க்கு தான் நாங்கள் எல்லாம் அழைத்து செல்ல படுவோம். ஆனால் எனக்கோ 50 காசு பெஞ்சில் அமர்ந்து கொண்டு விசிலடிக்கும் நண்பர்களை நோக்கியே மனசு இருந்தது, அவர்கள் எல்லாம் தனியாக வந்து படம் பார்ப்பார்கள். எங்கள் வீட்டில் அதெல்லாம் பற்றி கனவு கூட காண முடியாது. படம் ஆரம்பிக்கிறது, "எவண்டா இந்த காளையை அடக்குவான்.." அப்படின்னு சொன்னதுமே, கேமரா வானம் பார்க்கிறது, இப்ப மாதிரி கொஞ்சம் விஷயம் தெரிஞ்சால் ஏன் கேமரா மேனின் அங்கிள் மாறி போச்சுன்னு யோசித்திருப்பேன், அப்ப அதெல்லாம் முக்கியமாய் தெரியலை சீக்கிரம் தலைவரை காட்டுங்கப்பா அப்படின்னு மனசு துடிக்க ஆரம்பித்தது, தலைவர் சும்மா அப்படி துள்ளி வர்றார் எனக்கு அப்படியே காத்துல பறக்குற மாதிரி இருந்துச்சு. ஆனா இதெல்லாம் மனசுக்குள்ள தான் வெளில இதெல்லாம் காட்ட முடியாது காட்டுனா அவ்வளவுதான் "இனிமே சினிமாவே கிடையாதுன்னு" ஒரு கட்டளை பிறப்பிக்கப்படும். அதுனால எல்லாத்தையும் மனசுக்குள்ள அடக்கிகிட்டு படம் பார்த்தேன், அதுல வந்த பாட்டுக்கள் மட்டும் மனசை என்னவோ பண்ணுச்சு. ஆனா அவை எல்லாம் தலைவருக்காகதான்னு மனசு நினச்சுசு. அதுக்கு பின்னாடி இளையராஜாங்குற பெரிய இசை சிங்கம் இருக்குன்னு தெரியலை. ஒரு நாள் அந்த படத்தை பத்தி பேசுறப்ப ஒரு நண்பன் சொன்னான் (ரெண்டு வயசு பெரியவன்னு நினைக்கிறேன்) "இந்த படத்துக்கு மட்டும் M.S.V மியூசிக் போட்டிருந்தா படம் எங்கேயோ போயி இருக்கும், இந்த இளையராஜா சாவு மேளம் அடிச்சு படத்தையே கெடுத்து வச்சிருக்கார்." அப்படின்னு. அப்ப அந்த நபர் இளையராஜாவை சாதி சார்ந்து பேசுறார்ன்னு தெரியாம போச்சு பத்து பதினைந்து வருடங்களுக்கு பிறகுதான் அதை தெரிந்து கொண்டேன். ஆனா அப்ப அந்த நண்பன் சொன்னதை ஆமோதிக்கும் கூட்டத்தில் நானும் ஒருத்தனாய் மண்டை ஆட்டினேன். ஏன்னா அப்படி செயலைன்னா நாளைக்கு பின்ன விளையாட்டுல சேத்துக்க மாட்டங்களே, ஆனா மனசு மட்டும் சொன்னுச்சு நல்லாத்தானே இருந்துச்சு பாட்டெல்லாம். அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சு அதே எக்சல் தியட்டர்ல "சகல கலா வல்லவன்" அப்படிங்குற படம் கமல் நடிச்சது வந்தது, எனக்கென்னவோ படத்துக்கு போகவே பிடிக்கல, பின்ன ஒரு ரஜினி ரசிகன் எப்படி கமல் படம் பார்க்குறது..? ஆனா அந்த படத்துல வர்ற "இளமை இதோ இதோ .." பாடல் மட்டும் மனசுல பதிஞ்சு போச்சு. அதுக்காக இந்த படத்தை பார்க்கலாம்னு தீர்மானிச்சேன், மத்தபடி நிச்சயம் கமலுக்காக இல்லைன்னு தீர்மானமா என் மனசுக்குள் சொல்லிக்கிட்டேன். அப்பவும் அந்த நண்பன் "இதுல வர்ற முக்கியமான டிரம்ஸ் இசை எல்லாம் M.S.V ஐடியாவின் படியே போட்டது.." அப்படின்னு சொன்னார். அதுக்கும் தலையசைப்பு தான் வேற வழி. ஒரு சமயம் விளையாடுறப்ப அந்த நண்பனை எதிர்த்து பேசும் படி ஆகி விட்டது, ஆனால் அதுக்கு நான் எதிர்பார்த்தமாதிரி பெரிய ரீ ஆக்ஷன் எல்லாம் இல்லை மற்றவர்கள் மத்தியில். கொஞ்சம் தைரியம் வந்துச்சுன்னே சொல்லலாம். அப்புறம் அது மாதிரியான நிறைய படங்களுக்கு அவரும் அவரை சார்ந்தவர்களும் இளையராஜாவின் இசையை குறை சொல்லாமல் அவை M.S.V ஐடியாவை வைத்தே ராஜா இசை அமைப்பதாக சொல்லி வந்தார்கள். அந்த நண்பர் அப்படி பேச பேச மனசுக்குள் ராஜாவின் இசையை இன்னும் நெருங்கி பார்க்கவே தோன்றியது. ஆனால் அதை எல்லாம் விட பெரிய ஆளாக இருந்தது ரஜினி தானே அதனால் அவற்றை புறம் தள்ளி வைத்து விட்டேன். காலங்கள் சென்றன, "பயணங்கள் முடிவதில்லை" அப்படின்னு ஒரு படம், அப்பவெல்லாம் "சண்டை பயிற்சி" அப்படின்னு டைட்டில் கார்டு வரலைன்னலே அந்த படம் ஒரு அறுவை (அதாவது இப்ப குப்பைன்னு சொல்றோமே அது மாதிரி) அப்படின்னு சொல்லி முத்திரை குத்தி அந்த படத்தை தலைவிதியேன்னு பார்க்குறது. "பயணங்கள் முடிவதில்லை" படம் ஆரம்பித்து அதில் வரும் "இளையநிலா பொழிகிறது" அப்படின்னு பாடல் ஓடுது, மனசு என்னையும் அறியாமல் ஒரு வேளை இளையராஜா நிஜமாவே பெரிய ஆளோன்னு தோனுச்சு. "சண்டை பயிற்சி" டைட்டில் கார்டில் வராமலேயே ஒரு நல்ல படம் (!?) பார்த்தேன் என்றால் அது "பயணங்கள் முடிவதில்லை" மட்டும்தான். அதுக்கு காரணம் அந்த படத்தில் வரும் பாட்டுகளே என்பது அப்போதைய என் எண்ணம். அது வரையில் அந்த நண்பருக்காக இளையராஜா பெரிய ஆளுன்னு நினைக்கிற கோணம் மாறி நிஜமாவே பெரிய ஆளுதானோ அப்படின்னு நினைக்க தோன்றியது. ஆனாலும் மனசு அவ்வளவு சீக்கிரம் ரஜினியை கீழே தள்ளுவதை ஏற்கவில்லை, ஒரு வேளை அப்பொழுதெல்லாம் ஒரு நடிகனுக்கு கிடைத்த மரியாதை ஒரு தொழில்நுட்ப கலைஞனுக்கு கிடைப்பதில்லை அதுவும் கூட ஒரு காரணமா இருக்கலாம். சுற்றி இருப்பவர்கள் ஒன்றை சொல்லும் போது அந்த வயதில் அதை உறுதிபட நம்பத்தான் தோன்றும். அதை ஆராய தோன்றாது. அப்புறம் "நான் பாடும் பாடல்" என்று ஒரு படம் முதன் முதலாக ஒரு இசை அமைப்பாளரின் பெயரை பெரிதாக போட்டு ஒட்டிய போஸ்டர்ஸ் கண்டு சற்று அதிர்ந்தே போனேன். "இளையராஜாவின் இசையில்" என்று போட்டிருந்தார்கள், அந்த படத்தின் பாடலான "பாடவா உன் பாடலை.." பாடல் இலங்கை வானொலியில் ஒலித்துக் கொண்டே இருந்தது. ஊர்களில் நடக்கும் கல்யாணா வீடுகளில் எல்லாம் "விநாயகனே வினை தீர்ப்பவனே .." பாடலுக்கு பிறகு "பாடவா உன் பாடலை .." தான். இப்போ மனசுக்குள் ஒரு போராட்டமே வந்துவிட்டது என்னடா இது ஒரு இசை அமைப்பாளரை போயி ஒரு நடிகருடன் ஒப்பிடுவதா. அப்படின்னு. அதனாலேயே இளையராஜாவை அவ்வளவு சீக்கிரம் மனம் அங்கீகரிக்க வில்லை. "உதய கீதம்" ன்னு ஒரு படம் "சங்கீத மேகம்.." என்றொரு பாடல், ஊரில் அப்பொழுதான் அங்கொன்றும் இங்கொன்றுமாக இசை பதிவகங்கள் (மியுசிக்கல்ஸ்) ஆரம்பித்த தருணம். எங்கு போனாலும் இந்த பாட்டு தான் பதிந்து கொண்டிருப்பார்கள். அப்பவெல்லாம் செருப்பு போடாமல் தான் பள்ளிக்கூடம் செல்வது, அப்பத்தானே வெளையாடும் போது வேகமா ஓட முடியும், செருப்பை எங்கே கழற்றி வைக்கிரதுங்குற கவலை இல்லாமல் இருக்கலாமே அதுக்காகத்தான். அப்படி போகும் போது நிழல் எங்காவது கிடைத்தால் சற்றே ஒதுங்கி இருந்துவிட்டு மீண்டும் வெயிலில் நடப்பது. அப்படி ஒதுங்குகிற இடமும் இசை பதிவகங்களா இருந்தா கூட சில மணித்துளிகள் ஒதுங்கி இருந்துவிட்டு போவது வழக்கம். அப்படி ஒதுங்கும் போதெல்லாம் கேட்ட பாடல் இளையராஜவினுடயது என்பது அப்பொழுது அறியாவிட்டாலும் பிற்காலத்தில் அறிந்து கொண்டேன், ஆனால் அந்த பாடல்கள் மனசை அப்பவே ஆக்கிரமிக்க ஆரம்பித்து விட்டன. அவ்வாறு கேட்ட சில பாடல்கள்
"கேட்டேளா இங்கே அதை பார்த்தேளா இங்கே .." -- பத்ரகாளி
"கண்ணன் ஒரு கை குழந்தை.." -- பத்ரகாளி
"கீதா சங்கீதா..." -- அன்பே சங்கீதா
"சிறு பறவைகள் மலை முழுவதும்..." -- நிறம் மாறாத பூக்கள்
"கோவில் மணி ஓசை தனை .." -- கிழக்கே போகும் ரயில்
"சிந்து நதிக்கரை ஓரம்..." --- நல்லதொரு குடும்பம்
கிட்டத்தட்ட இந்த தருணத்தில் எல்லாம் நான் கால்வாசி கிறுக்கனாய் (ரசிகன்) போயிருந்தேன் என்றுதான் எனக்கு இப்பொழுது தோன்றுகிறது. அடுத்த பகுதியில் எப்பொழுது எப்படி அரை கிறுக்கனாய் ஆகியிருந்தேன் என்று சொல்கிறேன்.

நன்றி: எண்ணங்கள் சரவணன்

இளையராஜா: காலத்தில் கரையாத கலைஞன்



ஜி. ஆர். சுரேந்தர்நாத்


2010, மே மாதம். பல வருடங்கள் கழித்து, குடும்பத்தினர் இல்லாமல் நண்பர்கள் மட்டும் கேரளா டூர் சென்றிருந்தோம். குமுளி, சித்தாரா ஹோட்டல் அறையில் அந்த இரவு இளையராஜாவின் இசையால் நிரம்பி வழிந்தது. நான் மொபைலில் ஒவ்வொரு இளையராஜா பாடலாக ஒலிக்க விட… நிகழ்காலம் மௌள மௌள மறைந்து, எங்கள் கண் முன்பு காலடியில் உதிர… இறந்த காலம் உயிர் பெற்று எங்களைப் பிரியத்துடன் தழுவிக்கொண்டது. ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு பாடல் சார்ந்தும் சொல்வதற்கு ஏதேனும் அந்தரங்கமான நினைவுகள் இருந்தன.
இளையராஜாவின் பாடல்கள், வெறும் திரையிசைப் பாடல்கள் மட்டுமே அல்ல. அவைக ஏறத்தாழ இருபது ஆண்டுகள், தமிழர்களின் வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருந்தது. ஒரு மகத்தான அந்தரங்க நண்பனாக இருந்தது. அது அவனுக்காக காதலித்தது. அவனுக்காக, குமுறியது. தாயை மறந்த கணங்களை உக்கிரத்துடன் நினைவூட்டியது. சக மனிதர்களால் கைவிடப்பட்ட தருணங்களில் இளையராஜாவின் இசையே அவனைத் தாங்கிக்கொண்டது(அதனால்தான் இளையராஜாவைப் பற்றி ஒரு சிறு விமர்சனம் வந்தால் கூட, தன் தாயைப் பழித்தது போல் பலரும் பொங்கி எழுகின்றனர்.).
இளையராஜாவின் பாடல்கள் உருவாக்கிய கவித்துவமான மனநிலையுடன் அன்றிரவு நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தோம். ஒரு கட்டத்தில் அனைவரும் தூங்கிவிட… என்னால் மட்டும் இளையராஜாவிலிருந்து வெளியே வரமுடியவில்லை. தொடர்ந்து பாடல் கேட்கவேண்டும் போல் இருந்தது.
நண்பர்களின் தூக்கத்தை தொந்தரவு செய்யவேண்டாம் என்று மொபைலுடன் வெளியே வந்தேன். இரவு இரண்டு மணி போல இருக்கும். அந்நேரத்திலும் குமுளி பஸ் ஸ்டாண்டில் ஆட்கள் நடமாட்டம் தென்பட்டது. நான் மெதுவாக தேக்கடி ஏரிக்கரையை நோக்கி நடந்தேன். நடை தளர… ஒரு மூடிக்கிடந்த கடையின் முன்பு படுத்துக்கொண்டேன். மெல்லிய குளிர்… அமைதியான இரவு... தூரத்தில் நிலவொளியில் சலசலக்கும் மரங்கள்… மீண்டும் மொபைலில் இளையராஜாவின் பாடல்களைக் கேட்க ஆரம்பித்தேன்.
முதலில் ~‘நானே ராஜா… நானே மந்திரி’ படத்தில் இடம் பெற்ற ~~மயங்கினேன்… சொல்லத் தயங்கினேன்" பாடல். பாடல் முடிந்தபோதுதான் எதிர்க்கடையின் வாசலில் இருவர் அமர்ந்திருந்ததைக் கவனித்தேன். என்னைப் பார்த்தபடி ஏதோ பேசிக்கொண்டிருந்தனர். நான் பொருட்படுத்தாமல் அடுத்து ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’ படத்தில் இடம் பெற்ற, ~~என்னுள்ளில் எங்கோ… ஏங்கும் கீதம்…" என்ற பாடலுக்குள் நுழைந்தேன். அப்படியே அடுத்து… அடுத்து… என்று வரிசையாக இளையராஜா பாடல்களில் கரைந்துகொண்டேயிருந்தேன். இடம், காலம், இருப்பு… என்று அனைத்தையும் மறந்து இசையில் மூழ்கும் தருணங்கள் எல்லாம் இதுபோல் எப்போதாவதுதான் அரிதாக அமையும்.
திடீரென்று அருகில் நிழலாட நிமிர்ந்தேன். எதிரேயிருந்த இருவரும் இப்போது என்னருகில் நின்றுகொண்டிருந்தனர். எனக்கு சொரேலென்றது. முன் பின் தெரியாத ஊர். வழிப்பறிக் கொள்ளையாக இருக்குமோ என்று பயத்துடன் எழுந்து அமர்ந்தேன்.
அதில் ஒருவன், "ஸார்… டூரிஸ்ட்டா?" என்றான். உச்சரிப்பில் மலையாளம்.
"ஆமாம்…" என்று எழுந்தேன்.
"யாரு ஸாங்கு இதெல்லாம்… அடிபொலி…" என்ற பிறகுதான் அவர்கள் இருவரும் பாடல்களைக் கேட்டுக்கொண்டு அமர்ந்திருந்தனர் என்பது புரிந்தது. நான் அனைத்தும் இளையராஜாவின் பாடல்கள் என்று கூறினேன். ~~எல்லாப் பாட்டும் எங்கயோ கொண்டு போய்டுது சார்… இதெல்லாம் இளையராஜா பழைய தமிழ் பாட்டா சார்… நாங்க கேட்டதேயில்லை…’’ என்று பேச ஆரம்பித்தார்கள். நானும் ஆர்வத்துடன் உரையாட ஆரம்பித்தேன். இடையிடையே மிகவும் உற்சாகத்துடன் பாடல்களை ஒலிக்கவிட்டு அவர்களின் கருத்தைக் கேட்டேன். அப்படியே நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு அவர்கள் பிரிந்தபோது, மள்ள விடிய ஆரம்பித்திருந்தது.
அவர்கள் இருவருக்கும் கிட்டத்தட்ட இருபது வயதுதான் இருக்கும். இப்போதுதான் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கிறார்கள். இளையராஜா உச்சத்தில் இருந்த காலத்தில் அநேகமாக அவர்கள் பிறந்திருக்கமாட்டார்கள். மேலும் பொதுவாக மலையாளிகள் அவ்வளவு சீக்கிரம் ஒட்டிவிடமாட்டார்கள்(இந்த விஷயத்தில் அவர்கள் ஜெர்மானியர்கள் மாதிரி.). முதல் அறிமுகத்தில் எல்லாம் ஏறத்தாழ எதிரியிடம் பேசுவது போலத்தான் பேசுவார்கள். ஆனால் இளையராஜாவின் இசை அவர்களை உடனே என்னுடன் நெருங்கச் செய்தது, பல மணி நேரம் பேசச் செய்தது.
ஆம்… இளையராஜாவின் இசையின் அற்புதம் அதுதான். அது உங்கள் மனதை இளகச் செய்கிறது. நெகிழச் செய்கிறது. உங்கள் கர்வத்தை எல்லாம் மறக்கச் செய்கிறது.
இவ்வாண்டு சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருது இளையராஜாவிற்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. இளையராஜாவின் பாடல்கள் போல, இளையராஜாவின் பின்னணி இசையும் ஒரு தனி வரலாறு. அதிகம் விவாதிக்கப்படாத வரலாறு.
இளையராஜாவிற்கு முன்பு பின்னணி இசை என்பது, வசனங்களுக்கிடையேயான மௌனத்தை நிரப்பும் வெறும் வாத்தியங்களின் சத்தமாகவே இருந்தது. இளையராஜாவே காட்சிகளுக்கேற்றாற் போன்ற உயிரோட்டமான இசையை அளித்து, பின்னணி இசையை ஒரு மகத்தான கலை அனுபவமாக மாற்றிக் காட்டினார். எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் ஒரு கட்டுரையில், ‘இளையராஜாவின் பின்னணி இசையைத் தொகுத்து ஒரு ஆல்பமாக கொண்டுவரவேண்டும். என்று கூறியது இத்தருணத்தில் நினைவிற்கு வருகிறது.
வார்த்தைகளாலோ, காட்சிகளாலோ… ஏன் மௌனத்தாலோ கூட வெளிப்படுத்த முடியாத சில அபூர்வ கணங்கள் வாழ்க்கையில் உள்ளன. உதாரணத்திற்கு திரைப்படங்களில், கதாபாத்திரங்களின் கண்களில் காதல் உணர்வைக் கொண்டு வந்து காட்டினாலும், ஒரு கட்டத்திற்கு மேல் அதை அழுத்தமாகச் சொல்வதற்கு ஒரு துணை தேவைப்பட்டது. அந்த துணையாக இளையராஜா இருந்தார். இளையராஜாவின் பின்னணி இசை என்பது, வெறும் இசை மட்டும் அல்ல. அது திரைக்கதையில் எழுதப்படாத ஒரு பகுதியாகவே எப்போதும் இருந்து வருகிறது. இளையராஜாவின் பின்னணி இசையால், காட்சிகள் கவிதைகளாக மாறும் அதிசயம் நிகழ்ந்தது.
அவற்றில் சிலவற்றை இங்கே உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். ஏனெனில், இசை விமர்சகர் ஷாஜியின், ~இசையின் தனிமை’ குறித்த கலந்துரையாடல் கூட்டத்தில் கவிஞர் மனுஷ்ய புத்திரன் அழகாகக் கூறியது போல், தமிழ்ச் சமூகம் மறதியின் மீதுதான் நடந்துகொண்டிருக்கிறது.
‘வருஷம் 16’ படத்தில் ஒரு காட்சி. கார்த்திக்கும், குஷ்புவும் முதலில் வீட்டில் சந்திக்கின்றனர். பிறகு மறுநாள் வெளியே ஒரு வயல் வரப்பில் சந்திக்கின்றனர். அப்போது கார்த்திக் குஷ்புவிடம், "இந்த ஊர்ல அருந்ததி பூங்கான்னு ஒரு பூங்கா இருக்கு. அங்க கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடி ஒரு குட்டி கண்ணணும்(கார்த்திக் கதாபாத்திரத்தின் பெயர்), ஒரு குட்டி ராதிகாவும்(குஷ்பு)…" என்று துவங்கும்போது, இசை ஒலிக்க ஆரம்பிக்கும். முதலில் மிகவும் வேகமாக… அதாவது அவர்களுடைய நினைவுகள் வேகமாக இறந்த காலத்தில் நுழைவதைக் காண்பிப்பதற்கு மிகவும் வேகமான ஒரு இசையும், பிறகு அவர்கள் இறந்த காலத்திற்குள் நுழைந்து அந்த நினைவுகளில் தேங்கியவுடன் ஒரு அமைதியான புல்லாங்குழல் இசையும் ஒலிக்கும். இங்கு ஃப்ளாஷ்பேக் ஏதும் கிடையாது. ஏனெனில் ஒரு அழுத்தமான ஃப்ளாஷ்பேக் அளித்திருக்கக்கூடிய தாக்கத்தை அந்த இசையால் அளிக்க முடிந்தது. அந்த இசையே, அந்தக் காட்சியை இன்னும் என்னால் மறக்க முடியாத காட்சியாக்குகிறது.
அதே போல் ‘சலங்கை ஒலி’ படத்தில் ஜெயப்ரதாவுக்கு ஏற்கனவே திருமணமாகியிருக்கிறது என்று தெரிந்தவுடன், கமல் ஆவேசமாக கடற்கரையில் ஒரு நடனம் ஆடுவார். அந்த நாட்டியத்திற்கான இளையராஜாவின் இசை, இளையராஜாவின் ஆகப்பெரிய அற்புதங்களில் ஒன்றாகும். கமலின் அந்த மனக்கொந்தளிப்பு, குமுறல், இயலாமை… என்று அத்தனை உணர்வுகளையும் வாத்தியங்களில் இளையராஜா வெளிக்கொணர்ந்த விதம்…. இப்போது நினைத்தாலும் சிலிர்க்கிறது.
நம் வாழ்வில் ஒரு மிகப் பெரிய துக்கத்தை அனுபவித்து, அழுதுப் புரண்டு ஓய்ந்தவுடன் மனதில் ஒரு சோகமான அமைதி மெள்ள வந்து தழுவும். அதை வார்த்தைகளால் கூட வெளிப்படுத்துவது கடினம். ஆனால் அதனை இளையராஜா ~அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் அற்புதமாகச் செய்திருப்பார். டைட்டிலுக்கு முன்பு ஆற்றங்கரையில் கமல் கொல்லப்பட்டு, ஸ்ரீவித்யா படகில் கதறியழுது, ஓய்ந்து அமைதியானவுடன் மெள்ள ஒரு புல்லாங்குழல் இசை ஒலிக்க ஆரம்பிக்கும்(படத்தின் தீம் மியூசிக்கும் அதுதான்). அந்த இசை உருவாக்கும் துயரமும், அமைதியும் மிகவும் அலாதியானது.
மேலும் ‘முதல் மரியாதை’ படத்தில், ரஞ்சனி இறந்தவுடன், தீபன் புல்லாங்குழலை மேலே எறிந்துவிட்டு நீரை நீக்கி ஓடுவார். காற்றில் பறக்கும் புல்லாங்குழல் மேலே நீண்ட தூரம் செல்ல… இடையில் ஊரார் ஓடிவருவது உள்ளிட்ட ஏராளமான கட் ஷாட்களுடன் இணைந்து, அந்த புல்லாங்குழல் மீண்டும் நீரில் விழும் வரையிலான காட்சிக்கு இளையராஜா இசைத்த புல்லாங்குழல் இசை, இளையராஜாவின் மாஸ்டர் பீஸ்களில் ஒன்றாகும். வாழ்க்கையில் சற்றும் எதிர்பாராத ஒரு துயரத்தையும், அதன் விளைவுகளையும் இசையால் காட்சிப்படுத்திய அபூர்வ திரைத் தருணங்களில் அதுவும் ஒன்றாகும்.
அதே போல் ‘மௌன ராகம்’ படத்தின் பின்னணி இசையை , வசனங்களை மட்டும் கட் செய்துவிட்டு நீங்கள் கேட்டுக்கொண்டே இருக்கலாம். இவ்வாறு ‘அலைகள் ஓய்வதில்லை’,‘ சிந்து பைரவி’ என்று பல படங்களிலிருந்து என்னால் ஏராளமான உதாரணங்களை கூறமுடியும்.
இத்தனைக்கும் எனக்கு இசையின் நுணுக்கங்கள் குறித்தோ, ராகங்கள் பற்றியோ எதுவும் தெரியாது. கேட்பதற்கு நன்றாக இருக்கும் இசையை ரசிப்பேன் அவ்வளவுதான். இளையராஜாவின் ‘ஹெள டூ நேம் இட்’ குறித்து, ~சொல்வனம்" இணைய இதழில், ரா. கிரிதரன் என்பவர் இசை பற்றிய நுணுக்கமான அறிவுடன், அது மேற்கத்திய இசையின் என்ன கூறுகளைக் கொண்டது என்றெல்லாம் மிகவும் விரிவாகக் கூறியிருந்தார். அந்த விபரங்கள் எல்லாம் எனக்கு ஒரு அட்சரம் கூடத் தெரியாது. அதைப் படித்தபோது இதில் இவ்வளவு மேட்டர் இருக்கிறதா என்று எனக்கு பிரமிப்பாக இருந்தது. அதைப் பற்றியெல்லாம் எதுவுமே தெரியாமல் என்னால் எப்படி அந்த இசையை ரசிக்க முடிந்தது?
அதுதான் இளையராஜாவின் தனித்துவம். தமிழ்நாட்டில் மேதைமையும், வெகுஜன ரசனையும் ஒன்றிணையும் கணங்கள் மிகவும் அபூர்வம். ஆனால் இளையராஜா நமது நாட்டுப்புற, கர்நாடக மற்றும் மேற்கத்திய செவ்வியல் இசைக்கூறுகளின் அபாரமான சாத்தியங்களை எளிமையாக இணைத்து, இசையைப் பற்றி ஆனா, ஆவன்னா தெரியாதவனும் ரசிக்கும்படி செய்து மேதைமையை, வெகுஜன ரசனைக்குரியதாக மாற்றிக் காட்டினார்.
அடுத்து இளையராஜாவின் மிகப்பெரிய பங்களிப்பு, மனித உறவுகளில் அது ஏற்படுத்திய விளைவுகள். இளையராஜாவின் பொற்காலத்தில், இளையராஜாவின் பாடல்கள் என்ற ஒற்றைப் புள்ளியில் சந்தித்துக் காதலித்தவர்கள் அனேகம் பேர். வீட்டிற்குள் நிலவிய எத்தனையோ கசப்புகளை, அந்த வீட்டிற்கு சம்பந்தமேயில்லாத இளையராஜா போக்கியிருக்கிறார். என் வாழ்வில் அவ்வாறு நிகழ்ந்திருக்கிறது.
அந்தக் காலத்தில் தந்தை-மகன் உறவு என்பது கிட்டத்தட்ட ஒரு எஸ்.பி.க்கும், கான்ஸ்டபிள்க்கும் உள்ள உறவு போன்றது. அப்பாக்கள் எஸ்பிக்கள். மகன்கள் கான்ஸ்டபிள்கள். அப்போது தந்தைக்கும் மகன்களுக்கும் நடுவே தெளிவாக, உறுதியாக ஒரு பெரிய இடைவெளி இருக்கும்(நடிகர் கமல்ஹாசன் ஒரு பேட்டியில், "எனது தந்தை மிகவும் சீரியஸாக சாகக் கிடந்த சமயத்தில், ஒரு நாள் அவர் தோளைத் தொட்டு தூக்கி அமர வைத்தபோதுதான்; எனக்கு விபரம் தெரிந்து முதன் முதலாக அவரைத் தொட்டேன்." என்று கூறியது ஞாபகத்திற்கு வருகிறது.).
இவ்வாறு எல்லா தந்தைகளுக்கும், மகன்களுக்கும் இருந்த இடைவெளி என் தந்தைக்கும் எனக்கும் கூட இருந்து வந்தது. பிறிதொரு காலத்தில் அந்த இடைவெளி மேலும் அதிகரிக்கும் சூழல் உருவானது. நான் பத்தாவதில் ஐநூறுக்கு 434 மார்க் எடுத்தேன். அது நல்ல மார்க். அப்போது ஸ்டேட் ரேங்கே 455, 460 என்றுதான் இருக்கும். அதனால் என் தந்தை தன் வாழ்நாளின் ஆகப் பெரிய கனவைச் சுமக்க ஆரம்பித்தார். எப்படியும் ப்ளஸ்டூவில் நான் நிறைய மதிப்பெண்கள் பெற்று, மருத்துவர் படிப்பில் சேருவேன் என்று உறுதியாக நம்பினார். எனது உறவினர்களும் நம்பினார்கள். என் பக்கத்து வீட்டுக்காரர்கள் எல்லாம் எனக்கு டாக்டர் சீட் கிடைத்துவிட்டது போலத்தான் பேசிக்கொண்டிருப்பார்கள்("நமக்கு ஒண்ணும் பிரச்சினையில்ல. சுரேந்தர் க்ளினிக் போட்டுட்டான்னா, ஃப்ரீயா வைத்தியம் பாத்துக்கலாம்."). ஏன்… நானும் நம்பினேன்.
ஆனால் எனது விடலைப் பருவத்தின் சில விரும்பத்தகாத காரியங்களால்(அதைப் பற்றி பிறிதொரு சந்தர்ப்பத்தில் விரிவாகப் பார்க்கலாம்.)பள்ளி மாறி, ஒரு அரசுப் பள்ளியில் சேர்ந்து, பல்வேறு விஷயங்களால் படிப்பில் ஆர்வம் போய், ப்ளஸ்டூவில் 1200க்கு 840 மட்டுமே எடுத்தேன். மேலும் மருத்துவ நுழைவுத்தேர்வு எழுதுவதற்கான குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்களைக் கூடப் பெறவில்லை. எனது தந்தை இதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. ரிசல்ட் வந்து, மதிப்பெண் பட்டியலைப் பார்த்தபோது என் தந்தையின் கண்களில் தெரிந்த வலி இன்னும் என் ஞாபகத்தில் இருக்கிறது. தனது குழந்தைகள் குறித்த ஒரு தந்தையின் கனவுகள் சிதையும் கணங்கள் மிகவும் கொடுமையானவை. மிகுந்த கோபக்காரரான எனது தந்தை அப்போது ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
நிச்சயம் என்னால் சாதித்திருக்கக்கூடிய விஷயம், எனது காரியங்களால், எனது தந்தையின் எச்சரிக்கையையும் மீறி நான் நடந்துகொண்ட முறையால் கெட்டது. அதனால் அதன் பிறகு எனது தந்தை என் மீது ஆழமான வெறுப்பைக் கொட்ட ஆரம்பித்தார். எனக்கான சுதந்திரங்கள் மறுக்கப்பட்டன. செலவுக்கு அஞ்சு பைசா கூட தரமாட்டார்.
பதிலுக்கு நான் காந்திய வழியில் அறப்போராட்டத்தில் இறங்கினேன். ஆனால் முற்றிலும் பட்டினி கிடைக்க முடியாத காரணத்தால், ஒரு வித்தியாசமான போராட்டத்தை ஆரம்பித்தேன். அது என்னவென்றால், காலையில் பேருக்கு ஒரு இட்லி, ஒரு தோசை மட்டும் சாப்பிடுவேன். அதற்கும் சட்னியெல்லாம் வேண்டாம் என்று கூறிவிடுவேன். மதிய, இரவு சாப்பாடுகளில் குழம்பு, ரசம், சைட்டிஷ் எல்லாம் வேண்டாம் என்று கூறிவிடுவேன். வெறும் தயிர்சாதம் மட்டும்தான் சாப்பிடுவேன். அதுவும் ஒரு மிகைநடிப்புடன், தொட்டுக்க ஒன்றுமின்றி நான் மிகவும் கஷ்டப்படுகிறேன் என்பதை உணர்த்துவதற்காக ஒவ்வொரு வாய் சாதத்திற்கும், ஒரு வாய் தண்ணீர் மடக் மடக்கென்று குடித்துக்கொள்வேன். வீட்டில் கறி, மீன் எடுக்கும்போது அதைக் கையால் கூட சீந்தமாட்டேன். அப்போதெல்லாம் என் அம்மாவுக்கு ஒரே லட்சியம்தான் இருந்து வந்தது. உயிரே போனாலும், ஞாயித்துக்கிழமை பிள்ளைகளுக்கு கறிசோறு ஆக்கிப் போட்டுவிட்டுதான் சாகவேண்டும். ஆனால் அதையும் நான் நிராகரித்துவிட்டு, என் தம்பிகள் எல்லாம் கறிசோறு தின்ன… நான் மட்டும் தயிர்சாதம் தின்பதை என் தாய் கண்ணீருடன் பார்த்துக்கொண்டிருப்பார். இந்தப் போராட்டம் பல மாதங்கள் நீடித்தது. ஆனாலும் என் தந்தை இறங்கி வரவில்லை.
என் அப்பா சென்னை சென்றுவிட்டு திரும்பும்போதெல்லாம் ஏராளமான கேஸட்டுகளுடன் வருவார். வந்தவுடனேயே கேஸட்டுகளை ஒலிக்கவிட்டுவிடுவார். பெரும்பாலும் அவை சினிமா பாடல்களாகவே இருக்கும். ஆனால் ஒரு விடியற்காலையில் அவர் சென்னையிலிருந்து திரும்பியபோது, வித்தியாசமாக ஒரு கருவி இசைப்பாடல் ஒலிக்க ஆரம்பித்தது. அது திரைப்பட இசை கிடையாது. அசுவராஸ்யமாக கேட்க ஆரம்பித்த நான், என்னை அறியாமல் மெள்ள, மெள்ள ஒரு பிரமாண்டமான இசைச்சூழலில் சிக்கிக்கொண்டதை உணர முடிந்தது. வயலினும், புல்லாங்குழலும் மாற்றி, மாற்றி இழைந்து என்னுள் ஏதேதோ செய்தது. அதுவும் ஒரு இசைப்பாடல், ஒரு மலை ஊற்றுப் போல மெள்ள சுரக்க ஆரம்பித்து, பிறகு மகா நதியாகப் பெருகி ஓடி, கடலில் கலந்து அமைதியாவதைப் போல முடிந்தபோது என்னை அறியாமல் என் கண்களிலிருந்து நீர் வழிந்திருந்தது.
அதற்கு மேல் தாங்க முடியாமல் எழுந்துவிட்டேன். அன்று காலைதான் நெடு நாட்களுக்குப் பிறகு என் தந்தையிடம் நான் பேசினேன்.
"என்ன கேஸட்?"
"இளையராஜாவோட நத்திங் பட் வின்ட்…" என்றவர் தொடர்ந்து இந்த தருணத்திற்காகவே காத்திருந்தது போல், "உனக்கு இங்க என்னடா பிரச்னை? எதா இருந்தாலும் சொல்லு…" என்றார்.
"நிறைய இருக்கு. கைல காசே தரமாட்டேங்கறீங்க." என்றேன்.
"எதுக்கு காசு?"
"சினிமாப் பாக்குறதுக்கு. அப்புறம் இளையராஜா பாட்டுல்லாம் ரிகார்ட் பண்றதுக்கு."
"அவ்ளோதான… இது வேணும்னு வாய்விட்டு கேட்டாதானே தெரியும். அதுவும் இளையராஜா பாட்டு ரிக்கார்ட் பண்றதுக்குன்னா நான் வேண்டாம்னா சொல்வேன்…" என்று ஒரு நூறு ரூபாயை எடுத்து நீட்டினார்.
அப்போதெல்லாம் பாடல்கள் கேஸட்களில்தான் கேட்போம். நான் ஒவ்வொரு இளையராஜா பாடலாகக் குறித்து வைத்துக்கொண்டே வருவேன். இருபது பாடல்கள் சேர்ந்தவுடன் ரிக்கார்டிங் சென்டருக்கு சென்று, டிடிகே 90 அல்லது மெல்ட்ராக் கேஸட்டில் பதிவு செய்துகொண்டு வருவேன். அது இளையராஜா வருடத்திற்கு 30, 40 படங்கள் எல்லாம் இசையமைத்துக்கொண்டிருந்த காலம். ஒரு மாதத்திற்குள்ளாகவே இரண்டு, மூன்று கேஸட்டுகள் பதிவு செய்யவேண்டி வரும். அதற்காக எப்போது கேட்டாலும் மறுக்காமல் எனது தந்தை பணம் தந்துவிடுவார்.
நான் பதிவு செய்துகொண்டு வந்தவுடன் என் தந்தையும், நானும் சேர்ந்தாற்போல் ரசித்துக் கேட்போம். அப்போது எங்கள் உரையாடலின் மையப்புள்ளியாக இளையராஜாவே இருந்தார். (அப்போதெல்லாம் எனது தந்தை அடிக்கடி, "என் கைல மட்டும் நிறைய காசு இருந்துச்சுன்னா, நம்ம நால் ரோட்டுல இளையராஜாவுக்கு தங்கத்துல சிலை வச்சிடுவன்டா" என்று கூறுவார்.). இல்லையென்றால் எனது தந்தையிடமிருந்து நான் மிகவும் விலகிக் சென்றிருக்கக்கூடும்.
இவ்வாறு இளையராஜா, தமிழர்களின் தனி மனித வாழ்க்கையில் மிகப் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறார். வேறு விஷயங்களில் வெவ்வேறு ரசனைக் கொண்டவர்களும், பல்வேறு கருத்து வேறுபாடுகளும் கொண்டிருந்தவர்களும் கூட இளையராஜாவின் இசை என்ற புள்ளியில் ஒன்றிணைந்தனர். அந்தப் புள்ளியிலிருந்து புறப்பட்டு, அவர்கள் ஒற்றுமையுடன் வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்குச் செல்ல முடிந்தது. இவ்வாறு இளையராஜா கலையும், வாழ்க்கையும் இணையும் அபூர்வத்தை வெகுஜனங்களிடையே நிகழ்த்திக் காட்டினார்.
அன்று இளையராஜாவோடு வேறு பல விஷயங்களும் எனக்கு மிகுந்த போதை ஊட்டுவதாக இருந்தன. ஹோட்டலில் ரவா தோசை தின்பதற்காக, என் அப்பாவின் சட்டைப் பையில் திருடத் தயங்கமாட்டேன். எனது வெள்ளிக்கிழமை காலைகள், காலைக்காட்சி பலான மலையாளப் படங்கள் இல்லாமல் இருக்காது. பாலகுமாரன் நாவல்கள் என்றால் பைத்தியம்.
இன்று என்னோடு ரவா தோசை இல்லை. காலைக் காட்சி மலையாளப் படங்கள் இல்லை. பாலகுமாரன் இல்லை. நாட்கள் நகர, நகர… ஒரு காலத்தில் நாம் மிகவும் முக்கியமாக கருதும் விஷயங்கள் , பிறகு ஒன்றுமே இல்லாமல் ஆகிவிடுகிறது. ஆனால் இளையராஜா மட்டும் நேற்றும் என்னோடு இருந்தார். இன்றும் என்னோடு இருக்கிறார். நாளையும் என்னோடு இருப்பார். ஏனெனில் இளையராஜா காலத்தில் கரையாத கலைஞன்.
gsurendar@yahoo.com

நன்றி: உயிர்மை